முகநூல் குழுக்களில் ‘சப் ஃபார் சப்’ எனப் பதிவு போடுபவர்களை மெசெஞ்சரில் தொடர்பு கொண்டு, தேடிப்போய் அவர்களுடைய சேனல்களைப் பின்தொடர்ந்து, பதிலுக்குச் செய்ய வைத்து, என்ன முயன்றாலும் பெரிதாக மாற்றமில்லை.
ஒரு கட்டத்தில் கல்வியைக் கைவிட்டது தவறோ என்கிற பயம் கோலவிழிக்கு வந்தது. சூதாடி தோற்றுக்கொண்டே இருப்பவர்களிடம் அந்தப் பழக்கத்தைக் கைவிடாமல் இருப்பதற்கு ஒரு சப்பைக்கட்டு பிரபலம் – ‘விட்டதைப் பிடித்துவிடுவேன்’. அதே போலத்தான் ‘ஒரே ஒரு வீடியோ வைரல் ஆனா போதும். சேனல் பாப்புலர் ஆயிடும்’ என இவளும் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். மற்றவர்களிடமும் சொல்லிவைத்தாள்.
ஆஷா அக்கா தவிர மற்ற அனைவருமே அவளுக்கு எதிராகப் பேசவே, தான் தேர்ந்தெடுத்த வழி சரியானதுதான் என நிரூபிக்க எப்படியாவது முன்னேறியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். வெறிகொண்டு ஒரே நாளில் நான்கைந்து காணொளிகள் பதிவேற்றம் செய்யத் தொடங்கினாள்.
அன்றைய நாளில் வைரலாக இருக்கும் பாடலைக் கண்டெடுத்து, அந்த நடனத்தை ஆடிப்பார்த்து, அதன் பின் அதைப் பதிவு செய்து பின் சேனலில் பதிவேற்றம் செய்தாள். இதுவே அவளின் ஒரு நாளின் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டது.
இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் சென்றுவந்து, வீட்டு வேலைகளையும் செய்து ஓய்வின்றி உழைக்கும் அஞ்சலியைப் பற்றி அறவே எண்ணிப் பார்ப்பதில்லை.
மஞ்சுவின் அப்பா, திருமணம் போன்ற விசேஷங்களுக்கும் கோயில் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் பொருள்களை வாடகைக்கு விடும் கடை ஒன்றை நடத்தி வந்தார். மஞ்சுவின் சிபாரிசில் இவள் அந்தக் கடையில் உள்ள பொருள்களைப் பராமரிக்கும் வேலையில் சேர்ந்தாள்.
அதேநேரம் அஞ்சலி மற்றும் ராஜாவின் வருமானம் மேம்பட்டிருக்க, பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு அருகில் கொஞ்சம் வசதியான வீட்டுக்கு மாற முடிவு செய்தனர். ஆனால் அவர்களுடன் செல்லக் கோலவிழி விரும்பவில்லை. வாடகை கொடுத்துக்கொண்டு அந்த வீட்டிலேயே இருந்துவிடுவதாகச் சொல்லிவிட்டாள்.
ஏற்கனவே அவளால் சங்கடப்பட்டுக்கொண்டிருந்த அஞ்சலியும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்கவே ராஜாவும் ஒப்புக்கொண்டான். அவர்கள் வேறு வீட்டுக்கு மாறினர்.
கோலவிழிக்கு வருத்தமாக இருந்தாலும் இனி அவளைக் கேள்வி கேட்க ஆளில்லை என்கிற ஆசுவாசம்தான் மிகுந்திருந்தது. முதல் காரியமாக அரசிதழில் பதிவு செய்து அதிகாரப்பூர்வமாகத் தன் பெயரை அமுதா என மாற்றிக்கொண்டாள்.
அப்பொழுதுதான் ஒரு முகநூல் குழுவில் குணாவின் பதிவொன்று அவளின் கண்களில் பட்டது. ஒன்று இரண்டு மிஞ்சிப் போனால் பத்து வரைக்கும் சப் ஃபார் சப்தான் கிடைக்கும். ஆனால் குணா அழைப்பு விடுத்திருந்தது சுளையாக ஆயிரம் சப்ஸ்கிரைபர்களுக்கு.
அடுத்த நொடியே ‘குட் மார்னிங் ப்ரோ, குரூப்ல உங்க போஸ்ட் பார்த்தேன்’ என அவனுடைய உள்பெட்டியைத் தட்டினாள்.
இத்தனைக்கும் இவள் ஒன்றும் இன்பாக்ஸ் இம்சைகளை அனுபவிக்காமல் இல்லை. நம்பிப் போய் மெசேஜ் செய்தால், உடனே ஆபாச உரையாடலுக்குத் தயாராகி விடுவார்கள். ஆபாசக் காணொளிகளும் குறுஞ்செய்திகளும் வந்து குவியும். முகச்சுளிப்புடன் அந்த நபரை பிளாக் செய்வாள். இருந்தாலும் ஆசையும் தேவையும் அவளை மீண்டும் மீண்டும் செய்ய வைத்தது.
நல்ல வேளையாக குணா அதுபோல் இல்லை.
”தவுசண்ட் சப்ஸ்கிரைபர்ஸ், சப் ஃபார் சப்?”
”ஆமாம்.’’
”சேனல் லிங்க் அனுப்புங்க.” அனுப்பினாள்.
”மேக்சிமம் ஒரு நாளைக்கு எவ்வளவு சேனல்ஸ் சப்ஸ்க்ரைப் செய்ய முடியும்?”
”ஐநூறு?”
”ஓகேதான், ஆனா உடனே உங்கள அவங்க சப்ஸ்க்ரைப் பண்ணலனா பரவாயில்லையா?”
”உடனே பண்ண மட்டாங்களா?”
”சம்டைம் அன் சப்ஸ்க்ரைப் ஆகிடுது. அதனால செய்ய மாட்டாங்க, ஒரு நாள் டைம் எடுத்துப்பாங்க.”
”அப்ப என்ன செய்யலாம்?”
”ஒரு நாளைக்கு நூறுன்னு பிக்ஸ் பண்ணிக்கோங்க. பத்து நாள்ல முடிஞ்சுரும்.”
ஒப்புக்கொண்டு நன்றி சொன்னாள்.
”இதுவும் ஒரு பிசினஸ் டீல்தான். சேனல் சம்பந்தமா வேற ஏதாவது அசிஸ்டன்ஸ் தேவைப்பட்டாலும் கேளுங்க. செய்ய ஆளுங்க இருக்காங்க” என்று சொல்லி அழைப்பிலிருந்து விலகினான்.
பத்தே நாள்களில் ஆயிரம் சப்ஸ்கிரைபர் ஏறி மகிழ்ச்சியில் அவளைத் திக்குமுக்காடச் செய்தது.
பார்ட்னர் புரோகிராம் என்கிற பெயரில் வருமானம் பெற யூடியூப் விதித்திருக்கும் முதல் நிபந்தனை பூர்த்தி ஆனாலும், முந்தைய முந்நூற்று அறுபத்தைந்து நாள்களில் நாலாயிரம் பொதுப் பார்வை நேரத்தைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது கடந்த தொண்ணூறு நாள்களில் ஒரு கோடி ஷார்ட்ஸ் வியூஸ் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை அவளால் எட்டவே இயலவில்லை. இதில் காலே அரைக்கால் அளவைக்கூட தொடத் இயலாமல் தத்தளித்தாள்.
ஒரு நாள் காணொளிப் பதிவு செய்ய, “அக்கா புது மாடல் டிரஸ் ஏதாவது ஆல்ட்ரேஷனுக்கு வந்திருக்கா” என ஆஷாவிடம் வந்து நின்றாள் கோலவிழி.
“போடீ, உனக்கு இதே வேலையா போச்சு” என எரிந்து விழுந்தாள் ஆஷா.
“என்னக்கா இப்படி சொல்ற?”
“வேற எப்படிச் சொல்லுவாங்க, நீ ரெண்டு நாள் முன்னால போட்ட வீடியோவ பார்த்துட்டு அதுல போட்டிருந்த ட்ரெஸ்ஸுக்குச் சொந்தக்காரி என்கிட்டே சண்டைக்கு வந்துட்டா.”
“ஐயோ, நிஜமாவா?”
“பின்ன பொய்யா சொல்றாங்க? என் கஸ்டமர எல்லாம் கூப்டு கூப்டு உன் சேனல சப்ஸ்கிரைப் செய்ய வெச்சேன் இல்ல? பாக்க மாட்டாங்களா பின்ன?”
“உப்… நான்கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். எங்க பார்த்தாலும் ஒரே பிரேண்ட் துணிய மாட்டிட்டு சுத்துறாங்க. கலரு டிசையன் எதப் பார்த்தாலும் ஏதோ பள்ளிக்கூட யூனிஃபார்ம் மாதிரி இருக்கு. இதுல கண்டறிஞ்சு வந்துரப்போறாங்க. விடுக்கா… கொஞ்சம் கொரல ஒசத்தி இல்லவே இல்லன்னு அடுச்சு விடு… நம்பிடுவாங்க.”
“போடி இவளே… நீ கெட்டது போறாதுன்னு என் பொழைப்பையும் கெடுக்க பாக்கறியா? கஸ்டமர் கிட்ட அப்படிலாம் பேசினா ஊரெல்லாம் போய் என்ன பத்தி கேவலமா பேசி வெப்பாங்க. அப்பறம் ஒருத்தி கூட என்கிட்டே துணி தெக்கக் குடுக்க மாட்டா. ஆள விடு தாயே. அதான் ஆன்லைன்ல ஜிகுஜிகுன்னு கம்மி ரேட்டுக்கெல்லாம் துணி கிடைக்குதில்ல. வாங்கி மாட்டிட்டு டேன்ஸ் ஆடு. என்ன விட்டுடு.”
“அக்கா, வாங்குற சம்பளம் வாடகை குடுக்கவும் சாப்பாட்டுக்குமே சரியா போகுது. இதுக்கு நான் எங்க போவேன்?”
“இந்தக் கருமத்தையெல்லாம் தூக்கிக் கடாசிட்டு, ஒழுங்கா இருக்கற வேலையைப் பாரு. உங்கக்கா உன்ன விட்டுடாது. அவ பாக்குற பையனக் கட்டிட்டு நல்லபடியா வாழுற வழியப் பாரு” என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டாள் ஆஷா. அவ்வளவுதான், தனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு நபரும் எதிர்த்திசைக்குச் சென்றுவிட கோலவிழியின் மூளை சூடேறிப் போனது.
பல வழியிலும் சிந்தனை ஓட, ‘இதுவும் ஒரு பிசினஸ் டீல்தான். சேனல் சம்பந்தமா வேற ஏதாவது அசிஸ்டன்ஸ் தேவைப்பட்டாலும் கேளுங்க. செய்ய ஆளுங்க இருக்காங்க’ என குணா குறிப்பிட்டது நினைவில் வந்தது.
”சப்ஸ்கிரைபர் ஏற ஹெல்ப் பண்ண மாதிரி வாட்ச் அவர் ஏற உதவி செய்ய முடியுமா?” எனக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
‘தாராளமா செய்யலாம் ஆனா அதுக்கு கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியதா இருக்கும்’ என பதில் வந்தது.
“எவ்வளவு ஆகும்?”
”அது உங்க பட்ஜட்டுக்கு ஏத்த மாதிரி நீங்க சூஸ் பண்றதுதான். நம்ம ஃபிரண்ட் ஒருத்தங்க இருக்காங்க. அவங்க கிட்ட நிறைய பேப்பர் ஐடிஸ் இருக்காங்க. அவங்கள வெச்சு உங்க வியூஸ ஏத்துவாங்க. ஹவர்ஸ், வியூஸ் பேஸ்ல சார்ஜ் பண்ணுவாங்க.”
”ஓ”
”உங்களுக்குத் தேவைன்னா சொல்லுங்க அவங்க வாட்சாப் நம்பர் கொடுக்கறேன். மெசேஜ் போட்டுப் பாருங்க.”
குணா இப்படிச் சொல்லவும் முயன்றுதான் பார்ப்போமே என்று தோன்றியது. கட்டுப்படி ஆனால் பார்க்கலாம் இல்லையென்றால் விட்டுவிடலாம் என்கிற எண்ணத்துடன் அந்த எண்ணுக்கு ‘ஹாய்… என் பேர் அமுதா’ எனக் குறுந்தகவல் அனுப்பினாள்.
‘ஆங், குணா பிரோ சொன்னாரு. மெசேஜ் பண்றதவிட பேசினா பெட்டரா இருக்கும். ப்ரீ ஆயிட்டு கால் பண்றேன்’ எனக் காலை அனுப்பிய தகவலுக்கு மாலை பதில் வந்தது.
இடையில் கடை வேலை வேறு இருக்க, பொழுது ஓடியே போனது. இரவுதான் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
“தேங்க்ஸ், உங்க காலுக்குத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள்.
“உங்க பேர் அமுதான்னு சொல்லி இருந்தீங்க இல்ல. உங்க ஷார்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு” என்றாள் எதிர் முனையில் பேசிய பெண்.
மகிழ்ச்சியுடன், “தேங்க்ஸ்க்கா, உங்க பேர் என்ன?” என்று கேட்டாள்.
“நான் யூடியூபர் ரஞ்சனா. என்ன உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்” என அவள் பதில் கொடுக்கவும் அப்படியே வியந்து மகிழ்ந்து போனாள்.
“சோஷியல் மீடியா செலிபிரிட்டி ரஞ்சனாவா, ஓ மை காட். இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க” எனக் குதூகலித்தாள்.
“இதுல என்ன இருக்கு. இத விடுங்க, உங்களுக்கு என்ன மாதிரி அசிஸ்டன்ஸ் வேணும்” என நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
உண்மையில் கோலவிழிக்குப் பேச்சே வரவில்லை. தன்னைச் சமாளித்துக்கொண்டுதான் பதில் சொன்னாள்.
“இப்போதைக்கு வாட்ச் ஹவர்ஸ் ஏறணும். அது போதும். நான் போடுறதெல்லாம் ஷார்ட் வீடியோஸ்தான்க்கா. என்ன முயற்சி செஞ்சாலும் பத்தாயிரம் வியூஸ்கூட வரமாட்டேங்குது” என்றாள்.
“ஒண்ணும் பிரச்ன இல்ல. நம்ம கிட்ட ரேட்டுக்குத் தகுந்த மாதிரி நிறைய பேக்கேஜ் இருக்கு. டீடைல்ஸ் அனுப்பறேன். பார்த்துட்டு மெசேஜ் பண்ணுங்க. பார்த்து செஞ்சுக்கலாம்” என்று சொல்லிவிட்டு அழைப்பிலிருந்து விலகினாள் ரஞ்சனா.
சில நிமிடங்களில் சேவைக் கட்டணப்பட்டியலும் வந்தது. அதைப் பார்த்ததும் கோலவிழிக்குத் தலை சுற்றிப் போனது. குறைந்தபட்ச கட்டணமே ஐம்பதாயிரம், அதுவும் வெறும் ஐந்து லட்சம் ஷார்ட் வியூசுக்கு. அப்படியெனில் மொத்தமாக ஒரு கோடி வியூசுக்கு எங்கே போக?
இனி இந்தப் பிழைப்பே தேவையில்லை என்கிற முடிவுக்கே வந்துவிட்டாள். மேற்கொண்டு ரஞ்சனாவை இவள் தொடர்பு கொள்ளவே இல்லை. ஆனால் ரஞ்சனா இவளை விடுவதாயில்லை. இரண்டு தினங்கள் பொறுத்து அவளே அழைத்தாள்.
“என்ன ஆச்சு, அவ்வளவு ஆர்வமா விசாரிச்சிட்டு சைலன்ட் மோடுக்கு போயிடீங்க?”
“சாரிக்கா… அவ்வளவு பட்ஜெட் எங்கிட்ட இல்ல.”
“ஏதாவது செஞ்சு ரெடி பண்ணுங்க. சேனல் வியூஸ் போகப் போக, சேனல் மேல வரும். நிறைய பேர் பார்க்க ஆரம்பிப்பாங்க. மேற்கொண்டு செலவே செய்யாம வியூஸ் வந்தாலும் வந்துரும்.”
“இருந்தாலும் பயமா இருக்குக்கா.”
“ஹேய் கமான்… இதெல்லாம் ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட் மாதிரிதான். கண்டிப்பா பலமடங்கு ரிட்டன் வந்துடும். சில்வர் பிளே பட்டன், கோல்டன் பிளே பட்டன்னு போயிட்டே இருக்கலாம்” என ரஞ்சனி சொன்னபோது அவளின் ஆசை எல்லையைக் கடந்தது. கடன் வாங்கி அந்தக் கட்டணத்தைச் செலுத்த முடிவுசெய்தாள்.
(தொடரும்)
படைப்பாளர்
எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.


