‘சின்ன சின்ன ஆசை’ – திரைப்படம் குறித்த ஒரு சிந்தனை
வாழ்க்கை நம்மிடமிருந்து பலவற்றைப் பறித்துக்கொள்ளலாம்; ஆனால் கலை நமக்குள் நம்பிக்கையை மீண்டும் விதைக்கமுடியும்.
வாரணாசி (காசி) நகருக்கு ஆன்மீகப் பயணமாக ஒரு சிறிய குழுவுடன் செல்கிறார், ஐம்பது வயதைக் கடந்த லீலா. எதிர்பாராத விதமாக அவர் குழுவிலிருந்து பிரிந்து விடுகிறார். கையிலிருந்த பையையும் ஒருவர் பறித்துச் செல்கிறார். யாருடைய தொலைப்பேசி எண்ணும் அவருக்குத் தெரியாது. அந்த நெருக்கடியான தருணத்தில் அவருக்கு உதவியாக வருகிறார், மனைவியை இழந்த மலையாளியான மாதவன்.
மாதவனும் லீலாவும் அவரவர் தாய்மொழியிலேயே பேசுகிறார்கள். ஆனால் மொழி அவர்களுக்குள் ஒரு தடையாக மாறவில்லை. மனிதநேயம் எல்லா மொழிகளையும் தாண்டிச்செல்லும் என்பதை இயக்குநர் மிக இயல்பாக உணர்த்துகிறார்.
மாதவனுக்கு அன்பு செலுத்தும் ஒரு மகள் இருக்கிறார். ஆனால் லீலாவிற்கு அப்படியான உறவுகூட இல்லை. தமிழ்ச் சங்கத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று நினைத்து மாதவன் அவரை அழைத்துச் செல்கிறார். அவருடன் வந்திருந்த அவர் குழுவினரை எங்கே கண்டுபிடிக்க முடியுமோ, அங்கெல்லாம் தேடிச் செல்கிறார். அந்தத் தேடலின் வழியே நாமும் காசியின் தெருக்களையும் கங்கைக் கரையையும், அதன் ஆன்மீகத் துடிப்பையும் அமைதியாகக் காண்கிறோம். சில மணி நேரங்களிலேயே இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு மலர்கிறது. அந்த நட்பை அவர்கள் சொற்களால் அல்ல; சிறிய சிறிய செயல்களால் வெளிப்படுத்துகிறார்கள்.
அந்த நட்பும் ஓரிடத்தில் பிரியும் கணத்தில்தான் லீலாவை மீண்டும் வெறுமை ஆட்கொள்கிறது. லீலாவின் தனிமையையும் வாழ்க்கைச் சூழலையும் புரிந்துகொள்ளும் மாதவன், அவரை வழியனுப்புவதாக உறுதியளிக்கிறார்.
மாதவன் சின்ன சின்ன விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே வாழ்கிறவர். காலை எழுந்தவுடன் தெருவில் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் ஒரு சிறு உரையாடல், கங்கையில் காகிதக் கப்பல் மிதக்கவிடும் குழந்தைத்தனம், இவையெல்லாம் அவருடைய வாழ்க்கையை ஒளிரச் செய்கின்றன.
லீலாவோ அப்படியல்ல. பஞ்சு மிட்டாய் மீது விருப்பம் இருந்தும் “வேண்டாம்” என்று விலகிச் செல்கிறார். ஆனால் ஓரிரு மணி நேரங்களிலேயே அவரது உள்ளமும் மாறத்தொடங்குகிறது.
காலையில் தன் குழுவில் வந்த பெண் வாங்குவதை ஏக்கத்துடன் பார்த்த பூவை, இப்போது தானே வாங்கிச் சூடிக்கொள்கிறார். எப்போதும் நூல் சேலையால் கழுத்தை மூடிக்கொண்டு நடக்கும் அவர், கொஞ்சம் விலை உயர்ந்த ஒரு சேலையை வாங்கி, அதை இயல்பாக அணிகிறார். மண்டப வாசலில் கித்தார் வாசிக்கும் கலைஞரின் இசையில், திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்து நடனமாடுகிறார். அந்த நடனத்திற்காக மக்கள் கொடுத்த சிறு தொகையை, ‘என் முதல் சம்பளம்’ என்று பெருமையுடன் மாதவனிடம் கொடுக்கிறார்.
ஒரே ஒரு நாளில், அவர் வாழ்நாள் முழுவதும் ஒத்திவைத்திருந்த பல சின்னச் சின்ன விருப்பங்கள் நிறைவேறுகின்றன. இவர்கள் இருவரை மட்டுமல்ல, இவர்களுடன் இணைந்து பயணிக்கும் சிலரைக்கூட நீங்கள் கவிதையாக உணரலாம்.
இந்தத் திரைப்படம் ஒரு கதையாக அல்ல; ஒரு கவிதையாக நகர்கிறது. கங்கையைப்போல வேகமாகப் பாயாமல், ஒரு சிற்றோடையைப்போல மெதுவாக ஓடுகிறது. அந்த மெதுவான நகர்வில்தான் இதன் அழகும் உயிரும் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் சுமந்த தனிமை, சொல்லப்படாத வலி, நிறைவேறாத சிறிய விருப்பங்கள், இவற்றைப் பெரிய நாடகத்தன்மையின்றி, ‘நட்சத்திர’ நாயகர்களின்றி படம் ஆராய்கிறது. வாழ்க்கை எப்படி இயல்பாக ஓடுகிறதோ, அப்படியே இந்தக் கதையும் நகர்கிறது என்பதுதான் திரைப்படத்தின் வலிமை.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் திருப்பங்கள் நிகழ்வதில்லை. அப்படி நிகழ்ந்தால், அவற்றைச் சமாளித்துக்கொண்டே வாழ்வதுகூட முடியாமல் போய்விடும். ஆனால் திரைப்படங்களில் மட்டும் ஏன் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கிறோம்? என்ற கேள்வி எனக்குள் எப்போதும் உண்டு. அந்த வகையில், இந்தப் படம் வாழ்க்கையைப்போலவே நம்மை மூச்சுவிட வைக்கிறது.
முதுமை என்பது உடலுக்குத்தான்; விருப்பங்களுக்கு முதுமை இல்லை என்பதை இந்தப் படம் மென்மையாக நினைவூட்டுகிறது. இந்த இருவருக்கும் ‘சிறிது தூரம் தன்னோடு யாராவது நடந்து வரவேண்டும்’ என்பதே வாழ்க்கையின் மிகப்பெரிய விருப்பமாக மாறியிருக்கிறது. அந்த வகையில், இந்தத் திரைப்படம் எழுத்தாளர் சூடாமணியின் உளவியல் கதைகளை எனக்கு நினைவுபடுத்துகிறது.
இன்று உலகம் முழுவதும் தனிமை பெருகிக்கொண்டே வருகிறது. துணையை இழந்தவர்கள், முதுமையில் தனியாக வாழ்பவர்கள், பிள்ளைகளிடமிருந்து தொலைவில் இருப்பவர்கள்—இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட காலத்தில், இரண்டு தனிமையான மனிதர்கள் ஒருவர் மற்றவருக்குச் சிறிது நேரம் துணையாக இருப்பது வெறும் காதல் அல்ல; அது மனித சமூகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு கதை.
எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறிய கருத்து என நினைக்கிறேன். சரியான சொற்கள் நினைவில் இல்லை; ஆனால் அதன் சாரம் இதுதான்: ‘கலை மனிதனை அவனது துயரத்துடன் தனியாக விட்டுவிடக் கூடாது; தொடர்ந்து வாழ்வதற்கான ஒரு காரணத்தையாவது அவனுக்குத் தர வேண்டும்.’
வாழ்க்கை பல நேரங்களில் நம்பிக்கையைப் பறித்துவிடலாம்; ஆனால் கலை அதையே செய்ய வேண்டிய தேவை எதுவுமில்லை. மனிதர்களின் வாழ்வில் சில சந்திப்புகள் சில நிமிடங்களே நீடிக்கலாம். ஆனால் அவற்றின் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும். ஒரு வாழ்க்கையை மாற்றுவது எப்போதும் பெரிய நிகழ்வுகள் அல்ல; சில நேரங்களில், ஒரே ஒரு நாளில் கிடைத்த மனித அன்பே போதுமானது.
இந்தப் படம் முடிந்தபோது என்னுள் ஒரு கேள்வி மட்டும் எஞ்சியது; ‘வாழ்க்கையைப் போல இயல்பாக ஓடிக்கொண்டிருந்த இந்தக் கதைக்கு, அந்த இறுதியில் வரும் திருப்பம் உண்மையிலேயே தேவையா?’
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!
சின்ன சின்ன ஆசை, ஜியோ ஹாட்ஸ்டார்
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.


