திருநங்கை ஜில்லுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்ட ஆவணத் திரைப்படம். ஜில்லுவின் வாழ்க்கை வாயிலாக திருநங்கைகள் தங்களின் வாழ்வில் எதிர்க்கொள்ளும் துன்பங்களை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் திவ்யபாரதி.
கதை கேட்டோ, அல்லது நேர்காணல் மட்டும் எடுத்துக்கொண்டோ அதைப் படமாக்கவில்லை. மாறாக, திருநங்கைகளின் வாழ்க்கையோடும் இத்திரைப்படத்தின் கதாநாயகியோடும் பயணப்பட்டு, தான் உணர்ந்த நிகழ்வுகளின் நினைவுத் தொகுப்பாக, இந்த முழுநீள திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் திவ்யபாரதி.
நாம் தெரிந்தே புறக்கணித்து, கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒரு சமூகத்தின் இருத்தலுக்கான போராட்டம்தான் இந்த படம். இந்த சமூகப் புறக்கணிப்புக்கு பின்னால் இருக்கும் அசிங்கம், இழிவு, வெறுப்பு, பாவம், புண்ணியம் போன்ற திணிப்புகள், கற்பிதங்கள் அனைத்தையும் ஜில்லு மூலம் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இயக்குநர்.
இந்தப் புறக்கணிப்பே திருநர் சமூகத்தின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் காரணமாக இருக்கிறது. இது தேர்ந்தெடுத்த வாழ்வோ, வாழ்க்கை முறையோ அல்ல. மாதிரிகளாக (மனுசங்க மாதிரி , பொண்ணுங்க மாதிரி )அல்லாமல் இயல்பாக எல்லோரைப் போலவும் உணர்வு உள்ள மனிதர்களாக வாழ விருப்பும் உயிர்களின் ஏக்கமாக இந்தத் திரைப்படம் மூலம் நமக்குக் கடத்தப்படுகிறது. திருநங்கைகள் என்றாலே பிச்சையும், பாலியல் தொழிலும் மட்டுமே சித்தரிக்கப்படும் வழக்கத்தில், கரகாட்டம் குறித்தும், அக்கலையில் இருக்கும் திருநங்கைகளின் நிலை, அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்தும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
படத்தின் தொகுப்பாக்கம் (editing) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. குறிப்பாக திரைப்படத்தின் முன்னோட்டம் (trailer) மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. முழு படத்தின் கருவைச் சுருக்கமாக அதே சமயம் திருநங்கைகள் வாழ்க்கையில இருக்கும் ஆசை, காத்திருப்பு, இழப்பு, வேதனை, வலி, தேடல், ஏக்கம் என அனைத்து உணவர்வுகளும் 2 நிமிட நேரத்துக்குள்ள படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தியது சிறப்பு.
படத்தின் இசைதான் இந்தப் படத்தின் பெரிய பலமே. புறக்கணிக்கப்பட்ட உணவர்வுகளை, வலிகளை கவனிக்க வைத்து தன்னுணர்வேற்றும் (empathize) இசை. படத்தைப் பார்க்காமலே பாடல்கள் வழி திரைக்கதையை கண் முன்னே காட்டும் வலிமையான பாடல் வரிகள். எந்த ஒரு செயற்கைத்தனமும் இல்லாமல், இயல்பாக அவர்கள் வாழ்விடத்திலேயே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சமூகமாக இருக்கும் கூட்டு வாழ்க்கை(community life), அவர்களுக்கான உடல் மொழி, பேச்சு வழக்கு, கடவுள் வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிப்படுத்திய விதம் அவர்களின் உலகத்தை நாம் நெருங்கிப் பார்க்க வைக்கிறது.
பெரும்பாலும் இந்த சமூகம் வழிபடக்கூடிய கூத்தாண்டவர் , கூவாகம் திருவிழா, சடங்குகள், அங்காள பரமேஸ்வரி வழிபாடுதான் நிறைய கேள்விப்பட்டு இருப்போம். இந்தத் திரைப்படத்தில், சேவல் மேல் இருக்கும் ஒரு அம்மன் வழிபாடு காட்டப்படுகிறது . அந்த வழிபாடு பற்றி தேடும்பொழுதுதான் குஜராத் மாநிலத்தில் இருக்கும் பஹுச்சரா மாதா என்று (Bahuchara Mata — goddess) தெரிய வருகிறது. ஹிஜ்ரா சமூகம் ( hijra[a] are transgender, intersex, or eunuch people who live in communities that follow a kinship system known as guru-chela system) என்ற குரு – சேலா (guru-chela similar to mother daughter relationship) எனப்படும் உறவுமுறையை பின்பற்றும் சமூகங்களில் வாழும் திருநங்கைகள் பிரத்தியேகமாக வழிபடும் தெய்வம்தான் பஹுச்சரா மாதா.
வியாபார ரீதியாக எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிகர்கள் தேர்வில் நிறைய சிக்கல்கள், சமரசங்கள் இருக்கும். இயல்பாக அவர்கள் அவர்களாகவே இப்படத்தில் இருப்பதால், அந்த சிக்கல் எதுவும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை திருநங்கைகளே நமக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் காட்சிகள், பச்சை குத்திக்கொள்ளவது, உடல் மாற்றத்திற்கு செய்யக்கூடிய அறுவை சிகிச்சை, அதன் வலிகள் இப்படி அவர்களின் மெனக்கிடல் பற்றி மிகவும் உணர்வுபூர்வமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
காசுக்கும், உடம்பு சுகத்துக்கும் காதல் என்ற நம்பிக்கை கொடுத்து இவர்களை ஏமாற்றுகின்ற வலி உயிரையே பறிக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். சமூகம், குடும்பம் என ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஒரு சமூகமாக ஒன்றுசேர்ந்து, வலிகளையும் கடந்து, தனக்கான உறவுகளை தானே உருவாக்கி ஒருவருக்கொருவர் ஆதரவாக இவர்கள் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கையில ஒரு உயிரிழப்பு என்பது எத்தனை வலியாக இருக்கும்? நாடகக் காதல் என்று சாதி மறுப்பு திருமணத்தை இழிவு செய்யும் சமூகம், திருநர்கள் சந்திக்கும் இந்த நம்பிக்கை துரோகத்தை, ஏமாற்று வேலையை என்னவென்று அழைக்கும்?
தன் பாலியல் இச்சைக்கு பாலியல் தொழிலாளர்களை நாடும் ஆண்களைக் குறித்து பெரிதாக இந்த சமூகம் கண்டுக்கொள்வதே இல்லை. சமீபத்தில் வன்புணர்வுக்கு பாலியல் தொழில் ஒரு தீர்வாக இருக்குமென கருத்துகள் பேசப்பட்டன. ஜில்லுவின் நடிப்பில் பாலியல் தொழிலில் இருக்கும் வலிகள், அவர்கள் நடத்தப்படும் விதம், அதில் உள்ள சுரண்டல்கள், அனுமதியற்ற அத்துமீறல்கள் இவற்றைப் பார்க்கும்பொழுது, இந்தப் பொது சமூகம் வெட்கித் தலைகுனியவேண்டும்.
ஜில்லுவின் “ஒரு நாள் நிம்மதியான தூக்கம்தான் பெரிய கனவு” இந்த வார்த்தைகள்தான் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அவர்களுள் மூத்தவர், எல்லாருக்கும் வழிகாட்டியாக இருக்கும் ரேவதி அம்மா பகிர கூடிய அனுபவங்கள், அவர்களின் நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கை குறித்த தெளிவை நமக்கு ஏற்படுத்தும்.
காவல் அதிகாரிகள் அவர்களை நடத்தும் விதம், வன்புணர்வு பற்றி பெண்கள் சொல்வதோ, அவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதோ இங்கே பெரும்பாடாக இருக்கும் நிலையில், ஒரு திருநங்கையின் நிலையை ஷாலு அவர்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்த காட்சி ஒரு 17 வயது குழந்தை, தான் கண்டுணர்ந்த பாலியல் அடையாளத்தைக் குடும்பம் நிராகரிக்கும்பொழுது, இவர்களைத் தேடி வரும் காட்சி. தனக்கான வெளியாக அந்த இடம், ஆசைப்பட்டது போல புடவை கட்டி, நகப்பூச்சுப் போட்டு, கண்ணாடி பார்த்து அந்தக் குழந்தை தன்னை ரசிக்கும் காட்சிகள் அருமை.
தான் அடையாளம் கண்டுகொண்ட பாலினத்திற்கு வைக்கக்கூடிய பெயர், அதற்கான விளக்கம் இன்னும் அழகு. “படிப்பு ரொம்ப முக்கியம், வயசும் ரொம்ப கம்மி, நீ படிச்சிட்டு வா, இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்” என்று ஜில்லு சொல்கிற காட்சி கூடுதல் சிறப்பு. திருநர் சமூகத்துக்கு படிப்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் நிறைய இடங்களில் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது.
“இந்த பொழப்புக்கு ஏதாச்சும் வேலைக்கு போகலாம்தானே?” என்று கேள்வி கேட்கும் சமூகம் என்றைக்கு “என்னைக்கு ‘வேலைக்கு ஆண் பெண் தேவை’னு போடுறத ‘வேலைக்கு ஆண், பெண், திருநங்கை தேவை’னு போடுறிங்களோ அன்னைக்கு எங்கள கேள்வி கேளுங்க” என்ற வசனம் ஏற்றத் தாழ்வு இல்லாத, எல்லாரையும் உள்ளடக்கிய சமூகத்தின் தேவையை நிறுவுகிறது. “இப்படி பொண்ணு மனச ஆம்பள உடம்புல வெச்ச கடவுள் மட்டும் என் கண்ணுல பட்டா” என்ற வசனமும் தன் உடலை சிதைத்து, வருத்தி பெண்ணாக உருவெடுக்க அவர்கள் படும் பாடுகளைப் பார்க்கும் நமக்கு, இத்தனை வலி வேதனை அனுபவித்து ஒருவர் ஆசைப்பட்டோ அல்லது பொய்யாகவோ செய்ய முடியுமா? நிச்சயமாக பாலினம்(sex), பாலின அடையாளம் (gender) என்பது வேறுதான் என்ற தெளிவு வரும்.
ஜில்லு தான் சமூகத்துல மகிழ்ச்சியாக இருப்பதற்கும், தன்னுடைய பெண் என்ற அடையாளத்தை மதிக்கின்ற பிறப்பால் பெண்ணாக இருக்கும் படத்தின் இயக்குனர் திவ்யபாரதி அங்கீகாரம் தருகிறபொழுது வரும் மகிழ்ச்சியை, ‘காலை வெண்மேகம்’ பாடல் தனித்துவமாகக் காட்டுகிறது. ஒரு கட்டத்தில் தனித்து விடப்படும் ஜில்லு, பாலியல் தொழில், பிச்சை என தனியே ஒடுக்கப்படுகிறபோது, தன் நண்பரான இயக்குனர் திவ்யபாரதிக்கு “நா நல்லா தூங்கணும்… நா வரேன்” என்று சொல்கிறார். அந்த இடத்தில் இயக்குனர் பெயர் ஒரு அரைப்புள்ளியோடு (semicolon 😉 இது முடிவு இல்லை, ஒரு ஜில்லு நிம்மதியாக தூங்கினால் மட்டும் போதாது என்ற வேண்டுகோளோடும், திருநர் சமூகத்தின் வாழ்க்கை குறித்த புரிதல் கோரியும் படம் முடிகிறது.
கட்டாயம் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய வாழ்க்கை. “ஒன்னு சாமினு கையெடுத்து கும்புடுறாங்க இல்லனா பொட்ட, ஒம்போதுனு சாணி மிதிக்குற மாதிரி மிதிப்பானுக. ரெண்டும் வேணாமுடா மனுசன மனுசனா மதியுங்கடானு சொன்னா எவன் கேக்குறான்” இந்த ஒரு வசனம் போதும் படமும், திருநர் மக்களும் நம்மிடையே கடத்த நினைக்கும் வலி, ஏக்கம் நிறைந்த புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையை நாம் புரிந்துக்கொள்ள… இத்தனைக்கும் மத்தியில் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது போல, அவர்களின் இந்த வாழ்க்கையில் கொண்டாட்டமும் இருக்கிறது.
இயக்குனர் திவ்யபாரதியின் ‘ஜில்லு’ திரைப்படம், Black sheep value OTT தளத்தில் வெளியாகி உள்ளது. நாம் அனைவரும் தவறாமல் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கையை சற்றே எட்டிப் பார்த்துவிடலாம், மானுடம் அதில்தான் இருக்கிறது.
படக்குழுவினர்
எழுத்து மற்றும் இயக்கம் – திவ்யபாரதி
தயாரிப்பு – டோனி ஐ ஆலிவர்
நடிகர்கள் – பிரதான கதாபாத்திரங்கள் திருநங்கை ஜில்லு, திருநங்கை ஷாலு, திருநங்கை ஜமீலா, திருநங்கை ரேவதி, திருநங்கை சுதா
ஒளிப்பதிவு – கார்திபன், திவ்யபாரதி, M . K. பகலவன்
இசை – யுதிஷ்டிரன். E
பாடல் வரிகள் – கிரிஷ் , யுகபாரதி
படைப்பாளர்
எஸ். திவ்யபாரதி
பிழைப்புக்கு ஐ.டி. ஊழியர். பெண்ணியம் வழியாக மனிதம் பேசவும் எழுதவும் ஆசையும். தேடலும் கொண்ட மனுஷி. இது ஹெர் ஸ்டோரிஸ் தளத்தில் வெளியாகும் இவரின் முதல் கட்டுரை.