கொழும்பில் மிகவும் புகழ்பெற்ற இடம் இந்த கங்கா ராமய்யா (Gangaramaya Temple). புத்த சமய கோயிலிற்கு எப்படி ராமையா எனப் பெயர் வந்தது? இங்கு நீல நிற ராமர் போன்ற சிலை உள்ளது. அதனால் இந்தப் பெயர் வந்திருக்குமோ என ஐயம் எனக்கிருந்தது.
என் ஐயத்திற்கு அனுராதபுரத்தில் விடை கிடைத்தது. பெரியவர் ஒருவர் சொன்னார்; கங்கா ஓய்வு (அராம் என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு ஓய்வு என்று பொருள்) எடுத்த இடம் என்பதுதான் கங்காராமய்யா என ஆனதாம்.
கங்காராமய்யா கோவிலின் வெளிப்புற வீதிப் பகுதியே (Sri Jinarathana Road) நம்மை உள்ளே செல்லத் தூண்டுகிறது. முதலில் இருப்பது, பெரிய மஞ்சள் நிறச் சக்கரம் பௌத்த மதத்தின் அடையாளமான எட்டு ஆரங்கள் (Spokes) கொண்ட தர்மச்சக்கரம். அடுத்த இருக்கும் யானை, சுற்றுச்சூழலைப் பேணும் ஒரு மிகச்சிறந்த கலைப்படைப்பு. இது பழைய இரும்பு வாகன உதிரிபாகங்கள், நட்டுகள் (Nuts) மற்றும் இரும்புக் கழிவுகளைக் கொண்டு மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. கங்காராமய்யா கோவிலில் உள்ள புகழ்பெற்ற ‘கங்கா’ என்ற வளர்ப்பு யானையை நினைவூட்டும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கங்கா குறித்து அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
யானைக்கு இடதுபுறம் இருப்பது, இலங்கையின் பாரம்பரிய பெருமையான கண்டி பெரஹரா (Perahera) திருவிழாக்களில் வாசிக்கப்படும் ‘கெட்டபெர’ (Geta Beraya) எனப்படும் மத்தளத்தை வாசிக்கும் ஒரு கலைஞரின் சிலை ஆகும். இதுவும் உலோகத் தகடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மழை நீரில் நீராடிய கொழும்பு நகரின் இந்த பெருமிதம் மிக அழகாகவே தெரிகிறது. சாலையில் சில வாகனங்களும் பல மக்களும் சென்று கொண்டிருந்தார்கள். இதே சாலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத பௌர்ணமி அன்று விழா நடைபெறும் நேரம் நூற்றுக்கணக்கான யானைகள் ஊர்வலத்தைப் பார்த்தால் எப்படி இருக்குமென்ற கற்பனையுடன் தொடர்ந்து நடந்தோம். கங்காராமய்யா கோவிலின் சுவர் நம் பார்வைக்கு வருகிறது.
இரண்டு அடுக்கு உயரமுள்ள புடைப்புச் சிற்பச் சுவர், இதில் செதுக்கப்பட்டுள்ள நுணுக்கமான கலைப்படைப்புகள் எல்லாம் மிகவும் சிறப்பு! இந்த கல் சுவரில் உள்ள சதுர வடிவத் தட்டுகளில், புத்தரின் வாழ்க்கை வரலாறு வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன. சுவரின் நடுப் பகுதியின் உச்சியில், தர்மச்சக்கரமும், அதன் கீழே ஒரு சிறிய மாடம் போன்ற அமைப்பில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய புத்தர் சிலையும் நேர்த்தியாக உள்ளது. கீழிருந்து மேலாகப் பௌத்தப் பாரம்பரிய கொடிப் பின்னல் வேலைப்பாடுகள், ஒரு பெரிய கூரை என நேர்த்தியான வடிவமைப்பு உள்ளே நுழையும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இதைக் கடந்து, மழைநீர் படலமாக இருக்கும் தரையில் செருப்பைக் கழற்றி விட்டு, அண்ணாந்து பார்த்தால் அடடா! என்று தோன்றியது. கங்காராமய்யா கோவிலின் முதன்மைக் கட்டிடத்தின் நுழைவாயில் மற்றும் ஜன்னல்களின் வடிவமைப்பு ஐரோப்பிய முறையையும், அதன் மேல் உள்ள அடுக்கு கூரை அமைப்பு இலங்கை வடிவமைப்பையும் காட்டுகின்றன. நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு பெரிய சிங்கச் சிலைகள் நின்று காவல் காக்கின்றன. வலதுபுறக் கடைசியில் ஆயுதம் ஏந்திய ஒரு கிழக்கு ஆசிய பாணியிலான காவல் வீரனின் சிலையும் நிற்பதைக் காணலாம். வெள்ளை நிறக் கட்டிடத்தின் உச்சியில் இருக்கும் மரத்தாலான கூரையின் விளிம்புகள் மற்றும் அதன் மேல்பகுதியின் தங்க நிற அலங்கார வேலைப்பாடுகளுடன் என ஒட்டுமொத்த கட்டிடமும் ஒரு அழகு தான்.
முதன்மை வளைவுக்கு இடதுபுறம் அமைந்துள்ள மஞ்சள் நிறக் கட்டிடத்தின் முகப்பில் வரிசையாக வெண்கலத்தால் ஆன சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை இலங்கையின் தேரவாத பௌத்த முறையில் இல்லாமல், சீனா, ஜப்பான் அல்லது கொரியா போன்ற நாடுகளின் மகாயான பௌத்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இடதுபுறம் இருக்கும் சிலைகள் கருணையின் வடிவமான ‘குவான் யின்’ (Guan Yin / Bodhisattva) எனப்படும் பெண் பௌத்த தெய்வத்தை நினைவூட்டுகின்றன. இவற்றை நான் மலேசியாவில் பார்த்திருக்கிறேன். சிலைகளுக்கு வலதுபுறம் ஒரு பெரிய இருண்ட கல் சிற்பம் உள்ளது. இது சீனக் கலாச்சாரத்தில் தீமைகளைக் காக்கும் சின்னமாகக் கருதப்படும் ‘ஃபு நாய்’ (Fu Dog / Chinese Guardian Lion) என்றழைக்கப்படும் சிங்கச் சிலை. இப்படி பன்னாட்டு ஆன்மீகப் பண்பாட்டை வளாகத்தின் முகப்பே சொல்லிவிடுகிறது. உள்ளே செல்லும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
இதன் நுழைவுக் கட்டணம் ரூபாய் 500. இதை வைத்து அருகிலிருக்கும் பெய்ரா ஏரி (Beira Lake) பகுதிக்கும் செல்லலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிறது. கையில்லாத ஆடைகள், முட்டிக்கு மேல் உடுத்தும் ஆடைகளுக்கு அனுமதியில்லை. தேவை என்றால் தகுந்த ஆடை இலவசமாகவே தற்காலிகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றன. இங்குத் தலையை மூடக்கூடாது. பள்ளிவாசல் சென்றால் தலையை மூடவேண்டும்; மடு (மன்னார்) கத்தோலிக்க கோவிலிலும் இது போன்று ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. இந்துக் கோவிலுக்குச் சென்றால் ஆண்கள் மேலாடை அணியக்கூடாது.
அனைத்து இந்துக் கோவில்களிலும் பெரும்பாலான கிறிஸ்தவக் கோவில்களிலும் புகைப்படம், காணொளி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி இலங்கை மட்டுமல்ல உலகெங்கிலும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை எதிர்பார்க்கிறார்கள்.
பௌத்த விகாரையின் நுழைவாயில் அடிப்பகுதியில் உள்ள வேலைப்பாடுகளைத் தூணின் அடியில், கட்டிடத்தின் பாரத்தைத் தங்கள் கைகளாலும் தலைகீழாகவும் தாங்கிப் பிடித்திருப்பது போலச் செதுக்கப்பட்டுள்ள குள்ளர்களின் சிலைகள் சிங்கள மொழியில் ‘பஹிரவயா’ (Bahirawa) இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது வியப்பாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் பொலன்னறுவை, அனுராதபுரம் ஊரிகளில் இவர்களைப் பரவலாகக் காண முடிந்தது.
உள்ளே ஒரு மர மேஜையின் மீது ஐந்து முகங்களைக் கொண்ட ‘ஹேரம்ப கணபதி’ (Heramba Ganesha) அல்லது ஐந்து தலை நாகம் குடைபிடிக்கும் விநாயாகரின் மரச்சிற்பம் வரவேற்கிறது. மர மேஜையின் மீது வெண்கலத்தால் ஆன விநாயகர் சிலை புதிய மலர் மாலைகளுடன் உள்ளது. மிக நேர்த்தியான கருங்கல்லால் ஆன பிள்ளையார் திருவுருவங்கள், தென்னிந்திய/ இலங்கை இந்துக் கோவில் சிற்பக் கலையை ஒத்துள்ளன. மிகவும் பழமையான, தேய்மானம் அடைந்த பழங்கால கற்சிலை, வெண்கலம் மற்றும் பித்தளையால் ஆன சிலைகள், மஞ்சள் மற்றும் பல வண்ணங்கள் தீட்டப்பட்ட பிள்ளையார், ஐந்து முகம் கொண்ட பிள்ளையார் என விதவிதமான பிள்ளையர்களை இந்த அருங்காட்சியகம் முழுவதுமே காணலாம். சிங்கள மொழியில் பௌத்தர்களின் புனித ஸ்லோகமான ‘சதித சமித…கணபதி தேவியோ'(Ganapathi Deviyo) என்று பிள்ளையாரைக் குறிப்பிட்டுப் பாட்டும், நல்வாழ்த்துகளும் எழுதப்பட்டுள்ளன.
புத்த கோவில்கள் அனைத்திலும் அனைத்து இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள் என்பது பெரும் வியப்பு. பெரும்பாலும் பிள்ளையார் தான் வரவேற்கிறார். பத்தினி தெய்வம் (கண்ணகி), சரஸ்வதி, முருகன், சிவன், மகாகாளி, நமது நாட்டார் கடவுள்கள் என அனைத்துக் கடவுள்களும் புத்தருடன் இணைந்தே இருக்கிறார்கள். அடுக்கு வெண்கல குத்து விளக்கு அதன் உச்சியில் அமர்ந்திருக்கும் சேவல் வடிவம் என இந்துக் கோவில்களை நினைவூட்டும் விதமாகவே உள்ளன.
என் வியப்பிற்கும் ஒருவர் விளக்கம் சொன்னார். இலங்கைப் பௌத்தத்தில் ‘தேவ வழிபாடு’ உண்டு. புத்தரை முதன்மைக் கடவுளாகவும், மற்ற இந்துக் கடவுள்களை அவரைப் பாதுகாக்கும் ‘காவல் தெய்வங்களாகவும்’ அவர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் பிள்ளையார் முதல் மகா காளி வரை அனைவரும் அங்கு இருக்கிறார்கள்.
கங்காராமய்யா கோவிலின் வெளிப்பகுதியில் வரிசையாக வெண்பளிங்கு இந்துக்கடவுள்கள் பலர் இருக்கிறார்கள். மகாவிஷ்ணுவின் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். அவரது கீழ் வலது கையில் கதாயுதம் தரை நோக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கீழ் இடது கையில் ஒரு செந்நிற மலர் மொட்டு ஏந்தப்பட்டுள்ளது. மஞ்சள் நிறப் பட்டு வேட்டி, ஆபரணங்கள் மற்றும் தலையில் தங்க மகுடத்துடன் இந்தச் சிலை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் இவரை ‘உபுல்வன்’ (Upulvan) அதாவது ‘நீல நிறத் தாமரை போன்ற நிறமுடையவர்’ என வழிபடுகிறார்கள்.
மகாலக்ஷ்மி ஒரு பெரிய தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறார். பீடத்தின் வலது கீழ் மூலையில் சிறிய யானையின் சிற்பமும், இடது கீழ் மூலையில் அவரது வாகனமான ஆந்தையின் சிற்பமும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. லட்சுமியுடன் ஆந்தையா என்று வியப்பு ஏற்பட்டது. தேடியதில், வடஇந்திய லட்சுமியின் வாகனம் ஆந்தையாம். விந்தை தான் போங்கள்! வெள்ளை நிற ஆடைக்கு மேலே அவரது கிரீடம், கழுத்தணிகள் மற்றும் ஆடைகளின் விளிம்புகள் அனைத்தும் தங்க நிற இழைகளால் மெருகூட்டப்பட்டுள்ளன. அவர் தனது கரங்களில் தாமரை மொட்டுகளை ஏந்தி, ஒரு கையால் ஆசி வழங்குகிறார்.
இந்திரன் சிலைக்குப் பின்னால் வெள்ளை நிற மாபெரும் யானையின் (ஐராவதம்) சிற்பம் உள்ளது. இந்திரன், இளஞ்சிவப்பு நிற மேலாடையும், நீலம் மற்றும் தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட ஆடையும் அணிந்துள்ளார். அவரது ஒரு கையில் ஒரு செந்தாமரை மலர் மொட்டு ஏந்தப்பட்டுள்ளது, மற்றொரு கை ஆசி வழங்குகிறது. தலையில் பளபளக்கும் தங்க மகுடம் அணிந்துள்ளார்.
நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி, தனது இரு கீழ் கரங்களினால் வீணையை ஏந்தியுள்ளார். அவரது மேல் வலது கையில் மாலையும், மேல் இடது கையில் ஏட்டுச் சுவடியும் ஏந்தப்பட்டுள்ளன. சிலைக்கு மேல் அணிவிக்கப்பட்டுள்ள தங்க மகுடம், கழுத்தணிகள், மற்றும் காவி-மஞ்சள் நிற ஆடைக் கச்சுகள் அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிலப்பதிகார நாயகியான கண்ணகி, இலங்கையில் ‘பத்தினி தேவி’ (The Goddess Sri Pattini) என்ற பெயரில் வழிபடப்படுகிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எடுத்த விழாவிற்குச் சென்ற இலங்கை அரசன் கயவாகு (Gajabahu I), அங்கிருந்து கண்ணகியின் சிலம்பையும் வழிபாட்டு முறையையும் இலங்கைக்குக் கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. பௌத்த மக்கள் இவரைத் தூய்மை, கற்பு, மற்றும் நோய்களைக் குணமாக்கும் (குறிப்பாக அம்மை நோய்) கருணைத் தெய்வமாக நம்புகிறார்கள்.
காளி தேவி கறுப்பு நிற உருவத்துடன், நான்கு கரங்கள் ஏந்தி, வடிக்கப்பட்டிருக்கிறார். அவரது கரங்களில் தீய சக்திகளை அழிக்கும் வாள் (Sword) மற்றும் இரத்தம் ஏந்தும் கபாலப் பாத்திரம் ஆகியவை உள்ளன. அவரது கழுத்தில் தலைகள் கொண்டு செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை மடியில் வைத்தபடி வீற்றிருக்கிறார். அவரது சடாமுடியில் பிறைச்சந்திரன் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் உருத்திராட்ச மாலைகளும், வலது தோளுக்கு மேல் படம் விரித்து நிற்கும் பாம்பும் நெற்றியில் மூன்றாவது கண்ணும் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.
இங்கும் நான்கு கரங்களுடன், அமர்ந்த நிலையில் பிள்ளையார் காட்சியளிக்கிறார். வெள்ளை நிறப் பளிங்குச் சிலைக்கு மேல் அணிவிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற ஆடைக் கச்சுகள், தங்க நிற மகுடம் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முருகப் பெருமான் சிலையின் இடதுபுறக் கீழ்ப் பகுதியில், அழகிய நீல நிற மயில் தனது தோகையைச் சுருட்டித் தலை நிமிர்ந்து நிற்கும் சிற்பம் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறப் பளிங்குச் சிலைக்கு மேல் அணிவிக்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் நீல நிற ஆடைக் கச்சுகள், கழுத்தில் உள்ள முத்து மாலைகள் மற்றும் தோள்களில் உள்ள ஆபரணங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘முருகா’ என்று இல்லாமல் ‘முருகன்’ என்று பெயர் போட்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு!
சுவரில் செதுக்கப்பட்டுள்ள நின்ற நிலை காவல் தேவதையின் மற்றும் வாள் ஏந்திய காவல் வீரன் நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளார்கள். தலையில் உள்ள அடுக்கு மகுடமும், உடலின் அணிகலன்களும் மிக நேர்த்தியானவை.
சிலைகளுக்கு முன்னால் இருக்கும் சில தட்டுகளில் நீல நிற மலர் உள்ளது. சிலவற்றில் பெரிய வெள்ளை நூல் பந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் தேவை என்ன என்பது அனுராதபுரம் மகாவிகாரையில் தான் தெரியவந்தது. நம் சாமி கயிறு போல அங்கு ஒரு பெரியவர் கட்டிவிட்டார்.
ஸ்கேன் செய்து விபரங்களை அறிய QR குறியீடு (QR Code) உள்ளன என்பது இலங்கை சுற்றுலாத்துறையின் வெற்றி!
நான் மலேசியாவில் சில புத்த இடங்கள் பார்த்துள்ளேன். அங்கெல்லாம் இத்தனை இந்தியத் தாக்கம் இருப்பதாக என் உள்ளத்தில் எண்ணம் உருவாகவில்லை. இது இலங்கையின் தனிச்சிறப்பு என்றே நினைக்கிறேன்.
பௌத்தத்தின் பன்னாட்டுத் தாக்கமும், சைவ, சாக்த, வைணவ மரபுகளின் இந்துக் கடவுளர்களும் ஒரே கூரையின் கீழ் கைகோர்த்து நிற்பது, இலங்கையின் தனித்துவமான பண்பாட்டுப் பெருமை. எல்லைகளையும், மொழிகளையும் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் ஆன்மீகத்தின் அமைதியை, இந்த விகாரையின் ஒவ்வொரு கல்லும், சிலையும் இன்றும் உலகிற்கு அமைதியாகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
தொடரும்
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.


