பொது வெளி ஆணுக்கானதா? இந்தக் கேள்வியை நம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. சமீபத்தில் இரவு 9.40 மணிக்கு ஊடகத்துறையில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திலிருந்து கிளம்பிய மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில், தாம்பரத்துக்குப் பயணித்துள்ளார். அப்பெட்டியில் அவரைத் தவிர வேறு பெண்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. பல்லாவரம் ரயில் நிலையத்தில் பெட்டியில் ஏறிய லட்சுமணன் என்ற நபர், அப்பெண்ணைப் பார்த்தபடி சுயஇன்பம் கண்டிருக்கிறார். இதைக் கண்ட அப்பெண் தன் கைப்பேசியில் அதைப் படம்பிடித்து, அந்த நபரைத் திட்டியிருக்கிறார்.
இதை எதிர்பார்க்காத லட்சுமணன், அடுத்த நிறுத்தமான குரோம்பேட்டை நிலையத்தில் ரயில் நிற்கும் முன்னரே குதித்து இறங்கி ஓடிவிட்டார். தன் சமூக வலைதளக் கணக்குகளில் வீடியோவை வெளியிட்ட அப்பெண், ரயில்வே துறை உயர் அதிகாரிகளையும் பதிவுகளில் டேக் செய்ய, லட்சுமணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மேல் குற்றவியல் சட்டப் பிரிவு 354ஏ-யின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே சந்தித்துவரும் மிக நூதனமான சிக்கல்களில் இவ்விதமான மகளிர் பெட்டி பாதுகாப்புக் குறைபாடுகள் அதிகம் ஆராயப்பட்டுள்ளன. அவற்றுக்கான தீர்வுகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தியா முழுக்க ஒரு நாளைக்கு 4.6 மில்லியன் பெண்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். பயணிகளில் 20% பேர் பெண்களே. பெண்கள் பெட்டியை ரயிலின் நடுவே கொண்டுவருவது, ‘பாதுகாப்புக் குறைவு’ என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணிகளை முடுக்கிவிடுவது போன்ற குறுகிய கால திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
நீண்டகால திட்டங்களான விளக்குக் கம்பங்கள் வைத்தல், அனைத்து ரயில் மேடைகளிலும் சிசிடிவிகள், கைவிடப்பட்ட கட்டிடங்களை அழித்தல், தக்க அனுமதியின்றி ரயில்வேத் துறைக்குச் சொந்தமான இடங்களில் பிறர் நுழைவதைத் தடுப்பது, ரயில் நிலையங்களில் ஒற்றை உள்நுழைவு, வெளியேறும் வசதி, காத்திருப்பு அறைகளில் நிரந்தரப் பணியாளர்கள், தக்க அடையாளச் சீட்டுகள் கொண்ட அலுவலர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்கவும் பயணிகளை பரிசோதிக்கவும் அனுமதிக்கப்படுவது போன்றவை இன்னும் சரியாக நிறைவேற்றப்படவில்லை.
ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க ‘மேரி சஹேலி’ என்ற புதிய திட்டத்தை 2020ம் ஆண்டு இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது. தென்னக ரயில்வேயில் ரயில்வே பாதுகாப்புப் படையினரைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் 17 பெண் காவலர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை டிவிஷனில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இவ்வமைப்பின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. ரயில்வே அலுவலர்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தத் தெளிவைத் தரும்பொருட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறான சூழலில், பெண்கள் ரயில்வே பாதுகாப்புத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 139-ஐத் தொடர்புகொண்டு உதவி கோரலாம். அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில், அதே எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். தென்னக ரயில்வேயின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களிலும் உங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். இது தவிர மாநில அரசு அறிமுகம் செய்துள்ள ‘காவலன்‘ செயலி, ரயில்வேத் துறை அறிமுகம் செய்துள்ள ‘ரயில் மதத்‘ செயலி போன்றவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். உடனடி உதவிக்கு 139, அல்லது பக்கத்து ரயில் நிலையத்தின் இருப்புப் பாதை காவல் நிலையத்தை அணுகலாம்.
மிக முக்கியமாக, பொது வெளி அனைவருக்குமானது என்ற அறிவை நம் வீட்டு ஆண்களுக்குத் தருவதில் தொடங்குகிறது நம் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு. ‘ராத்திரி பத்து மணிக்கு மேல பொம்பளைப் புள்ளைக்கு வெளிய என்ன வேலை?’, ‘எங்க போனாலும் வெளக்கு வைக்கிறதுக்குள்ள வீட்டுக்கு வந்துரு, இல்லாட்டி இப்படித்தான் நடக்கும்’, என பெண் குழந்தைகளின் சிறகுகளை முறிப்பதை விடுத்து, ‘எப்போ, எங்கே வேண்டுமானாலும் போ, பாதுகாப்புக்கு தற்காப்பு முறை கற்றுக்கொள், யாருக்கு ஆபத்து என்றாலும் துணிந்து துணை நில், கேள்வி கேள்’, என பெண் பிள்ளைகளுக்கு நாம் பாதுகாப்பு முறைகளையும் ஆபத்துகால உதவி எண்களையும் சொல்லித்தர வேண்டியுள்ளது.