ப்ச்சக்! ப்ச்சக்! என்று தான் உட்காரும்போதெல்லாம் கேட்கிறதோ என்று மீனாட்சிக்குப் பதட்டமாக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புபோலத் தொடர்ந்து புவிஈர்ப்பின் உதவியால் மாதவிடாய் ரத்தப்போக்கு தைல தாரையாய் இறங்கிக்கொண்டே இருந்தது. கவிச்சி நாத்தம் வருமோ? நாய் விரட்டுமோ? அத்தைகள் சொன்னதுபோல மாதவிடாய் ரத்த வாடைக்கு பூரான் வந்துவிடுமோ? சுற்றி இருப்பவர்களுக்கு ‘குப்’பென்று ஊண் கவிச்சி குமட்டுமோ? வகுப்பறையைச் சுற்றி வரும் அந்த பிஸ்கட் நிற முரட்டுப் பூனை ரத்த வாடைக்கு மேலே தாவி விடுமோ? பலவிதமான எண்ணச் சிதறல்கள் – சம்பந்தமே இல்லாமல் மனதிற்குள்… அடிவயிற்றில் ‘சுளீர்’ என்று ஒரு வலி. கீழ் முதுகு, இடுப்பு, கால் என்று மானாவாரியாக வலித்தது. ஒரு காளி மார்க் கறுப்பு கலர் குடித்தால் தேவலாம்போல் இருந்தது. கால்கள் நடுங்கின. சிசேரியன் தையல் வலித்தது. மூச்சடைப்பதுபோல இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம்தான். மதிய உணவு இடைவேளை மணி அடித்துவிடும். அதற்குள் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. நாக்கு வறண்டது. பழக்கமான பாடலை மாணவர்களுக்கு வாய் தன்னிச்சையாக சொல்லிக்கொண்டு இருந்தது.
“தக்காளி போயி வெங்காயம்
வந்தது டும் டும் டும்!
வெங்காயம் போய் சாம்பார்
வந்தது டும் டும் டும்!”
மாணவர்கள் மிக உற்சாகமாக குதித்து குதித்துப் பாடினார்கள். அவர்களுக்கு இந்தப் பாட்டு ரொம்பவுமே பிடித்து போய்விட்டது. சிலருக்கு ஒரு பல்; சிலருக்கு இரண்டு பல்! என பல் விழுந்த அழகுடன் ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் ஒன்றிணைந்து ‘டும், டும், டும்’ என்றபோது வயிற்று வலி மீண்டும் சுளீர் என்றது. கால் கடுத்தது; அழுகையாக வந்தது.
மணி அடித்தது. மதிய உணவு இடைவேளை. தொடைகளில் வழிந்தது வியர்வையா, ரத்தமா என்று பதட்டமாக இருந்தது. மிக மெதுவாக நாற்காலியில் அமர்ந்தபோது, சகதியில் கால் வைத்தது போன்று ‘பச்சக்’ என்று உதிரம் நனைத்த சானிட்டரி பேட் உணர வைத்தது. சேலை வரை உதிரம் நனைத்ததை உணரமுடிந்தது. அயர்ச்சியாக இருந்தது. இனி இது ஒரு விஷயமாக ஒவ்வொருவராக கேட்பார்கள். ‘மேடம்.. உங்க பின்னாடி…’, ‘சேலைல பாருங்க…’ என்று…
இதற்காகவே மாற்று உள்ளாடைகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சானிட்டரி பேடுடன் கூடிய டிஸ்போசபிள் உள்ளாடை, என போர்க்களத்திற்கு ஆயத்தமாக வந்த தளபதியைப்போல் வந்திருந்தாலும், சேலைக்கு தொடர்ந்து வீடு வந்து சேரும் வரை கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். இதில் ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்கிற பதட்டம் வேறு. அந்தக் காலத்தில் ரத்தப்போக்கிற்காக துணிகளைப் பயன்படுத்திய பொழுது ரத்தக்கறை படிந்த துணிகளைத் துவைத்து காயப் போடுகையில், அவற்றை ஆண்கள் பார்வையில் படாமல் காயப் போடுவார்களாம். ஒரு பாட்டி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இப்படி ஒளித்து ஒளித்து காயப் போட்டு, ஒளித்து வைத்திருந்த துணியை சரியாக உதறிப் பார்க்காமல் எடுத்து மாதவிடாய்க்கு பயன்படுத்தியபொழுது, அதில் இருந்த பூரான் அந்தப் பெண்ணைக் கடித்து பெண் செத்தே போய்விட்டாராம். எனவே மாதவிடாய்க்கு சுத்தமான துணியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று வயதுக்கு வந்தவுடன் அத்தைமார்களும் பாட்டிமார்களும் அறிவுரை கூறியது காதில் கேட்டது.
இந்த மாதிரி அதிக ரத்தப்போக்கு இருந்தால் ஒரு அகலமான பாத்திரத்தில் நல்லெண்ணையை ஊற்றி, உள்ளங்கை இரண்டையும் அந்த நல்லெண்ணைக்குள் முக்கி, அதை அப்படியே அடுப்பங்கரையில், அடுப்புக்குப் பின்னால் இருக்கின்ற சுவற்றில் பதிக்க வேண்டும் என்று அத்தை சொன்னது நினைவுக்கு வந்தது. தள்ளாடியபடி நடந்து ஆசிரியைகள் கழிவறைக்குச் சென்றபோது, வாளியின் அடியில் ஒரு பூரான் தென்பட்டது. பயந்து கத்தக்கூட அசதியாக இருந்த அந்த நொடியில் செருப்பினால் அந்தப் பூரானை வெறிகொண்டு தட், தட், தட் என்று அடித்தாள்.
எப்படியோ மாலைவரை சமாளித்து, அலுத்துப் போய் வீட்டுக்குப் பேருந்தில் செல்லும்போது வழக்கம்போல மலர்விழி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். மீனாட்சிக்கு மலர்விழியின் அறிமுகம் நினைவுக்கு வந்தது. இன்று முழுவதுமே இப்படித்தான். மனது கொந்தளிப்பாக இருந்தது. முன்னும், பின்னுமாக ஊசலாடிக் கொண்டே இருந்தது. மலர்விழியும் லேசுப்பட்டவள் இல்லை. ரோஷக்காரி. கல்லூரிக்குப் போய் இலக்கியம் படித்தவள். குடும்பமே அடித்து, அசிங்கமாகப் பேசி, விரட்டிய போதும் பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழிலுக்கோ, போகவே கடாது என்று மிக உறுதியாகப் பிடிவாதமாக இருந்தவள். நிறைய தோட்டம், வயல்கள் இருந்த குடும்பத்தில் பிறந்தவள் என்பதால் எல்லா வேலைகளும் அத்துப்படி.
பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு டீச்சர் ஆன மீனாட்சியை மலர்விழி சந்தித்து நட்பானதுகூட எதேச்சையாக நடந்ததுதான். பேருந்தில் ஒரு நாள் சாத்தூருக்குச் செல்ல ஏறியபோது, பிச்சை கேட்கத்தான் வந்திருக்கிறாளோ என்று நினைத்து, முதலாவது சீட்டில் இருந்த பெண்மணி “சில்லறை இல்லை” என்று சிடுசிடுத்ததும் மலர்விழி திகைத்துவிட்டாள். அடுத்த சீட்டில் இருந்த மீனாட்சிதான், “நீங்க சாத்தூருக்கா போறீங்க? இங்க என் பக்கத்துல வந்து உட்காருங்க!” என்று சூழலை இலகுவாக்கினாள். அன்று முதல் மீனாட்சி மலர்வழிக்கு பிரியமான அக்காவும் ஆகிப்போனாள். விருதுநகரில் ‘அன்பு ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் குடியிருப்பில்’ தங்கி இருந்த மலர்வழிக்கு சாத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஏதேனும் வேலை இருந்தால், ஞாபகமாக மீனாட்சி பள்ளி முடித்து வரும் பேருந்தில்தான் ஏறுவாள். மீனாட்சியுடன் வளவளவென்று பேசிக்கொண்டே வருவது குற்றால அருவியில் குளித்த புத்துணர்ச்சியைத் தரும். அருகில் அமரவோ, கழிவறைக்குள் விடவோ பொதுவாகத் தயங்கும் பெண்களிடையே மீனாட்சி தனிரகம்தான்.
“என்னக்கா யோசனை?” என்று மலர்விழி கேட்டாள். ‘இவளுக்கு மட்டும் பிளவுஸ் கச்சிதமாக இருக்கு நமக்கு இப்படி தைக்கிற டைலர் கிடைக்கல…’ என்று மீனாட்சிக்குக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. மலர்விழி கேட்டவுடன்தான், தான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். மலர்விழி உற்சாகமாக பேசினாள். “அக்கா, முளைப்பாரி வளர்க்க ஆர்டர் கிடைச்சிருக்கு. நாங்க வளர்க்கும் முளைப்பாரி மாதிரி உங்களுக்கு வருமா, அக்கா? என்ன இருந்தாலும் நாங்க சமைக்கிற சாப்பாட்டு ருசியும், நாங்க வளர்க்கும் முளைப்பாரி செழிப்பும் யாருக்கும் வராது” என்றாள்.
உடனே மீனாட்சி, “அதுமட்டுமாடி! உனக்கு மட்டும் நல்ல பிளவுஸ் அமையுது; தோள்பட்டையை பாரு, கச்சிதமா இருக்கு; முடியப் பாரு, நல்லா அடர்த்தியா இருக்கு; புருவத்தைப் பாரு; மைக்ரோ ப்ளேடிங் பண்ண மாதிரி அவ்வளவு அடர்த்தியா அழகா இருக்கு! என்னையப் பாரு! சதையெல்லாம் தொள தொளன்னு இருக்கு; தோள்பட்டை தொங்கிப்போச்சு” என்று சலித்துக் கொண்டாள்.
மலர்விழி ரொம்பக் கஷ்டப்பட்டு கவுரவமாக வாழப் போராடிய போதுதான் முளைப்பாரி வளர்ப்பதைத் தொழிலாகச் செய்யலாம் என்று யோசனை வந்தது. மாரியம்மன், பத்திரகாளி அம்மன் கோவில்களில் கொண்டாடப்படும் பொங்கல்களுக்கு முளைப்பாரி மிக முக்கியம். முளைப்பாரி செழிப்பாக வளர பெண்கள் பெரும் முயற்சி எடுப்பார்கள். மாதாந்திர தீட்டு வந்துவிட்டாலோ முளைப்பாரி பக்கத்தில்கூட போய்விட முடியாது. வீடான வீட்டில் தாய், மகள்கள் என இருந்து விட்டால் ஒருவர் பின் ஒருவராக மாதம் முழுவதும் தீட்டுதான். முளைப்பாரி பட்டுப் போய்விட்டாலோ, வளராமல் போனாலோ எந்த முகத்தை வைத்துக்கொண்டு தூக்கிப் போவது? மலர்விழி திருநங்கையர் பொங்கலுக்கு முளைப்பாரி வளர்த்துத் தருவதை தொழிலாகச் செய்யப்போகிறோம் என்றதும் ஊர்ப் பெண்களுக்கு ஒரே கொண்டாட்டமாகிவிட்டது. இனி ‘சுத்தபத்தமாக இல்லை; முளைப்பாரி வளரலை’ எனப் பிரச்னை வராது. திருநங்கையர் பெண்களது பெரிய வேலையைச் சுலபமாக்கிவிட்டார்கள். பெண்கள் முடிவெடுத்த பிறகு யாராவது அதை மாற்றிவிட முடியுமா? விழா கமிட்டியினரும் முளைப்பாரி வளர்க்கும் வேலையைத் திருநங்கைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தனர்.
ஏழு நாள்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, பொங்கல் நடக்கும் ஊரிலேயே தனி இடத்தில் தங்கி, முளைப்பாரி வளர்த்து, அலங்காரம்செய்து, பொங்கல் பாடல்கள் பாடி என எட்டு நாள்கள் செய்யும் வேலை. தகுந்த மரியாதையுடன், தினப்படி உணவுடன், பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை பணமும் கிடைக்கும். ஊர்ப்பொங்கல் நடக்கும் காலங்களில் ஓர் ஊருக்கு இரண்டு பேர் என திருநங்கைகள் வேலையை பகிர்ந்து, பிரிந்து செல்வதுண்டு. இந்த வேலை மலர்விழிக்கு மிகவும் பிடித்திருந்தது. இயல்பிலேயே மரியாதையை எதிர்பார்க்கும் அவளது குணத்திற்கு இந்த வேலை மிகப் பொருத்தமானதாகவும் இருந்தது. அவளது தோழிகள் சிலர் ஒப்பாரி பாடும் வேலைக்கு செல்வதுண்டு. ஏனோ மலர்விழிக்கு அதில் நாட்டமில்லை. நான்கு பேர் சேர்ந்து ஒரு நாள் முழுவதும் ஒப்பாரி பாடி, இறுதி ஊர்வலத்தில் ஆடிக்கொண்டு வந்தால், பத்தாயிரம் சம்பாதிக்கலாம்தான். உழைத்து சம்பாதிக்கும் எந்த வேலையும் தவறில்லைதான். ஆனாலும் இறுதிச்சடங்குகளில், ஊர்வலங்களில் குடித்துவிட்டு வரும் ஆண்களும் இருந்ததால், எதற்கு வம்பு என்று அந்த வேலைக்கு அவள் போவதே இல்லை.
தானும், தன் சக திருநங்கையரும் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்களும் மலர்விழியின் மனப்போக்கை பெரிதும் பாதித்தது. பெரும்பாலும் ஆண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது. தான் சம்பாதிக்கும் காசை இரக்கப்பட்டு தர்மத்துக்குக் கொடுக்கும் பழக்கம் எல்லா திருநங்கைகளைப்போல் அவளுக்கும் இருந்தது.
மீனாட்சி இறங்கும் இடம் வந்தது. கால் நடுங்க சீட்டிலிருந்து எழுந்தபோது பின்னால் அவள் சேலை முழுவதும் இருந்த ரத்தக்கறையைப் பார்த்து, அவளது அலுப்பின் காரணத்தைப் புரிந்து கொண்ட மலர்விழி, “இருக்கா! நானும் கூட வாரேன்” என்று மீனாட்சியின் கைப்பிடித்து பேருந்தில் இருந்து இறங்க உதவினாள். “வாக்கா! நான் இன்னைக்கு உனக்கு சாப்பிட வாங்கித் தரேன்” என்று அருகில் இருந்த பேக்கரியில் ஒரு ஹாட் சாக்லேட், முட்டை பப்ஸ் கட்டாயப்படுத்தி வாங்கிகொடுத்தாள். வயிற்றுக்குள் இனிப்பும், சூடுமாக ஹாட் சாக்லேட் இறங்கியதும் கால் நடுக்கம் தானாக நின்றது. கண்ணீர் வந்தது. “முளைப்பாரி வளர்க்கப் போறவ முட்டைய தொடக்கூட மாட்டியே? எனக்காககூட வந்து ஏண்டி இவ்ளோ கஷ்டப்படுற? அடுத்த ஸ்டாப்ல இறங்க வேண்டியவ இங்கே இறங்கி 100 ரூபா தின்பண்டத்துக்கு செலவு வேற!” என்று மீனாட்சி புலம்பினாள்.
நாளையிலிருந்து முளைப்பாரிக்கு போக வேண்டிய நிலையில், இன்றே மீனாட்சிக்கு பப்ஸ் வாங்கி தர முடிந்தது, மலர்விழிக்கு ஆறுதலாகத்தான் இருந்தது.
மீனாட்சி தொடர்ந்தாள். “சேலை பூராம் பாழாப்போச்சுடி… எல்லாரும் இதை வேற கேப்பாங்க. அதான் தெரியுதுல? விடலாம்ல? இது ஒரு கேள்வியா கேட்பாங்க. இது வேற மாசாமாசம் பாடாப் படுத்துது. வீட்டில் ரெஸ்ட் எடுக்க வசதி இருக்கிற மகராசிக்கு இப்படி வந்தா தாக்குப்பிடிப்பா. நான் நாள் முழுக்க வகுப்புல நிக்கணும், கத்தணும். சின்ன பிள்ளைங்க வேற… கவனமாப் பார்த்துக்கணும். முடியலடி… இப்ப உனக்கு வேற என்னால தொந்தரவு.”
மலர்விழி சமாதானப்படுத்தினாள். “சும்மா இருக்கா… எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை. பொம்பளைக்கு பொம்பள இதுகூட செய்ய மாட்டோமா? சேலையில இருக்கிற கறையைப் பத்தி எல்லாம் யோசிக்காதக்கா. இவங்களுக்கு இந்தக் கறையும், சோர்வும் அவ்வளவு கடுப்பா இருந்தா, சடங்காகாத பிள்ளையை அவங்க மகன்களுக்கு கட்டிவைக்க வேண்டியதுதானே? அதைச் செய்வாங்களா? மாட்டாங்க. ஆணாப் பிறந்தாலும் நானும் எப்பவும் மனசாலயும், இப்ப உடம்பாலையும் பொண்ணுதானக்கா? உன் கஷ்டம் எனக்குப் புரியும்.”
பேசிக்கொண்டிருந்தபோதே ஐம்பதுகளில் இருந்த ஒரு பெண், மலர்விழியிடம் பத்து ரூபாயைக் கொடுத்து, “ஆசீர்வாதம் பண்ணுங்க… உங்க கையால ஒரு ரூபா குடுங்க” என்று கேட்டார். “நீங்க எல்லாம் நித்திய சுமங்கலி! உங்க ஆசீர்வாதத்தில் தான் என் குடும்பம் செழிக்கணும்” என்றார்.
அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் மலர்விழிக்குப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு முறை மலர்விழி பெண்கள் கழிவறையை பயன்படுத்தச்சென்றபொழுது, “இவங்களையெல்லாம் பெண்கள் கழிவறைக்கு விடக்கூடாது” என்று இதே அம்மாள் கழிவறை காப்பாளரிடம் சண்டை போட்டது, மலர்விழிக்கு மறக்கவேயில்லை. பாலியல் சீண்டல்களுக்குப் பயந்து, அவள் ஆண்கள் கழிவறைக்கும் செல்வதில்லை. இதைச் சொல்லி விளக்கியபோதும் இந்தப் பெண்மணி கழிவறைக்குள் விடவே இல்லை. வயிறு வலிக்க சிறுநீரை அடக்கிக்கொண்டே வீடு வந்து சேர்ந்ததை மலர்விழி மறக்கவேயில்லை.
குழந்தைகள் வேண்டும்; ஆனால் பீரியட்ஸ் தீட்டு. ஆசீர்வாதம் வேண்டும்; ஆனால் திருநங்கையர் பெண்கள் கழிவறைக்குள் வரக்கூடாது. மலர்வழிக்கு ஒரு நொடியில் இந்த எண்ணங்கள் வந்து போயின. அந்த அம்மா நீட்டிய பத்து ரூபாயை அவர் கையிலேயே திரும்பக் கொடுத்து, பின் தன் பர்ஸிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்த அம்மாளிடம் கொடுத்து, “நல்லா இருங்க” என்றாள். பிறகு ஒரு விசிட்டிங் கார்டை அந்த அம்மாளிடம் கொடுத்து, “இது என்னோட பிசினஸ் கார்டு. அட்ரஸ், போன் நம்பர் இருக்கு. முளைப்பாரி வளர்க்க, கேட்டரிங் ஆர்டர் இருந்தா கூப்பிடுங்க” என்றாள்.
அந்தப் பெண்மணி போன பிறகு மீனாட்சி கேட்டாள், “ஏண்டி அந்த பொம்பளைக்கு ஆசீர்வாதம் பண்ணுன? எவ்வளவு திமிரு இருந்தா பத்து ரூபாயை நீட்டி இருப்பா? ஆசிர்வாதம் கேட்கிறவ மரியாதையா, பணிவா கேட்க வேண்டியதுதானே? அது என்ன காசை நீட்டி கேட்கிறது?”
மலர்வழி மிக அமைதியாக, ஆழமான குரலில், “இதுக்கே கோவப்படுறியே! இவங்கதான் என்னைய பெண்கள் கழிவறைக்குள்ள விடக்கூடாதுன்னு சண்டை போட்ட புண்ணியவதி! குடிகாரப் பயலுக, வெறி பிடிச்ச பயலுககிட்ட சிக்கிறக்கூடாதுன்னுதான் ஆண்கள் கழிவறை பக்கம் போவது இல்லைனு எவ்வளவோ கெஞ்சியும் அன்னிக்கு இந்த அம்மா போகவே விடல! வயித்து வலியே வந்துருச்சு” என்றாள்.
மீனாட்சிக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேறியது. சும்மாவே கால், தொடை முழுவதும் நசநச, பிசுபிசு, பச்சக் பச்சக் என்று ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது. பையில் இருந்து எடுத்து இரண்டு முறை பெர்ப்ஃயும் அடித்துக்கொண்டபோதும் குப்பென்ற ரத்தக்கவுச்சி வியர்வை வாடையிலும் தெரிந்ததுபோல் இருந்தது. வெந்நீரில் மிகச் சுத்தமாகக் குளித்துவிட்டு, சுத்தமான காட்டன் உடைகளைப் போடவேண்டும்போல இருந்தது. வீட்டுக்குப் போகும்வரை கழிவறையும் பயன்படுத்தமுடியாது. பொதுக்கழிப்பறையும் சிறுநீர்த் தொற்றும் எல்லா இந்திய பெண்களைப் போலவே மீனாட்சிக்கும் அனுபவப்பாடம். இந்த கசகசப்பில் மலர்விழி கூறியது மேலும் ஆத்திரமூட்டியது. “இந்த லட்சணத்துல இருக்குற மட்டமான கழிப்பறையிலகூட ஒருத்தி அவசரம்னு சொல்லியும் இந்த பொம்பளை விடலன்னு சொல்ற… அவளுக்கு ஆசீர்வாதம் பண்ற? போடி… கூறுகெட்டவளே!” என்றாள் ஆற்றாமையுடன்.
மலர்விழி, “நீ கோபப்படாதே அக்கா. எனக்கு மனுஷங்களோட சில்லறைத்தனம் பழகிப்போச்சு. அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டு இருந்தாதான் நான் ஆச்சரியப்பட்டு இருப்பேன். அவங்களுக்கு என்னை இப்ப அடையாளம்கூடத் தெரியல; போற போக்குல ஒரு செடியில் இருக்கிற பூவை பிச்சு போட்டுட்டுப் போற மனுஷன் மாதிரி ரொம்ப இயல்பா என்ன காயப்படுத்தி இருக்காங்க. இந்த இயல்பு தான் அக்கா இந்த சமுதாயம். இதை நான் தூக்கி சுமக்கிறதவிட, உன்ன மாதிரி அருமையான மனிதர்களை, அவங்க நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள விரும்புகிறேன் அக்கா. அதுதான் என் மன நலத்துக்கு நல்லது” என்றாள். மீனாட்சிக்கும் அது சரி என்று பட்டது. கசகசப்பல்லாம் போய் மனம் சில்லென்று ஆனது.
மீனாட்சி ரொம்ப சுவாதீனமாக, “ஆமாடி… மன நலம்தான் முக்கியம். நாம ஜாலியா பேசுவோம். இந்த ஹார்ட் பீட் சீரிஸ்ல கார்த்திக் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காருல; அலைபாயுதே படத்துல பார்த்த மாதிரியே இருக்காரு” என்றாள். மலர்விழி சிரித்துக்கொண்டே, “நீ நைன்ட்டீஸ் கிட் கா! அதான் உனக்கு கிளீன் ஷேவ், நல்லா படிச்ச டாக்டர் கார்த்திக் பிடிக்குது; எங்களுக்கெல்லாம் அர்ஜுன்தான் பிடிக்குது. நல்ல தாடி வச்சு, முரட்டு பையனா…” என்று அடுக்கியவளை, “போடி! போய் முளைப்பாரிக்கு விரதம் இரு! என்றாள் மீனாட்சி சிரித்தபடி. இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே நடையை எட்டிப் போட்டார்கள்.
படைப்பாளர்
மாஷா
வாசிக்கப்பிடிக்கும். உலக இலக்கியங்கள் பிடிக்கும். ஆங்கிலப் பேராசிரியர். விகடன் மாணவ பத்திரிக்கையாளராக 2007-08 ஆண்டுகளில் பணியாற்றியிருக்கிறார். வாழ்க்கை புரட்டிப்போட்டு அடித்தாலும், ஆசுவாசம் தருவது இலக்கியம். 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்தச் சிறுகதை மூலம் தன் எழுத்தைத் தொடர்கிறார்.


