Site icon Her Stories

பொக்கிஷம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், மயிலாடிப் புதூர் ஊரில் தற்போது ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் இருக்கும் நாராயண சுவாமி திரு நிழல்தாங்கலின் வரலாறு:

‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ சகோதரர் என்னிடம் கொடுத்த மூன்று காகிதங்கள் ஓர் ஓலைச்சுவடியின் நகல் போல் உள்ளன. அவற்றின் புகைப்படங்களைக் கீழே தருவதோடு, அக்காகிதங்களில் இருக்கும் தர்மசீடரின் வரலாற்றையும் தர விரும்புகிறேன்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி தாலுகா, கேழையாபுரம் கிராமத்தின் வட்டக்குளம் பண்ணையாரின் பெயர் சிவனாண்டி. திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பொய்த்து போகவே, வறுமையில் வாடிய சிவனாண்டியின் தந்தை இறந்தார். வறுமையிலிருந்து தப்பிக்க, தன் தாயார், மூன்று சகோதரிகள், மற்றும் தனக்கு மந்திர தந்திர வித்தைகளைக் கற்றுக் கொடுத்த தனது உபாத்தியாயர், உபாத்தியாயரின் மனைவி ஆகியோருடன் பிழைப்புத் தேடி மயிலாடி வந்து சேர்ந்தார் சிவனாண்டி.

பிழைப்புக்காக  மலைகளில் சென்று விறகு வெட்டி சுசீந்திரம் வரையுள்ள ஊர்களில் விற்று வந்தார். சுமட்டுக்கு இரண்டு பணம் கிடைக்கும். அவ்வாறு சம்பாதித்த பணத்தில் முக்காற்பாகத்தை தாயிடம் கொடுத்த சிவனாண்டி, முக்காற்பாகத்தை தன் உபாத்தியாயரிடம் கொடுப்பார். நாளைக்கு அரைப்பணம் என்று சிவனாண்டி சேமித்த பணத்தில், மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு வடலிவிளையில் இருந்து ஒரு பெண்ணை சிவனாண்டி மணந்து கொண்டார். சில காலத்தில் சிவனாண்டியின் தாயார் இறந்து போனார். அதன் பிறகு, விறகு வெட்டும் தொழில் செய்தே பத்தொன்பது ஏக்கர் நிலம் வாங்கினார் என்பது சற்று நெருடலாக உள்ளது. சிவனாண்டி மயிலாடி ஊரின் நாட்டாண்மை வைத்திய புராண சம்பன்னராகவும் இருந்ததால், அதன் மூலம் கிடைத்த வருவாயில் பத்தொன்பது ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கலாம்.

அப்போது நவாப் ஆங்கிலேயர்களின் ஏவலர்களாக வரி வசூல் செய்து வந்த காலமாகும். அப்போது, உபாத்தியாயரும் அவரது மனைவியும் இறந்தனர். சில காலத்தில் சிவனாண்டியின் மனைவியும் இறந்து போனார். அக்காலத்தில் குறவர்கள், ஊர் மக்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்களாகவும், குறி சொல்பவர்களாகவும் இருந்ததால் வீடுகள் தோறும் குறுணி நெல் வாங்கிக் கொள்ளும் உரிமையை அரசு குறவர்களுக்கு அளித்திருந்தது. சிவனாண்டியின் சொல் கேட்ட ஊர் மக்கள் குறவர்களுக்கு நெல் கொடுக்க மறுத்து விட்டனர். இது முழு முற்றிலும் தொழில் போட்டியாகவேத் தெரிகிறது. சிவனாண்டியும் வைத்தியம் பார்ப்பவர் அல்லவா?

இறுதியாக குறவர்கள் நாட்டாண்மையிடம் புகார் செய்தனர். நாட்டாண்மைக்காரர், ‘கடலில் இருக்கும் பாசு பவளங்களைக் கொண்டு வந்தால் மானியத்தை நானே வாங்கித் தருவேன், அப்படி கொண்டு வராமல் போனால் நாட்டில் இறங்கமாட்டோம் என்று கங்கையில் சத்தியம் செய்து கொடுங்கள்’ என்று சொன்னார். குறவர்களால் கடலில் இறங்க முடியாததால், நாட்டுக்குள் வரமாட்டோம் என்று சத்தியம் செய்துவிட்டு காட்டுக்குச் சென்று விட்டனர்.

ஆக, குறவர்களை விரட்டிவிட்டு மயிலாடியின் நட்டாண்மை வைத்தியராகிவிட்டார் சிவனாண்டி. ஊர் மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்நிலையில் சிவனாண்டி தென் தாமரைக்குளத்தில் இருந்து ஒரு பெண்ணை,  இரண்டாவதாக மணந்து கொண்டார். சிவனாண்டியின் மனைவிமார்களின் பெயர் என்னிடம் இருக்கும் நகலில் குறிப்பிடப்படவில்லை. பெண்களின் அடையாளம் தேவையில்லை என்று நினைத்துவிட்டார் போலும் எழுதியவர்.  கல்யாணம் முடிந்து பதினாறாவது நாள், பதினாறு விசேஷம்  கழிக்க, மணமக்கள் மணப்பெண் வீட்டுக்கு செல்வது, தென்மாவட்டத்து மக்களின் வழக்கம். அவ்வாறு சிவனாண்டியும் அவரது இரண்டாவது மனைவியுடம் மாமியார் வீட்டுக்கு விருந்துண்ண சென்றார். அப்போது பெண் வீட்டாருக்கு சொந்தமான ஓர் இடத்தில்  நாட்டார் தெய்வக்கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலை அகற்றி விட்டு அந்த நிலத்தை பயன்படுத்த எல்லோரும் பயந்த போது, சிவனாண்டி அந்த தெய்வத்தின் சிலையையும் வழிபாட்டு பொருள்களையும் அகற்றி விட்டு அந்த நிலத்தில் தங்கினார். அன்று இரவில் நாட்டார் தெய்வத்தை விரட்டுவதாகச் சொல்லி 48 நாள்கள் (ஒரு மண்டலம்) தவமிருக்கத் தொடங்கினார்.

38வது நாள் அன்று பூவண்டர் தோப்பில் தவமிருக்கும் வைகுண்டர் நாட்டார் தெய்வங்களை அழித்து விட்டதாகவும், நாட்டார் தெய்வ வழிபாடுகளை ஒழித்து விட்டதாகவும், ஒருவர் சிவனாண்டிக்கு சொன்னார். தன்னைப் போலவே நாட்டார் தெய்வ வழிபாட்டை அழிப்பதை லட்சியமாகக் கொண்ட வைகுண்டரைக் காண விரும்பிய சிவனாண்டி, வைகுண்டரை நேரில் சந்தித்தார். வைகுண்டருடன் சிவனாண்டி வாக்குவாதம் செய்தார். பின்னர் அய்யாவழி இயக்கத்தில் சிவனாண்டி இணைந்தார். சிவனாண்டி என்ற அவரது பெயர், வைகுண்டரால் தர்ம சீடர் என்று மாற்றப்பட்டது.

தர்ம சீடரின் வரவுக்குப் பிறகே அய்யாவழி இயக்கத்தில், வைகுண்டரைத் தேடி வருகின்ற மக்களுக்கு நாமம் கொடுக்கும் வழக்கம் உருவானதாக,  இக்காகிதம் குறிப்பிடுகின்றது. ஒருவர் நாமத்தைக் கொண்டு வந்து வைகுண்டரை சந்தித்தார். அவருக்கு ‘நாமச் சோட்டை’ என்று வைகுண்டர் பெயர் வைத்தார் என்றும் இக்காகிதம் சொல்கிறது.

தர்மசீடருக்கு குடிசை கட்ட வைகுண்டர்  கால் நாட்டிக் கொடுத்தார். அதன் பிறகே வைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டு சிங்காரத்தோப்பு என்னுமிடத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றே முக்கால் மாதங்கள் வைகுண்டர் சிறையில் இருந்த போது, கஸ்பாவின் (கோட்டையின்) அருகில் தர்மசீடரும் இன்னும் சில அன்பர்களும் இருந்தார்கள். இத்தகவலை நாம் முந்தைய அத்தியாயம் 16ல் பார்த்தோம். வைகுண்டரின் வழக்கு விசாரணையில், வைகுண்டர் மன்னிப்புக் கடிதத்தைக் கிழித்து வீசிய போது, ஒரு கூட்டத்து மக்கள் கோட்டைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகப் பார்த்தோம். அத்தகவலுக்கு இதை மேலும் ஒரு சாட்சியாகக் கொள்ளலாம். அந்த போராளிக் கூட்டத்தில் தர்மசீடரும் இருந்தார் என்ற கூடுதல் தகவலை இதன் மூலம் பெறுகிறோம்.

வைகுண்டர் விடுதலை ஆன பிறகும், தர்ம சீடர் அவருடன் இருந்திருக்கிறார். தர்மசீடரின் இரண்டாவது பெயர் தெரியாத மனைவி, ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொடுத்து விட்டு இறந்து விட்டாள்.  அக்குழந்தைக்கு வைகுண்டர் ‘தவம் பெற்றாள்’ என்று பெயர் சூட்டினார்.

அதன் பிறகு வைகுண்டர் தர்ம சீடருக்கு ஒரு பெண்ணை, மூன்றாவதாக மணமுடித்து வைத்தார். அந்த பெண்ணின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அவளது அடையாளம் தர்மசீடரின் ‘மூன்றாவது மனைவி’ என்பது மட்டுமே. தர்ம சீடர் தன் குடும்பத்துடன் துவையல் தவசில் பங்கெடுத்தார்.

இகனைத் திருமண நிகழ்வின்போது, தர்ம சீடரிடம், வைகுண்டர் அம்மைமார்களை கூவி அழைக்கும்படி சொன்னார். தர்ம சீடர் தெருத்தெருவாகச் சென்று கூவி அழைத்தார். பெண்கள் ஆராசனையாகி சாமியாடி வந்தனர். அப்படி சாமியாடிய பெண்ணொருத்தியிடம் தர்ம சீடரை மூத்த மகன் என்று சொல்லிக் கொடுத்தார் வைகுண்டர். இன்னும் மூன்று பெண்களிடம் மூன்று பேரை ‘மகன்’கள் என்று சொல்லிக் கொடுத்து அவர்களையும் தன் சீடர்களாக்கிக் கொண்டார். 

தர்ம சீடரின் மூன்றாவது மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தையின் பெயர் ‘பொதுக்குட்டி’.

அதாவது வைகுண்டரின் மகனின் பெயரும் பொதுக்குட்டி, தர்ம சீடரின் மகனின் பெயரும் பொதுக்குட்டி.

கடம்பன் குளத்தைச் சேர்ந்த பொதுப்பண்டாரம் என்பவர் துவையல் தவசில் கலந்து கொண்டார் என்பதை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். அந்த பொதுப்பண்டாரத்தின் மகள் ஆதிலெட்சுமிக்கும், தர்மசீடரின் மகன் பொதுக்குட்டிக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். அவ்வாறே அந்த பொதுப்பண்டாரத்தின் மகன் நாகமணிக்கும், தர்ம சீடரின் மகள் தவம்பெற்றாளுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.1*

வைகுண்டர் மரணிக்கும் வரை, தர்மசீடர் வைகுண்டருடன் பயணித்தார். வைகுண்டர் இறந்த பிறகு அவரது உடலை அடக்கம் செய்து அதன் மேல் அய்யா வழிபாட்டுத்தலம்(சுவாமி தோப்பு பதி) கட்டப்பட்டது. அய்யா வைகுண்டரின் உடலை அடக்கம் செய்த நிகழ்வை அய்யாவின் திருமேனிக்கூட்டைப் பொதிந்து மணி மண்டபம் கட்டினார்கள் என்றுதான் அய்யாவழியினர் கூறுவர்.  அந்தப் பணியிலும் தர்ம சீடரின் பங்கு உண்டு. கொல்லம் 1045ஆம் ஆண்டு (பொ ஆ பி 1869) பூவண்டர் தோப்பில் கொடி மரம் நாட்டிய போது, அந்நிகழ்விலும் தர்மசீடர் பங்கு கொண்டார்.

சரி, தர்ம சீடரின் வரலாற்றுக்கும் மயிலாடிப் புதூரின் நிழல் தாங்கலின் வரலாற்றுக்கும் என்ன சம்மந்தம்? மயிலாடிப் புதூரில் பிறந்து வளர்ந்த வயதான பெண் தகவலாளர் தரும் வாக்குமூலம் இதோ-

அப்டியே வழி வழியா வந்தது. வரம்பெத்தா வழி, வரம்பெத்தாளுக்கு சாமிதோப்பு. சாமிதோப்புலருந்துதா இங்க கட்டிக் குடுத்துருந்து. அய்யாக்கி, சாமிதோப்பு அய்யாக்கி பணிவிடை செய்தால்லியா? ஒரு பொம்பள… பணிவிட செய்த பொம்பளய… அத இங்க கட்டிக் குடுத்துருந்து!

நான்: மயிலாடியில?

வயதான் பெண்: மயிலாடில. அவிய சீசர் வழி! (சீசர் என்பது தர்மசீடரைக் குறிக்கும்) இங்க வந்து… திருமாலுக்க தாத்தாக்க அப்பான்னியும் தெரில, தாத்தான்னியும் தெரில. திருமாலுக்க தாத்தா… திருமாலுக்க தாத்தான்னு வைப்போம்.

நான்: திருமாலுக்க முன்னோர்கள் யாரோ

வயதான பெண்: ஆமா. அவிய அஞ்சாறு பிள்ளையுங்குட்டியுமா இருந்தால, அதுல ஒரு ஆளு, திருமாலுக்க தாத்தா, நமக்கு ஒரு அய்யா கோயிலு இருக்கணும்ன்னு சொல்லி, ஒரு சின்ன… கொஞ்சோல ஓலை நாட்டி அதுஉள்ளுக்கு அய்யாவ வச்சி கும்புட்டு. அவருக்கு போடுகதுக்கு ஒண்ணுங்கெடையாது. வச்சி கும்புட்டு இருந்தால, இவியளுக்கு மாறி ஒண்ணுஞ்செய்யதுல்ல யாலல்ல. மாறி ஊருக்கயும் ரெண்டு மூணு வூடுவ வந்துருக்கும் போலுக்கு. முந்தி கொஞ்சோலதா வூடு...

நான்: அப்படி அவங்க நிழல் தாங்கல் வச்சாங்கல்லா, அப்போ வந்து… வரம் பெற்றாளுக்க குடும்பமும் இங்கதான (மயிலாடியில்) இருந்தாவ?

வயதான பெண்: இங்கதா இருந்து, இங்கதா இருந்து. வரம்பெத்தாளுக்க குடும்பம் இங்க இருந்தால, வரம்பெத்தாளுக்க குடும்பத்துல ஒரு ஆளு இருக்குல்லியா,.. அந்த ஆளு வந்து திருமாலுக்க தாத்தாக்கிட்ட,.. நம்ம அய்யா வச்சுருக்குல்லியா? அய்யா வச்சதுனால நம்ம எல்லாரும் சேந்து ஆளுக்கு ரெண்டணா, நாலு காசு குடுத்து பூவுந்தண்ணியும் போட்டுன்னு அப்படி கொஞ்ச நாள் நடத்திட்டு, வரம்பெத்தா குடும்பமும் சேந்து, நீங்க ஒத்தைக்கு நடத்தாண்டாம். நீங்க ஊருக்கு தந்துருங்க, நம்ம எல்லாருஞ்சேந்து நடத்துவோம். அய்யாவ பெரிசாக்கிர்லாம்ன்னு  சொன்ன ஒடனே, சரின்னுஎல்லாரு ஒத்துக்கிட்டாவ. ஒத்துக்கிட்டு ஒண்ணா வச்சி வரி போட்டு, நாலு காசு, எட்டு காசு, ஒரணா, ரெண்டணா அப்டின்னு குடுத்து, அத எல்லாத்துக்கும் சமம்னி ஊருக்கே எழுதி வச்சாச்சி. எழுதி குடுத்துட்டாவ. ருவா ஒண்ணும் வாங்கேல. சும்மா அப்டியே குடுத்துட்டாவ.

அப்போ உள்ள ஆள்களும் கொஞ்சொ மன தாராளம்லாமா… இப்டி இருந்திருந்து சனப்பெருக்கம் கூடி கூடி கொஞ்சொ கூடுவல் வந்துட்டு. கூடுவல் வந்தால, இன்னாருக்க, திருமாலுக்க தாத்தா வழியேதா சொல்லுவாவ. அதுக்கு திரி குடுத்தது, வரம்பெத்தா குடும்பம். அப்டி இருந்து இருந்து அதுக்கு கீழ உள்ள தலமொற வர வர வர அவிய எங்க கோயிலுங்க… இவிய எங்க கோயிலுங்க… அப்டீ… கொஞ்ச காலம் அப்டியே இருந்து போலுக்கு!

என்றவர்  மேலே குறிப்பிட இரண்டு குடும்பங்களைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று தனித்தனியே கோயில்கள் வைத்திருப்பதாகவும் சொன்னார். பிறகு கேட்டார்,

ஆறாந்திருவிழா பிச்சைக்கி இங்க வருவாவளா?”

(சுவாமி தோப்புப் பதியிலிருந்து திருவிழாவின்போது, பண்டாரங்கள் பல ஊர்களுக்கும் தர்மம் வாங்கச் செல்வது வழக்கம். அதைத்தான் அந்த மூதாட்டி கேட்டார்)

நான்: எப்பமாது வருவாவ. இந்த வீடு வச்ச புதுசுல ஒரு தடவ வந்தாவ. பொறவு வந்த நெனவில்ல.

வயதான பெண்: வந்தால… ஊர் ஊரெல்லாம்… ஏழு ஊரு என்னதோ தர்மம் எடுக்கணுமாம். எடுத்துட்டு ராசா  வூட்டுக்குத்தா வருவாவ. கடைசில,..

(ராஜா என்பவர் தர்மசீடர் ஜெயச்சந்திரனின் மூத்த சகோதரர்)

நான்: சாப்பிடுவாவளே! பந்தி எல்லாம் நடக்குமே!

வயதான மூதாட்டி: சாப்ட்டுட்டு, அப்டியே… யாமுன்னா தருமசீடர் வூடுல்லா…

நான்: ராஜா மூத்தவருங்கதாலயா?

வயதான பெண்: ஆமா, அப்டி  நடத்துனாவ! இப்பமும் அப்டியேதா நடக்கு.. இப்ப, கோயிலு (நிழல்தாங்கல்) யாரு பேருக்குமில்ல ஊரு பேருக்கு இருக்கு..

நான்: வைக்கும் போது ஃபர்ஸ்ட் அய்யா வழிபாட்டுத்தலத்துக்கு ஒரு பேரு வச்சாங்கல்லா… அது எப்டி வச்சாங்க? நிழல்தாங்கல்னு வச்சாங்களா? திருக்கோவில்னு வச்சாங்களா?

வயதான பெண்: நிழல்தாங்கல். இப்போ பத்து வருசந்தா திருக்கோயில், அந்த எழுத்த அழிச்சிக்கிட்டு மேல இப்டி எழுதிட்டானுவ.

நான்: எப்டி?

வயதான பெண்: “திருக்கோயில்னு. அதுக்குதா ஒரு மூச்சு என்னா சண்டை” என்றவர் சற்றே பயந்தவராக, “இதையும் பேசயா செய்யணும்” என்றார் மெதுவான பயந்த குரலில். நான் “ஒண்ணுமில்ல, நா யார்கிட்டயும் இத குடுக்கப் போறதில்ல. நா இதுல இருக்குற தகவல்கள நாந்தெரிஞ்சுகிட்டதாக எழுதுவேன். அவ்ளோதா”, என்று அவரை சமாதானம் செய்தேன். அவரோ “நல்லத எழுது” என்றார் உறுதியான குரலில்.

நீங்க உள்ள நடந்தத சொல்லுங்கஎன்றேன் நான்.

இதுதா நடந்தது

நான்: நீங்க, அய்யா வழிபாட்டுத்தலம் இருக்கா நம்ம ஊர்ல? இதுக்கு ஃபர்ஸ்ட் என்ன பேரு வச்சாங்கன்னு சொல்லுங்க

வயதான பெண்: அய்யா நிணல்தாங்கல்

நான்: நாராயண சாமி நிழல்தாங்கல்ன்னியா வச்சிருந்தது?

வயதான பெண்: அய்யா… அய்யா  நிணல்தாங்கல்

மேலே நாமறிந்த பேட்டியின் வாயிலாக நமக்குக் கிடைக்கும் முக்கியத் தகவல் சிவனாண்டி என்னும் தர்மசீடரின் வம்சாவழியில் பிறந்த பெண் வாரிசான வரம்பெற்றாள் என்னும் பெண் மயிலாடியில் திருமணம் செய்து வந்து வாழ்ந்திருக்கிறாள். அவளுடைய வம்சாவழி வாரிசுகள் இன்னும் மயிலாடிப் புதூரில் வசிக்கிறார்கள்.

சகோதரர் ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ அவர்களும், அவருடைய சகோதரர்களும் வரம்பெற்றாளின் வம்சாவழி வாரிசுகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் மயிலாடிப்புதூரில் இருக்கும் நாராயணசுவாமி நிழல்தாங்கலை நிறுவியது தர்மசீடரின் வம்சாவழியினரல்ல.

மயிலாடியில் வசித்த, வறுமையில் வாடிய, சாமானிய மனிதர் ஒருவர் சிறிய ஓலைக்குடிசையாக அந்த நிழல்தாங்கலை நிறுவியுள்ளார். நிழல்தாங்கலை நிர்வகிக்க, அவரிடம்  போதிய பணவசதி இல்லாத போது வரம்பெற்றாளின் வம்சாவழியினர் அந்த சாமானியருக்கு  உதவியிருக்கிறார்கள். அந்த சாமானியரின் வம்சாவழியினர் இன்றும் நிழல்தாங்கலில் பணிவிடை செய்பவர்களாக இருக்கிறார்கள். தற்சமயம் பணிவிடை செய்பவரின் பெயர்தான் மேலே கண்ட பேட்டியில் வயதான பெண் சொன்ன ‘திருமால்’ என்பவர்.

அதோடு, மயிலாடிப்புதூர் அய்யா வழிபாட்டுத்தலம் உருவக்கப்பட்டபோது அதை மக்கள் அழைத்த பெயர் ‘அய்யா நிழல்தாங்கல்’ என்பதே. காலப்போக்கில்தான் ‘ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கல்’ என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. மயிலாடிப்புதூரின் ‘அய்யா நிழல்தாங்கல்’ நிழல்தாங்கல் என்னும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை இழந்து அகதியாக  நிற்பது, அன்புக்கொடி மக்களின் மனதைப் புண்படுத்தாமல் போனதுதான் வேடிக்கை.

முற்றும்

தரவுகள்

  1. அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட்,2011, பக்கம் எண்:42.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

                       

Exit mobile version