Site icon Her Stories

இகனைத்திருமணமும் தேவரடியார் முறையும்

“அய்யா வைகுண்டர் சுயவாழ்வில் பேராசை, இச்சை, மற்றும் கொடூர குணம் கொண்டவர். அவருக்கு குறைந்தது ஆறு மனைவிகள் இருந்தனர். அவர் பக்தர்களிடம் அதிகமான காணிக்கை வசூல் செய்து, இறப்பதற்கு முன்பு பெரும் செல்வத்தை சேர்த்திருந்தார்”, என்று சாமுவேல் மட்டீர் குறிப்பிடுகிறார்.

In personal character muttukutti was avaricious lustful and cruel. He had no less than six wives demanded exorbitant fees from his voteries and before his death had by various means amassed a large fortune. – Mateer. 1*

சாமுவேல் மட்டீர், தான் நேரில் கண்ட பல நிகழ்ச்சிகளை தனது புத்தகங்களில் சமரசமின்றி பதிவு செய்துள்ளார். அவையெல்லாம் மறுப்பின்றி ஏற்கத்தக்கது. ஆனால் வைகுண்டர் பற்றிய மேற்சொன்ன தகவல் அவர் நேரில் பார்த்து எழுதியது அல்ல.

சாமுவேல் மட்டீர் முதன் முதலில் திருவிதாங்கூரின் பாறசாலைக்கு வந்தது 1859ஆம் ஆண்டு. அதாவது வைகுண்டர் இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாமுவேல் மட்டீர் திருவிதாங்கூருக்கு வந்திருக்கிறார்.

எனில் அவர் வைகுண்டரோடு சமகாலத்தில் இருந்த கிறிஸ்தவ மதபோதகர்களின் பதிவுகளை படித்ததைக் கொண்டும், தெரிந்தவர்களிடம் கேட்டறிந்த தகவல்களைக் கொண்டும்தான் வைகுண்டர் குறித்து எழுதியிருக்கவேண்டும்.

அய்யா வைகுண்டர் காணிக்கையாக எதையும் பெறவில்லை என்பதையும், வைகுண்டர் காலத்தில், சீடர்களிடம் விளக்கெண்ணெய்க்காசு என்ற பெயரில் பெறப்பட்ட பணம், காய்கறிகள், தானியங்கள் முதலியவை மக்களுக்கே செலவு செய்யப்பட்டன என்பது பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் தெளிவுறப் பார்த்தோம். அய்யா வைகுண்டர் தவமிருப்பதற்காக பூவண்டர் வைகுண்டருக்குக் கொடுத்த பூவண்டர் தோப்பும், அந்த நிலத்தின் வருவாயும் மட்டுமே அய்யா வைகுண்டர் இறப்பதற்கு முன்பு அவர் சேர்த்ததாகக் கூறப்படும் சொத்து.

‘பூவண்டர்’ என்பது நாயர் சாதியின் ஓர் உட்பிரிவைக் குறிக்கும். நாயர் சாதியில் ‘இடைச்சேரி நாயர்’ என்ற பெயரோடு, ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்யும் சாதியினர் பூவண்டர் மற்றும் கங்காயன் என்னும் இரு பிரிவினராக உள்ளனர்.2* ஆக, வைகுண்டருக்கு பூவண்டர் தோப்பினை தானமாக வழங்கியவரின் பெயர் தெரியவில்லை. அவரது சாதியைக் குறிப்பிட்டே அவர் அடையாளப்படுத்தப்படுகிறார். அக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த பெரும்பான்மையான மக்கள் வாழும் பகுதியில் வேறு சாதியைச் சார்ந்த குடும்பம் ஒற்றையாக வசித்தால், அக்குடும்பத்தினரை, மக்கள் அவர்களது சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பது இயல்பான ஒன்றாக இருந்தது. அவ்வாறே பூவண்டரும் அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

பூவண்டர் தோப்பு என்ற அவ்விடத்தின் பெயர் ‘சுவாமி தோப்பு’ என்று மாற்றப்பட்டதற்கும் இந்த சாதி அடையாளமே காரணமாக இருக்கலாம்.

நாயர் சாதியின் உட்பிரிவு சாதியை சார்ந்த ஒரு நபருடன் வைகுண்டர் நட்பு வைத்திருந்தார் என்ற செய்தி, கவனிக்க வேண்டிய விஷயம். பூவண்டர் திருவிதாங்கூர் அரண்மனையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்துள்ளார் என்ற செய்தியும், வைகுண்டர் கைது செய்யப்பட்டபோது வைகுண்டருக்காக அரசரிடம் பரிந்துபேசினார் என்ற செய்தியும் அகிலத்திரட்டு அம்மானையில் இருக்கிறது. ஆனால் இந்த பூவண்டர் வைகுண்டருக்கு நிலம் வழங்கியது பற்றி அகிலத்திரட்டு அம்மானையில் எந்த குறிப்பும் இல்லை. சுவாமி தோப்பினை தற்போது நிர்வகித்து வருபவர்கள் பூவண்டர் வைகுண்டருக்கு பூவண்டர் தோப்பினை தானமாக வழங்கிய வரலாற்று உண்மையை மறுத்து வருவதும் ‘கௌரவ’ மற்றும் ‘சாதி’ அரசியலின் ஓர் அங்கம்தான்.

“ஆயர் குடியில் அவதரித்த கோமானில்

தூய ஒரு கோனும் துணிந்து அங்கு எழுந்திருந்து

பக்தியுள்ள நாராணரை பாராவது இளக்க

உத்தரித்துக் கோனும் உலகம் அதை ஆளுகின்ற

மன்னவன் முன்பில் வந்து நின்று அங்கே ஏது உரைப்பான்”

“அப்போது தாசன் அவன் மனதுதான் இளகி

இப்போது இவனை யாமனுப்பி விட்டிடுவோம்

விட்டால் அவனும் மேலும் இருக்கும் முறை

கட்டாகச் சொல்லி கைச்சீட்டு எழுதி வைத்து

போகச் சொல்லென்று போகண்டனார்க்கு உரைக்க”

இதில் கோன் என்றும் போகண்டனார் என்றும் குறிப்பிடப்படுபவர் பூவண்டர் ஆவார் (மேலும் விவரங்கள் அத்தியாயம் 15இல் உள்ளன).

இப்போது ‘வைகுண்டருக்கு குறைந்தது ஆறு மனைவிகள் இருந்தனர்’ என்ற சாமுவேல் மட்டீரின் கூற்றை ஆய்வோம்.

வைகுண்டர் இகனைத்திருமணங்கள் நிகழ்த்திய காலம்

‘அய்யா வைகுண்டர் சுயவாழ்வில் பேராசை, இச்சை, மற்றும் கொடூர குணம் கொண்டவர். அவருக்கு குறைந்தது ஆறு மனைவிகள் இருந்தனர்’, என்று சாமுவேல் மட்டீர் குறிப்பிடுகிறார் (In personal character muttukutti was avaricious, lustful and cruel. He had no less than six wives – Samuel Matteer).

அய்யா வைகுண்டர் சில இகனைத் திருமணங்கள் செய்துகொண்டதாக அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறது.4*

இகனைத் திருமணம் என்பது என்ன? இகனைத் திருமணம் செய்து கொண்ட பெண்களின் குழந்தைகள் அய்யா வைகுண்டரின் ரத்தவழி வாரிசுகளா? போன்ற சந்தேகங்களும் சர்ச்சைகளும் வைகுண்டரின் வரலாற்றோடு சேர்ந்து, காலத்தின் வழிநெடுக பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அய்யா வைகுண்டர் ‘துவையல் தவசு’ முடித்தபிறகு சில பெண்களை இகனைத் திருமணம் செய்து கொண்டதாக அகிலத்திரட்டு கூறுகின்றது. அப்பெண்களில் சிலருக்கு வைகுண்டர் குழந்தை பாக்கியம் கொடுத்ததாகவும் அகிலத்திரட்டில் குறிப்பு இருக்கின்றது. வைகுண்டர், துவையல் தவசு முடித்த கையோடு இகனைத் திருமணங்களை நிகழ்த்திக் காட்டவில்லை.

அய்யா வைகுண்டர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலம் 1837 நவம்பர் முதல் 1838 மார்ச் மாதம்வரை ஆகும். 1839 மார்ச் மாதம் வரை துவையல் தவசு நிகழ்ந்தது. 1840ஆம் ஆண்டு அகிலத்திரட்டு அம்மானை எழுதத் தொடங்கப்பட்டது. 1841, 1842 ஆண்டுகளில் அய்யா வைகுண்டர் திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கங்கு கிராமங்களில் வாழ்ந்த மக்களை நாட்டு தெய்வ பலி வழிபாட்டிலிருந்து திசைதிருப்பி, பல ஊர்களில் நிழல் தாங்கல்களையும் பதிகளையும் நிறுவியுள்ளார். ஆனால் வைகுண்டரின் திருநெல்வேலிப் பயணம் அகிலத்திரட்டு அம்மானையில் குறிப்பிடப்படவில்லை.

ஜார்ஜ் பெட்டிட் திருநெல்வேலியில் கிறிஸ்தவ போதகராகப் பணியாற்றியவர். வைகுண்டர் திருநெல்வேலி மாவட்டத்து கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அய்யாவழி இயக்கத்தை பரப்பியபோது திருநெல்வேலி மாவட்டத்து சுற்றுப்புறங்களில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிக்கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவேதான் வைகுண்டர் திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 1842ஆம் ஆண்டில், ஜார்ஜ் பெட்டிட் வைகுண்டரை விமர்சித்து எழுதியிருக்கிறார்5*என்பதை இவ்விடத்தில் கவனம் கொள்ளவேண்டும். ஜார்ஜ் பெட்டிட்டின் அறிக்கை வைகுண்டர் திருநெல்வேலி மாவட்டத்து கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்ததை உறுதி செய்கிறது.

திருநெல்வேலி கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்யும் போதுதான் (தன்னுடைய இயற்பெயருடன்) அர்ச்சுனன் சீடர் அய்யாவழி இயக்கத்தில் இணைந்திருக்கிறார்.6* வைகுண்டரின் இகனைத்திருமணங்களில் வைகுண்டரின் ஐந்து சீடர்களில் ஒருவரான அர்ச்சுனன் சீடரும் கலந்து கொண்டார் எனில் வைகுண்டர் இகனைத்திருமணங்களை 1842ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நிகழ்த்தியிருக்கவேண்டும்.

1842ஆம் ஆண்டில் வைகுண்டரின் வயது 33. அதாவது வைகுண்டரின் 33வது வயதுக்குப் பிறகு இகனைத் திருமணச் சடங்குகள் நிகழ்ந்திருக்கின்றன.

குறிப்பு: அர்ச்சுனன் சீடர், வீமன் சீடர் மற்றும் நகுலன் சீடர் ஆகியவர்களின் இயற்பெயர் சரியாகத் தெரியவில்லை. இறைவனின் வைகுண்ட அவதாரம் என்ற புத்தகத்தில் ஒரு இயற்பெயரும் அய்யா வைகுண்டரின் தென்பாண்டி நாட்டு வருகை புத்தகத்தில் வேறு பெயர்களும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இறைவனின் வைகுண்ட அவதாரம் என்ற புத்தகம் அர்ச்சுனன் சீடரின் இயற்பெயர் அழகப்பன் என்றும், அய்யா வைகுண்டரின் தென்பாண்டி நாட்டு வருகை என்ற புத்தகம் அர்ச்சுனன் சீடரின் இயற்பெயர் சிதம்பரம் என்றும் குறிப்பிடுகின்றது. எனவே அர்ச்சுனன் சீடரை அர்ச்சுனன் சீடர் என்றே குறிப்பிடுகிறேன்.)

இகனைத்திருமணமும் தேவரடியார் முறையா?

இகனைத் திருமணம் என்பது திருமணத்தை ஒரு நாடகம் போல் நடித்துக் காட்டுவதாகும். வைகுண்டர் சில பெண்களுடன் திருமண நிகழ்ச்சியை நடித்துக் காட்டிய சடங்கையே இகனைத் திருமணம் என்கிறார்கள். அய்யாவழியினர் வைகுண்டர் நேரடியாக சப்தகன்னியர்களை வரவைத்து மணமுடித்து சக்தியடைந்ததாக நம்புகிறார்கள். தற்காலத்தில் இதனை அய்யாவழி மக்கள் ஒரு சம்பிரதாயமாகக் கருதி திருக்கல்யாணம் நிகழ்த்துகிறார்கள்.

1842ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு கூட்டு வழிபாட்டின்போது, ஏழு சிறு பெண் குழந்தைகள், சாமியாடிக்கொண்டே வந்து தாங்கள்தான் சப்தகன்னியர் என்றார்கள். உடனே வைகுண்டரும் அருள் வந்தவராக ஆடிக்கொண்டு, தன்னைத் திருமால் என்று சொல்லிக்கொண்டு, அந்த பெண் குழந்தைகளுடன் திருமணங்களை நாடகமாக நடத்திக் காட்டினார். இதைத்தான் இகனைத் திருமணம் என்று சொல்கிறார்கள். இவ்வாறு இகனைத் திருமணம் செய்து கொண்டதால், அய்யா வைகுண்டருக்குள் சப்த கன்னியர்களின் சக்தியும் ஐக்கியமானதாக நம்பப்படுகின்றது.

வைகுண்டர் சப்தகன்னிகளையும், கன்னியாகுமரி பகவதியையும், மண்டைக்காட்டாளையும், வள்ளியையும், தேவயானையையும் நேரில் சந்தித்து புனிதத் திருமணம் செய்து பல சக்திகளை அடைந்ததாக சில அய்யாவழியினர் நம்பிக் கொண்டிருப்பது முற்றிலும் அவர்களின் கற்பனையே ஆகும். வைகுண்டர் தன்னைக் கடவுளாகக் சொல்லிக் கொண்டு, சாமியாடிய சிறு பெண் குழந்தைகளுடன் திருமண நாடகம் நடித்துக் காட்டினார் என்பதே உண்மை. அகிலத்திரட்டு அம்மானையும் அப்படித்தான் சொல்கிறது.

பெண்ணாண் வரைக்கும் பெருங்கிழவிதான் வரைக்கும்

கண்ணான மதலை கைக்குழந்தை முதலாய்

பாட்டுவித்தேசம் படிப்புவித்தேசம் முதல்

ஆட்டிவித்தேசம் ஆட்டி மிக வருத்தி

முன்னமைத்த பெண்ணையெல்லாம் மிகப்பார்த்து

சொன்ன முறை போல் சிணம் செய்யலாம் எனவே

இட்டார் ஒரு சூஷம் ஈசர் முதல் எல்லோரும்

மட்டாரும் சூஷம் வையகத்திலே ஆகி

சாதி பதினெட்டும் ஆராட்டு பார்த்தனரே

ஆதிச்சாதி தன்னிலே அமைப்பு போல் உள்ளவர்கள்

தான் இறைந்தாடி தண்மை மிகக் கூறி

வானிறைச் சோதி மயமாய்க் குதித்தனரே

இப்படியே சாணாரில் ஏற்ற பெண்ணாணு வரை

அப்படியே நன்றாய் ஆராதனையாகி

ஊருக்கூரே இருந்து உத்த நருட்களெல்லாம்

பாருகங்காணப் பண்பாகக் கொண்டாடி

உமை பார்வதி எனவும் உற்ற முத்தார் எனவும்

இமையோர் புகழும் லட்சுமி நானெனவும்

சப்த கன்னி மாதர் என்னும் தார்குழலாள் தோழியெனும்

பக்தியுள்ள நல்ல பரமேசொரியெனவும்

மண்டைக்காட்டாள் எனவும் மாது நல்லாள் தோழி என்னும்

பண்டையுள்ள ஈசொரியாள் பாக்கியவாட்டி என்னும்

வள்ளி தெய்வானை வாய்த்த பகவதி எனவும்

பூமடந்தை எனும் பெரிய பிராட்டி எனும்

பார்மடந்தை எனும் பத்திரகாளி எனும்

நாகக்கன்னி எனும் நல்ல தெய்வகன்னி எனும்

பாகை கைக்காட்டும் பைங்கிளிமார் நாங்களென்னும்

இப்படியே நல்ல ஏந்திழை மார் எல்லோரும்

அப்படியே நல்ல அவனி பெண்ணார் பேரில்

ஆராதனையாய் அங்கங்குதான் கூடி

சீராகக் கூடி சேர்ந்து வருவார் தினமே

ஆண்பிள்ளைகள் பேரில் ஆன சிவமால் எனவும்

நான் பிரமா என்றும் நல்ல அனுமன் என்றும்

காலன் என்னுமே மனு என்னும் கடிபிலக்கன் என்றும்

மாலவனின் மக்களென்னும் மாமுனிமார் நாங்களென்னும்

தேவரிசி எனவும் சிமிழ்க் கருட சேவகன் எனும்

தாவமுள்ள நல்ல சன்னாசிமார்கள் என்னும்

ஆராதனையாய் அவர்கள் மிக ஆடி

சீராகக் காண்டம் செப்பி மிகப் படிப்பார்‘ என்பது அகிலத்திரட்டு அம்மானையின் சாட்சியம்.

இந்த சாட்சியத்தின் படி, அய்யாவழி கூட்டு வழிபாட்டின்போது சாணார் சாதி ஆண்களும் பெண்களும் ஆராசனையாகி சாமியாடுவார்கள். பதினெட்டு சாதிகளிலும் ஆராட்டு பார்த்தாலும் சாணார்* சாதி பெண் சாமியாடிகளைத்தான் வைகுண்டர் இகனைத் திருமணங்களுக்கு தேர்வு செய்திருக்கிறார். இது சாதியம் நுழைவதற்கான ஓர் ஓட்டை. ஆண் தெய்வங்கள் ஆண்களின் மீதும் பெண் தெய்வங்கள் பெண்களின் மீதும் ஆராசனையாகி வந்தது என்ற அகிலத்திரட்டின் கூற்று நம்ப முடியாததாக இருக்கிறது. இவ்வாறாக அடிக்கடி ஆண்களும் பெண்களும் ஆராசனையாகி ஆடுவதை பார்த்த வைகுண்டர், ஆராசனையாகி சாமியாடுகின்ற பெண் குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் வேடமிட்டுத் திருமணம் செய்வதுபோல் நடித்துக் காட்டினார். கீழ்க்காணும் அகிலத்திரட்டின் வரிகள் அதற்கு சாட்சியம் செப்பும் –

சில நாள் அகமகிழ்ந்துதான் பார்த்து

செறிந்த குணநாதன் தெய்திக் கணக்கதிலே

இகனை நடத்த எண்ணமுற்று இருக்கைலே

உவமை பல சொல்லி உற்ற தெய்வ கன்னிமார்கள்

அனைவோரும் புகழும் அரன் கைலை வாழ்ந்ததுவும்

சுனையாடப் போனதுவும் தூயோன் நட்ததினதுவும்

பிள்ளைதனைப் பெற்றதுவும் பெரும் வனத்தில் சென்றதுவும்

வள்ளல் சிவனை வருந்தி தவம் புரிந்து

உலகில் மிகத் தோன்றும் உள்ள அர்த்த மானம் எல்லாம்

சிலை நுதலி கன்னி சொல்லி மிகப் படிப்பாள்

உமை மண்டைக்காட்டாள் உற்ற பகவதியாள்

இமையோர் புகழும் ஏற்ற குல பார்வதியும்

சீதை மடந்தை சேயிழைமாரெல்லாம்

மாதவனை நோக்கி வளங்கூறியே படிப்பார்

பாவிக்கலியன் பழி நீசன் தோன்றினதால்

மேவிக்கலியில் மிக மூழ்கி மாயமதால்

மாயக்கலியை வதைக்கும் அந்த நாளையிலே

தேசமதில் எங்களையும் திருக்கல்யாணம் முகித்து

எங்களுடைய நாயகனார் இங்கு வருவோம் எனவும்

எங்களையும் இங்கே இக்கோலமாய்

வரவே சொல்லியச்ச சாமி நீர் வந்தீரோ

மேற்சொன்ன அகிலத்திரட்டு வரிகள், ஆராசனையாகி சாமியாடிக் கொண்டிருக்கும் பெண்கள் வைகுண்டரைத் திருமாலாக நினைத்து, வைகுண்டரிடம் பேசுவதாக எழுதப்பட்டுள்ளது. அதாவது இவையனைத்தும் சாமியாடும் நபர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல் மட்டுமேயன்றி, தேவர்களும் தெய்வங்களும் நேரில் வரவில்லை என்பதையே நிறுவுகிறது.

இதனைத் தொடர்ந்து ‘வானத்து தேவர்களை வரத்தி, நீங்கள் நியாயமான முறைப்படி நடத்தவில்லை’, என்று சொல்லி திருமால் அவர்களுக்கு தண்டனை தந்துவிட்டு, கன்னியரை மணம் புரிந்தார் என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு அம்மானை. இவ்வாறாக தேவர்களிடம் உரையாடுவதும் சாமியாடும் மனிதர்களிடம் உரையாடுவதையே குறிக்கிறது.

அந்த அவதாரம் அதிகமுடன் நடத்தி

சந்தானமான சத்தி கன்னிமாரை இனி

மாமணங்கள் செய்து மாதர் ஏழு பேர்களுக்கும்

தாமதங்கள் இன்றி சந்ததிகள் தான் கொடுத்தார்.’7*

சப்தகன்னியரைக் கொண்டு சாமியாடிய, ஏழு சிறு பெண்களின் விபரம் பின்வருமாறு –

  1. திருநெல்வேலி மாவட்டம் கொட்டங்காடு என்ற ஊரைச் சார்ந்த சாத்திரத்தாள்’ – வயது 12
  2. கன்னியாகுமரி மாவட்டம் புன்னையடி என்ற ஊரைச் சார்ந்த ‘கமலக்கன்னி’ – வயது 5
  3. கன்னியாகுமரி மாவட்டம் கோட்டையடி என்ற ஊரைச் சார்ந்த யோகக்கன்னி வயது 7
  4. கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த மூலக்கன்னிவயது 5
  5. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சிதம்பரபுரம் என்ற ஊரைச் சார்ந்த கடும்சக்திவயது 7
  6. கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம், பிள்ளையார் விளை என்ற ஊரைச் சேர்ந்த தெய்வகன்னிவயது 7
  7. திருநெல்வேலி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி என்ற ஊரைச் சார்ந்த அறிமடவார்வயது 5

மேற்சொன்ன பெண் குழந்தைகளில் சாத்திரக்கன்னியைத் தவிர அனைவரும் பூப்பெய்தும் வயதை அடையாத குழந்தைகள் என்பதைக் கருத்தில் கொள்க.

மேற்சொன்ன பெண் குழந்தைகளைத் தவிர, பார்வதி என்ற பெண் கடவுளின் சக்தியை தன்னுள் ஐக்கியப்படுத்தும் நம்பிக்கையுடன் ஒரு பெண் குழந்தையை சிவ வேடமிட்டு அய்யா வைகுண்டர் இகனைத் திருமணம் செய்துள்ளார். இது போலவே லெட்சுமி என்னும் பெண் கடவுளின் சக்தியை தன்னுள் ஐக்கியப்படுத்தும் நம்பிக்கையுடன் நாராயணன் வேடமிட்டு ஒரு பெண் குழந்தையையும், சரஸ்வதி என்னும் பெண் கடவுளின் சக்தியை தன்னுள் ஐக்கியப்படுத்தும் நம்பிக்கையுடன், பிரம்மன் வேடமிட்டு, மண்டைக்காட்டாள் என்ற பெண் குழந்தையையும், வள்ளி, தெய்வானை ஆகிய பெண் கடவுள்களின் சக்தியை தன்னுள் ஐக்கியப்படுத்தும் நம்பிக்கையுடன், கந்த வேடமிட்டு, இரண்டு பெண் குழந்தைகளையும் அய்யா வைகுண்டர் இகனைத்திருமணம் செய்து கொண்டார்.8*

இறுதியாக பூமடந்தை என்ற பெண்ணை பூமியாக உருவகித்து, இகனைத்திருமணம் செய்து கொண்டார்.

வைகுண்டர் பரதேவதையை திருமணம் செய்யும் முன்பே பரதேவதைக்கு வேறு ஒரு நபருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்பதைப் பார்த்தோம். பரதேவதைக்கு மூன்று குழந்தைகள் இருந்ததாக நா. விவேகானந்தன் குறிப்பிடுகிறார். அம்மூன்று குழந்தைகளின் பெயர், வடிவம்மை, பால்பையன், பொதுக்குட்டி என்பது. இவர்களில் பொதுக்குட்டி வைகுண்டர் – பரதேவதை தம்பதியரின் மகன். இதில் வடிவம்மையை சூரங்குடியைச் சேர்ந்த அனந்தகுட்டி என்பவருக்கு மணமுடித்து வைத்தனர். அனந்தகுட்டியின் தந்தையின் உடன் பிறந்த சகோதரியே மேற்சொன்ன பூமடந்தை என்பவர். அதாவது வைகுண்டரின் சம்மந்தியின் தங்கை பூமடந்தை.9*

மேற்சொன்ன பெண் குழந்தைகளில் சாத்திரத்தாள் என்ற சாத்திரக்கன்னிக்கும், இலந்தைவிளையை சேர்ந்த சிறுமி ஒருத்திக்கும் வைகுண்டர் உயிருடன் இருக்கும்போதே குழந்தை பிறந்தது. சாத்திரக்கன்னிக்கு பிறந்த குழந்தையின் பெயர் சடையாண்டி மற்றும் இலந்தைவிளை சிறுமியின் குழந்தையின் பெயர் சின்னக்கண்ணு. இவ்விரு குழந்தைகளும் வைகுண்டரின் வாரிசுகள் என்று அய்யாவழியின் ஒருதரப்பினர் சொல்கிறார்கள். இரு குழந்தைகளின் வம்சாவழியினர்களையும் அய்யா வைகுண்டரின் ரத்தவழி உறவு என்று சொல்கிறார்கள். இதை நா.விவேகானந்தனும் ஒப்புக் கொள்கிறார்.10* இந்தக் கூற்றுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வோம்..

இகனைத் திருமண நாடக நிகழ்ச்சியின்போது, சாமியாடிய பெண்களுக்கு, தனது தலைமை சீடர்கள் முதலான ஆண் சீடர்களை வாரிசாகக் கொடுத்தார் என்று சொல்லும் நா. விவேகானந்தன்தான், இகனைத் திருமண நாடகத்தில் பங்கேற்ற பெண்களில் இரு பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் மட்டும் வைகுண்டரின் ரத்த வாரிசு என்கிறார். இது முரண்பாடான கூற்றாக இருக்கிறது. அத்துடன் இவர்கள் ஆண் சீடர்களுக்கும் பெண் சீடர்களின் ஆண் குழந்தைகளுக்கும் தான் வாரிசுரிமை கோருகிறார்கள். ஏனோ பெண்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது வேடிக்கை.

சகோதரர் ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ என்னிடம் மூன்று காகிதங்களைத் தந்தார். அது பழைய ஓலைச்சுவடி ஒன்றின் நகல்போல் தெரிகிறது. அந்தக் காகிதங்களில் வைகுண்டரின் சீடரான தர்மசீடரின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது. அந்தக் காகிதங்களை பொக்கிஷம் என்று சொன்னார் தர்மசீடர் ஜெயச்சந்திரன். அதில் தர்மசீடர் இறுதிவரை வைகுண்டருடன் வாழ்ந்த வரலாறு இருக்கிறது. அந்த காகிதத்தில் சாத்திரக்கன்னிக்கு சடையாண்டி பிறந்த செய்தியும் இருக்கிறது. சடையாண்டி பிறந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, வைகுண்டர் இறந்துவிட்டார் என்ற செய்தியும் அந்தக் காகிதத்தில் இருக்கிறது. அவ்வகையில் வைகுண்டர் உயிருடன் இருக்கும்போதே சடையாண்டி பிறந்தார் என்ற செய்தி உண்மையே!

இது குறித்து 82 வயதான பெண் தகவலாளர் ஒருவர், ‘அய்யா வைகுண்டர் பரதேவதை உட்பட எந்தவொரு பெண்ணுடனும் இல்லற வாழ்வு நடத்தவில்லை, எல்லா பெண்களுக்கும் மேஜிக்காக குழந்தை பிறந்தது’ என்றார். இதுதான் அய்யாவழி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.11*

சாத்திரத்தாள், இலந்தைவிளை சிறுமி ஆகிய இருவரையும் தவிர இகனைத் திருமணச் சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்ட மற்ற பெண்களுக்கு வைகுண்டர் இறந்த பிறகுதான் குழந்தை பிறந்திருக்கிறது. எனில் அந்த பெண்கள் தங்களுக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள் என்றுதானே பொருள்?

பூப்பெய்தும் வயதை அடையாமல் (1842ஆம் ஆண்டுக்குப் பிறகு) இகனைத்திருமணங்கள் செய்யப்பட்ட பெண் குழந்தைகள் 1851ஆம் ஆண்டில் (13 முதல் 15 வயதை) பூப்பெய்தும் வயதை அடைந்திருப்பர். 1851 ஆம் ஆண்டு வைகுண்டர் இறந்த ஆண்டு. எனில் அப்பெண் குழந்தைகளுடன் வைகுண்டர் இல்லறம் செய்தார் என்பது ஏற்புடையதாக இல்லை. சாத்திரக்கன்னி, இலந்தைவிளை சிறுமி ஆகிய இருவரைத் தவிர, மேற்சொன்ன இகனைத் திருமணச் சடங்குகளுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பெண் குழந்தைகள் எல்லோருக்கும் வைகுண்டர் இறந்த பிறகு வாரிசுகள் பிறந்திருக்கின்றனர் எனில் அப்பெண் குழந்தைகள் அனைவரும் வளர்ந்து பெரியவர்களான பிறகு திருமணம் செய்து தத்தம் இல்வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

உண்மை இவ்வாறிருக்க சாத்திரக்கன்னி மற்றும் இலந்தைவிளை சிறுமியின் தாய்மையை மட்டும் கேள்விக்கு உட்படுத்துவது ஏனென்று விளங்கவில்லை.

வைகுண்டர் தனது ஐந்து தலைமை சீடர்களில் ஒருவரான வீமன் சீடருக்கு இல்லற வாழ்க்கை நடத்த அனுமதி கொடுத்த நிகழ்வை இவ்விடத்தில் நினைவுகூரவேண்டும். அய்யாவழி இயக்கத்தில் இணைந்திருந்த ஆண் சீடர்கள் மட்டுமல்லாது, பெண் சீடர்களுக்கும் திருமணம் செய்து இல்லற வாழ்வு நடத்த தடை இருக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

ஆக, இகனைத் திருமணச் சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட அத்தனை பெண் குழந்தைகளும் சடங்கு முடிந்த பிறகு அவரவர் இல்லங்களுக்குச் சென்று தத்தம் வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதே உண்மை. அந்தப் பெண் சீடர்களும் ஆண் சீடர்களைப்போல், நிழல் தாங்கல்கள் மற்றும் பதிகளை அமைத்து அய்யாவழியை வளர்க்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்று கருதலாம்.

வைகுண்டரின் வாரிசுரிமை பற்றிய வழக்கு நடந்தபோது, வைகுண்டரின் மனைவி திருமாலம்மை என்னும் பரதேவதை, தனக்குப் பிறந்த ‘பொதுக்குட்டி’ மட்டுமே முத்துக்குட்டிக்குப் பிறந்த ரத்தவழி வாரிசு என்று சொன்ன சாட்சியமும் இவ்விடத்தில் கூர்ந்து நோக்கத்தக்கது.12*

பரதேவதைக்கு பொதுக்குட்டி, பால்பையன், வடிவம்மை என்னும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் பொதுக்குட்டி மட்டுமே முத்துக்குட்டிக்குப் பிறந்தவர் என்றால் பால்பையனும் வடிவம்மையும் பரதேவதையின் முதல் கணவருடைய குழந்தைகள் என்ற முடிவுக்கு வரலாம்.

வைகுண்டரின் இல்லற வாழ்வு எத்தகையதானாலும் இகனைத் திருமணம் முற்றிலும் ஏற்க முடியாத, அயோக்கியத்தனமான மூடநம்பிக்கையே ஆகும். சிறு குழந்தைகளை கடவுளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களை இறைப்பணிக்குக் கட்டாயப்படுத்திய தேவரடியார் முறைக்கும் இகனைத்திருமணச் சடங்குக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

பெண் குழந்தைகளுடன் திருமணச் சடங்குகளை நடித்துக் காட்டினால் சக்தி கிடைத்துவிடும் என்று நம்புவதெல்லாம் கடைந்தெடுத்த மூடத்தனம். இதுபோன்ற மூடத்தனங்கள்தான், அய்யாவழியை இந்துத்துவப் பாம்பு விழுங்கி செரிப்பதற்கான மாபெரும் ஓட்டைகளாக இப்போது மாறியிருக்கின்றன.

ஆணின் உடலிலிருந்து பெண் பிறந்ததாகச் சொல்லப்பட்ட விவிலியத்தின் கருத்தை நீசத்தனம் என்று சாடிய வைகுண்டர், பெண் தெய்வங்களை திருமணம் செய்வதால் ஆண் தெய்வங்களுக்கு சக்தி கிடைக்கும் என்று சொல்வது மடமையின் உச்சமாகும். இதுவும் ஏற்புடையதல்ல. ஆணுக்கு பெண்ணிடம் இருந்து பலம் கிடைக்கிறது என்று சொல்வதும், பெண்ணுக்கு ஆணிடம் இருந்து பலம் கிடைக்கிறது என்று சொல்வதும் இரண்டுமே மூடத்தனங்கள்தான்.

நல்லவேளையாக இகனைத் திருமணச் சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தங்களுக்கென்று திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற ஓர் விதியை அய்யாவழியும் வைகுண்டரும் வகுக்கவில்லை. ஆராசனையாகி சாமியாடுகின்ற ஆண்கள் எல்லோரும் ஆராசனையாகி சாமியாடுகின்ற பெண்களை இகனைத் திருமணம் செய்யலாம் என்று சொல்லாமல் இருந்த வைகுண்டருக்கு நன்றி சொல்லியாகவேண்டும். எடுத்துக்காட்டாக முருகனைக் கொண்டு ஆராசனையாகி ஆடுகின்ற ஆண்கள், வள்ளியைக் கொண்டு ஆராசனையாகி சாமியாடுகின்ற பெண்களை இகனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வைகுண்டர் சொல்லியிருந்தால் முருகன்கள் எல்லோரும் வள்ளிகளை தேவரடியார்களாக உருவாக்கியிருப்பார்கள். அதற்கான வாய்ப்புகளுக்கு நமது ஆணாதிக்க சமுதாயத்தில் பஞ்சமில்லை.

நல்ல வேளையாக வைகுண்டர் இது போன்ற அனர்த்தங்களை செய்யாமல் போனார். செய்திருந்தால், தேவரடியார்களின் இழிநிலையை எதிர்த்த வைகுண்டரே, தேவரடியார் முறை போன்ற மற்றொரு நவீன அமைப்பை உருவாக்குவதற்கான காரணகர்த்தாவாக இருந்திருப்பார்.

தரவுகள்:

  1. THE QUIVER MAGAZINE, NOVEMBER 4, 1871, SATURDAY, PAGE NO: 76.
  2. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 2, எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: முனைவர் க.ரத்னம், ஜூன் 2010 ஆம் ஆண்டின் பதிப்பு, பக்கம் எண்: 471.
  3. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 273, 274.
  4. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 293, 294, 295.
  5. THE TINNEVELLY MISSION OF THE CHURCH MISSIONARY SOCIETY, BY GEORGE PETTITT, LETTER VIII, PAGE NO: 285.
  6. அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட், 2011, பக்கம் எண்: 87.
  7. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 293 முதல் 298 வரை.
  8. இறைவனின் வைகுண்ட அவதாரம், பொறிஞர். ஆ.கிருஷ்ணமணி, முதற்பதிப்பு 04.03.2014, பக்கம் எண்: 24, 25.
  9. கேள்வியும் பதிலும் வைகுண்டர் வரலாறு, நா.விவேகானந்தன்M.A., B.L., பக்கம் எண்: 98.
  10. கேள்வியும் பதிலும் வைகுண்டர் வரலாறு, நா.விவேகானந்தன்M.A., B.L., பக்கம் எண்: 93, 94.
  11. அய்யாவழியை பின்பற்றும் பெண்ணின் பேட்டி.
  12. கேள்வியும் பதிலும் வைகுண்டர் வரலாறு, நா.விவேகானந்தன்M.A., B.L., பக்கம் எண்: 97.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

Exit mobile version