Site icon Her Stories

கண்கவரும் துருவ ஒளி!

வேலை நாட்களில் எதையும் நினைத்துப் பார்க்கக்கூட நேரம் இருக்காது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும்தான் எதையும் நிதானமாக யோசிக்கவே முடியும். பெரும்பாலானவர்கள் வெளியே செல்லவே விரும்புவார்கள். ஏனென்றால் கனடாவில் ஆண்டுக்கு 5 அல்லது 6 மாதங்கள், அதுவும் குளிர் அல்லது வெப்பக் காற்று வீசாத நாட்களாக இருந்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும். அதனால் தொலைக்காட்சிப் பெட்டியிலோ ஸ்மார்ட்போனிலோ அடைக்கலமாகாமல் கிளம்பிவிடுவார்கள்.

பொழுதுபோக்கு என்றாலே பெரும்பாலும் பூங்கா அல்லது கடற்கரை தான். எல்லா இடங்களிலும் அழகாகப் பாராமரிக்கப்பட்ட பூங்காக்கள், குழந்தைகள் விளையாடக் கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும். ஸ்கேட்டிங், சைக்கிள், வாக்கிங் என பூங்காவே களைகட்டும். கடல் அருகில் இல்லாத இடங்களில் ஏரிகள் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் அளவுக்குப் பெரியதாக இருக்கும். ஏரிக்கரைகளில் மக்கள் பொழுது போக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இந்த இடங்களுக்குச் செல்லும் போதுதான் மக்கள் கூட்டம் என்பதையே பார்க்க முடியும்.

இவை தவிர, காடுகளும் நீர் நிலைகளும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு, இயற்கைக்குக் கேடு வராமல் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீர் ஆதாரத்தைப் போல, காட்டுவளமும் இங்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. காடுகளைப் பராமரிப்பதில் உலகிற்கே முன்னோடியாக விளங்குகிறது கனடா. காடுகளைப் பராமரிப்பதில் பெரும்பங்கு மாகாணங்களின் பொறுப்பில் வருகிறது. நன்றாகத் திட்டமிட்டு நேர்த்தியாகப் பராமரித்து வருகிறார்கள்.

பழைமையான, உயரமான மரங்களையுடைய காடுகள், மலைகள், பாறைகள், நயாகரா நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல் இன்னோர் இயற்கை அதிசயத்தையும் கனடாவில் பார்க்க முடியும். அது அரோரா போரேயலிஸ் என்று அழைக்கப்படும் வடதுருவ ஒளி. இயற்கையாகத் தோன்றும் பச்சை வண்ண ஒளி. இது கடுங்குளிர் காலத்தில் நீண்ட இரவுகளில் தோன்றும் இயற்கையின் வண்ண ஜாலம். இதைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் மக்கள் வருவார்கள்.

இவை தவிர, அந்தந்த சீசனுக்கு ஏற்ப வசந்த காலத்தில் செர்ரி மலர்கள் பூக்கும் திருவிழா, துலிப் பூக்கள் திருவிழா, வெயில் காலத்தில் அனைத்துக் கேளிக்கைகள், சுற்றுலா, இலையுதிர்க் காலத்தில் கண்கவர் வண்ணத் தோற்றத்தில் காடுகள், ஆப்பிள், செர்ரி, மேப்பிள் போன்ற பண்ணைகள், அவற்றைச் சுற்றி வைன் பானம் தயாரிக்கும் இடங்கள் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றவை.

சரி, இயற்கையை விட்டு மனிதன் படைப்புகளைப் பார்த்தால் முதலில் நம் நினைவுக்கு வருவது, சூதாட்ட அரங்கங்களும் கேளிக்கை பூங்காக்களும் தாம். சூதாட்ட அரங்குகளுக்குச் சென்று பணத்தைத் தொலைக்காமல் வந்தால் பெரிய விஷயம். கேளிக்கை பூங்காக்களில் மிகவும் புகழ்பெற்றது ஓண்டர்லாண்ட். கனடாவின் மிகப் பெரிய பூங்கா. எல்லா நாடுகளிலும் கேளிக்கை பூங்காக்களில் உள்ள விளையாட்டுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், போட்டி என்னவோ அந்த விளையாட்டுகளில் வேகம், உயரம், மெய்சிலிர்க்க வைக்கும் தன்மை, பாதுகாப்பு இவைற்றையொட்டித்தான். அந்த வகையிலும் கனடா சளைத்தது அல்ல.

உலகிலேயே மிகவும் உயரமான, அதிவேகமான, நீளமான டைவ் கோஸ்ட்டர். அவ்வப்போது தலைகுப்புற புரட்டி ஆகாயத்தையும் பூமியையும் காட்டுவது போதாது என, மிக அதிக உயரத்திற்கு அழைத்துச் சென்று, செங்குத்தாகத் தரையை நோக்கி மிக வேகமாக கொண்டு வரும்போது, அப்பப்பா…! அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

இவை தவிர, தண்ணீர் விளையாட்டுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. ஒரு நாளில் இவற்றை விளையாடி முடிக்க முடியாது. மீண்டும் மீண்டும் வரத் தூண்டும் த்ரில் அனுபத்தைத் தருவதில் ஒரு குறையும் இருக்காது. கூட்டம் தான் நமக்குச் சவாலான ஒன்றாக இருக்கும். இரவு விளையாடிக் களைத்த நேரத்தில் வண்ண வண்ண வாண வேடிக்கைகள் கண்களைக் கவரும்.

கனடாவைப் பற்றி பேசும்போது எப்படிப் பனி பற்றிப் பேசாமல் இருக்க முடியும்! அதிகமான பனி இருக்கும் மலைப்பாங்கான பகுதிகளில் பனிசறுக்கு போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலம். ஸ்கியிங், ஐஸ் ஸ்கேட்டிங், ஸ்னோ போர்ட்டிங் என்பதெல்லாம் சாதாரண மக்களுக்கானது. சரியாகச் சொன்னால் அசாதாரணக் குளிரைத் தாங்கக்கூடிய சாதாரண மக்களுக்கு.

இவை தவிர, ஹஸ்கி நாய்கள், குதிரைகள் இழுக்கும் கயிற்றைப் பிடித்தபடி பனியில் சறுக்கிச் செல்லும் விளையாட்டு, பட்டம் விடுதல், ஐஸ் ரேஸ், பனிமலையேற்றம், உறைந்திருக்கும் பனிக்குக் கீழே மீன் பிடிப்பது போன்ற சுவாரசியமான விளையாட்டுகளையும் விளையாடி களிக்கலாம்!

படைப்பாளர்:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக இரண்டரை வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாகத் தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version