நீதிமன்றங்கள் தோள்சீலைப் போராட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது, சீர்திருத்த கிறித்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும், பாதிக்கப்பட்ட பெண்களின் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள். – சு.சமுத்திரம்.1*
முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) தன்னுடைய 14-ம் வயதில், 1823-ம் ஆண்டு நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தில் சார்லஸ் மீட்டுடன் பங்கேற்றார் என்பதை நமது அத்தியாயம் 28ல் பார்த்தோம். ஆக, 14 வயதாகும் முன்பே, முத்துக்குட்டியின் சிறுவயதிலேயே கிறித்தவ மிஷனரியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எனில், அய்யா வைகுண்டர், தான் வளர்ந்து பக்குவப்பட்ட பிறகு, கிறித்தவத்தை தேர்ந்தெடுக்கவில்லை. முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டரின் அறியாப்பருவத்திலேயே அவரை அவரது பெற்றோர்கள் கிறித்தவத்தில் சேர்த்திருக்க வேண்டும்.
முத்துக்குட்டியின் தாயார் வெயிலாள் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர் என்றும், வெயிலாள் முத்துக்குட்டியை (அய்யா வைகுண்டரை) இளம் வயதிலேயே தாமரைகுளம் சர்ச்சுக்கு அழைத்துச் சென்று கிறித்தவ மதத்துக்கு பழக்கியதாகவும் செவிவழிச் செய்திகள் உள்ளன.2*
அகிலத்திரட்டில் கிறித்தவம் தொடர்பான வரிகள் (lines):
அகிலத்திரட்டு அம்மானையில் நீசனை படைத்தவுடன், ஈசர் நீசனிடம், “உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்று கேட்கிறார். அதற்கு “நீசன் எனக்கு ஏற்றாற்போல் ஒரு பெண்ணை படைத்து தாரும்” என்று கேட்கிறான். உடனே ஈசன் நீசனுக்காக ஒரு பெண்ணை படைக்கிறார். எப்படி படைக்கிறார் என்பதை அகிலத்திரட்டு அம்மானை கீழ்க்காணும்படி சொல்கிறது;
‘கேட்ட மாநீசனுக்கு கீர்த்தி என்ன மாமயிலே
தேட்டமுடன் இப்போ செப்பென்றே உரைத்தார்
அப்போது சத்தி ஆதியடி வணங்கி
ஒப்பு ஒன்று இல்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகிர்ந்தே அவன் உடம்பில்
விதியாம் இடது விலாவில் ஒரு எலும்பை
தட்டிக் கழற்றி சச்சுருவம் தானாக்கி
திட்டித்து நீசனுக்கு சிணம் கொடுவும் ஈசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்று அந்த நீசன் அரையில் ஓர் ஆக்கையிட்டு
இறுக்கக் கீள் கட்டி எழுந்துரு நீ என்றவுடன்
பொதுக்கெனவே இடது புறத்தில் ஒரு எலும்பை
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறி கொண்ட நீசன் விலாவில் வெடித்து அதனால்
நீசன் பலத்தில் நேர் பாதி ஆகும் என்று
வாச மடவாய் வரவே மதன்தனை நினைத்தார்
மதனை யான் நினைக்க மாநீசன் தன் எலும்பை
வதன மடமாதாய் வந்ததுவே அம்மானை’3*
பொருள்: தனக்காக பெண் படைத்துக் கேட்ட மாநீசனுக்கு பதில் என்ன? தேட்டத்துடன் சொல்” என்று சக்தியிடம் ஈசர் கேட்க, அப்போது சக்தி ஈசன் கால் வணங்கி, “ஒப்புமை இல்லாதவரும் உடையவருமான பெருமானே! நீசனின் இடது விலா எலும்பை தட்டிக் கழற்றி தத்ரூபமான மனிதப் பெண்ணாக்கி, நீசனை பாதியாக பகிர்ந்து, சிருஷ்டித்து சீக்கிரமாக கொடுங்கள்! ஈசுரரே!”, என்று சொன்னாள். உமையாள் இப்படி சொன்னவுடன், நீசனின் இடுப்பில் ஒரு கையை இட்டு, நீசனின் உடலை இறுக்கமாக கிழித்து, “எழுந்துரு நீ” என்று சொல்லி ஈசன் சொன்னவுடன், பொதுக்கென ஈசனின் இடது புறத்தில் ஒரு எலும்பு தெறித்து பெண்ணாக வந்து நின்றது. அந்தp பெண், வெறி கொண்ட நீசன் விலாவில் வெடித்ததினால் அவள் நீசனின் பலத்தில் பாதியானாள். ஈசர் அவளைப் பார்த்து மன்மதனை நினைத்தார். மன்மதனை நினைத்ததனால் அந்த பெண் அழகான பெண் ஆனாள்.
மேற்சொன்ன பொருள் விளக்கம் மிகவும் எளியது. அதாவது, நீசனுக்கு இணையரான பெண்ணை, ஈசர் நீசனின் இடது பக்கத்து விலா எலும்பிலிருந்து படைத்தார்.
மனித ஆணின் இடது விலா எலும்பில் இருந்து பெண்ணை படைக்கும் விவிலியத்தின் கதையை, கிறித்தவர்கள் மட்டுமின்றி கிறித்தவரல்லாதோர் பலரும் அறிவார்கள். எனினும் ஆதாரத்துக்காக விவிலிய வசனம் கீழே;
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்.
- (பழைய ஏற்பாடு – ஆதியாகமம்: 27)
பின்பு தேவனாகிய கர்த்தர், மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
- (பழைய ஏற்பாடு – ஆதியாகமம் 2: 18)
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தை சதையினால் அடைத்தார்.
- (பழைய ஏற்பாடு – ஆதியாகமம் 2:21)
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
- (பழைய ஏற்பாடு – ஆதியாகமம் 2:22)4*
ராமாயணம், மஹாபாரதம், கந்த புராணம், நாடார் புராணம், பிட்டுக்கு மண் சுமக்கும் சிவனின் கதை சொல்லும் சிவபுராணம், ஸ்ரீ ரங்கத்தில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் தென்கலை வடகலை சாதி அரசியல் போன்றவை அகிலத்திரட்டின் கிளைக்கதைகளாக வருவதைப் போல, விவிலியத்தின் இந்த பகுதியும் அகிலத்திரட்டு அம்மானையில் காணப்படுகின்றது. அகிலத்திரட்டு அம்மானை 1841-ம் ஆண்டில் எழுதத் துவங்கப்பட்டது. விவிலியம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்தையது. எனில் அய்யா வைகுண்டர் விவிலியம் படித்திருப்பாரா இல்லையா என்பதை வாசகர்கள் சிந்தனைக்கு விடுகிறேன்.
விவிலியத்தில் பரிச்சயமான சில வார்த்தைகளை அகிலத்திரட்டு அம்மானையின் சில இடங்களில் காண முடிகிறது. தோத்திரம், கிருபை, பிதா போன்ற அகிலத்திரட்டில் காணப்படும் வார்த்தைகள், விவிலியத்தைப் படித்ததால் வந்த உள்வாங்குதலால் அய்யா வைகுண்டர் சொன்ன வார்த்தைகளாகக்கூட இருக்கலாம் என்பது என் கருத்து.
‘வகுத்த பரமனுக்கும் மாதா பிதாவதுக்கும்
தொகுத்த குரு அதுக்கும் தோத்திரம் தோத்திரமே
தோத்திரம் என்று சுவாமிதனை தொழுது’4
‘செவ்வகைத் திருவேயான திருவுளக் கிருபை கூர்ந்து’7
‘அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்’9
‘கிளர்ந்த மொழி கேட்டு கிருபை கூர்ந்த ஈசர்’ 18
‘கேளாய் நீ கிருபையுடன் ஈதுரைப்பான்’70
‘என்ன விதம் ஆகிடினும் இரட்சிக்க வேணுமய்யா’142
‘கேட்டிருந்த நாரணரும் கிருபையுடன் ஈசுரரை
தேட்டமுடன் பார்த்து செப்புவார் அம்மானை’96…
கேட்கலையோ என்றன் கிருபை சிவனாரே..155….5*
மெய்யரே நீங்கள் மெலிந்திருப்பது ஏதெனவே
கேட்க அனுமன் கிருபை கூர்ந்து எம்பெருமாள்6* 84
அருள் நூலில் வருகின்ற சில வரிகளிலும் கிறித்தவ மதத்தில் பரவலாக புழங்கும் வார்த்தைகள் இருப்பதைக் காண முடிகின்றது.
‘கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாம் செய்தால்
புத்தி வரும் திருப்தி வரும் புலம்புவேன் என்மகனே!’
‘சங்கத்தார் எல்லோரும் திருச்சபைக்கூட்டத்திலே
என் பங்கைத் தா என்று பகர்ந்து வா என் மகனே!’
‘என்னுடைய ஊழியக்காரர்களே ஒழுங்காய் நடந்திடுங்கோ
கள்ளக் கணக்கெழுதும் பேர்களைத்தான்
முள்ளளியில் போட்டிடுவேன்’7*
தொடரும்…
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
சான்றுகள்
- சமுத்திரம் கட்டுரைகள், சு.சமுத்திரம், முதற்பதிப்பு, டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், பக்கம் எண்: 7.
- கிறித்தவ வரலாற்றுச் சுவடுகள் மாத இதழ், ஜூலை 2022, பக்கம் எண் : 6.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 80.
- விவிலியம், பழைய ஏற்பாடு.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்கள்:4,7,9,18,70,142,96,155.
- நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 2, இரண்டாம் பதிப்பு, 2006, [தமிழக அரசு நூல் உரிமைப் பதிவுத் தொடர் எண் 5231, தேதி: 26.12.2003], பக்கம் எண்:84.
- பகவான் வைகுண்டர் அருள் நூல், பதிப்பாசிரியர்: பாலராமச்சந்திரன் மகன் சங்கு மன்னன், பக்கம் எண்: 39, 42.


