Site icon Her Stories

அய்யாவழியை கிறிஸ்தவ மதத்தோடு ஒப்பிட்டால் மனம் புண்படுவது ஏன்?

வைகுண்ட சுவாமிகள் கண்ட அய்யாவழி இயக்கம் ஒரு தனி மதமாகும் அளவுக்கு தனித்தன்மை கொண்டது. அது 1469-1538இல் தோன்றி வளர்ந்த சீக்கிய மதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது. உருவ வழிபாடு இல்லாமல், புனித நூல் பெற்று, தலைப்பாகை அணியச் சொல்லி, சமத்துவத்தை வலியுறுத்தும் வைகுண்ட சுவாமிகள் மதத்துக்கும் சீக்கிய மதத்துக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன”

– வழக்கறிஞரும் எழுத்தாளருமான லஜபதிராய்1*

அய்யாவழியை புத்தம், சமணம், சீக்கியம் முதலான மதங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதில் இந்துத்துவவாதத் தொண்டர்களுக்கு சிக்கல் ஏதும் இருப்பதில்லை. அவ்வளவு ஏன்? “அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவ சிவா சிவ மண்டலம்” என்பது அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலங்களில் பாடப்படும் உச்சிப்படிப்பு வரிகளில் ஒன்று.2* அவ்வரியை ஏற்பதன் மூலம் அல்லாவையும் ஏற்கிறார் அய்யா வைகுண்டர். அதை அய்யாவழி மக்கள் மறுக்க முடியுமா? அல்லது புறக்கணிக்க முடியுமா?

ஆனால், அய்யாவழியை கிறிஸ்தவத்தோடு ஒப்பிட்டு பேசினால் மட்டும், மனம் புண்பட்டு விட்டதாகக் கொதித்தெழுந்து விடுகிறார்கள் இந்துத்துவத் தொண்டர்கள். ஏனென்றால் புத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்கள் இந்து மதத்தோடு தொடர்புடையது என்ற பொதுப்புத்தியும், கிறிஸ்தவம் இந்து மதத்துக்கு எதிரானது என்ற பகையுணர்வும் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. வெறும் கற்பிதத்தை திருப்திப்படுத்துவதற்காக, பொய் எழுத இயலாது, அல்லவா?

‘மக்களின் இக்கட்டான வறுமை சூழ்நிலைகளை மதமாற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் மதவாதத்தைதான் அய்யா வைகுண்டர் எதிர்த்துள்ளாரே தவிர, எந்த மதத்தின் கடவுளையும் அவர் மறுக்கவோ வெறுக்கவோ இல்லை’ என்பதை நாம் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஆக, வைகுண்டர் ஏசுவையும் மறுக்கவில்லை.

‘அய்யா வைகுண்டர் தாமரைக்குளம் (கோட்டையடி) கிறிஸ்தவ திருச்சபையில் உறுப்பினராக இருந்தவர்’ என்பதை அய்யாவழியினர் பலரும் மறுக்கின்றனர். அவர்கள் அவ்வாறு மறுத்து பேசுவதற்குக் காரணம், அவர்களின் அறியாமை அல்ல, இயலாமை!

இந்து மதக்கட்டமைப்பின் சாதிய மற்றும் பெண்ணியக் கட்டுப்பாடுகளிலேயே, காலங்காலமாகப் பழகிவிட்ட தீவிர இந்து மதப்பற்றாளர்களாக இருக்கும், அய்யாவழியினர் சிலருக்கு, அய்யாவழி என்பது இந்து, கிறிஸ்தவம் போன்ற எந்தவொரு மதத்தையும் ஏற்காமல், உருவான ‘தனியொரு அமைப்பு அல்லது இயக்கம்’ என்பதை ஏற்கும் மனதைரியம் இல்லை. அவர்கள் அய்யாவழியை இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று நிறுவத் துடிக்கிறார்கள். அத்தகைய பலவீன மனம் கொண்டவர்களால் ‘அய்யா வைகுண்டர், முத்துக்குட்டியாக வாழ்ந்த அவரது இளமைப்பருவத்தில், கிறிஸ்தவ மிஷனரி ஒன்றில் உறுப்பினராக இருந்தவர்’ என்ற உண்மையை ஏற்க இயலவில்லை. அதனால், அவர்கள் அந்த உண்மையைத் தெரிந்தே, ஏற்க மறுக்கின்றனர் அல்லது அழித்துவிட நினைக்கின்றனர். அதை அழிப்பதற்கு ஒரே வழியாக, அந்த உண்மைக்குச் சான்றாக இருக்கும் முத்துக்குட்டியை அழித்து விடுவது என்ற முடிவுக்கு செல்கின்றனர்.

இறுதியாக, முடிசூடும்பெருமாள் என்ற ஒரு மனிதன் பிறக்கவே இல்லை என்றும், முத்துக்குட்டி என்பவனுக்கும் அய்யா வைகுண்டருக்கும் சம்மந்தமே இல்லை என்றும் அடித்து வாதாடுகிறார்கள். இறுதியிலும் இறுதியாக, ஆதியும் அந்தமும் இல்லாமல், எந்தவித ஆதாரமும் இல்லாமல், அய்யா வைகுண்டர் நடுக்கடலுக்குள் இருந்து மேஜிக்காக அவதரித்து விட்டதாக, கார்ட்டூன் கதைகளைச் சொல்லி, அதை நம்பும்படி நம்மைக் கட்டாயப்படுத்துகிறார்கள். அதன் மூலம் அய்யாவழி என்னும் அறவழியை சனாதனத்துக்குள் மூழ்கடித்து, தங்களின் இந்துத்துவக்கொடியை பறக்கவிடத் துடிக்கிறார்கள். இவ்வாறெல்லாம் கட்டுக்கதைகளை உருவாக்குவதன் மூலம் அய்யாவழியின் புனிதத்தையும், தங்கள் வரலாற்றின் கௌரவத்தையும் காப்பாற்றிவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது இந்துத்துவ அமைப்புகளான பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்றவை அய்யாவழிக்குள் நுழையும் வழியை இலகுவாக்குகிறது.

ஆனால் முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) என்ற மனிதனின் பொது வாழ்க்கை வரலாற்றின் உண்மையை மறைப்பதும், அழிப்பதும், அய்யாவழியையே அழிப்பதாகும் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

எந்த சனாதனத்துக்கு எதிராக அய்யா வைகுண்டர் போரிட்டு அய்யாவழியை உருவாக்கினாரோ, அதே சனாதனத்துக்கு அய்யாவழியை காவு கொடுப்பதும், முத்துக்குட்டிதான் அய்யா வைகுண்டர் என்ற வரலாற்று உண்மையை அழிப்பதும் ஒன்றுதான்!

எந்த சாதியத்தீண்டாமையை ஒழிக்க அய்யா வைகுண்டர் பாடுபட்டாரோ அதே சாதியத்தீண்டாமையை நிழற்தாங்கல்கள், மற்றும் பதிகளுக்குள் கொண்டுவருவதற்கான, இந்துத்துவ சனாதனத்தின் சதி ஏற்பாடுதான், அய்யாவின் வழிபாட்டுத் தலங்களுக்கு ‘திருக்கோவில்’ என்று பெயரிடும் செயல்! இவை அய்யா வைகுண்டருக்கு செய்யும் மாபெரும் துரோகங்கள் ஆகும்.

நான் அறிந்த வரையில், அய்யாவழியினர் தற்காலத்தில் இரு பிரிவினராக இருக்கிறார்கள். ஒரு பிரிவினர், ‘அய்யா வைகுண்டர்,  மனிதராக பிறந்து சமூக சீர்திருத்தங்கள் செய்து, அய்யாவழி என்ற சமத்துவ ஆன்மீக வழியை உருவாக்கி இறைநிலையை அடைந்த  தலைவர்’ என்று நம்புபவர்கள். இன்னொரு பிரிவினர், ‘அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து திடீர் மேஜிக்காக அவதாரம் எடுத்து வந்தவர் என்று வாதிடுபவர்கள்’. இரண்டாம் பிரிவினர்தான் இந்துத்துவ போதையில், அய்யாவழியை அழித்து, அதை வைணவமாக மாற்றத்துடிக்கும் கற்பனை வீரர்கள். இந்த இரண்டாம் பிரிவினர் பெரும்பாலும் பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய சேவா சங்கம் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2019-ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய சமூக சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற 5-ம் அலகில், ‘தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தவாதிகள்’ என்ற தலைப்பின் கீழ் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு’ என்ற பாடம்சேர்க்கப்பட்டது. பாடப்பகுதியில் இடம்பெற்றிருந்த, ‘அய்யா வைகுண்டர் ஒரு சமூகப் போராளி’ என்ற தகவல் தவறானது என்றும், அய்யா வைகுண்டர் வெறும் கடவுள்தான் என்றும் குற்றம் சாட்டிய சில அய்யாவழி இயக்கங்கள், பாடப்பகுதியை நீக்குமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.3*

பால பிரஜாபதி அடிகளார்

இந்நிலையில், அய்யாவழியின் தலைமைப்பதியாக விளங்கும் சுவாமிதோப்பின் அய்யாவழி குருவான பாலபிரஜாபதி அவர்கள், பாட புத்தகத்தில் இருந்த ‘விவிலியத்தை படித்துதான் அய்யா வைகுண்டர் அய்யாவழியை உருவாக்கினார்’ என்ற தகவலுக்கும், பாடப் புத்தகத்தில் இருந்த அய்யா வைகுண்டரின் உருவப்படத்துக்கும் தன் கண்டனத்தை தெரிவித்ததுடன், அய்யா வைகுண்டர் வரலாற்றை சரியாக ஆய்வு செய்து, பாடப்பகுதியை திருத்தி வெளியிடும்படி கோரிக்கை வைத்திருந்தார்.4* இவர் அய்யா ‘வைகுண்டர் ஒரு சமத்துவ ஆன்மீகத் தலைவராக வாழ்ந்து இறைநிலை அடைந்தவர்’ என்று நம்பும் பிரிவைச் சேர்ந்தவர்.

அதே சமயத்தில் சிவச்சந்திரன்ஜி என்பவர் ‘அய்யா வைகுண்டர் புரட்சியாளர் என்றும் போராளி என்றும் விவிலியத்தை படித்து கற்று தேர்ந்து ஞானம் பெற்றவர் என்றும்’ பாட புத்தகத்தில் இருந்த தகவல்களுக்குக் கடும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், பாட புத்தகத்தில் இருந்த அய்யா வைகுண்டர் வரலாற்றை நீக்கும்படி கோரிக்கை வைத்தார்.5*

சிவச்சந்திரன் ஜி

இவர் ‘அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து திடீர் மேஜிக்காக அவதாரம் எடுத்து வந்தவர்’ என்று வாதிடும் கூட்டத்தை சேர்ந்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சிக்குத் தன் முழு ஆதரவை தரும் ‘ஜி’. இவர்தான், “எதுலயும் அகிலத்திரட்டுல பிராமணரை அய்யா கொறைச்சு பேசினதே இல்ல”, என்று கூசாமல் பொய் சொன்னவர். (ஆதாரம்: எனது அய்யாவழி அறிவோம் கட்டுரைத் தொகுப்பில் அத்தியாயம் – 7, கீழ்க்காணும் காணொலியில் 1.40 நிமிடம் முதல் 1.50 நிமிடம் வரை)

வைகுண்டரின் வரலாற்றுப் பாடப்பகுதியை திருத்தி வெளியிட சொல்வதற்கும், நீக்க சொல்வதற்கும் இடையிலான நூலிழை வித்தியாசம்தான் அய்யாவழி போர்வையிலிருக்கும் சனாதனிகளை அடையாளம் காட்டுகிறது.

இதேபோல், “மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாட புத்தகத்தில் ‘சாதிமுரண்களும் உடை மாற்றங்களும்’ என்ற தலைப்பில் நாடார் சாதியின் வரலாற்றைப் பற்றிய தவறான தகவல்கள் இருப்பதால், அப்பகுதியை நீக்க வேண்டும்”, என்று, 2013-ம் ஆண்டு கலைக்கோட்டு உதயம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் தவறான தகவல்கள் இருப்பதாகச் சொன்ன பாடப்பகுதில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிகழ்ந்த சாதிக்கொடுமைகளும், தோள்சீலைப் போராட்ட வரலாறும் பிழையேதுமின்றி தெளிவாக இருந்தது.6*

ஆக, சனாதனிகளின் நோக்கம் 18,19-ம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரில் நிகழ்ந்த கேவலமான வரலாற்று நிகழ்வுகளை எதிர்கால சந்ததிகளிடம் இருந்து மறைக்க வேண்டும்’ என்பதாகும். ஏனெனில் இவ்வரலாற்றை தெரிந்து கொண்டால், இளம்தலைமுறை சனாதனத்தைக் காறி உமிழ்ந்து விடும். அதனால்தான் வைகுண்டர் வரலாற்றை மாணவர்களின் பாடப்புத்தகத்திலிருந்து நீக்குவதை, சனாதனிகள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இது, இவ்வாறிருக்க நாடார் சமூகத்தினர், திருவிதாங்கூரில் தங்கள் சாதியின் மூதாதையர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவமானமாகக் கருதி அதைப்பற்றி பேசக் கூசுகிறார்கள். ஆதிக்க மனம் கொண்ட வன்முறையாளன்தான் குற்றவாளி! குற்றவாளிகள்தான் கூசித் தலை குனிய வேண்டும். ஒடுக்குதலுக்கு எதிராக போர் தொடுத்தக் கூட்டம் ஏன் தலை குனிய வேண்டும்?!

சரி! தலைப்பின் கருப்பொருளுக்கு வருவோம்.

தங்களின் கருத்துக்களில் வேற்றுமைகள் பல இருந்தாலும், மேற்சொன்ன அய்யாவழியின் இரு பிரிவினரும் ‘அய்யா வைகுண்டர் விவிலியம் (பைபிள்) அறியாதவர்’ என்று நிரூபிக்கவே போராடுகிறார்கள். ஆனால் நான் முந்தைய அத்தியாயத்தில் விளக்கியபடி, அகிலத்திரட்டு அம்மானையில் விவிலியத்தின் உள்வாங்குதல் காணப்படுகின்றது என்பதும், அய்யாவழியின் வழிபாட்டு முறைகளில் கிறிஸ்தவ வழிபாட்டின் உள்வாங்குதல் உள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை.

‘அய்யா வைகுண்டர் விவிலியம் அறிந்தவர்’ என்ற வரலாற்று உண்மையை மறைப்பதன் விளைவு என்னவென்றால், ‘தோள்சீலைப் போராட்டம் என்ற புரட்சிப்போரில் அய்யா வைகுண்டர், சார்லஸ் மீட்டுடன் கலந்து கொண்டவர்’ என்கிற வரலாற்று உண்மையும், ‘வைகுண்டர் சார்லஸ்மீட்டின் ஆதரவை உதறி விட்டு, மதம் மாறாத ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் தோள்சீலை அணியும் உரிமைக்காக துணிந்து போராடியவர்’ என்கிற வரலாற்று உண்மையும்,  இந்துத்துவ பாசிசவாதிகளால் பலி வாங்கப்படும்.

காலப்போக்கில் தோள்சீலைப் போராட்டத்தில் அய்யா வைகுண்டர் அளித்த மகத்தான பங்கு, சிதைக்கப்படும், இருட்டடிப்பு செய்யப்படும். ‘அய்யா வைகுண்டர், சாணார் கலகம் என்றழைக்கப்பட்ட தோள்சீலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட போராளி’ என்ற பெருமையை அழிக்க விரும்புபவர்கள் தாராளமாக உண்மையை பலி கொள்ளலாம்.

அய்யா வைகுண்டர் ‘ராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், சான்றோர் புராணம் போன்றவற்றை படித்தவர்’, ‘சமண முனிவர்களுடன்(நக்கன்) நட்பு பாராட்டியவர்’, ‘ஸ்ரீரங்கத்தில் நிலவிய மற்றும் நிலவிக் கொண்டிருக்கும் தென்கலை வடகலை ‘சாதித்தகராறு அரசியல்’ அறிந்தவர், ‘அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவ சிவா சிவ மண்டலம்’ என்று பாடி அல்லாவையும் ஏற்றுக் கொண்ட மதச்சார்பற்றவர், என்பதெல்லாம் பெருமை என்றால், ‘அய்யா வைகுண்டர் பைபிள் அறிந்தவர்’ என்பது மட்டும் ஏன் இழிவு என்றாகிறது? இந்தக் கற்பிதம் அய்யாவழி மக்களின் மனதில் விதைக்கப்படுவதன் லட்சியம், மதவெறுப்பு அரசியலன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அய்யாவழி மக்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளின் அருகிலேயே கிறிஸ்தவ மக்களும் வாழ்கிறார்கள். அய்யா வைகுண்டரின் பதி அல்லது நிழற்தாங்கல் இருக்கும் பகுதியிலிருந்து மிகக்குறுகிய தொலைவில் ஏதாவது கிறிஸ்தவ சர்ச் இருக்கும். இப்பகுதிகளில் வாழும் அய்யாவழி மற்றும் கிறிஸ்தவ மக்கள் பெரும்பாலும் உறவினர்களாகவே இருப்பர். அதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்து கிறிஸ்தவ ஒற்றுமை காணப்படுகிறது. இந்த ஒற்றுமையை கலைப்பதே சனாதனிகளின் நோக்கம். அதற்கு இந்து மதக்கட்டமைப்பின் சாதிய மற்றும் பெண்ணியக் கட்டுப்பாடுகளை உதற தைரியம் இல்லாத சில அய்யாவழி மக்களை, சனாதனிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தொடரும்…

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

சான்றுகள்

  1. தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்… சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப.திருமலை (மூத்த பத்திரிகையாளர்), எஸ்.செல்வ கோமதி (வழக்கறிஞர்),முதல் பதிப்பு : 17 ஆகஸ்ட், 2013, பக்கம் எண்: 105.
  2. பகவான் வைகுண்டர் அருள் நூல், பதிப்பாசிரியர் த.பாலராமச்சந்திரன் மகன் B.சங்குமன்னன், பக்கம் எண்: 13.
  3. https://youtu.be/Alrc0zi2LoI?si=mU4zEX9M7pjdRL-d
  4. https://youtu.be/bk7r4WyNXs8?si=6_XCzd5M5JnwzcoE  &  https://youtu.be/-C1MZTz0uD0?si=mBYt4eteDXYBGvyC
  5. https://youtu.be/BzD_9CBHX1I?si=rvb77dd-Acla2J53
  6. நாடார் வரலாறு கறுப்பா? காவியா?, தி.லஜபதி ராய், ஐந்தாம் பதிப்பு, அக்டோபர் 09, 2021, பக்கம் எண்: 59.

Exit mobile version