Site icon Her Stories

பெரியார் என்னும் தேர்ந்த பெண்ணியலாளர்

https://wallpapercave.com/w/wp6814730

பொது ஆண்டுக்கு முன்பு என சொல்லப்படும் காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசினாலும் நவீன பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாக பெண்ணிய வரலாற்றுப் பதிவுகளும் நூல்களும் கூறுகின்றன.

பெண்ணிய இயக்கங்கள் வலுப்பெற்றதின் பின்னணி மற்றும் தோற்றுனர்களை முன்வைத்து, ஒவ்வொரு காலகட்டத்தையும் பெண்ணிய அலைகளாகப் பகுத்தனர். இக்காலகட்டத்தில் பல காத்திரமான புகழ்பெற்ற நூல்கள் வெளியாகி, புதிய சிந்தனை அலைகளைத் தோற்றுவித்தன.

 முதல் அலை (1848 – 1920)

பெண்களின் வாக்குரிமைக்கும் கல்விக்குமான போராட்டங்கள் எழுச்சிகரமாக நடந்த காலகட்டம். இது அமெரிக்க அரசியலமைப்பிற்கான இருபதாம் திருத்தத்தின் ஒப்புதலுடன் வெற்றி பெறுகிறது. ‘பெண்ணியத்தின் தாய்’ என்று அழைக்கப்படுகின்ற மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் (Mary Wollstonecraft) ‘பெண்ணின் உரிமைகள்’ ( A vindication of the rights of  women) என்ற நூலை 1792ஆம் ஆண்டு வெளியிடுகிறார். பல சர்ச்சைகளை உண்டு பண்ணிய இந்நூல் முதலில் கவனம் ஈர்க்காவிட்டாலும், 1892இல் பரவலாகக் கவனமடைகிறது.

மேரி வோல்ஸ்டோன்கிராப்ட்
பெண்ணின் உரிமைகள் நூல்

இரண்டாம் அலை (1963 – 1980)

ஆண் பெண் பாலின பாகுபாட்டு வேலைகளுக்கு (Gender roles) எதிரான போராட்டங்களின் காலகட்டமாக பரிணமித்தது. இக்காலப்பகுதியில் சிமோன் தெ பொவார் (Simone de Beauvoir) எழுதிய இரண்டாம் பால்  ‘The second sex'(1949) என்கிற நூல் மிக முக்கியமானது.

இரண்டாம் பால்

மூன்றாம் அலை (1990 கள்)

PC: https://thewrightcenter.org/understanding-the-essence-of-intersectionality/

பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களையும் அதிகார மையங்களில் பெண்களின் தாழ்நிலையையும் எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற காலப்பகுதியாக இனங்காணப்படுகிறது. 1989இல் கிம்பளே கிரன்ஷா (Kimberle Crenshaw) வின் ‘குறுக்கீட்டாய்வு பெண்ணியத்தின் அறிமுக நால்’ ( Introduction to intersectionality) இன, மத, நிற, வர்க்க, பாலின ஒடுக்குமுறைகள் எவ்வாறு இடைவெட்டும் என்று எடுத்துரைத்தது. பெண்ணிய வரலாற்றில் இது மிகப்பெரும் திருப்புமுனை.

நான்காம் அலை (2005 களிலிருந்து தற்காலம் )

தரனா பர்க்

Metoo இயக்கம் தரனா பர்க் (Tarana Burke) எனும் கறுப்பின பெண்ணியவாதியால்  2006  ஆம் ஆண்டளவில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக ஆரம்பமாகி, இன்று வரை பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. 2017 இல் வெளிவந்த  மேரி பியர்ட் (Mary Beard) எழுதிய ‘பெண்ணும் அதிகாரமும்’ (Women &Power)  என்கிற நூல் பெண்களை பொதுவெளிப்பேச்சு மற்றும் அதிகாரத்திலிருந்து விலக்குவதன் வேர்கள் பண்டைய கிரேக்கம் மற்றும் ரோம் வரை நீள்கிறது எனக்கூறுகிறது. அவ்வாறு இயங்கும் பெண்கள் கேலி செய்யப்பட்டார்கள் என்பதையும் அந்நூல் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

 18ஆம் நூற்றாண்டு தொடங்கி  21ஆம் நூற்றாண்டு வரை அமெரிக்க, ஐரோப்பிய பெண்ணிய போராட்ட காலகட்டங்களில் சரித்திரம் படைத்த நூல்களைப் பார்த்தோம்.

 சிமோனின் ‘இரண்டாம் பால்’ நூலின் பெண்ணிய கோட்பாடுகள், பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூலை ஒத்திருந்தது. சிமோனின் நூல் வெளியாவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே, ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புரட்சிகர நூலை பெரியார் எழுதியிருந்தார். பத்து ரூபாய்க்கு (இந்திய ரூபாய்கள்) 80 பக்க இந்நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகி வருகிறது.

https://wallpapercave.com/w/wp6814746
https://periyarbooks.com/products/pen-yen-adimaiyanaal-psrpi

பெரியார் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற சிந்தனையாளர். மக்களில் சரி பாதியாக உள்ள பெண்களின் விடுதலைக்காகப் பேசியவர். பெண்களைப் பற்றித் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு உலகத்தில் வேறு எந்த ஒரு சிந்தனையாளரும் சிந்திக்கவில்லை.

‘பெண் என்பவள் ஒரு ஆணுக்கு சமையல்காரி, சம்பளம் வாங்காத வீட்டு வேலைக்காரி, ஆணின் காமக் கிழத்தி, ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு பிள்ளை உற்பத்தி செய்யும் ‘இயந்திரம்’, பிள்ளைக் குட்டி சுமக்கும் தோல்பை என்றும்; பெண்ணின் கழுத்தில், காதில், உடலில் ஆங்காங்கே நகையை மாட்டி உள்ளார்கள்’ என்கிறார் பெரியார்.

1942 இல் பெண் ஏன் அடிமையானாள் என்கிற நூலின் முன்னுரையில் ‘ஒன்பதாவது பத்தாவது அத்தியாயங்களாகிய ‘கர்ப்பத்தடை’, ‘பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும்’ என்கிற தலைப்புகளையே, கர்ப்பத்தினாலும் பிள்ளைகளைப் பெறுவதனாலும் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை எடுத்துக்காட்டுவதுடன் ‘பெண்கள் நலத்துக்கு ஆண்களால் – ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும் நன்மை ஏற்பட்டு விடாது என்றும் பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாகவே இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும், எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தவே எழுதப்பட்டவையாகும்’ எனவும் எழுதியுள்ளார்.

பத்து அத்தியாயங்களில் கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை என்கிற இதர தலைப்புகளில் உருவான கட்டுரைகள் அடங்குகின்றன.

பெரியார் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் இந்தியா, இலங்கை மற்றும் புலம் பெயர் தேசங்களில் வலது சாரிகளால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இக்காலகட்டங்களில், இந்நூலைப் பற்றிப் பேச வேண்டிய தேவை மிக அவசியமாகிறது. இளம் வயதினருக்கு பிறந்தநாள் பரிசாக அளிப்பதற்கு இதை விடச் சிறந்த புத்தகம் இருக்க முடியாது.

கர்ப்பத்தடை பற்றி இந்நூல் வெளியாவதற்கு முன்பே பேசியுள்ள பெரியார், அதன் அவசியத்தை தான் பேசுவதற்கும் மற்றவர்கள் பேசும் காரணங்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக் காட்டுகிறார். பெண்களின் விடுதலை பெறவும் தன்னுரிமை பெறவும் கர்ப்பத்தடை அவசியம் என பெரியார் வலியுறுத்தினார். மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வரும் அக்காலகட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்திற்காகவே மற்றவர்கள் கர்ப்பத்தடையை பேசினார்கள் என்பது அவரின் வாதமும், உண்மை நிலையும் கூட. ஆண் பெண் இருவரிடமும் தன்னிறைவுக்கும் சுய மரியாதைக்கும் அதிகமாக பிள்ளைகளை பெறுவது இடையூறாக உள்ளது என்று அவர் சொன்னதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

பெண்களுக்கு சொத்தும் வருமானமும் இல்லாத அக்காலகட்டத்தில் மற்றவர்களின் ஆதரவை நாடி நிற்க வேண்டிய தேவை இருந்தமை, பெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்தது. மேலும் பெண்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதும், மிக விரைவாக உடல் முதுமையடைவதும், ஆயுள் குறைவதும், பிரசவத்தின் போது மரணங்கள் நேர்வதும் பிள்ளைப் பேறு என்பதனாலேயே என சுட்டிக் காட்டும் பெரியார், அறிவியல் ரீதியாக தர்க்கம் புரிகிறார். இதைத்தான் சமூக மறு உற்பத்தி செயற்பாட்டில் பெண்களின் அதீத பங்கு அவர்களை எவ்வாறு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நலிவுறச் செய்கிறது என கடந்த அத்தியாயங்களில் பேசியிருந்தோம்.

‘இந்தத் தேசத்தில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் அரசாங்கமே வளர்த்து அவைகளுக்கு கல்வி கொடுத்து மேஜர் ஆக்கி விட வேண்டும் என்கிற ஒரு நிபந்தனை இருக்குமேயானால், சுகாதார மந்திரி அரசாங்கத்தின் சார்பாய் கர்ப்பத்தடையை எதிர்த்திருக்க மாட்டார்’, என்கிற பொதுவுடைமை கருத்தியலை முன்மொழிகிறார். மேஜர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் உணவு, உடை உறையுள் வழங்குவதும் அடக்கம். இந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரு குழந்தையின் கல்வியோ, வளர்ச்சியோ நிலை கொள்ளாது.

இதையொத்த கருத்துக்களை இரண்டாம் அலை பெண்ணியவாதிகள் மேலை நாடுகளில் பல்வேறு விதமாக கூறியிருந்ததோடு இது ரஷ்ய புரட்சியில் உருவான கருத்தாக்கங்களின் ஒரு அங்கமாகக் காணப்பட்டது. இது பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வெறுமனே ஐந்து வருட பள்ளிப்படிப்பை கொண்டிருந்த பெரியார், பட்டங்கள் பல பெற்ற அமெரிக்க, ஐரோப்பிய புரட்சியாளர்களின் பெண்ணியச்சிந்தனைகளுக்கு சற்றேனும் குறையாத ஞானத்தையும் நடைமுறை வாழ்வில் பெற்ற சிந்தனைகளையும் கொண்ட தமிழ் புரட்சியாளர்.

கருத்தடை இயற்கைக்கு முரணானது என்று வாதிடுவோருக்கும் அவர் பதில் வைத்திருந்தார். உலகில் உள்ள மற்றைய உயிரினங்கள் இயற்கை வாழ்வு நடத்தும் போது மனிதர்கள் இயற்கைக்கு மாறாக பல விடயங்கள் செய்து வருகிறார்கள், ஆகையால் இவ்விடயத்தில் அதன் தொலைநோக்கு பார்வையில் நன்மை கருதி ‘இயற்கைக்கு விரோதம்’ ஆக செயல்படுவதால் ஒன்றும் ஆகிவிடாது எனக் கூறுகிறார். மேலும் ‘மானிட வர்க்கம் பெருகாவிட்டால், பெண்களுக்கு என்ன ஆபத்து வந்து விடும்?’ என்று கேள்வி எழுப்புகிறார். இதுவரை பெருகி வந்துள்ள மனித வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மை தான் என்ன என்று ஒரு வினாவையும் முன்வைக்கிறார்.

கருத்தடை என இங்கு பெரியார் கூறுவது குழந்தைப் பேற்றை முடிவு பண்ணுவதற்கான சுதந்திரமே. கல்யாண விடுதலை என்கிற அத்தியாயத்தில், கல்யாணங்களால் பெண்கள் கொடுமைக்குள்ளாவதாக கூறிக் கொண்டு, இக்கொடுமைகள் தொடரும் பட்சத்தில் ஒரு அரை நாற்றாண்டுக்குள் கல்யாணச்சடங்கும் சொந்தமும் உலகத்தில் மறைந்து போய்விடும் என முன்னறிவித்தார். 2025 இல் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு பின்னர் இவை மெய்யாகி வருகிறது என பல தரவுகள் நமக்குச் சொல்கின்றன.

பெரியார் காலத்திலும் அவருக்கு பின்னரும் பல சட்டங்கள் உருவாகாமல் இருந்திருந்தால், அரை நூற்றாண்டுக்கு முன்னரே கல்யாணச்சடங்குகள் காணாமல் போயிருக்கும் என்பது நிதர்சனம்.

தொடரும்…

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

Exit mobile version