Site icon Her Stories

மலைகளின் ராணி லக்பா

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மனிதர் எட்மன்ட் ஹிலாரி என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருடன் வழிகாட்டியாகச் சென்ற டென்சிங் நார்கே பற்றிச் சிலரே அறிந்திருப்போம்.

உள்ளூர் பழங்குடிகள் வழிகாட்டாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது சாத்தியமல்ல என்றே சொல்லலாம். நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தைச் சேர்ந்த பலர் இப்படி வழிகாட்டிகளாக உள்ளனர். மற்றவர்களுக்கு, எவரெஸ்ட் மீதிருக்கும் கவர்ச்சி இவர்களின் இயல்பு வாழ்வை முற்றிலும் மாற்றியமைத்தது. அவர்களில் லக்பா ஷெர்பா ஒருவர். பத்து முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண், ஒரே பெண்.

லக்பா பிறந்து வளர்ந்தது நேபாளத்தின் மலாகு அருகே உள்ள கிராமத்தில். மலையைக் கடவுளாக வணங்கும் வழக்கம் அவர்களிடம் உள்ளது. பாலினப் பாகுபாடுகள், கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்வு. லக்பா முறையான பள்ளிக் கல்வி பயிலாதவர். தன் சகோதரனைக் கொண்டு போய் பள்ளி வாசலில் விட்டுவிட்டு வரும் வரைக்கும்தான் அவருக்கு அனுமதி இருந்தது. உள்ளே சென்று படிக்க முடியாது. சுற்றுலாப் பயணிகள் மூலம் 7 மொழிகளைப் பேசக் கற்றுக் கொண்டார். அவர் பேசும் ஆங்கிலத்தை லக்பாயிஸ் என்று பலர் கேலி செய்வதுண்டு.

மலை மீது ஏறி அந்தப் பக்கம் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் கனவு இளம் வயதிலேயே தோன்றிவிட்டது. பனி மனிதன் வந்து பிடித்துக் கொள்வான் என பயமுறுத்துவார் அவர் பாட்டி. முதன் முதலில் ஐரோப்பியப் பயணிகளைப் பார்த்து, யதி என்றே பயந்தார் லக்பா.

மலையேறும் சுற்றுலாப் பயணிகளைப் பார்க்கும் போதெல்லாம் தானும் அப்படி ஏற வேண்டும் என்கிற எண்ணம் உண்டானது. அனுமதி கிடைக்காதே! என்றாலும் ரகசியக் கனவாக அந்த ஆசை வளர்ந்து கொண்டே போனது.

பஸங் லாமா ஷெர்பா எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் நேபாளப் பெண். உயிரோடு திரும்பவில்லை. 1993ஆம் ஆண்டு அவர் இறந்த போது நேபாள நாட்டுடன் பன்னாட்டு மலையேற்றச் சமூகம் சேர்ந்தே துக்கம் அனுசரித்தது. அவருடைய இறுதி ஊர்வலத்தை இளம் பெண்ணாகப் பார்த்த லக்பாவின் மனத்தில் தான் ஒரு நாள் நிச்சயம் எவரெஸ்ட் ஏற வேண்டும் என உறுதி பிறந்தது.

மலையேற்றக் கருவிகள், கூடாரம், உணவு போன்றவற்றைச் சுமக்கும் பணிக்கு இளம் வயதிலேயே அங்கே ஆண்கள் செல்வார்கள். பெண் என்பதால் தன்னைத் தவிர்க்கக்கூடாதென முடியை வெட்டிக் கொண்டு அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார். தன் வயதை ஒத்த ஆண்களை விட அதிகமாக பாரம் சுமந்தார். முகாம்களில் சமையல் எடுபிடி வேலைகள் செய்யும் கிச்சன் பாய் ஆனார். தன் பிடிவாதத்தால் மலையேறுநராகவும் ஆனார். வழிகாட்டியானார்.

கல்யாணம் ஆனதா? பெண் என்றாலே அந்தக் கேள்வி முதன்மையாகிவிடுகிறது. மகன் பிறந்த பிறகும் இழிவாக நடத்திய கணவரோடு சேர்ந்து வாழாமல் விலகினார். தன் உழைப்பைக் கொண்டு டீ கடை ஒன்றை நடத்தி வந்தார். ஏஷியன் டிரெக்கிங் அமைப்பின் உதவியுடன் இரண்டாயிரமாவது ஆண்டு எவரெஸ்ட் மலைச் சிகரத்தை ஏறி உயிருடன் திரும்பி வந்த முதல் பெண்மணி ஆனார்.

எவ்வளவு சாதித்தாலும் குடும்ப வாழ்க்கைத் தோல்வியால் லக்பாவின் உறவினர்கள் இவரை, கிட்டத்தட்ட ஒரு அவமானச் சின்னமாகவே மற்றவர்கள் நினைத்தனர். லக்பாவின் திறமையைப் பார்க்கும் குணம் சிலருக்கே இருந்தது. ஜார்ஜ் அப்படி ஒருவர். மலையேற்ற வழிகாட்டியாக இருக்கும் போது ரோமானிய அமெரிக்கர் ஜார்ஜை சந்தித்தார் லக்பா. மலையேறுவதில் உள்ள ஆர்வம், வலிமை, துணிவு, மலைகளைப் பற்றிப் பேசினாலே வரும் உற்சாகம். இப்படிப் பல ஒற்றுமைகள் இருவருக்கும். ‘பிடித்திருக்கிறது’ என்ற ஜார்ஜிடம் ‘அப்படி என்றால் அடுத்த வருடமும் வரவேண்டும்’ என்று சொல்லி அனுப்பினார்.

அடுத்த வருடமும் ஜார்ஜ் லக்பாவைத் தேடி வந்தார். எவரெஸ்ட் மேல் இருந்த காதலா தன் மீதிருக்கும் காதலா என்று யோசிக்காமல் சம்மதம் சொன்னார் லக்பா. வாழ்க்கையை ஆரம்பித்த பிறகுதான் ஜார்ஜின் மூர்க்க குணம் தெரியவந்தது. வெளிநாட்டு வாழ்க்கை. சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது. வெளியே வந்து வேலை செய்யும் அளவுக்குப் படிக்கவில்லை. இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அடி, உதையைச் சகித்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு கட்டத்தில் மலையேறுவதற்கும் தடை சொல்ல ஆரம்பித்தார் ஜார்ஜ்.

சண்டை போடுவதும், பின்னர் இணைந்து மலையேறுவதுமாக அவர்கள் வாழ்க்கை சென்றது. ஒரு கட்டத்தில் பிரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. குடும்ப வன்முறைகளைத் தடுக்க உதவும் ஷெல்டர் ஹோம் மூலம் சூப்பர் மார்கெட்டில் வேலை தேடிக் கொண்டார். குழந்தைகள் வளர்ந்து ஆளாகி விட்டனர். தன் கனவை தூசு தட்டி எடுத்து மக்களிடம் பணம் திரட்டி மீண்டும் 2022ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறினார். அந்தப் புகழ் கொடுத்த வெளிச்சத்தில் இன்னும் நிதியுடன் ஆதரவளிக்கப் பல அமைப்புகள் வந்தன. அவர்கள் உதவியுடன் மலையேற்றத்தைத் தொடர்கிறார்.

லக்பாவின் வாழ்க்கையை ஆவணப்படமாக்கியிருக்கிறார் லூசி வாக்கர். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த இயக்குநர். இருமுறை ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர். ‘மவுன்டைன் குயின் : சம்மிட்ஸ் ஆஃப் லக்பா ஷெர்பா’ என்கிற இந்த ஆவணப்படமும் ஆஸ்கர் தரமுடையதுதான்.

லக்பாவின் பழைய நேர்காணல்கள், ஜார்ஜ் உடன் சென்ற பயணத்தில் நடந்த சண்டைகளை நிரூபிக்கும் ஆடியோ என தேடித் தேடிச் சேர்த்தது பாராட்டுக்குரியது. சில சமயங்களில் நிறையத் தகவல் கிடைக்கிறது என அனைத்தையும் சேர்த்தால் சொல்ல வந்த செய்தியில் இருந்து விலகிவிடும் வாய்ப்புள்ளது.

முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் மனிதர்களின் கால் தடம் பட்டது 1953ஆம் ஆண்டில். அந்த நூற்றாண்டு முடியும் வரைக்கும் ஐம்பதாண்டுகளில் அச்சாதனையை மீண்டும் செய்தவர்கள் 1383 பேர்தான். ஆனால் இந்த நூற்றாண்டில் மலையேறும் கருவிகள், டிராக்கிங் டிவைஸ்கள் அதிகரித்துவிட்டதால் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இதுவரை சுமார் 11000க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துவிட்டார்கள். பல நாட்டுப் பெண்களும் இதில் உண்டு. இன்னும் முயற்சிகள் தொடர்கின்றன.

ஓர் ஆண்டில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும்தான் வானிலை கொஞ்சமே கொஞ்சம் கருணை காட்டுகிறது. அப்போது மட்டும்தான் முயற்சி செய்ய முடியும். நெரிசல் ஏற்படும் அளவுக்குக் கூட்டம் வருகிறது.  ஆயிரக்கணக்கானோர் முயன்றாலும் நூற்றுக்கணக்கில்தான் வெற்றி கிட்டுகிறது.

மக்கள் வாழும் அதிகபட்ச உயரம் சுமார் 17000 அடிகள்தான். இமய மலையில் உள்ள கர்துங்லா பாஸ் 18000 அடி. உலகின் அதி உயரமான சாலையில் முதன்மையானது. கார், பேருந்து எல்லாம் போகலாம் என்பதால் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அரை மணி நேரத்துக்குள் சில செல்ஃபிகள் எடுத்துக் கொண்டு இறங்கிவிடவேண்டும். இல்லையென்றால் வாந்தி, தலைசுற்றல் போன்ற இடர்கள் ஏற்படும். அதிக நேரம் இருந்தால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்.

எவரெஸ்ட் பேஸ் கேம்ப் அதைவிட அதிக உயரம். மொத்தம் நான்கு நிலைகள் எவரெஸ்ட் மலையேற்றத்தில் உள்ளன. பேஸ் கேம்ப் எனப்படும் ஆரம்ப நிலையே 20000 அடி உயரத்தில். அங்கே வாந்தி, வயிற்றுப் போக்கு, மனக்குழப்பம் உள்ளிட்ட பலவித உபாதைகள் ஆரம்பித்துவிடும். பெரும்பாலானோர் பயணம் அங்கேயே நின்றுவிடும். அப்படி நின்று விடும் பயணங்களுக்கே பல மாதப் பயிற்சியும் பல ஆயிரம் டாலர்கள் பணமும் தேவை.

மலையேறும் கட்டணமே பத்து லட்ச ரூபாய்க்கு மேல். மற்றதெல்லாம் சேர்த்தால் குறைந்தது அரை கோடி ரூபாயில் ஆரம்பித்து ஒரு கோடி ரூபாய்க்கு மேலேயும் செலவாகும். மலையேறக் கட்டணம் எதற்கு என்கிறீர்களா? உள்ளூர் மலையேற்றுநர் அமைப்பில் இருப்போர் ஒவ்வொரு சீசனுக்கும் பயணிகள் வருவதற்கு முன்பாகச் சென்று ஏறுவதற்குத் தோதான வழிகளைக் கண்டறிந்து ஆணி அடித்துக் கயிறு மாட்டி வைப்பார்கள். அதைப் பிடித்துக் கொண்டுதான் மற்றவர்கள் மேலே ஏற முடியும். அதற்குத்தான் கட்டணம். ஷெர்பா மக்கள், மலையேறுவதைத் தொழிலாகக் கொண்ட இனமல்ல. எவரெஸ்ட் மீதிருந்த ஆர்வத்தினால் சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்க, பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திய தைரியசாலிகள்.

பேஸ் கேம்ப்பில் இருந்து அடுத்த முகாமுக்குச் செல்ல ஆற்றைக் கடக்க வேண்டும். ஐஸ் ஆறுதான். உறுதியற்ற பனிக்கட்டி ஆற்றின் போக்கிலேயே மேலேறிச் செல்வதில் வேறு விதமான ஆபத்துகள் ஏற்படும். அதைக் கடந்து அடுத்த முகாம் சென்றாலும் அங்கிருந்து மேலே செல்வது நிச்சயமில்லை. ஏனெனில் அதன் பெயரே கொலைகாரக் குன்று (Death zone).

ஒரே மூச்சில் நான்கு நிலைகளைக் கடந்து போக முடியாது. இரண்டாவது முகாம் சென்றதும் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வரவேண்டும். இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஏற வேண்டும். மூன்றாவது முகாமை அடைந்து அங்கே தங்கி மீண்டும் திரும்பி விட வேண்டும். இப்படிச் செய்து உடலை அந்த உயரத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தயார் செய்வார்கள். சுமார் இரண்டு மாத காலம் ஆகும். ஆக்ஸிஜன் கொண்டு சென்றாலும் கூட மனித உடல் பழக்கத்துக்கு அடிமையானது அல்லவா.  பிரசவ வலியில் இருக்கும் பெண்கள் அதிக பட்ச வலியை உணர்ந்து சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வருவார்கள். பல முறை இப்படி வலியில் துடித்த பிறகு கடைசி மூச்சைத் திரட்டிக் குழந்தையை வெளியே தள்ளுவார்கள். அதைப்போலத்தான் எவரெஸ்ட் பயணத்தின் நான்காவது நிலையான ஃபைனல் புஷ். முழு வேகத்துடன் ஏறி எவரெஸ்ட்டை அடையும் முயற்சி. மலை ஏறும் லட்சியத்தில் வென்றாலும் திரும்பி உயிருடன் வருவது நிச்சயம் இல்லை. பாதிக்குப் பாதி உயிரிழப்புகள் திரும்பி வரும்போதுதான் நடக்கின்றன.

இந்தத் தகவல்களைப் படிக்கும் போதே நம்மில் பலருக்கு மலைப்பாக இருக்கும். ஒரு முறை இரு முறை அல்ல, பத்து முறை இப்படி ஒரு பெண் ஏறி இருக்கிறார். அதுவும் ஐம்பதை நெருங்கும் வயதில் இருக்கும் லக்பாவின் முயற்சியைப் பார்க்கும் போது வியப்பும் உற்சாகமும் அளிப்பதாக இருந்திருக்க வேண்டும். இங்குதான் இயக்குநர் கொஞ்சம் தடம் மாறி விட்டாரோ எனத் தோன்றுகிறது.

எவரெஸ்ட் சிகரத்தைப் பல முறை ஏறிக் கடந்த பெண்ணின் சாகசக் கதையைக் காண விரும்பும் ரசிகர்கள், கணவனால் ஏற்பட்ட துயரங்களைக் கடக்க முடியாத லக்பாவைக் காண நேர்கிறது. கொடுமைக்காரக் கணவன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. லக்பா தன் கணவரைப் பற்றிப் புலம்பும் பகுதியைக் கொஞ்சம் வெட்டிச் சுருக்கி இருக்கலாம்.

வீடு தங்காத ஊர் சுற்றிப் பெண் லக்பா. வீட்டுக்கு வெளியேதான் அவர் விரும்பிய வாழ்க்கை இருந்தது. காலம் அவரை, அமெரிக்காவின் கனெக்டிகட் மாநில சூப்பர் மார்கெட் ஒன்றில் பல மணி நேரம் அடைந்து கிடந்து பணி செய்யும் வேலையில் கொண்டு போய்ச் சேர்த்தது. வேலை முடிந்து வெளியே வரும் லக்பா, சூரிய வெளிச்சத்தையும் காற்றையும் கை நீட்டி அள்ளிக் கொள்ளும் காட்சி ஒன்றிருக்கும். ஆவணப்படத்தில் இருக்கும் அற்புதமான காட்சி அது.

தான் விரும்பிய வாழ்வை மீண்டும் போராடிப் பெற்றுவிட்டார் லக்பா. உலகம் முழுக்கப் பல சிகரங்களை ஏறியதோடு மலையேற்றப் பயிற்சி மையமும் நடத்துகிறார். கட்டுப்பெட்டியான கிராமம் ஒன்றில் பிறந்த லக்பா துணிச்சலுடன் தன் வாழ்வை வாழ்ந்திருக்கிறார். எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகளைச் செய்திருக்கிறார். தவறவிடக் கூடாத ஆவணப்படம்.

டிரைலர்:

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.

Exit mobile version