We, the Wampanoag, welcomed you, the white man, with open arms, little knowing that it was the beginning of the end; that before 50 years were to pass, the Wampanoag would no longer be a free people. ~ THE SUPPRESSED SPEECH OF WAMSUTTA (FRANK B.) JAMES, WAMPANOAG (1970)
“வாம்பனோக் மக்களாகிய நாங்கள், வெள்ளையர்களாகிய உங்களை இருகரம் கூப்பி வரவேற்றோம்; ஆனால் அதுவே எங்கள் முடிவின் தொடக்கம் என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. 50 ஆண்டுகள் கடப்பதற்குள்ளேயே, வாம்பனோக் மக்கள் சுதந்திரமற்ற ஓர் இனமாக மாறுவார்கள் என்பதை நாங்கள் உணரவில்லை.” — வாம்சூட்டா (ஃபிராங்க் பி.) ஜேம்ஸ், வாம்பனோக் தலைவர் (1970 – தடைசெய்யப்பட்ட உரை)
அமெரிக்காவின் ‘நன்றியறிதல் திருநாள்’ (Thanksgiving) கொண்டாடப்படும்போது, உணவு மேசைகளில் விரியும் புன்னகைகளுக்குப் பின்னால், கிழக்கு நிலத்து மனிதர்களின் கண்ணீரும் ரத்தமும் உறைந்து கிடக்கின்றன. வெர்ஜீனியாவின் புகையிலைப் பொருளாதாரத்தைப் போலவே, மாசசூசெட்ஸின் பனிப்பொழிவுகளுக்குள் வாம்பனோக் மக்களின் தாயகமும் அவர்களின் வாழ்வாதாரமும் பறிபோனதை இந்த நிலத்தின் கனத்த மௌனம் கதையாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது… ஆனால், அதைக் கேட்பதற்குக் காதுகள்தான் எங்கே?
1620-ஆண்டில் பிளிமத் (Massachusetts state) என்ற இடத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் இரண்டாவது காலனி பகுதியை நிறுவினர். அவர்களின் வருகைக்கு முன்னரே அங்கு பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்துவந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ‘வாம்பனோக் பூர்வகுடி’ என வரலாறு அடையாளப்படுத்துகிறது. அவர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வேரூன்றி நின்றதாக அகழாய்வுத் தரவுகள் சொல்கின்றன.
பிளிமத்திலுள்ள ஈல் நதிக்கரையில் (Eel River) நடத்தப்பட்ட அகழாய்வுகள், வாம்பனோக் மக்களின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. அங்கு 40,000க்கும் மேற்பட்ட கலை, பண்பாட்டுத் தடயங்களும் தொல் உணவுச் சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை 8,000 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதில் கண்டெடுக்கப்பட்ட சில பொருள்கள் 10,000 ஆண்டுகளையும் தாண்டியவை என்கிற கருத்தும் நிலவுகிறது.
ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பாக, பொ.ஆ.1600-களில் வாம்பனோக் கூட்டமைப்பு (Confederacy) என்பது சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களையும், எண்ணற்ற சிறிய குடியிருப்புகளையும் உள்ளடக்கியதாக விளங்கியது. படக்செட் (Patuxet), பொகானோக்கெட் (Pokanoket), நெமாஸ்கெட் (Nemasket), நாசெட் (Nauset) போன்ற ஒவ்வொரு கிராமத்தையும் ‘சாசெம்’ (Sachem) என்ற உள்ளூர் தலைவர்கள் வழிநடத்தினர். இவர்கள் ‘மசாசாயிட்’ (Massasoit) எனப்படும் தலைமைச் சாசெமின் கீழ் ஒன்றுபட்டிருந்தனர்.
வீரம், விவேகம், வேளாண்மைத் திறன்களுடன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருந்த இம்மக்களின் நிலப்பரப்பு, இன்றைய மாசசூசெட்ஸ் (Massachusetts) மற்றும் ரோட் தீவு (Rhode Island) பகுதிகளில் விரிந்திருந்தது.
அச்சமயத்தில் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸுக்கு அந்நாட்டில் நிலவிய தேவாலய சட்டதிட்டங்களால் அதிருப்தி அடைந்த குழுவினரால் ஓயாத தொல்லை ஏற்பட்டு வந்தது. அவ்வாறு தொல்லை தருபவர்களை, ‘அடிபணிய வைப்பேன் அல்லது நாட்டை விட்டு விரட்டுவேன்’ என்கிற தீர்ப்பினை மன்னர் அறிவித்தார். 1609-ஆம் ஆண்டு, அதிருப்தியாளர்கள் அமெரிக்காவில் காலனியை அமைக்க வெர்ஜீனியா நிறுவனம் ஒப்புதல் அளித்தது.
‘பில்கிரிம்ஸ்’ (Pilgrims) என அழைக்கப்பட்ட இக்குழுவினர் ‘மேஃப்ளவர்’ (Mayflower) கப்பலில் அமெரிக்கா வந்தடைந்தனர். பில்கிரிம்ஸ் குடியேறிய பிளிமத் பகுதி, வாம்பனோக் (Wampanoag) பழங்குடியினரின் ‘படக்செட்’ (Patuxet) என்கிற செழிப்பான கிராமமாகும். ஆனால், இவர்கள் வருவதற்கு முன்பே, ஐரோப்பிய மாலுமிகளால் பரப்பப்பட்ட பிளேக் போன்ற கடுமையான தொற்றுநோய்களால் 90% வாம்பானோக் மக்கள் மடிந்துவிட்டனர். அதனால் அப்பகுதி மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிய, கைவிடப்பட்ட நிலமாக மாறியிருந்தது.
இதற்கிடையில், 1614-இல் ஆங்கிலேயக் கப்பல் தலைவனொருவன், வாம்பனோக் கடற்கரையோரத்திலிருந்து சில பூர்வீகக்குடிகளை கடத்திச்சென்றான். அதிலொருவர் ஸ்குவாண்டோ (படக்செட் பூர்வகுடி). அவர் அங்கிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, ஆங்கிலம் கற்று 1619-இல் தாயகமான வாம்பனோக்கிற்கு திரும்பினார். உறவுகளைக் காணத்துடித்து ஓடி வந்தவர் கண்டதெல்லாம், ஆளுயரத்தில் வளர்ந்திருந்த புல்வெளியில் வெறும் எலும்புக்கூடுகளும் உடைந்த வீடுகளும் பொட்டலாய் மனித சஞ்சாரமற்ற பாழ் நிலமும் உடனிருந்த மயான அமைதியையும் மட்டும்தான்.
படக்செட் இனத்தின் கடைசித் துளியாக அவர் உணவுக்கும், உறைவிடத்திற்கும், உறவிற்குமாக அலைந்துதிரிந்தார். இறுதியில், உயிர்பிழைத்த வாம்பனோக் மக்களைக் கண்டு உயிர்துளிர்த்தார். வாம்பனோக் கூட்டமைப்பின் கம்பீரமான தலைவரான உசாமெக்வினை (Ousamequin) சந்தித்தார். இவர்தான் வரலாற்று ரீதியாக மசசாயிட்(Massasoit) என்கிற பெயராலும் அறியப்படுகிறார். ஐரோப்பிய நோய்த்தொற்றால் துடைத்தெறியப்பட்ட வாம்பனோக் மக்கள் பலவீனமான நிலையில் இருந்தனர். இதுவே சமயமென அவர்களின் எதிரிகளான நாராகான்செட் பழங்குடியினர் இவர்களை அடிபணிய வைக்க முயன்றனர். அத்துடன் அச்சுறுத்தி பல நிலப்பகுதிகளைக் கைப்பற்ற முயன்றனர்.
இந்நிலையில், கடலுக்கு அப்பாலுள்ள இங்கிலாந்து வெள்ளையர்களின் செல்வம், அதிகாரம் குறித்து ஸ்குவாண்டோ கூறிய தகவல்களைக்கேட்டு பெருந்தலைவர் உசாமெக்வின் ஆழமாக சிந்தித்தார். தங்கள் எதிரிகளான நாராகான்செட் பழங்குடிகளின் நெருக்குதலைச் சமாளிக்க ஆங்கிலேய காலனிவாசிகளுடன் நட்பு பாராட்டி, ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதை விரைவில் உணர்ந்தார்.
காலனிவாசிகளை, டிசம்பர் மாத உறைபனி, கடுமையான உழைப்பு, உணவுத் தட்டுப்பாடு முதலியன உலுக்கியெடுத்தன. திடீரென்று ஒரு நாள் பூர்வகுடி பழங்குடியொருவர் அவர்கள் குடியிருப்புக்கு நேரடியாக வந்து உடைந்த ஆங்கிலத்தில் நல்வரவைக் கூறினார். அவர் அபெனாகி (Abenaki) பழங்குடியினத் தலைவர் சமோசெட் (Samoset). அவர் ஆங்கிலமொழியை ஐரோப்பிய மீனவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தார். காலனிவாசிகள், அந்த புது இடத்தின் விபரங்கள், சுற்றியுள்ள நிலப்பரப்பு, புவியியல் அமைப்பு, அங்கிருந்த பழங்குடியின மக்கள் பற்றிய கேட்ட கேள்விகளுக்கு இவர் பதிலளித்தார். சில நாள்களுக்குப் பிறகு, பழங்குடி ஸ்குவாண்டோவுடன் மீண்டும் வந்தார். ஸ்குவாண்டோவின் சரளமான ஆங்கில உரையாடல் காலனிவாசிகளுக்கு வாழ்க்கையின்மீது அதீத நம்பிக்கையை அளித்தது.
ஸ்குவாண்டோவின் ஆலோசனைப்படி, பெருந்தலைவர் சாசெம் மசாசாயிட் ஆங்கிலேய கவர்னருடன் அமைதி உடன்படிக்கையில் ஈடுபட்டார். அவரின் பார்வையில், ஆங்கிலேயர்களுடனும் அவர்களின் நவீன ஆயுதமான துப்பாக்கிகளுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி, நாராகான்செட் பழங்குடியினருக்கு எதிராகத் தனது பலத்தை மீண்டும் பெற உதவும் என்று அவர் கருதினார்.
ஸ்குவாண்டோ அவ்வுறவை மேலும் வலுப்படுத்தினார். அவர் பில்கிரிம்களுடன் தனது பூர்வீக கிராமத்திலேயே தங்கி, அவர்களுக்கு எவ்வாறு பயிரிடுவது மற்றும் எங்கே மீன் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொடுத்தார். அந்த இலையுதிர்காலத்தில், பிளிமத்தில் இருபது ஏக்கர் நிலத்தில் இந்திய மக்காச்சோளம் விளைந்து நின்று காலனிவாசிகளின் வாழ்க்கை வளத்திற்கு கட்டியம் கூறியது.
வாம்பனோக் பூர்வகுடி பண்பாட்டின்படி அறுவடைக்காலம் இயற்கையோடும் சமூகத்தோடும் பிணைந்ததொரு புனிதமான நிகழ்வாகும். அவர்கள் சோளம், பீன்ஸ் மற்றும் பூசணி ஆகியவற்றை ஒன்றாகப் பயிரிடும் ‘மூன்று சகோதரிகள்’ (Three Sisters) வேளாண்மை முறையின் மூலம் நிலத்திற்கு நன்றி செலுத்தினர். ‘நிகோமக்’ (Nickommo) என்ற திருவிழாவின் போது, தங்களின் அறுவடையில் விளைந்தவற்றை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, சமூகத்தின் சமநிலையையும் ஒற்றுமையையும் கொண்டாடினர். பூர்வகுடிகளின் இந்தப் பாரம்பரிய கொண்டாட்டத்தை பற்றி அறிந்து ஆங்கிலேயர்கள், தாங்கள் இந்த புதிய மண்ணிற்கு வந்தது முதல் பழங்குடியினர் செய்த உதவிகளுக்காக நன்றியறிதல் விருந்தை அளிக்க முடிவுசெய்தனர்.
பெருந்தலைவர் (Sachem) மசசாய்ட்டும்அவரது குடிமக்களும் அவ்விருந்திற்கு ஐந்து மான்களைக் கொண்டு சென்று கலந்துகொண்டனர். மூன்று நாள்கள் நீடித்த அந்த விழா, பிரார்த்தனைகள், பாடல்கள், வாம்பனோக் மக்களின் சடங்குகள், துப்பாக்கிசுடும் போட்டிகள், மல்யுத்தப்போட்டிகள், ஓட்டப்பந்தயங்கள் மற்றும் ஆங்கிலேய-இந்திய விளையாட்டுகளென அனைத்தும் கலந்து கொண்டாடப்பட்டது. பில்கிரிம்களும் வாம்பனோக்களும் தங்களின் அறுவடை விருந்தை வருடாந்திர கொண்டாட்டமாக மாற்ற உறுதியளித்தனர். ஆரம்பத்தில், இந்த அமைதி ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் பயனளித்தது.
ஆங்கிலேயர்-வாம்பனோக் நட்பினால் எதிரிகளான நாராகான்செட் பழங்குடியினரிடமிருந்து பாதுகாப்பு கிட்டியது. அதே சமயம் மசாசாயிட்டிற்கு செல்வாக்கும் கௌரவமும் கிடைத்தன. மறுபுறம், பூர்வகுடிகளின் ஆதரவால், காலனி பாதுகாப்புடன் செழிப்பாகவும் வளரத் தொடங்கியது. ஆனால், வேகமாக விரிவடைந்த ஆங்கிலேய மக்கள் தொகைக்காக மசசாயிட் பல நிலங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.
40 வருடங்களாக கட்டிக்காத்த உறவு மிகவும் பலவீனமானது. 1662-இல் மசாசாயிட் காலமானார். அதற்குள், பேராசை கொண்ட ஆங்கிலேயக் குடியேறிகளின் புதிய தலைமுறை, வாம்பனோக் மக்களின் நிலங்கள் முழுவதும் பரவியிருந்தது. ஆங்கிலேயரின் அதிகாரம்மிக்க அரசாங்கம், சட்டங்கள் மற்றும் மதத் தலைவர்கள் பூர்வகுடிகளின்மீது கடுமையாகவும் அவர்களிடம் மரியாதையற்ற முறையிலும் ஆட்சிசெலுத்திக் கொண்டிருந்தது. நாளடைவில் ஆங்கிலேயரின் அத்துமீறல்கள் அமைதி உடன்படிக்கையை முறிக்கத்தொடங்கின. துன்பப்பட்ட பழங்குடியினர் கொதித்துக்கொண்டிருந்தனர்.
மசாசாயிட்டிற்குப் பிறகு அவரது மூத்த மகன் வாம்சுட்டா (Wamsutta/Alexander) இனத்தலைவரானார். வெள்ளை குடியேறிகள் மீது அவரது தந்தைக்கு இருந்த சகிப்புத்தன்மை வாம்சுட்டாவிடம் இருக்கவில்லை. அதற்கேற்றவாறு ஆங்கிலேயருடனான உறவும் சீரழிந்திருந்தது. அவர் பதவியேற்று ஓராண்டுகூட முடிவடையாத நிலையில், விசாரணைக்காக ஆங்கிலேயர்களால் பிளிமத்திற்கு காவலில் அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் அவரின் இரண்டு மகன்களைப் பியூரிட்டன்கள் பிணையாக வைத்துக்கொண்டு, அவரை விடுதலை செய்தனர். அவர் திரும்பும் வழியிலேயே உயிரிழந்தார். வாம்பனோக் மக்கள் ஆங்கிலேயர்கள்மேல் முழுமையாக நம்பிக்கை இழந்தனர்.
அடுத்து 1662ல் வாம்சுட்டாவின் இளைய சகோதரரான மெடாகாமெட் (Metacomet) வாம்பனோக் மக்களின் தலைவரானார். பியூரிட்டன்கள் அவரை ‘கிங் பிலிப்’ என்றழைத்தனர். 1662-வாக்கில், அப்பகுதியில் ஆங்கிலேய குடியேறிகள் பூர்வகுடி மக்கள் தொகையைவிட இருமடங்காக இருந்தது. வேட்டைநிலங்கள் அருகிப்போய், பழங்குடிகள் காலனிவாசிகளிடம் கூலியாள்களாகும் நிலையேற்பட்டது. பூர்வகுடிகள் தங்கள் பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தியதற்காகவும் கிறிஸ்தவ மதத்தைத் தவிர்த்ததற்காகவும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் வெறித்தனமான நில ஆக்கிரமிப்புகளும், கிறிஸ்துவ மதத்தை பூர்வகுடிகள் மீது திணித்ததும் மெட்டாகாமெட்டை வெகுண்டெழச் செய்தது. காலனியை எதிர்த்து போருக்கு ஆயத்தமாகும் குற்றத்திற்காக பியூரிட்டன் நீதிமன்றம் அவரைச் சரணடைய அழைத்தது. அவர் வீரச்செருக்குடன் தம் ஆயுதம் ஏந்திய படைகளுடன் சென்று தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தார். தற்காப்பிற்கு அவசியமான துப்பாக்கிகளை ஒப்படைக்கச்சொல்லி வற்புறுத்தப்பட்டபோதும், அவை பூர்வகுடிகளை பலவீனப்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள் என்பதால், அதற்கு அவர் அடிபணியவில்லை.
1675-இல் ஜான் சாஸமன் என்கிற பூர்வகுடி கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, மெட்டாகாமெட்டின் போர் திட்டங்களை ஆங்கிலேயரிடம் உளவு கூறிவந்தார். பழங்குடிச் சட்டப்படி பிறகு அவர் கொல்லப்பட்டார். இதற்குப் பழி வாங்குவதற்காக ஆங்கிலேயர்கள் மூன்று பூர்வகுடிகளுக்கு மரண தண்டனை அளித்தனர். கொதித்தெழுந்த வாம்பனோக் இளைஞர்கள், தலைவரின் உத்தரவுக்குக் காத்திராமல் ஜூன் 24, 1675 அன்று போரைத் தொடங்கினர். திட்டம் முன்கூட்டியே சிதைந்தாலும், மெட்டாகாமெட் நிப்மக் (Nipmuck) பழங்குடியினருடன் இணைந்து மின்னல் வேகக் கொரில்லாத் தாக்குதல்களை நடத்தினார். 90 ஆங்கிலேய நகரங்களில் 13 நகரங்கள் சாம்பலாயின; 600 காலனியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவரின் இந்த நுட்பமான தாக்குதல்களால் மிரண்ட காலனியாளர்கள் அவரை ‘நியூ இங்கிலாந்தின் பயங்கரவாதி’ என அஞ்சியழைத்து, கொடூரத் தாக்குதலிலிருந்து தப்ப கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
1675ல் டிசம்பர் மாத கடுங்குளிரில், அடர்ந்த சதுப்புநிலத்தில் மரவேலிகளுடன் அமைக்கப்பட்ட கோட்டையில் மெட்டாகாமெட்டும் 3,000 நரகன்செட் மக்களும் தங்கியிருந்தனர். ‘பீட்டர்’ என்கிற பூர்வகுடியின் துரோகத்தால் கோட்டை வழியையறிந்த ஆங்கிலேயப் படை, அக்கோட்டைக்குக் கொடூரமாகத் தீவைத்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடிகள் மடிந்தனர். நரகன்செட் தலைவர் தூக்கிலிடப்பட்டதும், மெட்டாகாமெட்டின் அண்ணி ராணி வெட்டமூவின் தலை துண்டிக்கப்பட்டதும் மெட்டாகாமெட்டைத் தீராத மனவேதனையில் ஆழ்த்தின.
1676-இல் பாஸ்டனைச் சுற்றிய பகுதிகள் போர்க்களமாயின. ஆங்கிலேயர்களின் 600 கட்டடங்கள் தரைமட்டமாகின. நிலைமையைச் சமாளிக்க, காலனிவாசிகள் ‘பிற பூர்வகுடி இனங்களைக் கொண்டே வம்பனோக் பூர்வகுடியை அழிக்கவேண்டும்’ என்கிற தந்திரத்தைக் கையாண்டனர். பழிவாங்கும் எண்ணத்திலிருந்த பிற பழங்குடிகளையும் தமது படையில் இணைத்துக்கொண்டனர். போரின் தொடர் இழப்புகளால் நேசப்படைகளும் விலகத் தொடங்கியதால், மெட்டாகாமெட் நாடோடியாகத் திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆகஸ்ட் 1676-இல், ஜான் ஆல்டெர்மன் என்ற பூர்வகுடியின் துரோகத்தால் மெட்டாகாமெட் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரற்ற அம்மாவீரனின் உடல் நான்கு கூறுகளாக வெட்டப்பட்டு, அவரின் தலை பிளிமத் காலனியில் 20 ஆண்டுகள் கம்பத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. மெட்டாகாமெட்டின் மனைவியும் சிறுமகனும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடிமைகளாக விற்று அனுப்பப்பட்டனர். நியூ இங்கிலாந்து காலனியில் அமைதி திரும்பியது; ஆனால் பூர்வகுடி கிராமங்களிலோ மயான அமைதி உறைபனியாகிக் கிடந்தது.
குரல் தொடரும்…
பெட்டிச் செய்தி
கிங் பிலிப் போரின்போது, போரில் பங்கேற்காமல் நடுநிலை வகித்த பூர்வகுடியினரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 500-க்கும் மேற்பட்ட 'நம்பிக்கைக்குரிய' பூர்வகுடியின மக்களையும் ஆங்கிலேயக் காலனிவாசிகள் முற்றிலுமாக நம்பவில்லை. இதனால் பாதுகாப்பு என்ற பெயரில், பாஸ்டன் துறைமுகத்தில் இருந்த டீர் தீவில் (Deer Island) அவர்களை வலுக்கட்டாயமாக அடைத்துவைத்தனர்.
கடுமையான பனிப்பொழிவு, போதிய உணவின்மை, தங்குமிடம் மற்றும் குளிர்காய விறகுகூட இல்லாத கொடூரமான சூழ்நிலையால், சிறைவைக்கப்பட்ட பூர்வகுடிகளில் பாதிப்பேர் அந்த ஒரே குளிர்காலத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். காலனியாதிக்க வரலாற்றின் மிகக் கொடூரமான மற்றும் மறக்கப்பட்ட சோகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
படைப்பாளர்
ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.


