Site icon Her Stories

முடி இருந்தால் தான் குடும்பப் பெண்ணா?

படம்: கீதா இளங்கோவன்

21.04.2021.

பெண்ணென்றால் அடர்த்தியான, நீளமான கருங்கூந்தலுடன் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி நமது சமூகத்தில் இருக்கிறது. அதுதான் அழகாம். நீளமான கூந்தல் வைத்திருக்கும் பெண்ணை, அதற்காகவே சிலாகிப்பதும், கூடுதலாக மதிப்பதும், அவளை ‘நல்ல பெண்ணாக’ பிம்பப்படுத்துவதும் பொதுபுத்தியில் இன்றும் இருக்கிறது. குட்டைமுடிப் பெண்ணை போனால் போகட்டும்’ என்று ஏற்றுக் கொண்டாலும், தழையத் தழையப் பின்னி, பூச்சூடும் பெண்தான் கொண்டாடப்படுகிறாள். பெண்ணின் முடி குறையக்குறைய அவளின் சுதந்திர உணர்வு அதிகரிப்பதாக பொதுச் சமுதாயம் கருதுகிறது.

சராசரி குடும்பத்தில், ஒரு பெண் எளிதாக முடியை வெட்டிவிட முடியாது. குடும்பத்தின் அனுமதி தேவை. அனுமதி பெறாமல் வெட்டிக் கொண்டாலோ “முடி எவ்வளவு அழகா இருந்தது! எதுக்கு வெட்டினே ?", என்று குடும்பத்தாரும், சுற்றமும் திட்டுவதும், தோழிகள் உரிமையுடன் கோபித்துக் கொள்வதும், சர்வசாதாரணமாக நடக்கும். சுற்றியிருப்போரின் எதிர்ப்பை மீறித்தான் முடியின் நீளத்தை குறைக்க வேண்டியிருக்கிறது. தன் உரிமைக்கும், விருப்பத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும், சுதந்திரவுணர்வு கொண்ட பெண்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது. கல்யாணமாகாத பெண்ணென்றால் கேட்கவே வேண்டாம், முடியை வெட்ட பெரும்பாலான அம்மாக்களே அனுமதிக்க மாட்டார்கள்.கல்யாணம் வரைக்கும் வெட்டக் கூடாது’ என்று கறாராக சொல்லிவிடுவார்கள். குடும்பப் பெண் இமேஜை, இந்த ஆணாதிக்க சமூகம், முடியில் ஏற்றி வைத்திருப்பதால், கல்யாணச் சந்தையில் முடியுள்ள பெண்ணுக்குத்தான் முன்னுரிமை.

கல்யாணமான, பெரும்பான்மை பெண்களுக்கும் தன் முடியின் மீது பெரிதாக உரிமை இல்லை. முடியை விருப்பப்படி வெட்ட உரிமையிருப்பவர்களில் ஒரு தரப்பாரும், சுற்றியிருப்பவர்களின் விமர்சனங்களுக்கு பயந்து, வெட்டிக் கொள்வதில்லை. பெண், முடியைக் குறைக்கவே இவ்வளவு பஞ்சாயத்து என்றால் இயல்பாக மொட்டை அடித்துக் கொள்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இங்கு ஆணின் மொட்டை சாதாரணமான செயல், பெண் மொட்டையடிப்பதோ கேவலமானதாகப் பார்க்கப்படுகிறது. (சாமிக்கு வேண்டுதல், கோவிலுக்கு நேர்ந்து கொள்வது என்றால் மட்டும் விதிவிலக்கு.)

எல்லாப் பெண்களுக்கும், அடர்த்தியாகவோ, நீளமாகவோ முடி இருப்பதில்லை. அப்படி இல்லாதவர்கள், முடி வளர்வதற்காகவும், முடி உதிர்வதைத் தடுப்பதற்காகவும், அந்த ஹேர் ஆயில், ‘இந்த ஷாம்பு’ என்று படாதபாடுபடுகிறார்கள். சிலருக்கு உடல்நலக் குறைபாட்டாலும், புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு கீமோதெரபி, ரேடியேசனாலும் முடி கொட்டிப்போய் மொட்டையாகிவிடும். இவர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், ‘விக்' தயாரிக்க ‘முடி தானம்’ செய்து உதவுகிறார்கள் சில பெண்கள். நல்ல விசயம்தான். ஆனால், இதற்கான நிரந்தத் தீர்வு, முடியில்லாதவர்களையும் இயல்பாக ஏற்பதாகத்தானே இருக்க வேண்டும். ஒரு பெண் தன் விருப்பப்படி மொட்டையடித்துக் கொண்டால், அதை இயல்பான விசயமாக பார்த்துப் பழகினால், முடியிழந்தவர்களுக்கு `விக்’ தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்காதே.

பெண் என்பவள் முடியோடு தான் இருக்க வேண்டும் என்பதில்லை, முடியில்லாமலும் இருக்கலாம் – அது சூழலினாலோ, அவள் தேர்வினாலோ கூட இருக்கலாம். முடியில்லாமலும் சந்தோசமாக வாழலாம். அப்படியும் பெண்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெண் முடி வளர்ப்பதும், வெட்டிக் கொள்வதும், மொட்டை அடித்துக் கொள்வது அவளது தேர்வு. அந்த உரிமையை அவள் எடுத்துக் கொள்வதற்கான வெளியை உருவாக்குவோம் – அவள் முடி பற்றி எந்த விமர்சனங்களும் செய்யாமல். அவள் முடியை வைத்து அவளை மதிப்பிடாமல் இருக்கப் பழகுவோம், அன்பான ஆண், பெண் தோழர்களே !


பி.கு. நான் மொட்டை அடித்துக் கொண்டது எனது இயல்பான தேர்வு. உதவிய என் இணையருக்கு அன்பு.

Exit mobile version