Site icon Her Stories

சந்திரகிரி ஆற்றங்கரையில்…

Muslim couple standing on the sidewalk illustration

கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

3

மருமகன் ரஷீதின் கடையை அடையும்போது பகல் 12 மணியாகியிருந்தது. வெய்யிலில் நடந்து வந்ததனால் மிகவும் சோர்வாக இருந்தது. அப்போது தான் குளித்து எழுந்து வந்ததுபோல் உடம்பிலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. கடையின் முன்பு வந்ததும் சோர்வினால் அங்கிருந்த ஒரு ‘பென்ச்’ மீது உட்கார்ந்தார். தலையிலிருந்து முண்டாசை எடுத்து வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.

மருமகன் எழுந்துநின்று மாமனாருக்கு மரியாதை காட்டினான். பக்கத்துக் கடையிலிருந்து தானே ஓர் இளநீர் வாங்கிவந்து கொடுத்தான். ”அத்தை, ஜமீலா எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டான்.

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு மஹமத்கான் பேரப்பிள்ளையின் நலனைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். அதன் பிறகு கடையில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு தான் வந்த காரணத்தை வெளிப்படுத்தினார்.

”பாருப்பா ரஷீத், நம்ம ஜமீலாவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு, அது உனக்குத் தெரியுமில்ல? இப்போ என் நெலம ரொம்ப சங்கடமாயிருக்கு. எனக்கு ஆம்பிள புள்ள யாரும் இல்ல. உங்கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லட்டும் ?” என்று பேச்சை நிறுத்தினார்.

ரஷீத்துக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.

”என்னன்னு விவரமா சொல்லுங்க மாமா.” திருமணம் நின்றுபோய்விட்டதோ என்று சந்தேகம் தட்டியது அவனுக்கு.

எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அவர் சற்று நேரம் மௌனமாக நின்றார். பிறகு மெதுவாக, ”பாருப்பா, இப்போ ரெண்டு மூணு ஆயிரம் ரூபா தேவையாயிருக்கு. எல்லா பக்கமும் நெருக்கிப் பாத்துட்டேன். அப்படியிப்படீன்னு ஆயிரம் ரூபா தெரட்டி வச்சிருக்கிறேன். அதுக்கும் மேல எங்கெயும் கெடைக்கல. கல்யாணம் நின்னு போற மாதிரியிருக்குது. நீ இப்போ பணம் கொடுத்தேன்னா ரெண்டு மூணு வருசத்துல எப்பிடியாவது தீக்கப் பாக்கறேன்.”

இப்போது ரஷீத்துக்கு எல்லாம் புரிந்தது. ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே தோன்றாமல் குழம்பிப்போய் நின்றுவிட்டான்.

”இப்போ என்கிட்ட ஏது மாமா அவ்வளவு பணம்?” என்று மெதுவாகச் சொன்னான்.

”நீயும் இப்பிடிச் சொல்லிட்டா எப்பிடி ரஷீத்? இப்போ நீ எனக்கு எப்படியாவது பணம் கொடுத்துத்தான் ஆகணும்” என்று சற்று உரக்கவே கேட்டார்.

‘எங்கிட்ட இருக்கிற பணத்தையெல்லாம்தான் வியாபாரத்துல போட்டிருக்கிறேனே மாமா. தனியா எங்கிட்ட ஏது பணம் ? இப்போ நீங்க என்ன என்ன பண்ணாலும் ஒரு காசுகூடப் பொரட்ட முடியாது. நான் என்ன பேங்க் வச்சிருக்கிறேன்னு நெனச்சிக்கிட்டீங்களா?”

கடைசியாகச் சொன்னதைச் சொல்லியிருக்கக் கூடாது என்று தோன்றியது ரஷீதுக்கு, வாய் தவறி வந்துவிட்ட சொல்தான். ஆனால், திரும்பவும் அதை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்ள முடியாதே; என்னமோ, நடக்கக்கூடாதது நடந்து போய்விட்டது.

தனது மருமகன்கூடத் தன்னை இப்படிக் கைவிட்டுவிடுவான் என்று மஹமத்கான் எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றத்தின் வேதனையோடு அவரின் முன்கோபம் என்னும் நாகமும் படமெடுத்துச் சீறியது. அவரது கண்களில் செம்மை படர்ந்தது. மூக்குத் துளைகள் விரிந்து சூடான மூச்சுக் காற்று விரைந்து விரைந்து வாங்கியது. ஆவேசத்தில் பேச்சு தடுமாறியது.
”ஹும்” அவர் ஒருமுறை உரக்க உறுமினார். ”மருமகன், புள்ளைக்குச் சமானம். கஷ்டக்காலத்துலே உதவி செய்வான்னு நம்பிதான் இவ்வளவு தூரம் வந்தேன். மகளைக் கட்டிக்கிட்ட பின்னால மாமனார் எதுக்கு? உம் மாதிரி ஆளுக்கு எம்பொண்ண கொடுத்து நான்தான் மோசம் போனேன்.”

இன்னும் என்னென்னவோ வாய்க்கு வந்தவாறு மருமகனைத் திட்டினார். இதற்குள் ரஷீத்தின் சில நண்பர்கள் அக்கம்பக்கமிருந்த கடைகளிலிருந்து அங்கு வந்தனர். ரஷீத் கூச்சத்தினால் குறுகிப் போனான். தான் ஒரு பேச்சு சொன்னதற்கே மாமனார் இப்படிக் கோபித்துக் கொள்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. என்ன மாதிரியான மனுசன் இந்த மாமனார்? தன்னிடம் பணம் இல்லையென்று ஒருமுறை சொன்னால் புரிந்துகொள்ளக் கூடாதா? தன்னுடைய நண்பர்கள், அக்கம்பக்கத்துக் கடைக்காரர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள். ரஷீத் தலைகவிழ்ந்து உட்கார்ந்துவிட்டான். கோபத்தில் கொதித் துக்கொண்டிருந்த மஹமத்கான், தன் முண்டாசுத் துணியை ஒருமுறை வேகமாக உதறி தலைமேல் சுற்றிக்கொண்டு குடையை எடுத்து வீசியபடி அங்கிருந்து புறப்பட்டதைப் பார்த்த ரஷீத் என்ன செய்வது என்று தெரியாமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டான். கால்மணி நேரத்தில் என்னென்னவோ நடந்து முடிந்துவிட்டது.

மஹமத்கான் அங்கிருந்து நேராகப் போனது மகளின் வீட்டுக்கு. தந்தையின் முகத்தைப் பார்த்ததும் மகளின் முகம் பெரியதாக மலர்ந்துவிட்டது.

”உம்மா எப்பிடியிருக்கிறாங்க? ஜமீலா எப்பிடியிருக்கிறா? கல்யாணம் எப்போ வச்சிருக்கிறீங்க?” எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கேட்டு முடித்தாள் நாதிரா. பேரனைத் தாத்தாவின் கையில் கொடுத்தாள்; சிரித்துக் கொண்டே ஓடியாடி தந்தைக்குச் சிற்றுண்டி தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவளது மாமியாரும் வாசற்படித் திரையின் பின்னால் நின்றுகொண்டு நாதிராவின் தாய், தங்கை ஆகியோரின் நலன்களை விசாரித்தார்.

எல்லாம் முடிந்தபின்பு கான் ஆமினாவிடம், ”பாருங்க… நான் வந்திருக்கிறது நாதிராவைக் கூட்டிட்டு போகலாம்னு. அவங்கம்மா கொழந்தைய அடிக்கடி நெனச்சிக்கிறா. நாலஞ்சு நாளைக்கு வீட்டிலே வச்சிருந்துட்டு அனுப்பி வைக்கிறேன்” என்று மிகவும் வினயமாகக் கேட்டார். கடைக்குப் போயிருந்ததையோ மருமகனுடன் நடந்த பேச்சுவார்த்தைகளையோ வெளிக்காட்டிக் கொள்ளவேயில்லை.

”ரஷீதுக்குச் சொல்லாம எப்பிடி அனுப்புறது?” ஆமினாவும் வினயமாகவே பதில் சொன்னார்.

”நீங்க சொன்னா உங்க மகன் ‘வேண்டாம்’னு சொல்லிடுவானா?” சிரித்துக்கொண்டே கேட்டார் கான்.

இப்போது ஆமினாவால் எதுவும் பேச முடியவில்லை. தான் சொல்வதைத் தன் மகன் கேட்க மாட்டான் என்று அவன் மாமனார் தெரிந்துகொள்ளக் கூடாதே! அதுவுமில்லாமல் மருமகளும் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டு வந்தபிறகு, திரும்பவும் தாய்வீட்டுக்குப் போகவே இல்லை. என்ன இருந்தாலும் தாயும் மகளும் பாக்கணும்னு துடிக்கும்போது தான் எதற்காக தடுப்பது? போய் தாயைப் பார்த்துக் கொண்டுதான் வரட்டுமே.

”போயிட்டு வர்றயா நாதிரா?” மருமகளையே கேட்டார் மாமியார். இப்போது நாதிரா மிகவும் குழம்பிப் போனாள். தாய் வீட்டுக்குப் போக அவளுக்கு அவ்வளவாக ஒன்றும் விருப்பமில்லை. இங்கேயே அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால், வரமாட்டேனென்றால் தாய் தந்தையர் மனம் நொந்துகொள்வார்கள். சரி தந்தை
வந்திருக்கின்ற காரணத்தால் ஓரிரண்டு நாட்கள் போய் இருந்துவிட்டுத்தான் வருவோமே.

”ஊம்மா.. போயிட்டு ரெண்டு மூணுநாள்ளயே, வந்துடறேன். ஆனா, உங்க மகன் என்ன நெனச்சுக்குவாங்களோ?” அவளுக்கும் தயக்கம்தான். அவரில்லாத போது அவரிடம் சொல்லாமல் போவது அவ்வளவு சரியில்லையோ என்று எண்ணி அவள் அப்படிச் சொன்னாள்.

”நீ போயிட்டு வா. அவன்கிட்ட நான் சொல்லிக்கிறேன்.” மாமியார் ஆறுதல் சொன்னார்.

செய்த சமையலை எல்லோரும் சாப்பிட்டார்கள். தந்தை ஒருகையில் குடையையும் ஒரு கையில் மகளின் துணிகள் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டார். மகள் சேலைத்தலைப்பைத் தலைமீது இழுத்துப் போர்த்திக்கொண்டு, ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையில் குடையைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டாள். அவள் புருகா அணிவது ரஷீதுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அவள் புருகா போடுவதில்லை.

அவர்களிருவரும் பஸ்ஸில் மணிப்புரத்திற்கு வந்து, அங்கிருந்து ஒரு வாடகைக்கார் அமர்த்திக்கொண்டு பகோடுத் துறைக்கு வந்தனர்.

நாதிராவுக்கு, தனக்குp பிடித்தமான சந்திரகிரி ஆற்றைக் கண்டதும் மனம் மிகவும் பூரித்துப் போயிற்று. அவ்வளவு தொலைவு வந்ததினால் ஏற்பட்ட சோர்வு ஒரு நொடியில் மறைந்து போயிற்று. தோணியில் உட்கார்ந்து கொண்டு கிளியூர்த் துறையில் இறங்கி அவர்கள் வீட்டை அடைந்தபோது மாலை நேரத் தொழுகை வேளையும் தாண்டியிருந்தது.

தாய் பசுக்களுக்குப் புல் போட்டுக் கொண்டிருந்தார். ஜமீலா திண்ணை மீது உட்கார்ந்து பீடிசுற்றிக் கொண்டிருந்தாள். மகளை இப்போது அழைத்து வரப்போவதில்லையென்று சொல்லிவிட்டு கடைசியில் அழைத்துக்கொண்டே வந்துவிட்டதைக் கண்டு ஃபாத்திமாவுக்குச் சற்று வியப்பாகவே இருந்தாலும், குழந்தையைப் பார்த்தவுடன் அவர் முகம் மலர்ந்தது. செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவந்து கணவனின் கையிலிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டார். அக்காள் வந்து தங்கையின் பக்கத்தில் உட்கார்ந்தாள். அந்த நேரம் கணவன் வீட்டை முழுமையாக மறந்திருந்தாள் நாதிரா.

மகளை அழைத்து வரப் போவதில்லை என்று கணவன் சொல்லியிருந்ததினால் ஃபாத்திமா அதிகமாகச் சமையல் ஒன்றும் செய்திருக்கவில்லை. அதனால் வீட்டிலிருந்ததில் நல்லதாகப் பார்த்து ஒரு கோழியைக் கூண்டிலிருந்து பிடித்து வந்து கணவனின் கையால் அறுக்கச் செய்தார். கோழிக்கறிக் குழம்பு வைத்து காலையில் அரிசி அப்பம் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டாள்.

சமையல் ஆயிற்று. மஹமத்கான் பள்ளிவாசலுக்குப் போய்விட்டு வந்து சாப்பிட்டு எழுந்தார். தாயும் பிள்ளைகளும் உண்டு முடித்தனர். அக்காவும் தங்கையும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். கோழியை ஒருநாள் ஒரு நரி வந்து கௌவிக்கொண்டு போனபோது தாய் அதன் பின்னாலேயே ஓடிப்போய் அதை விரட்டிவிரட்டி கோழியை மீட்டுக்கொண்டு வந்ததை ஜமீலா அக்காவுக்குச் சொல்ல இருவரும் கலகலவென்று சிரித்துக்கொண்டனர்.

நாதிரா தன் கணவன் வீட்டுச் செய்திகளை அலுப்புசலிப்பில்லாமல் சொல்லிக்கொண்டே போனாள். குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது.

”அப்போ உங்க மாமியார் என்ன சொல்லி அனுப்பினாங்க? நீ திரும்பவும் எப்போ வரணுன்னாங்க?” வெற்றிலைபாக்கு போட்டுக்கொண்டே ஃபாத்திமா மகளிடம் கேட்டார்.

“அவங்க ஒண்ணும் சொல்லல… ரெண்டுமூணு நாள்ல நானே வந்திடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கிறேன்.”

அங்கேயே கட்டிலின் மீது உட்கார்ந்திருந்த தந்தையின் காதில் இந்தப் பேச்சு விழுந்தது. அவர் உட்கார்ந்த இடத்திலிருந்தே தன் மனைவியிடம், ”அவளை இப்போதைக்கு நான் அந்த சைத்தானோட வீட்டுக்கு அனுப்பப் போறதில்லை” என்று கர்ஜித்தார்.

எல்லோருக்கும் இடிவிழுந்தது போலாயிற்று. யார் வாயிலிருந்தும் பேச்சே எழவில்லை. நாதிராவுக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் தொடங்கின. ஒன்றும் தோன்றாமல் அங்கேயே ஒரு மணைப்பலகை மீது உட்கார்ந்து விட்டாள்.

சற்று நேரத்திற்குப் பிறகு தன் நிலைக்கு வந்தவராக ஃபாத்திமா கேட்டார், ”எதுக்கு அப்பிடி சொல்றீங்க? என்ன ஆச்சு?”

A sticker template with portrait of a muslim girl cartoon character illustration

”என்னாச்சின்னு கேக்கிறியா? லட்சணமா மருமகன் கிட்ட போய், ‘பொண்ணு கல்யாணத்துக்கு கொஞ்சம் உதவி பண்ணு’ ன்னு கேட்டா, ‘ நான் என்ன பேங்கு வச்சிருக்கேனா’ன்னு என் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டானே உன் மருமகன். நான் இவனுக்கு மகளையும் குடுத்து ரெண்டாயிரம் ரூபாயும் கொடுக்கலையா? என் கஷ்டத்துக்கு இல்லாதவன் மருமகனா இருந்தா என்ன, இல்லாட்டா என்ன? அவ இங்கிருந்து பொறப்பட்டு அவங்க வீட்டுக்குப் போகணுன்ற பேச்சை நீயாவது அவளாவது எடுத்தீங்க, அவ்வளவுதான். ரெண்டுபேரையும் தீத்துக்கட்டிடுவேன். நல்லா ஞாபகம் வச்சுக்குங்க” என்று கத்திக்கொண்டே வெளியே எழுந்து போனார்.

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.



Exit mobile version