Site icon Her Stories

இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்!

‘இந்தியா என தாய் நாடு…’ இப்படிப் படிப்பதற்கு முன்பே ‘இலங்கை’ என்ற சொல் செவிவழி உள்ளத்தில் நுழைந்து உறைந்திருந்தது. ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு நேரம் காலை ஏழுமணி’ என்ற அறிவிப்பிற்குப்பின் மூன்று தடவை ஒலிக்கும் மணியோசை; அதைத் தொடரும் இசை; இசையின் ஊடே வரும் ‘பொங்கும் பூம்புனல்’ என்ற அறிவிப்பு என எங்களின் காலை விடிந்தது. நேயர் விருப்பம் ஒலிபரப்பாகும் நேரம், பலரின் முகவரிகள் மூலம் ஊர்களின் பெயர்கள் உள்ளத்துள் புகுந்தன.

1978 ஆம் ஆண்டு ‘பைலட் பிரேம்நாத்’ என்ற திரைப்படம் ‘இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாக’ வெளிவந்தது. நடிகர் திலகம் சிவாஜியுடன், ‘இலங்கை சினிமாவின் ராணி’ என்று கருதப்படும் ‘மாலினி பொன்சேகா’ நடித்திருந்தார். மிகச் சமீபத்தில் (மே 24, 2025) மறைந்த மாலினி பொன்சேகா இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர். அந்தப் படத்திற்கு, இலங்கை வானொலி கொடுத்த ஆதரவு என்பது சொல்லி முடியாது. அவ்வளவு பெரியது.

‘இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ 

…அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்’

‘அழகி ஓருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே …

கோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் 

கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிர ஊர்கோலம்’ 

என நாள்தோறும் பாடல்கள் ஒலிக்கும். இடையிடையே 

‘இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தா இந்து மகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்’ என்பார் சந்திரபாபு. 

‘தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை என்பார்’  – ஜானகியம்மா. இப்படிச் செவி வழி இலங்கை ஒருபுறம் புகுந்திருக்க, இன்னொரு புறம் கொழும்புக்காரி/ காரர் என பெயர்கள் ஊருக்குள் இருந்தன.  

அமெரிக்கா / ஐரோப்பிய நாடுகளுக்கு இப்போது இருக்கும் வரவேற்பு அப்போது இலங்கைக்கு இருந்தது. ஒப்பீட்டளவில் வாழ்வியலில் இலங்கை இந்தியாவை விட வசதியாக இருந்திருக்க வேண்டும். அதனால், அங்குச் சென்று சம்பாதிப்பது என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது. கொழும்பு சம்பாத்தியம், கொழும்பு மஸ்கொத் தின்ற உடம்பு… இப்படி பெருமையாகப் பேசப்பட்டது. அங்கிருந்து, சேலைகள், ராணி சந்தன சோப்பு, தேங்காய் எண்ணெய், கருவாப்பட்டை, மஸ்கொத் என அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். 

ஊரில் இல்லத்து டீச்சர் எனப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் இருந்தார். பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் தான் குடும்பம் என வாழ்ந்தார். அவரது அக்கா கொழும்பிலிருந்திருக்கிறார். அவரைப் பார்க்க இவர் போவாராம். வரும்போது பள்ளிக் குழந்தைகளுக்கு மஸ்கொத்தும், ஆசிரியர்களுக்கு ராணி சந்தன சோப்பும் கொண்டு கொடுப்பாராம். கொழும்பு சேலைகள் தான் கட்டுவாராம். அம்மா சொல்லுவார்கள். இப்படி, இப்போது பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு உறவினர்கள் செல்வது போன்று, அப்போது கொழும்பு சென்றிருக்கிறார்கள். எங்கள் ஐயா (தாத்தா) அங்கு இருந்தார்கள். எங்கள் அத்தை அங்கு இருந்தார்கள். அங்கு தான் அவர்களின் மகன் பிறந்தார். அவர்களைப் பார்க்க என் அப்பா ஒருமுறை சென்றிருக்கிறார்கள். 

இவ்வாறு இலங்கையில் வாழ்ந்த பலர், 40களின் இறுதியில், 50களின் தொடக்கத்தில் அரசியல் காரணங்களால் ஊர் வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் எல்லோரிடமும் பெரும் பணம் இருந்தது என்றெல்லாம் சொல்ல இயலாது. 

எண்பதுகளில் உள்நாட்டுப் போராட்டம் தீவிரமடைய, வசதியிருந்தவர்கள், ஐரோப்பா, கனடா எனச் செல்ல, ஏதுமில்லாதவர்கள், நம்மை அணுகினார்கள். தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடந்தன. நாங்கள் கல்லூரியில் செய்த முதல் வேலை நிறுத்தமே ஈழத்தமிழர் நலனுக்காகத் தான். சமூகரங்கபுரத்தில் பலர் இருந்தார்கள். எங்கள் ஊரில் வந்து வேலை செய்தார்கள். பலரும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். நாங்கள் இலங்கையில் சந்தித்த பலரும், இந்தியாவை நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள். ஈழத் தமிழருக்கு உதவியதில், பெரும்பங்கு தமிழரின் பங்கு தான் என்பது மறுக்க இயலாத உண்மை.

இவ்வாறு எண்பதுகளில் வந்தவர்களில் சிலர் இங்கு இருக்கும் குடும்பத்துடன் இணைந்து கொண்டனர். சிலர் உறவைத் தேடி வந்து பார்த்துவிட்டு மட்டும் சென்றனர். பலரும் 

‘இந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன் 

அது தான் எனக்குத் திருநாள் 

என் கனவுகள் பலித்திடும் பெருநாள்’

என எங்கெங்கோ வாழ்கிறார்கள். அவர்களை உள்ளத்தில் நிறுத்தி என்  இலங்கைப் பயணத்தைத் தொடர்கிறேன். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். 

Exit mobile version