பகுதி 1
‘நூதனசாலை’ என்கிற சொல்
இலங்கையில் அருங்காட்சியகம் என்பதற்கு ‘நூதனசாலை’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ‘நூதனம்’ என்பது வடமொழிச் சொல். தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தால் அரசு ஆவணங்களிலும் கல்வியிலும் பல வடமொழிச் சொற்களுக்கு மாற்றாகத் தூய தமிழ்ச்சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அந்த மாற்றம் இலங்கையில் அதே அளவில் நிகழவில்லை என்பதை இந்தப் பயணம் முழுவதும் உணரமுடிந்தது.
இப்போது அருங்காட்சியகத்திற்குள் செல்வோம். நுழைவுக் கட்டணம் உள்ளூர் பெரியவர்களுக்கு ரூ.200, சிறுவர்களுக்கு ரூ.100. வெளிநாட்டவர்களுக்கு ரூ.1000.
நூதனசாலையின் வாசலில் கொழும்புத் துறைமுக வளாகத்திலுள்ள இந்தக் கடலக நூதனசாலை, 1676-ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட பழமையான சிறைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. எதிரிகளின் பீரங்கித் தாக்குதல்களைத் தாங்கவும், கைதிகள் தப்பிச் செல்ல முடியாதபடியும் அமைக்கப்பட்ட அந்தக் காலத்து தடிமனான சுவர்கள் இன்றும் அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கின்றன.
கட்டிடத்திற்கு வெளியிலேயே பழைய நங்கூரங்கள், பீரங்கிகள், இரும்புச் சங்கிலிகள் பார்வையாளர்களை வரவேற்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் கொழும்புத் துறைமுகக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் சான்றுகள். ஒருகாலத்தில் துறைமுகத்தைப் பாதுகாத்த இந்தப் பீரங்கிகள், போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்காரர்களின் கடற்படை வலிமையை இன்று அமைதியாக நினைவூட்டுகின்றன.
துறைமுகத்தின் பரபரப்பான சூழலுக்கு நடுவில் இருந்தாலும், கட்டிடத்தைச் சுற்றியுள்ள மரங்களும் மலர்ச்செடிகளும் அந்த இடத்திற்கு வியப்பூட்டும் அமைதியை அளிக்கின்றன.
இந்தக் கடலக நூதனசாலை, இலங்கைத் துறைமுக அதிகார சபையின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் எண்ணக்கருவில் உருவான இத்திட்டம், 2002 ஆகஸ்ட் 1-ஆம் நாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பதை அங்கிருந்த கல்வெட்டு பதிவு செய்கிறது.
வரவேற்பு மேசையே ஒரு கப்பலின் முன்பகுதியைப் போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் பதிக்கப்பட்டுள்ள பெரிய கற்கள், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டச்சு சிறையின் அசல் தரையமைப்பை இன்னும் பாதுகாத்து நிற்கின்றன. பின்னணியில் காணப்படும் தடிமனான மரக்கதவுகளும், வளைவு வடிவச் சன்னல்களும் காலனித்துவக் கட்டிடக்கலையின் அழகிய அடையாளங்களாக விளங்குகின்றன.
உள்ளே நுழைந்தவுடன் பார்வையாளர்களின் கவனத்தை முதலில் ஈர்ப்பது கப்பலின் சுக்கான் சக்கரம் (Helm). பல கடல்களை வென்று பயணித்த மாலுமிகளின் கதைகளையும், கடல்வழி வணிகத்தின் நீண்ட வரலாற்றையும் அது அமைதியாக நினைவூட்டுகிறது. உயர்தர மரத்தாலும், கடல் நீரில் துருப்பிடிக்காத பித்தளையாலும் உருவாக்கப்பட்ட அந்தச் சுக்கான், பயன்பாட்டுப் பொருளாக மட்டுமல்ல; கலைப்பொருளாகவும் காட்சியளிக்கிறது.
ஒரு பகுதியில் பழைய மின்மாற்றிகள், கட்டுப்பாட்டுப் பெட்டகங்கள், திறந்த மின் இணைப்புகள் போன்ற பழங்கால மின் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. துறைமுகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியை அவை சாட்சியமாகப் பேசுகின்றன.
அருங்காட்சியகத்தின் உள் அரங்கில் ஒவ்வொரு பொருளும் ஒரு கதையைச் சொல்கிறது. இலங்கையின் தொடக்க கால வரலாறு, கொழும்பு நகரின் வளர்ச்சி, கடல்வழி வணிகத்தின் பரிணாமம், ஐரோப்பிய ஆட்சிகளின் தாக்கம், இவை அனைத்தையும் படிப்படியாக அறிமுகப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்த முதல் சில நிமிடங்களிலேயே, “இது வெறும் அருங்காட்சியகம் அல்ல; இலங்கையின் கடல்வழி வரலாற்றை அமைதியாகச் சொல்லும் ஒரு காலப்பயணம்” என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.
அரசு அறிவிப்புகள், அருங்காட்சியக விளக்கப் பலகைகள், பொதுப் பயன்பாட்டு அறிவிப்புகள் எனப் பல இடங்களில் வர்த்தகம், பிரகாரம், பிரபல்யம், உத்தேசம் போன்ற சொற்கள் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அரிதாகக் கேட்கப்படும் அழகிய தமிழ்ச் சொற்களும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வன்பொருட்கடை (Hardware Shop), ஒப்பம் (கையெழுத்து), எரிபொருள், கதைக்கிறேன் (பேசுகிறேன்) போன்ற சொற்கள் அன்றாடப் பேச்சில் இயல்பாகக் கலந்துள்ளன.
இரு கரைகளிலும் வாழும் தமிழர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டால், நமது தமிழ்மொழி இன்னும் செழுமை பெறும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
இன்னொன்றும் என் கவனத்தை ஈர்த்தது. பல அறிவிப்புப் பலகைகளில் எழுத்துப் பிழைகள் இருந்தன. நாம் ஆங்கிலத்திலிருந்து அப்படியே சொற்களை எழுதும்போது, ‘ர்’ போடும் இடங்களில் ‘ற்’ பயன்படுத்துகிறார்கள். Prime Mover என்பதற்கு ‘பிறைம் மூவர்’, ‘Gantry Crane’ என்பதற்கு ‘கன்ட்றி பாரமுயர்த்தி’ என்று எழுதப்பட்டிருந்தது.
சில இடங்களில் தமிழாக்க முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தாலும், மொழித் திருத்தம் நம்மைப்போலவே அவர்களிடமும் தேவைப்படுவதை உணர முடிந்தது.
விசயன் வந்த வழி
அருங்காட்சியகத்தின் முதல் அரங்கில் பார்வையாளர்களை வரவேற்பது விசயனின் இலங்கை வருகை பற்றிய ஓவியமும் சிலையும்தான். இலங்கையின் எழுத்துப்பூர்வமான வரலாறு எங்கு தொடங்குகிறது என்பதை இந்தக் காட்சி அமைதியாக உணர்த்துகிறது.
அருங்காட்சியகத்தில், விசயனும் அவரது எழுநூறு தோழர்களும் மாந்தைத் துறைமுகத்தில் தரையிறங்கும் காட்சியை மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். அருகிலேயே அக்காலத்து நாவாயின் (படகு) மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல அடுக்குகளாக விரிக்கப்பட்ட பாய்மரத் துணிகள், உறுதியான கயிறு அமைப்புகள் ஆகியவை அன்றைய கடல்வழிப் பயணத் தொழில்நுட்பத்தை நமக்கு உணர்த்துகின்றன.
கப்பலின் முன்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள சிங்கத்தின் தலை மிகவும் கவனத்தை ஈர்க்கிறது. சிம்ம வம்சத்தின் அடையாளத்தை நினைவூட்டும் அந்தச் சிற்பம், வெறும் அலங்காரமாக அல்லாமல் அரச மரபின் குறியீடாகவும் காட்சியளிக்கிறது. அதற்கருகில் வைக்கப்பட்டுள்ள பெரிய ஓவியம், விஜயனின் தரையிறக்கத்தை உயிர்ப்புடன் சொல்லுகிறது. கடற்கரையின் பின்னால் உயர்ந்து நிற்கும் பனைமரங்கள், அடர்ந்த புதர்கள், பாறைகள் ஆகியவை இலங்கையின் இயற்கை நிலப்பரப்பை அழகாக வெளிப்படுத்துகின்றன.
அந்த ஒரு காட்சியே, ‘இலங்கையின் கடல்வழி வரலாறும் அரசியல் வரலாறும் இந்தக் கரையோரத்திலிருந்தே தொடங்குகின்றன’ என்கிற கருத்தை பார்வையாளரின் மனதில் பதியச்செய்கிறது.
மன்னன் விஜயனின் சிலையும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்த போர்வீரனுக்குரிய உடற்கட்டுடன், தலையில் அழகிய மகுடம், நீண்ட காதுகளில் பெரிய குண்டலங்கள், மார்பில் ஆபரணங்கள், கைகளில் காப்புகள், இடுப்பில் பாரம்பரிய வேட்டிஎன இவை அனைத்தும் அரசரின் அடையாளம் என வெளிப்படுத்துகின்றன. இடது கையை இடுப்பில் ஊன்றியபடி, வலது கையில் ஆட்சியின் அடையாளமாகச் செங்கோலையோ வாளையோ ஏந்தி நிமிர்ந்து நிற்கும் அந்தத் தோரணை, வெற்றியடைந்த மன்னனின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அந்தச் சிலைக்குப் பின்னால், Magam Ruhunupura Mahinda Rajapaksa Port எனப்படும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் படமும் இடம்பெற்றுள்ளது. தொன்மையான கடல்வழி வரலாற்றையும், நவீன இலங்கையின் துறைமுக வளர்ச்சியையும் ஒரே காட்சியில் இணைக்க முயன்றிருப்பது போல் தோன்றியது.
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கப் பலகைகளில் ஒன்று, ‘வங்காளதேசத்திலிருந்து விஜயனின் வருகை – கி.மு. 5-ஆம் நூற்றாண்டு’ என்று குறிப்பிடுகிறது. Bodhisattva என்ற இணையத் தளத்தில் வெளியாகியுள்ள How Sri Lanka Became a Buddhist Country: Complete Story of Buddhism in Sri Lanka என்ற காணொளியில், விஜயனின் அரசி வடஇந்தியாவின் மதுரா (Mathura) பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுகிறது. இது மகாவம்சத்தில் வரும் மதுரை (Pandya Madurai) குறித்த குறிப்பின் மொழிபெயர்ப்புப் பிழையாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில் மகாவம்ச மரபு, விஜயன் பாண்டிய மன்னரின் மகளை மணந்ததாகவே கூறுகிறது.
தொடரும்…
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.


