Site icon Her Stories

இனிது இனிது தனிப்பயணம் இனிது

பணியிடத்தில் மதிய நேர இடைவேளையில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதே வழக்கம். அலைபேசிகள் எல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உணவையும் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டே 30-45 நிமிடங்கள் சென்றுவிடும். என்னுடய குழுவில் அனைவருமே பெண்கள்தான். ஆறு பேர் கொண்ட சிறிய குழு. அரசியல், சினிமா தொடங்கி, வானிலை வரை சகஜமாகப் பேசுவோம்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், விடுமுறையில் வெளியூர் அல்லது வெளிநாடு செல்வது பற்றி பேச்சுகள் ஆரம்பித்தன. பிரித்தானியாவில் பள்ளி கோடை விடுமுறை காலம்,  ஜூலை முதல் செப்டெம்பர் முதல் வாரம் வரை இருக்கும். பல குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலை செய்பவர்கள். பெரும்பாலும் கோடை விடுமுறை மாதங்களில் விடுப்பு எடுத்துக் கொள்வதற்கு, கடும் போட்டி நிகழும்.

ஏறத்தாழ 7 வாரங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஏதாவது பண்ணியாக வேண்டும். வருடம் முழுவதும் சேமித்து,  இரண்டு வாரங்களுக்கு விடுப்பு எடுத்து சுற்றுலா செல்வது, வழக்கமானதுதான். பெரும்பாலும் இந்த சுற்றுலா பயணங்களைத் திட்டமிட்டு பதிவு பண்ணுவது பெண்கள். அதே போல் பயணத்துக்குத் தேவையான உடைகள், பொருள்கள் என்று பயண ஆயத்தங்கள் யாவும் குடும்பங்களில் பெண்களே செய்யும் சூழ்நிலைதான். பயணத் தயாரிப்புகள் தொடக்கம் முதல் இறுதி வரை ஒற்றை ஆளாக செய்து முடிப்பது பெண்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர்.

மேற்சொன்ன பணிகளோடு சுற்றுலாவின்போது குழந்தைகளை பராமரிப்பது பெண்களே. ஆண்கள் ஒரு சிலர் உதவியாக இருந்தாலும், பெரும்பாலும் அது பெண்களின் கடமையாகவே பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில் பெண்களுக்கு உண்மையான விடுமுறையும் கிடைப்பதில்லை; சுற்றுலா அனுபவமும் கிடைப்பதில்லை.

இதனாலே தற்போது தனியாக பெண்கள் பயணிக்கும் சுற்றுலாக்கள் அதிகரித்து வருகின்றன. உலகளாவிய தரவுகளும் ஆய்வுகளும் அதை உறுதி செய்கின்றன. பெண்களின் பொருளாதார ஈடேற்றமும் பாலின பாகுபாடு தொடர்பான விழிப்புணர்வும் இவற்றுக்கு முக்கிய காரணங்களாகின்றன. பல பிரித்தானியா மற்றும் அமெரிக்க தளங்களின் தரவுகளின்படி, தனியாக பயணிப்பவர்களில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கையே தற்போது அதிகமாக உள்ளது.

 பெண்கள் ஏன் தனியாக பயணிக்க வேண்டும், அதன் நன்மைகள் என்ன ?

உங்கள் அன்றாட வாழ்க்கை, புதிய ஆர்வங்களைக் கண்டறிய உதவாது. ஒருவரின் வழக்கத்திலிருந்து வெளியேறுவதன் மூலம், நீங்கள் யார், உங்கள் ஆர்வங்கள், திறன்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிய முடியும். தனிப் பயணம் உங்களை உங்கள் வழக்கத்திலிருந்து வெளியேற்றும்.

தனிப் பயணத்தின்போது இடங்களும் சவால்களும் நேரிடலாம். அவற்றை சமாளிக்கும் பக்குவமும் தைரியமும் உண்டாகும். தன்னம்பிக்கையும் திடமும் உயரும். ஒரு மனிதனாக ஒரு படி உயருவீர்கள். மனச்சோர்வைச் சமாளிப்பதற்கும் தனிப் பயணம் உதவும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் எழும் சூழ்நிலைகளைச் சமாளிப்பதைத் தவிர, உங்களுக்கு வேறு வழியில்லை. உங்களுடன் ஆதரவுக்காக சாய்ந்து கொள்ள வேறு ஒரு நபர் இல்லை, எனவே உங்கள் சொந்த முடிவுகளையும் உள்ளுணர்வுகளையும் நம்புவதற்கு நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். இது  நிச்சயமற்ற சூழ்நிலைகளில் பதட்டத்தைக் குறைக்கிறது. பயணத்துக்குப் பிறகு உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு நீங்கள் திரும்பும்போது, ​​​​சில சூழ்நிலைகளை நிர்வகிக்க உங்களை பயணங்கள் தயார்படுத்தும்.

பயணங்களில், நீங்கள் தனியாக இருப்பது உங்கள் ஆற்றல் மற்றும் குறைபாடுகளை பகுப்பாய்வு செய்ய சரியான வாய்ப்பாகும். பல்வேறு விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பெற முற்றிலும் அந்நியருடன் உரையாடக் கற்றுக்கொள்கிறீர்கள். நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஒரு தனிப் பயணம் உங்களை மெருகேற்ற உதவும். இது உங்கள் குறைபாடுகளை  அடையாளம் காணவும், அதற்கேற்ப செயல்படவும் உதவுகிறது.

அவசரமான நாளாந்த வாழ்க்கை வேகத்திலும் குடும்பச்சுமைகளிலும் தொலைந்து போன சுயம், இந்த பயணங்களில்தான் வெளியே எட்டிப்பார்க்கும். நம்மை யார் எனக் கண்டறிவதில் பெரும் பங்கை பயணங்களும் சுற்றுலாக்களும் செய்து விடுகின்றன.

என் சுயத்தைக் கண்டறிந்து கோதுகள் உடைத்து வெளியேறி,  இதுதான் நான் என உலகுக்கு பறைசாற்ற 35 வயதிற்கு பின்னரே எனக்கு சாத்தியப்பட்டது. நான் யார், என் வாழ்வின் நோக்கம் என்ன? சாதிக்க விரும்புவது என்ன? என நிறுத்தி நிதானமாக சிந்திக்க வைப்பதும் இந்த தனிப்பயணங்கள் தான்.

கற்றல் என்பது புத்தகங்களுக்கு ஊடாக மட்டும் நடைபெறும் செயற்பாடு இல்லை. பயணங்களில் புதிய மனிதர்களை சந்திப்பதிலும் கற்றல் நிகழும். நம்மிடமிருந்து வேறுபட்டிருக்கும் மனிதர்களும் அவர் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரங்களும் அவர்கள் சார்ந்துள்ள நிலமும், புத்தகங்கள் தரும் அறிவுக்கு இணையானது; அல்லது அதற்கு மேலானது. புதிய நட்புகளை சந்திப்பதும், மொழி தெரியாத ஊரில் உரையாடும் கலையையும் பெற்றுக் கொள்கிறோம்.

பயணங்களின்போது இயற்கையோடு ஒட்டிக் கொள்கிறோம். வீதியோர தேநீர் கடையில் இருந்து, ஒற்றையடிப் பாதை வரை சின்ன சின்ன விடயங்களை அனுபவித்து விடுகிறோம். பல்வேறு வகை காலநிலைகளுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பழக்கப்படுத்திக் கொள்கிறோம். இதனால் நம் உடல்களும் இயல்பான இசைவாக்கம் அடைகின்றன.

தனிப்பயணங்களின் பின்னர், பல பெண்கள் புகைப்பட கலைஞர்களாக, பயணப்பதிவாளர்களாக ( Travel Blogg), எழுத்தாளர்களாக பரிமாணம் பெற்றுள்ளார்கள். இவர்களின் அனுபவங்களை அறிந்து இன்னும் இன்னும் பல பெண்கள் சுற்றுலா மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். தம் பயணங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பாதுகாத்து வைத்து பல ஆண்டுகளுக்கு பின்னர் சிலாகித்து பேசும் பெண்களை இப்போது அதிகமாக காணமுடிகிறது.

பெண்களுக்கான தனிச் சுற்றுலாக்களை அமைத்துக் கொடுக்கும் முகவர் தளங்களும் வணிக நிறுவனங்களும் புதிதாக வரத்தொடங்கிவிட்டன. மேலை நாடுகளில் மட்டுமில்லாமல், ஆசிய நாடுகளிலும் இவற்றைக் காணலாம். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயணத்திட்டங்களையும் ஆலோசனைகளையும் இவை வழங்குகின்றன.

 இன்றும் நம் தமிழ் சமூகத்தில் பெண்கள் தனியே சுற்றுலா செல்வது என்பது ஒரு தகாத செயல் போல பார்க்கப்படுகிறது. காலம்காலமாக பல நேரக் கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வந்ததோடு, அவை யாவும் அவர்களின் பாதுகாப்பிற்கு எனவும் காரணம் கூறி வந்தனர். பாதுகாப்பு என்பது விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுணர்வுடன் (being alert) தொடர்புடையது என்பது என் தனிப்பட்ட வாதம். சிறுவயதில் இருந்தே அதற்கான பயிற்சியும், கொஞ்சம் தற்காப்பு கலையும் பெண்களுக்கு கிடைத்து விட்டால், அவர்கள் செல்லும் இடங்கள் எல்லாமே பாதுகாப்பானவைதான்.

திருணமான ஆண்கள் எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக்கப்படாமல் தம் நண்பர்களோடு சுற்றுலா செல்கின்றனர். நம் சமூகத்தில் திருமணத்துக்குப் பின்னர் அவ்வாறு பெண்கள் மட்டும் தனியே செல்ல முடிகிறதா? குழந்தைகளை யார் பார்ப்பது ? சமையலை யார் செய்வது என்று கேள்விகள் எழுகின்றன. கணவர் இவற்றை சமாளிப்பவராக இருந்தாலும், குடும்பத்தை விட ஊர் சுற்றுவது தேவையா என சமூகத்தில் புரளி பேசப்படுவது உண்டு. ஆண்களுக்கு நெருங்கிய நட்பு வட்டம் வாழ்நாள் முழுக்க எப்படித் தொடர்கிறதோ, அதே போல் பெண்களும் நம் நட்புகளைப் பேணவேண்டும். நட்புடன் இருத்தல் மற்றும் நண்பர்களோடு வீட்டுக்கு வெளியே நேரத்தை செலவிடுதல் என்று இவை அனைத்துமே ஆண்களுக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.

நட்புகளும் சுற்றுலாக்களும் காலவதியாகும் நாள் பெண்களுக்கு இல்லை என சொல்லி நம் குழந்தைகளை வளர்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 

Exit mobile version