இவ்வார்த்தை கொஞ்சம் பரிச்சயம் இல்லாததுபோல் தோன்றும். தேவதாசி என்று சொன்னால் உடனே புரிந்தது மாதிரி, கேள்விப்பட்ட மாதிரி இருக்கும்.
ஆனால் தேவதாசி என்ற சொல் உருவாக்கும் படிமம் நம் எல்லோர் மனதிலும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது. காரணம் நாம் நம்முடைய இன்றைய வாழ்க்கையில் இருந்து அந்தச் சொல்லை அணுகுவதுதான். தாசி என்றாலே நமக்குத் தெரிந்த பொருள் பாலியல் தொழிலாளிதான். ஆனால் தாசி என்ற சொல்லின் பின்னால்தான் தமிழகத்தின் கோயில் வரலாறும், இசை வரலாறும், நாட்டிய வரலாறும்,சிற்பக் கலை வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லைதான்.
அடியார் என்ற சொல் நமக்குள் தரும் மரியாதையை பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் பொருத்திக் கொள்கிறோம். சிவனடியார்கள், பெருமானடியார்கள் என்றால் ஆன்மீக பெரியார்கள் நினைவுக்கு வருவார்கள். தேவரடியார் என்றாலும் கடவுளுக்கு சேவை செய்த உயரிய அர்ப்பணிப்புக் கொண்ட பெண்களைப் பற்றிய நினைவுதான் வரவேண்டும். அடியார் என்ற சொல் அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்ததாகும். அடி என்றால் பணிதல், தொழுதல் என்று பொருள். தேவரடியார்களும் கல்வெட்டில் அடிகள்மார் என்றே குறிப்பிடப்படுகிறார்கள். புனிதத் திருமறைப் பாடல்களை ஓதுகிற பெண்களுக்கே அடிகள்மார் என்று பொருள் இருந்திருக்கிறது.
தேவர், தேவ என்றால் கடவுள் என்று பொருள். தேவரடியார் என்றால் கடவுளுக்கு சேவை செய்கின்றவர் என்று பொருள். கடவுளின் அடிமை என்றும் பொருள் கொள்ளலாம். வாழ்வின்மீது பற்று கொண்ட மனங்களை கடையேற்றிக் கொண்டிருக்கும் கடவுள் தனக்கென்று அடிமைகளை வைத்துக் கொண்டிருந்தாரா? அடிமைகளின் சேவையை அவர் உவப்புடன் ஏற்றுக் கொண்டாரா என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் நாம் காலத்தின் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இருப்பிடங்களை கட்டிய மாதிரியே தங்களை ரட்சிக்கும் கடவுள்களுக்கும் வசிப்பிடங்களை உருவாக்கினார்கள். அதைத்தான் கடவுள் வாழுமிடம்(கோ+இல்) என்ற பொருள் கொண்ட கோயில் எனப் பார்த்தோம்.
சங்க காலத்தில் கோயில்கள் மிக எளிமையான இடங்களாகவே இருந்துள்ளன. மரத்தாலும், சுதையாலும், செங்கற்களாலும் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. கருவறை மண்டபம் மட்டுமே கொண்ட கோயில்கள் வழிபாடு நடக்கும் இடங்களாக இருந்திருக்கின்றன. கோயில்களுக்கு என்று தனித்த கலைஞர்கள் இருந்ததில்லை. சங்க காலத்தில் மதத்தின் செல்வாக்கு மேலோங்கியிருக்கவில்லை. கடவுள்கள் மக்களின் நிலம் சார்ந்த எளிய கடவுள்களாக இருந்தார்கள். துவக்கக் காலத்தில் அரசனுக்குத்தான் கடவுளின் இடம் தரப்பட்டிருந்தது. கடவுள் தத்துவங்கள் மக்களுக்கு தங்கள் வாழ்வின் ஆத்மார்த்தமாக இருந்ததே தவிர ஆடம்பரமாக இருந்ததில்லை. தனிநபர் வழிபாடுகள் மேலோங்கியிருந்தன. எளிமையான சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் கொண்ட கோயில்கள் மக்களின் வாழ்வில் மிகப் பெரிய இடத்தை சங்க காலத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் போரில் இறந்த வீரர்களின் நடுகற்களுக்கும், சிறு தெய்வங்களுக்கும் இருந்த வழிபாட்டு முக்கியத்துவம்கூட கோயில் சார்ந்த வழிபாடுகளில் இருந்ததில்லை.
பாணர் மக்களும், பாடினியும் விறலியும் மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வாழ்ந்திருக்கிறார்கள். மன்னனின் வீரத்தையும் அவனின் வெற்றிகளையும் கொடைப் பண்பையும் மற்ற பாணர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்களை மன்னனிடம் செல்ல ஆற்றுப்படுத்தி இருக்கிறார்கள். அரசனின் அரண்மனைகளில் பாணர்கள் கூட்டம் நிரந்தரமாக இருந்ததற்கான இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றதே தவிர கடவுளை புகழ்ந்து பாட நிரந்தரக் குழுக்கள் எதுவும் கோயில்களில் இல்லை. கோயில்கள் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளாத காலங்கள் அவை.
இனக்குழு சமூகமாக இருந்த தமிழ்ச் சமூகம் சங்க காலத்திற்குப் பிறகு பேரரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் வரத் தொடங்கியது. களப்பிரர்களிடம் இருந்து தமிழகத்தைக் கைப்பற்றிய பல்லவர்கள் தங்கள் செல்வாக்கினை கலைகளின் மூலம் வெளிப்படுத்தினர். அதுவரை அழியக்கூடிய கட்டட அமைப்புகளில் இருந்த கோயில்களை காலத்தால் அழிக்கமுடியா கட்டட அமைப்புகளாக மாற்ற எண்ணினர். பல்லவ மன்னன் மகேந்திரவர்ம பல்லவன், செங்கலின்றி, சுதையின்றி, மரமின்றி, இரும்பின்றி தளி(கோயில்) அமைத்தேன் என்று மாமண்டூர் குடவரைக் கோயில் கல்வெட்டில் எழுதி வைத்துள்ளான். கற்களால் ஆன அழகான கற்றளிகள்(கற்கோயில்கள்) கடவுள்களுக்கு உருவாக்கப்பட்டன. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் ஆட்சிக் காலம் முடிய தமிழகத்தில் புதிய புதிய கோயில்கள், சிறு கோயில்கள் பெரும் கோயில்களாகவும் கட்டப்பட்டுக் கொண்டே இருந்தன. ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நடைபெற்ற இக்கோயில் கட்டும் கலைதான் இன்றைக்கு நமக்கு வரலாறாக நிற்கிறது.
வெறும் கருவறைகளோடு நின்ற கோயில்களுக்கு கருவறையை ஒட்டிய மண்டபங்கள் எழுப்பப்பட்டன. கருவறை மண்டபங்களை ஒட்டி மிகப் பெரிய பிரகாரங்கள் வளர்ந்தன. ஒவ்வொரு கடவுளுக்கும் மண்டபங்களில் தனித்தனி கோட்டங்கள் அமைக்கப்பட்டன. கோவில் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி வழிகாட்டும் நெறியை ஆகம நெறி என்றும், அவற்றை விளக்கும் நூல்களை ஆகமங்கள் என்றும் சொல்கிறோம். ஆகம நெறியின் படிதான் ஒரு கோயில் கட்டுவதற்கான இடம், கோயிலுக்குள் கருவறை அமைய வேண்டிய இடம், கோயிலுக்குள் அமைய வேண்டிய சிற்பத்தின் அளவு, உயரம் எல்லாம் தீர்மானிக்கப்பட்டது. ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட கோயில்கள் கடவுள்களின் கலைக்கூடங்களாக ஆக்கப்பட்டன.
நிருத்ய சபை என்றழைக்கப்பட்ட நாட்டிய அரங்குகளும், கனக சபைகளும், கடவுளிடம் கலைகளை கொண்டு வந்து சேர்த்தன. பல்லவர்களின் ஆட்சிக் காலம் வரை அரசவைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த கலையும், இலக்கியமும் பல்லவர் ஆட்சிக் காலத்தில் கோயில்களை நோக்கி மெல்ல, ஆனால் மொத்தமாக நகரத் தொடங்கின. பல்லவர் காலத்திற்குப் பிறகு அரசனின் இடத்தைக் கடவுள்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அரண்மனைகளில் வளர்ந்த கலை மெல்ல கோயில்களுக்கு இடம் பெயர்ந்தது. அரசனை கதைநாயகனாகக் கொண்டவர்கள் கடவுளை கதைமாந்தர்களாக்கினர். கடவுள் மிகப் பெரிய செல்வந்தராகவும், கலா போஷகராகவும் மாறினார். கோயில்கள் மிகப் பெரிய ஆரவாரங்கள் நிரம்பிய இடங்களாக மாறின. பக்திப் பாடல்களும், இசை நடனங்களும், இசைக்கூத்துக்களும் கடவுளுக்காக கடவுளின் பெயரால் நிகழ்த்திக் காட்டப்பட்டன. மண்ணை வெற்றிகொண்ட பேரரசன், போர் வெற்றிகளுக்குப் பிறகு அமைதியாக கலைகளில் மனம் செலுத்தி ஆரவார பெருவாழ்வு வாழ்வதைப்போல் நாம் கடவுள்களை வாழ வைத்துள்ளோம். நாளுக்கொரு பூஜை, மாதத்திற்கொரு திருவிழா, ஆண்டிற்கொரு உற்சவம் என கடவுள்களை கொண்டாடி களியுற்றிருக்கிறோம்.
எல்லா வல்ல இறைவனுக்கு மானுடர்கள் என்ன சேவையை செய்துவிட முடியும்? தான் அருள்பாலிக்கும் மானுடர்களிடம் இருந்து இறைவன் என்ன சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஆழ்ந்து யோசித்தால் ஒன்று புரியும். மனிதன் உருவாக்கிய கடவுளுக்கு, மனிதர்களின் தேவைகளும் சேவைகளும் தேவைப்படும்தானே? மனிதன் தன்னை கவனித்துக் கொள்ள வீடுகளில் தனக்கிருக்கும் பெண்களைப் போலவே, கடவுளின் இல்லத்திலும் கடவுளை கவனித்துக் கொள்ள பெண்கள் வேண்டும் என்றொரு ஏற்பாட்டினை செய்திருக்கிறான். வீட்டில் ஒவ்வொரு ஆணுக்கும் பலவித உறவுமுறைகளில் சேவை செய்ய பெண்கள் இருக்கிறார்கள். அம்மா, மனைவி,மகள் என ஏதோ ஒரு பெயர். அடிப்படைத் தகுதி பெண். உறவுமுறைகள் மாறலாம். அதில் ஆணுக்கான சேவையை மனைவி என்ற தகுதியில் மிக நீண்ட காலத்திற்குச் செய்பவள் மனைவியே. தனக்குக் கிடைத்த சேவகம் செய்யும் தாசியைப் போலவே கடவுளுக்கும் சேவை செய்யும் தாசிகள் வேண்டுமென எண்ணம் உதித்திருக்கும். அந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனமே தேவதாசி முறை.
கடவுளின் மனைவியாக தங்களை நேர்ந்து கொண்டு, கடவுளின் சன்னிதானத்தில் கடவுளின் மனைவியாக அவரின் பெயரால் தாலியைக் கட்டிக் கொண்டு, கடவுளின் மனைவி என்ற அந்தஸ்தில் பெண்கள் தங்களை தேவரடியார்களாக்கிக் கொண்டார்கள்.கடவுள் அழிவற்றவன். இறப்பில்லாதவன். எனவே கடவுளுக்கு மனைவியான தேவரடியார்களும் என்றைக்குமே சுமங்கலியானவர்கள். எனவேதான் அவர்கள் நித்ய சுமங்கலிகள் என்று வரலாற்று ஆவணங்களில் குறிக்கப்படுகிறார்கள்.
தேவரடியார்களாக தங்களை நேர்ந்துவிட்டுக் கொண்ட பெண்கள் எவ்விதமான சேவைகளை கடவுளுக்குச் செய்தார்கள்? ஒரு பெண் தன் வீட்டைப் பராமரிப்பது போலவே தேவரடியார்கள் கோயில்களைப் பராமரித்தார்கள். கோயில்களுக்கு நேர்ந்துவிடப்பட்ட பெண்கள் கோயிலை பெருக்கி சுத்தம் செய்வது, பூஜைக்கு பூக்கள் பறித்துக் கொண்டு வருதல், பூஜை சாமான்களை கழுவி சுத்தம் செய்து கொடுத்தல், இறைவனுக்கு முன்னால் கும்பார்த்தி எடுத்து பக்திப் பாடல்களை பாடுதல், கோயில் பிரகாரங்களை கழுவி விடுதல் போன்ற கோயில் பராமரிப்புப் பணிகளைத்தான் துவக்கக் காலத்தில் செய்து வந்திருக்கிறார்கள். சோழர்கள் காலத்தில் உச்ச நிலையில் இருந்த தேவரடியார்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கோயில்களின் வழிபாட்டு முறைகளும், கோயில் நடைமுறைகளும் இருந்துள்ளன. குடுமியான் மலை சிகாநாத சாமி திருக்கோயிலின் சாவி அக்கோயில் தேவரடியாரிடம் இருந்ததாக கல்வெட்டுக் குறிப்பு உள்ளது.
கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட எல்லா தேவரடியாரும் இசையிலும் நாட்டியத்திலும் ஆர்வமுடையவர்களோ, தேர்ந்தவர்களோ அல்ல. தேவரடியார் அமைப்பு பல்லவர் காலத்தில் உருவாகி, பக்தி இயக்கத்தின் ஓர் அங்கமாய் கோயில்களில் நிலை கொண்ட பிறகு, தேவரடியார்களில் பெரும்பாலோர் இசை, நடனத்தோடு தொடர்புடையவர்களாக மாறினார்கள். உறையூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் கோச்செங்கணான்தான் முதன்முதலில் இசை, நடனம் தெரிந்தப் பெண்களை கோயில் பணிகளுக்கு நியமித்தான் என்று கல்வெட்டுச் செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. இவனே காவிரியின் இரு கரைகளிலும் எழுபது கோயில்களை அமைத்தவன். கோச்செங்கணான் கட்டிய எழுபது கோயில்களில் ஒன்றுகூட இன்று இல்லை. ஆனால் அவன் உருவாக்கிய தேவரடியார் மரபு அவனுக்குப் பின்னால் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் நிலை பெற்றிருந்தது.
தேவரடியார்களாக நேர்ந்துவிடப்பட்ட பெண்கள் யார்? அவர்கள் ஒரு குலத்தைச் சார்ந்தவர்களா? எந்த வயதில் பெண்கள் கோயில்களுக்கு நேர்ந்து விடப்பட்டார்கள்?
(இனி பார்ப்போம்)
கட்டுரையாளர்:
அ.வெண்ணிலா
அரசுப்பள்ளி ஆசிரியரான அ.வெண்ணிலா, 90-களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கினார். பெண்கள் குறித்த பழைமைவாதக் கற்பிதங்கள், குடும்ப அமைப்பு பெண்ணிடம் நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டல்கள்மீதான கடுமையான விமர்சனங்களைப் படைப்பு மொழியாக்கினார்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், தொகுப்பாக்கம் எனப் பரந்துவிரிந்த இலக்கியப் பயணம் இவருடையது. மாதவிடாய்க் காலங்களில் மாணவிகள்படும் இன்னல்களைப் பற்றி ‘ஆனந்த விகடன்’ இதழில் இவர் எழுதிய கவிதையைப் படித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், அரசுப் பள்ளிக்குக் கூடுதலான கழிவறை களைத் கட்டித் தர உத்தரவிட்டது, கவிதை உலகில் ஒரு முக்கிய நிகழ்ச்சி. ‘தேவரடியார் – கலையே வாழ்வாக…’ எனும் ஆய்வு நூல், 5,200 பக்கங்கள் கொண்ட, ‘ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு’ ஆகிய தொகுப்பு நூல்கள் தமிழுக்கு இவர் செய்த முக்கியப் பங்களிப்பு. சாதி – சடங்கு மறுப்பு திருமணம், அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தது, தந்தை இறந்தபோது ஒரே மகளான இவரே கொள்ளிவைத்தது என எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் இயங்கும் இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.