ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் இந்தியாவின் வளங்களைச் சுரண்டுவதாக இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் நோக்கம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவதும், கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்களை முன்னேற்றுவதுமாக இருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும், மிஷனரிகளையும் ‘வெள்ளைக்காரர்கள்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி மக்களைக் குழப்பும் வேலையை செய்கிறது இன்றைய போலி இந்துத்துவம். எனவே இவ்விரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி எதிரி என்றால், திருவிதாங்கூர் அரசு போன்ற அதிகார வர்க்கமும் ஆதிக்க சாதியினராகத் தங்களை நினைத்துக் கொண்ட நம்பூதிரி பிராமணர், நாயர், வெள்ளாளர் முதலானவர்களும் துரோகிகள். இந்தச் சூழலை தன் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொண்டாலும், தன் நிழலில் ஒதுங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது புராட்டஸ்டன்டு கிறிஸ்தவ மிஷனரிகள். இது பொதுவான பார்வை.
வரலாற்றின் பல இடங்களில், எதிரியான ஆங்கிலேய அரசின் அதிகாரிகள் அடித்தட்டு மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியிருப்பதைக் காண முடிகிறது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தமிழ்ச்சமூகத்தின் மக்களுக்காக கிறிஸ்தவ மிஷனரிகள் வாதாடும்போதும் போராடும் போதும், கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசு அதிகாரிகள் சிலர், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு உதவி செய்தனர். இது மதப்பாசமாக இருந்திருக்கலாம் என்றாலும் சொந்த மன்னராலும் சொந்த மண்ணின் ஆதிக்க வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, இத்தகைய உதவி மாபெரும் ஆறுதலாக இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.
தோள்சீலை கலவரங்களின்போது, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்தவரான ராமன் தம்பி, நெய்யூர் கிறிஸ்தவ சபை கட்டுவதற்கு இடம் கொடுத்தவர். இவர் சூத்திரர் என்றழைக்கப்பட்ட நாயர் சமூகத்தை சேர்ந்தவர்.1* இவரைப்போல ஆதிக்கச் சாதியை சேர்ந்த சிலர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதையும் காணமுடிகிறது. தரவாட்டு முறையை (ஒரு பெண் பல கணவர்களை மணந்து கொள்ளும் முறை) கைவிட்டு முறையான வாழ்க்கை வாழ கிறிஸ்தவத்தைத் தழுவிய நாயர் சாதியினரும் வரலாற்றில் இருக்கிறார்கள்.2*
ஆக எந்த ஒரு இனக்குழுவைப் பற்றியும் பொதுப்புத்தியில் முடிவுக்கு வராமல், எல்லாவற்றையும் பகுத்து ஆராய்வது பகுத்தறிவு.
‘ரொட்டித்துண்டுக்குக்கூட வழியில்லாமல், தன் பிள்ளைகள் உயிர் விடுவதைக் காட்டிலும் சிலுவையை சுமக்கலாம்’, என்று முடிவெடுத்த மக்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்ற அயோக்கியத்தனத்தை செய்து கொண்டிருக்கின்றன இன்றைய பாஜக, RSS, போன்ற இந்துத்துவ அமைப்புகள்.
அல்லும் பகலும் இடைவிடாது உழைத்த மக்களை ஒருவேளை ரொட்டித் துண்டுக்குக்கூட வழியில்லாத, பரம ஏழைகளாகவும், அடிமைகளாகவும் வைத்திருந்த ‘ஆண்ட’ வர்க்கத்தினரை நோக்கி இத்தகைய வீர அமைப்புகள் குரல் உயர்த்துவதில்லை. இதைக்கூட பகுத்துப் பார்க்கும் திறனின்றி, இவ்வமைப்புகளின் அயோக்கியத்தனத்துக்கு உடந்தையாக இன்றைய இளைய தலைமுறையினர் சிலர் கரம் உயர்த்துகின்றனர். வெட்கக்கேடு!
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கிறிஸ்தவ மதத்தின் நிழலில் ஒதுங்க விரும்பாத தமிழ்ச் சமூகத்து மக்களின் நிலை என்ன? அவர்களுக்காக கிறிஸ்தவ மிஷனரிகள் குரல் கொடுத்ததனரா? காண்போம்.
‘மேலாடையின்றிதான் நீ என் முன் நிற்க வேண்டும் என்று ஒருவன் சகமனிதனை நிர்பந்திப்பதைக் காட்டிலும் பெரிய வன்முறை இருக்க முடியுமா? சகமனிதன் அரை நிர்வாணமாகத் தன் முன் நிற்பதுதான் தனக்கான மரியாதை என்று நம்புவது எத்தனை பெரிய மனப்பிறழ்வு! அல்லவா?!’
நீதிமன்றம் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இயங்கும்போது இயற்றப்படும் சட்டங்கள், சாமானியனுக்கு வெறும் சடலங்கள்தான். நீதிமன்ற வாசலில், நாயர் சிப்பாய்களால் தடுத்து நிறுத்தப்பட்ட, கிறிஸ்தவ மதம் மாறிய சாணார்*, பறையர் முதலான தமிழ்ச்சமூகத்துப் பெண்கள், தங்களின் மேலாடையை கழற்றிவிட்டு நாயர் சிப்பாய்களைக் கடந்து சென்றனர். நீதிமன்றத்துக்குள் சென்ற பிறகு மீண்டும் மேலாடைகளை அணிந்து கொண்டார்கள்.3* அப்போதைய திருவிதாங்கூர் திவான் வேங்கடராவ், தோள்சீலைப் போராட்ட வழக்கை விசாரித்தார். அவரின் விசாரணையை அடிப்படையாகக் கொண்டு, 1829-ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி திருவிதாங்கூர் அரசு இவ்வழக்கிற்கான தீர்ப்பு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கை பின்வருமாறு:
‘சாணார்களுக்கும் நாயர்களுக்கும் இடையே சில குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. இக்குழப்பங்கள் சாணார் பெண்மணிகள் சட்டத்துக்குப் புறம்பாகவும் பழங்கால பழக்கவழக்கங்களுக்கு மாறாக மேலாடை அணிந்ததாலும், சாணார்கள் ஏனையவர்களைப் போன்று பொதுவாக அரசாங்கத்துக்குத் தேவையான தொண்டு செய்ய மறுத்ததாலும் உருவாகியது. அதனால் பின்வரும் பேரறிக்கையை வெளியிடுவது சரியென நான் கருதுகிறேன்.
முதலாவதாக சாணார் பெண்மணிகள் மேலாடை அணிவது நியாயமற்றது ஆகும். அவ்வாறான வழக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வருங்காலத்தில் சாணார் பெண்மணிகள் இடுப்பின் மேல்பகுதியை மேல் துண்டால் மறைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’.4*
இவ்வறிக்கை இரண்டாம் தோள்சீலைப் போராட்டத்தின் முடிவும் மூன்றாம் தோள்சீலைப் போராட்டத்தின் தொடக்கமும் ஆகும்.
இவ்வறிக்கையை வெளியிட்டது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பேரரசி கௌரி பார்வதிபாய் (1815-1829). பார்ப்பனர்கள் முன்பும் நாட்டின் ஆண்கள் முன்பும் மேலாடையுடன் வாழும் உரிமை கிடைக்கப்பெறாத ஒரு பெண்ணாகிய திருவிதாங்கூர் அரசி5*, சாணார் சாதிப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமையில்லை என்று சட்டமியற்றியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
1825-ம் ஆண்டு ஆற்றிங்கல் ராணியின் முன்பு ஓர் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண் மேலாடையுடன் வந்ததால், அப்பெண்ணின் மார்பகங்களை வெட்டியெறியச் சொல்லி உத்தரவிட்டாராம் ஆற்றிங்கல் ராணி.6* அத்தகைய ‘ராசாக்கமார்’ குடும்பத்து ராணிகளின் உளவியல் சற்று சிக்கலானதுதான்.
கௌரி பார்வதிபாயின் 1829-ம் ஆண்டு அறிக்கை 1823-ம் ஆண்டு ‘தோள்சீலை அணியலாம்’ என்று வந்த தீர்ப்பை அழித்து, 1814-ம் ஆண்டு ‘குப்பாயம் மட்டும் அணியலாம்’ என்று மன்றோ வழங்கிய தீர்ப்புக்குச் சென்றதன் மூலம், கிறஸ்தவ மக்களின் முன்னேற்றத்தை 15 வருடங்களுக்கு பின்னோக்கித் தள்ள முயன்றது. அதாவது, 1929-ம் ஆண்டின் பேரறிக்கை ‘கிறிஸ்தவப் பெண்களுக்கு குப்பாயம் அணியும் உரிமை அனுமதிக்கப்படுகிறது, தோள்சீலை அணியும் உரிமை முழு முற்றிலுமாக, கண்டிப்புடன் மறுக்கப்படுகிறது’, என்று சொன்னது.7*
பண்பிலும் நாகரீகத்திலும் சுயமரியாதை உணர்விலும் அறிவிலும் பரிணாம வளர்ச்சி கண்ட உயிர், மீண்டும் பின்னோக்கி காட்டுமிராண்டித்தனத்துக்குச் செல்வது, இயற்கையல்ல. கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் மூலம், சாணார், பறையர் முதலான ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்து மக்கள், 15 ஆண்டுகளாக அடைந்த பரிணாம வளர்ச்சியை, ராணியின் அறிக்கையால், சிறுதுரும்பின் நுனியளவுக்குக்கூட அசைக்க இயலவில்லை. ஒரு பெண்ணாக, தோள்சீலை அணிந்தே பழக்கப்பட்ட பெண்ணால், தோள்சீலை அணியாமல் வாழ இயலாது என்பதை உணர்வதும் எனக்குக் கடினமாக இல்லை.
ராணியின் அறிக்கைக்குப் பிறகும், கிறிஸ்தவச்சாணார் பெண்கள் ரவிக்கையுடன் தோள்சீலை அணிந்தார்கள். சட்டம் சாதகமாக இல்லாத போதே அத்துமீறிய ஆதிக்க சக்திகளின் வீரியத்தை, சட்டம் சாதகமாக வளைந்த பின்பு கேட்கவா வேண்டும்?
குறிப்பு: அக்காலகட்டத்தில் ‘இந்து மதம்’ சாணார், பறையர், புலையர் முதலான ஒடுக்கப்பட்ட 18 சாதி மக்களை இந்துக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சாதியற்றவர்கள், அவர்ணர்கள், ஆன்மா அற்றவர்கள் என்ற பெயர்களால் அவர்களை வரையறுத்திருந்தது.8*
அதனாலேயே இதுவரை கிறிஸ்தவத்துக்கு மாறாத ஒடுக்கப்பட்ட மக்களை, தமிழ்ச் சமூகத்து மக்கள் என்று எழுதினேன். இனி, கிறிஸ்தவத்துக்கு மாறாத ஒடுக்கப்பட்ட மக்களை ‘இந்துச்சாணார்கள்’ என்று குறிப்பிடுவது எளிதாகவும் சரியாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நாடார்கள், ‘இந்து நாடார்கள்’தானே!?
நாயர் படையினர் பிற ஆதிக்கச்சாதிகளுடன் சேர்ந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய சாணார் முதலான ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீதும் புராட்டஸ்டன்டு மிஷனரிகள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்தனர். கிறிஸ்தவச்சாணார் பெண்களை பின்தொடர்ந்து இந்துச்சாணார் பெண்களும் ரவிக்கை மற்றும் தோள்சீலை அணியத் தொடங்கினார்கள். இந்துச்சாணார் பெண்களுக்கு கிறிஸ்தவச்சாணார் மக்கள் உதவி செய்தார்கள்.9*
மிஷனரிகள் இந்துச்சாணார் பெண்களுக்கு உதவவில்லை. ஆம் மிஷனரிகளால் கிறிஸ்தவப் பெண்களுக்கு மட்டுமே உதவ முடிந்தது. இந்துச்சாணார், இந்துப்பறையர் முதலான, ஒடுக்கப்பட்ட சாதி இந்துப் பெண்களுக்கு மிஷனரிகளால் உதவ முடியவில்லை. காரணம், ‘இந்து மதம் மற்றும் சாதிக்கட்டமைப்பு சம்மந்தமான விசயங்களில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தலையிடக்கூடாது’ என்பது, நம் நாட்டின் பார்ப்பனிய மன்னராட்சி, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளுள் ஒன்று. அதன் அடிப்படையில் மேலாடை அணிவது தொடர்பான காரியம் சாதிகளின் உள்ளூர் வழக்கம் என்று சொல்லி, ஆங்கிலேய அரசு அந்த சிக்கலில் தலையிட மறுத்தது.10*
கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்களுக்கு நிகழ்ந்த சாதிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களைக் காப்பாற்றவே மிஷனரிகள் திருவிதாங்கூர் அரசோடும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளுடனும் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் இந்து மதத்தின் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு உதவுவதில், மிஷனரிகள் கையாலாகாதவர்களாக இருந்திருப்பார்கள் இல்லையா?
தொடரும்…
*மேற்சொன்ன வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்த காலகட்டத்தில் நாடார் சாதியினர் ‘சாணார்’ என்று அழைக்கப்பட்டதால் சாணார் என்ற வார்த்தையை எழுத வேண்டி வந்தது. மற்றபடி சாணார்* என்று எழுதுவதில் எழுத்தாளருக்கோ பதிப்பாசிரியருக்கோ துளியளவும் உடன்பாடில்லை.
தரவுகள்
- THE LAND OF CHARITY, REV. SAMUEL MATTEER F.L.S, 1871, PAGE NO: 279.
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க. ரத்னம், முதற்பதிப்பு: 2003, பக்கம் எண்: 320.
- THE LAND OF CHARITY, REV. SAMUEL MATTEER F.L.S, 1871, PAGE NO: 280.
- ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 81.
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு: 2003, பக்கம் எண்: 368. & தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், T.S. கிருஷ்ணவேல், மூன்றாம் பதிப்பு: 2021, தமிழ்நூல் மன்றம் வெளியீடு, பக்கம் எண்:71, 72.
- துன்பத்தில் துளிர்த்த தளிர், REV. Y. ஜாண் பிரைட் M.A., B.D., M.Th, REV. D. ஐசக் சுந்தர் சிங் M.A., B.D., M.Th., first edition: APRIL, 2011, PAGE NO: 36.
- THE TRAVANCORE STATE MANUAL, V. NAGAM AIYA, VOL I, FIRST PUBLICATION 1906, PAGE NO: 526.
- அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட், 2011, பக்கம் எண்: xiii (ஆசிரியர்களின் அறிமுகவுரை)
- HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr. D. PETER. M.A., M.LITT., Phd, Dr.IVY PETER, M.A., B.T., Ph.d, first edition: 2009, page no.: 50.
- தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு, இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 83.
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.


