Site icon Her Stories

விசாரணை சூடுபிடிக்கிறது…

இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்திருந்த பரிமளா அன்றுதான் பணிக்குத் திரும்பினாள். மிகச் சிக்கலான வழக்குகள் சென்று கொண்டிருக்கும் சமயம் இப்படி இவள் விடுப்பு எடுத்ததற்காக விமல் நன்றாகவே முகத்தைத் திருப்புவார் என்று எதிர்பார்த்தே வந்திருந்தாள்.

காவல் நிலையம் அன்று வழக்கத்தைவிட அதிக பரபரப்பாகக் காணப்பட்டது. தாமுவும் மற்றொரு காவலரும் சேர்ந்து முதல் தளத்திற்கு ஒரு சுழல் நாற்காலியை எடுத்துச் செல்வதைக் கவனித்தாள். 

இந்த இரு தினங்களுக்குள்ளாகவே துறைரீதியாகச் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதும், இவர்களின் காவல்துறை சரகத்துக்கு உதவி ஆணையராகப் புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் ஜெய்கிருஷ்ணா, அமுதாவின் தற்கொலை மரண வழக்கின் பொறுப்பை ஏற்றிருப்பதும் இவள் அறிந்ததே.

ஆனால் இங்கே நிலவும் இந்தப் பரபரப்பான சூழலின் காரணம்தான் பிடிபடவில்லை. அதை அறிந்து கொள்ளும் ஆவலுடன், கருமமே கண்ணாக அங்கிருந்த மேசையைத் துடைத்துக் கொண்டிருந்த சிந்துவை ஜாடை செய்து அழைத்துவிட்டு, தன் பணியறை நோக்கிச் சென்றாள்.

அதற்காகவே காத்திருந்தவள் போல, கையில் வைத்திருந்த துணியைப் பந்து போலச் சுருட்டி கோப்புகளை வைக்கும் அலமாரிக்கு அடியில் நாசூக்காக எறிந்துவிட்டு, பரிமளாவின் பின்னால் ஓடினாள் சிந்து.

“என்ன பாப்பா, இங்க என்னவோ நடக்குது மர்மமா இருக்குது. ரெண்டு நாளா என்னென்ன சம்பவம் நடந்துச்சுன்னு ஒண்ணு விடாம அப்டேட் பண்ணு”  என்றாள் பரிமளா.

“ஒண்ணா ரெண்டா, அது பாட்டுக்குச் சம்பவம் சம்பவமா நடந்துட்டு இருக்கு மேடம்.” 

“அப்படியா?”

“ஆமா, இனிமே பாருங்க நம்ம ஸ்டேஷனே குளுகுளுன்னு இருக்க போகுது.” 

“எதே, நம்ம இன்ஸ்பெக்டர் இருக்கிற கோவத்துக்கு இங்க டெம்பரேச்சர் அதிகமாதான் ஆகும். அது எப்படி குளுகுளுன்னு இருக்கும்?” 

“ப்ச்… ஏற்கெனவே நீங்க லீவு போட்டுட்டு போன காண்டுல, நம்ம இன்ஸ் எல்லாரையும் கடிச்சி கொதறிட்டுதான் இருக்காரு. அத விடுங்க. ஏசி நம்ம ஸ்டேஷன்லயே இருந்தா கூல் ஆகுமா ஆகாதா?”

“ஐயய்யோ… நம்ம ஸ்டேஷன்ல ஏசியா?”

“எஸ்… அமுதா கேஸ் முடிகிற வரைக்கும், புதுசா வந்திருக்கிற ஏ.சி, நம்ம ஸ்டேஷன்ல இருந்தே வேலை செய்யப் போறாராம். மேல இருக்கிற மீட்டிங் ரூம அவருக்கு ஒதுக்கி இருக்காங்க. சுத்தற சேர் அங்கதான் போகுது.”

“ஐயோ, இந்த கேஸ சிபிசிஐடி கிட்ட கொடுக்க போறதா பேசிட்டு இருந்தாங்களே…”

“அப்படி மட்டும் கொடுத்துட்டா, நம்ம டிபார்ட்மெண்டுக்கு அசிங்கம் இல்ல. புது ஏசி மூணே நாளுல சால்வ் பண்றதா சொல்லி இருக்காராம்” எனச் சிந்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியில் சலசலப்பு உண்டானது.

வேகமாக இருவரும் வெளியில் வந்தனர். மேலதிகாரியை வரவேற்பதற்காக இன்ஸ்பெக்டர் விமலும் ஓடோடி வந்தார். மற்ற பிரிவு அதிகாரிகளும் காவலர்களும் அங்கே குவிந்துவிட, உதவி ஆணையர் ஜெய் கிருஷ்ணாவை முறையாக வரவேற்று பூங்கொத்துடன் புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசளித்தனர். பின்பு விமல் அவரை அவருக்கான தனி அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.

பரிமளா தன்னுடைய பணி அறைக்குத் திரும்பி,  ஜெய் கிருஷ்ணா கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு ஏதுவாகச் சில குறிப்புகளை வரிசைப்படுத்தி எழுதத் தொடங்கினாள்.

சில நிமிடங்களில் அங்கே வந்த சிந்து, அமுதா வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அவளை மேலே வருமாறு  இன்ஸ்பெக்டர் அழைப்பதாகச் சொல்லவும், விமலின் பணி அறையில் இருந்த ஆவணங்களையும், சேகரித்து வைத்திருந்த சாட்சியங்களையும் எடுத்துக் கொண்டு அங்கே சென்று சல்யூட் செய்தாள்.

“வாங்க எஸ்.ஐ மேடம், தீயா வேல செஞ்சுருக்கீங்க போலிருக்கே” எனப் புன்னகைத்தான் ஜெய். விமல் முகத்திலும் அதிசயமான ஒரு புன்னகை பரவியது.

முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு விடுப்பு எடுத்ததற்காக அவளைக் கடிந்து கொள்வான் என எதிர்பார்த்து வந்தவளுக்கு அவனுடைய இந்த அணுகுமுறை வியப்பை மட்டுமல்ல சிறு ஆறுதலையும் அளித்தது. அதுவும் எதிரில் இருந்த நாற்காலியைக் காண்பித்து அவளை அவன் அமரச் சொல்லவும் அவளுக்குத் தலை சுற்றியது.

இருந்தாலும் இன்ஸ்பெக்டருக்கு அருகில் சமமாக அமர தயங்கி, கையில் இருந்த கோப்புகளை மேசை மீது வைத்துவிட்டு அப்படியே நின்றாள்.

முதல் தகவல் அறிக்கை, உடற்கூராய்வு அறிக்கை அனைத்தையும் மேம்போக்காகப் புரட்டிப் பார்த்துவிட்டு, “சம்பவம் நடந்த அன்னைக்கு, ஃபர்ஸ்ட் ஸ்பாட்டுக்குப் போனது யாரு?” என்று வினவினான்.

“சார், அன்னைக்கு ஆக்‌ஷன் ஸ்டார் அனுபவோட ரோட் ஷோ இருந்துச்சு. மூல முடுக்குல இருந்து எல்லாம் ஆளுங்க வந்து, பயங்கர நெரிசல் ஆயிடுச்சு. கண்ட்ரோல் செய்ய ஆள் இல்லாம, நாங்க எல்லாருமே செக்யூரிட்டிக்கு போக வேண்டியதா ஆயிடுச்சு. இந்தச் சம்பவம் பத்தி கண்ட்ரோல் ரூம்ல இருந்து தகவல் வந்ததும், இதோ இவங்க எஸ் ஐ பரிமளா, கான்ஸ்டபிள்ஸ் தாமு, அப்புறம் சிந்து ரெண்டு பேரையும் ஸ்பாட்டுக்கு அனுப்பி வெச்சேன்” எனப் படபடவென பதில் கொடுத்தார் விமல்.

“நாங்க அந்த ஸ்பாட்டுக்குப் போகறதுக்குள்ளயே அல்மோஸ்ட் எய்ட்டீ பர்சண்ட் பாடி எரிஞ்சு போயிருந்துச்சு. எரிக்க டீசல் யூஸ் செஞ்சிருக்காங்க.  கிச்சன், ஒரு சின்ன ஹால், அவ்வளவுதான் அந்த வீடே. அவங்க ஒரு யூடியூபர் அப்படிங்கறதால, மூணு கார்னர்ஸ் கவர் ஆகுற மாதிரி, வீட்டுல ஒரு கர்டைன் டைப் கிரீன் ஸ்கிரீன் செட்டப் வெச்சிருந்திருக்காங்க. அது ஒரு சிந்தட்டிக் கிளாத். அதனால நெருப்பு இன்னும் வேகமா பரவியிருக்கு. அந்த ஏரியா மக்கள் பலருமே ரோட் ஷோ பார்க்க போயிருந்ததால தீய அணைக்க கூட உடனே யாரும் அங்க வரல” எனத் தொடர்ந்தாள் பரிமளா.

“ம்ம்… உடனே ஃபாரன்சிக் ஆளுங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணீங்க. இதெல்லாம் தான் அந்த ரிப்போர்ட்லயே எழுதி இருக்கீங்களே! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் குழப்புது. ஸோ, இன்னும் டெப்தா எனக்குச் சில தகவல்கள் வேணும்.” 

“கேளுங்க சார் சொல்றேன்.”

“அது எந்த மாதிரி ஏரியா?”

“அது பொருளாதாரரீதியா பின்தங்கின மக்கள் வசிக்கிற குடிசைப் பகுதி. அங்க இருக்கிற வீடுகள் எல்லாமே பெரும்பாலும் ஆக்கிரமிப்புதான். ஒரு சிலர் கான்கிரீட் வீடாவும் கட்டி வாடகைக்கும் விட்டிருக்காங்க. அமுதா இருந்ததும் அது போல ஒரு வீடுதான். கிரௌண்ட் ஃப்ளோர்ல ஃபிரன்ட்ல ஒரு டைலர் கட இருக்கு. பேக் சைட் ஹவுஸ் ஓனர் இருக்காங்க. இந்தப் பொண்ணு மாடில குடி இருந்துச்சு.”

“அன்னைக்கு அந்த டைலர் கடைல, இல்ல ஹவுஸ் ஓனர் வீட்டுல கூடவா ஒருத்தரும் இல்ல?”

“இல்ல சார், கடைய நடத்தற லேடியும் ரோட் ஷோலதான் இருந்தாங்க. ஹவுஸ் ஓனர் குடும்பத்தோட திருப்பதி போயிருந்தாங்க. பக்கத்து வீட்டு ஆளுங்க அவங்களுக்கு உடனே தகவல் கொடுத்திருக்காங்க. அதனால அடுத்த நாள் எர்லி மார்னிங் அவங்க இங்க வந்துட்டாங்க.”

“ம்” என மேசை மீதிருந்த ஜிப் லாக் கவரின் உள்ளே பாதி எரிந்த நிலையிலிருந்த பேங்க் பாஸ்புக்கைப் பிரித்து யோசனையுடன் சில நொடிகள் பார்த்திருந்தான் ஜெய்.

“மறுநாள் அந்த ஹவுஸ் ஓனர என்கொயரி பண்ண போனப்பதான் இந்த பாஸ்புக்கைப் பார்த்திருக்கீங்க, ரைட்?”

“எஸ், சார், கிச்சன் பக்கமா தரையில விழுந்து கிடந்துச்சு.”

“இதை எப்படி டே கவனிக்காம மிஸ் பண்ணீங்க? ஃபாரன்சிக் பர்சன்ஸ் கூடவா இதைக் கவனிக்காம விட்டாங்க?”

“மறுநாள் இதைப் பார்க்கும் போது எனக்கும் கூட ஷாக்கிங்காதான் சார் இருந்தது. ஆனா பையர் ஆனதனால கரண்ட் சப்ளை கட் பண்ணியிருந்தாங்க. புகையில மூச்சு முட்டிச்சு. எதையும் சரியா பார்க்கவும் முடியல, அதனால இருக்கலாம்.”

“அவங்களோட பேங்க் பேலன்ஸ கவனிச்சிங்களா… டுவெண்டி எய்ட் லேக்ஸ் அண்ட் ஆட்ஸ் இருக்கு.” 

“எஸ், சார்.”

“இவ்வளவு அமௌன்ட் கையில வெச்சுட்டு அவங்க ஏன் இந்த மாதிரி இடத்துல வாடகைக்கு இருக்கணும்?”

ஜெய்யின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் விழித்தாள் பரிமளா.

“என்ன இன்ஸ்பெக்டர் சார், நீங்க இதப் பத்தி எதுவும் யோசிச்சீங்களா?” என விமலிடம் வினவினான்.

“இது அவங்களோட யூடியூப் இன்கம்மா இருக்கலாம். இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து சொந்தமா வீடு வாங்கற ஐடியால அவங்க இருந்திருக்கலாம்.”

“சரி, இது ஏன் சம்பவம் நடந்த அன்னைக்கே யார் கண்ணுலயும் படல. நம்ம ஆளுங்க இவ்வளவு கேர்லெஸ்ஸா இருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?”

இகழ்ச்சியாக விமல் பார்த்த பார்வையில் சுரீர் என பரிமளாவின் மூளையில் மின்னல் வெட்டியது. “சார், இல்ல, நாங்க கேர்லெஸ்ஸா இல்ல. நாங்க பாடிய போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பிட்டு கிளம்பினதுக்கு அப்பறமாதான் யாரோ இந்த பாஸ்புக்க அங்க கொண்டுவந்து போட்டிருக்காங்கன்னு தோணுது” என்றாள் வேகமாக.

“அப்படின்னா அத அங்க கொண்டுவந்து போட்டது யாருன்னு கண்டுபிடிச்சா, அமுதா சொன்ன லிஸ்ட்ல இருக்கிறவங்க என்ன மாதிரியான ஸ்கேம் பண்ணி வெச்சிருக்காங்கன்னு நாம ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்?” என ஜெய் சொல்லிக்கொண்டிருக்கும்போதே  கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் தலைமைக் காவலர் பொன்னி.

சல்யூட் செய்துவிட்டு, தான் சொல்ல வந்த தகவலை மூன்றுபேருக்கும் பொதுவாகப் பகிர்ந்தார். 

“இன்னைக்கு எர்லி மார்னிங், ஈ.சீ.ஆர் பேட்ரோல்ல இருந்த டீம், யூடியூபர் பவனை கஸ்டடில எடுத்திருக்காங்க. அப்ப அவரு ரோட்டுல அன்கான்ஷியஸா மூச்சுபேச்சில்லாம கிடந்தாராம். ஜீ.ஹெச்ல அட்மிட் செஞ்சிருக்கறதா கமிஷனரேட்ல இருந்து தகவல் வந்திருக்கு” என்று ஓர் ஆவணத்தை நீட்டினார்.

பரிமளா அதை வாங்க, “பவன்… லைவ்ல அமுதா மென்ஷன் பண்ணவங்கள்ள ஒரு ஆளுதான? நம்ம கேள்விக்கெல்லம் ஒருவேள இவங்கிட்ட பதில் கிடைக்குதா பார்க்கலாம்” எனத் தன் இருக்கையிலிருந்து எழுந்த ஜெய் தொப்பியை அணிந்துகொண்டான்.

மற்ற இருவரையும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.

Exit mobile version