Site icon Her Stories

அர்த்தமற்ற கவிதைகள்

உறங்கி விழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களும் உறங்காமலேயே விடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் உற்சாகத்தில். இரண்டாம் நாள் குழப்பத்தில். ஏன் அவள் அப்படி நடந்துகொண்டாள்? இருபத்து நான்கு மணி நேரம்  இடைவிடாமல் யோசித்தபோதும் விடை தெரியவில்லை. அவளை நேரில் பார்த்து இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகிறது.

 சென்ற வாரத்தில்  அலமாரியைச் சுத்தம் செய்தபோது தற்செயலாக  பள்ளிப்பருவத்தில் பத்தாம் வகுப்பு பிரிவு உபசார விழாவின்போது வகுப்பில் உடன்படித்த அனைவரிடமும்  வாங்கிய முகவரி தொலைபேசி எண் குறிக்கப்பட்ட சிறிய அளவிலான நாட்குறிப்பு கிடைத்தது. ஆச்சரியம்தான், எதையெதையோ எங்கெங்கோ எப்படியெல்லாமோ தொலைத்துவிட்டதற்கு இடையில் இருபத்தைந்து ஆண்டுகளாக அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தது. அதன் அட்டைப்பக்கத்தின் அடுத்த பக்கத்தில் அவளுடைய பெயரும் என்னுடைய பெயரும். நடுவில் இதயமும் அம்பும் வரையப்பட்டிருந்தது. வரைந்தது நான் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாட்குறிப்பில் மட்டும் அல்ல. அவள் பெயருக்கான மூன்று எழுத்துகளை நான் பதிவிடாத மதில் சுவர்களோ மரக்கிளைகளோ மேசைகளோ இருந்திருக்கமுடியாது. பள்ளியில் மட்டுமல்ல. என்வீட்டுச் சுவரோடு  பக்கத்து வீட்டுச் சுவரையும் விட்டுவைக்கவில்லை நான். அவள்மீது அப்படியொரு அன்பு செலுத்த காரணமாக இருந்தது எது என்று அவளுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. இப்போது நினைத்தால் பதின்பருவத்தில் நான் ஓவியம் வரைய முயன்று அது கிறுக்கல் ஆகிவிட்ட கதை என்று புரிகிறது.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் முதல்முதலில் அவளைப் பார்த்தேன். சுண்டியிழுக்கக்கூடிய நிறமோ குப்புறவிழச் செய்யும் அழகோ மிரட்டிவிடும் உடலமைப்போ இல்லை. சாதாரணமாக எல்லோரையும்போல் மாநிறம். கோலவடிவ முகம். போதுமான அளவு முடி. வியர்த்ததும் கரைந்துவிடுகின்ற முகப்பூச்சு. கலைந்திடாத சிறிய மெருன் நிற ஸ்டிக்கர் பொட்டு. வகுப்பிற்குள் நுழைந்த முதல்நாள் எல்லோரையும் பார்த்து புன்னகைத்தாள். எல்லோரிடமும் பேசினாள். என்னைத் தவிர்த்து. நான் மட்டும்  உனக்கு எந்தவிதத்தில் குறைந்துவிட்டேன் என்று நானும் அவளைப் பார்த்து புன்னகைக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அவளைத் தவிர்த்து அனைவரிடமும் பேசினேன்.  இருவரின் புறக்கணிப்புகளும் பிடிவாதங்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. ஓராண்டு முடியும் வரை இப்படித்தான் நாள்கள் கடந்தன. அவள் என்னைப் பார்க்கிறாளா? பார்க்காமல் புறக்கணிக்கிறாளா? என்று தெரிந்துகொள்ள அவளுக்குத் தெரியாமல் அடிக்கடி நான் பார்த்ததுண்டு. ஆனால் ஒருபோதும் அவள் என்னைப் பார்த்ததாக நினைவில்லை.

நாளடைவில் அவளுடைய அப்பாவின் பெயர் அறிய நேர்ந்தது. அவர் பெரிய வியாபாரி. அவளுடைய ஊரிலேயே அவள்வீடு மட்டுமே தளம் ஒட்டப்பட்ட மாடிவீடு என்று. ஆனால் அதற்கான எந்தவித பகட்டும் அவளிடம் வெளிப்பட்டதே இல்லை. சாதி மதம் இன வேறுபாடு கடந்து பாரபட்சம் இல்லாமல் பழகுகின்ற அவளுடைய குணம் எனக்கு பிடித்தது. புதிய திரைப்படப் பாடல்களை ஒருவரி விடாமல் பாடுவாள். அப்படியொரு மனப்பாடத்திறன். சங்கீதம் படிக்கவில்லை. ஆனாலும் கேட்கும்படி பாடினாள். வகுப்பிற்கு ஆசிரியர்கள் வராத நேரங்களில் அவள் பெஞ்சியின்மீது அமர்ந்து பாடிக்கொண்டே இருப்பாள். நான் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு மானசீகமாக ரசித்துக்கொண்டிருப்பேன். அவள் வீட்டில் அப்போதே தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி இருந்தது. அதனால் திரைப்படம் வெளியாகி நான் பாட்டுப்புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்து பாடுவதற்குள் அவள் முழு பாடலையும் பார்க்காமல் பாடிவிடுவாள்.

முன்பு படித்த பள்ளியில் நான்தான் பெரிய இசைமேதை. பாடினால் ரஜினி நடித்த திரைப்படப் பாடல்கள் மட்டும்தான். அதற்காக  எனக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்ததில் இருந்து அவள் பாடுகிறாள்; நான் கேட்கிறேன்.

 பாட்டுப் பாடுவதில்  மட்டுமல்ல, பாடத்திலும் அவள்தான் முதல் மதிப்பெண் பெற்று வந்தாள். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கு முன்புவரை என்னுடைய பள்ளியில் நான்தான் அனைத்திலும் முதல் மதிப்பெண். ஆனால் இந்தப் பள்ளிக்கு வந்தபின் தமிழ் மற்றும் அறிவியல் பாடத்தில்தான் அவளுக்கு இணையான மதிப்பெண்களைப்  பெற்றேன். அவளுக்கு கணிதம் நன்றாக வரும்.  அவள் பிரைவேட் டியூசனுக்குச் சென்றாள். எங்களுக்கு எப்போதாவது தான் பள்ளியில் கணித வகுப்பு நடக்கும். அதனால் சில தேர்வுகளில் நான் கணிதத்தில் தேர்ச்சி பெறாமல்கூட இருந்ததுண்டு. வகுப்பில் உள்ளவர்கள் எல்லோரும் அவளிடம் கணக்குப்பாடம் கற்றார்கள். நான் அவளிடம் ஒருமுறைகூட, சிறு சந்தேகம்கூடக் கேட்டதில்லை. அதற்கு என் கௌரவம் சம்மதிக்கவில்லை.

சமூக அறிவியல் ஆசிரியருக்கு மிகவும்  பிடித்த குழந்தை அவள். அதனால் அவள் ரௌலட் சட்டத்திற்குப் பதிலாக சிப்பாய்க் கலகம் எழுதினாலும் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்தில் குறித்தாலும்கூட முழு மதிப்பெண் போடுவார். நான் சரியாகவே எழுதியிருந்தாலும்கூட மதிப்பெண்களைக் குறைத்திருப்பார். அவருக்கு யார் என்ன மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதைவிட, அவள் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆங்கில ஆசிரியருக்கு நான்தான் செல்லப்பிள்ளை. அதற்காக கடினப்பட்டு முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்றெல்லாம் நான் ஒருபோதும் நினைத்ததில்லை; படித்ததுமில்லை. பலநாள்கள் வகுப்பில் நானும் ஆசிரியரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். ஒருநாளும் அவர் என்னைப் பிடித்ததில்லை. நான் பேசும் எகத்தாளம், செய்யும் இடக்கு மடக்கு, குறும்புத்தனம் அனைத்தையும் வகுப்பில் இருந்தவர்களோடு அவரும் ரசித்தார். அவளும் ரசித்தாளா என்பது எனக்குத் தெரியாது.

பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வில் தமிழிலும் அறிவியலிலும் அவளைவிட நான் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் கூடுதலாகப்பெற்றேன். இரண்டு ஆசிரியர்களும் என்னை வாழ்த்தினார்கள். கணிதத்தில் அவள் முதல் மதிப்பெண். நான் வெறும் பதினான்கு மதிப்பெண்கள் மட்டுமே வாங்கியிருந்தேன். நீயெல்லாம் கழுதை மேய்க்கத்தான் லாயக்கென்று ஏகபோகமாக புகழ்ந்தபடி ஆசிரியர் விடைத்தாளை என்முகத்தில் விட்டெறிந்தார். எல்லோருடனும் முதல்முறையாக அவள் என்னைப் பார்த்ததை நான் பார்த்தேன். அவள் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன. காரணம் அறிந்ததும் வகுப்பு முடிந்தவுடன் சிறு தாளில் நான்கு வரிகள் எழுதி அவள் தோழியிடம் கொடுத்துவிட்டேன். நேரில் சென்று பேசுவதற்கு என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. படித்துவிட்டு என்னை ஏதோ புழுதிக்கிடையில் புரியாமல் பார்த்தபடி கண்களைக் கசக்கினாள்.

 ‘மதிப்பெண் ஒருபோதும் நம் அறிவை உயர்த்திவிடாது. வளர்ச்சியைத் தடுத்துவிடாது. குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வருந்தாதே? இப்போதும் நீதான் வகுப்பில் முதலிடம். இறுதிவரை உன்னை முந்துவதற்கு நான் முயற்சி செய்யமாட்டேன்.’

படித்துவிட்டு திருப்பியனுப்பினாள். வகுப்புகள் முடிந்து வழக்கம்போல் அவளைப் பின்தொடராமல் நானும் என்னைப் பின்தொடராமல் அவளும் கடந்துசென்றோம். அவள் மீது இரக்கமும் அனுதாபமும் கூடியது. ஆனாலும் அவளிடம் பேசும் அளவிற்கு தரம் தாழ்ந்துபோக  நான் தயாராக இல்லை.

சில மாதங்கள் கடந்த நிலையில் அவளுக்கு நாளை மறுநாள் பிறந்தநாள் என்று வகுப்பில் பேசிக்கொண்டார்கள். அவளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அவளுடைய அன்பான குணமும் தனித்துவமான பண்பும் எல்லோரையும் நேசிக்க வைத்ததைப்போல்தான் என்னையும் அன்புகொள்ளச் செய்தது. வழக்கம் போல் காலையில் அவள்தான் முதலில் வகுப்பிற்கு வந்தாள். அவள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகில் ஒரு சிறு துண்டுத்தாளை வைத்துவிட்டு என்வரிசையில் அமர்ந்துகொண்டேன். அதை அவள் உடனே பிரித்துப்பார்த்தாள்.

‘உன்னால் உச்சரிக்கப்படாத  வார்த்தைகள் மௌனமாய் என்னோடு உரையாடிக்கொண்டே இருக்கின்றன, இரவு பகல் பாராமல். பதிலுக்கு நானும் மௌனமாய்க் கடந்துசென்றாலும் என்மனம்  உன்னுடன் பேசவிரும்புகிறது.’

படித்துவிட்டு என் மேசைக்கு அருகில் வைத்துவிட்டு அமைதியாக நடந்தாள். ‘என்னவிட ரொம்ப திமிர் பிடிச்சவளா ராங்கு பண்றா. இதுக்கு தான் இவகிட்ட நேர்ல போய் பேச ட்ரை பன்னி அசிங்கப்பட நெனைக்கல’. வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கத்திற்கு மாறாக நான் அவளைப் பின்தொடர்ந்து சென்றேன். அவள் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டே அவளுடைய நண்பர்களோடு அவளும். என்னுடைய மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டே என் நண்பர்களுடன் நானும். அன்றுதான் முதன்முதலில் அவளுடைய டியூசன் இருக்குமிடத்தை அறிந்தேன்.

ஒரு வீட்டின் மாடியில் பெரிய விளம்பரப்பலகையில் ஐன்ஸ்டீன் டியூசன் செண்டர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒருவேளை உள்ளே நுழைபவர்கள் எல்லாம் வெளியே வரும்போது அறிவியல் விஞ்ஞானிகளாக வருவார்களோ என்று தோன்றியது எனக்கு. சைக்கிளை வெளியே நிறுத்தி பூட்டிவிட்டுத் திரும்பியவள் நான் நிற்கிறேனா என்று பார்த்தாள். அவள் என்னைப் பார்ப்பதை அவளுக்குத் தெரியும்படியாக நானும் பார்த்தேன். அந்தப் பார்வைக்கு அர்த்தம் ‘நீலாம் எனக்கு சப்ப மேட்ரு’ என்று அலட்சியப்படுத்துவதாக இருந்தது. அவள் மாடிப்படியேறி உள்ளே சென்றாள். அதுவரையில் நான் சென்றிடாத கடைவீதிக்குச் சென்று அங்குள்ள கிஃப்ட் ஷாப் ஒன்றில் நுழைந்து, அங்கிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளின் அட்டைப் படத்தையும் அதனுள் அச்சிடப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களையும் ஒன்றுவிடாமல் படித்துவிட்டு, எனக்கு நிறைவாக இருந்த ஒரு வாழ்த்து அட்டையை வாங்கிவந்தேன்.

விடியும் வரையில் பொறுமையில்லை. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்த வாழ்த்து அட்டைக்குள் அச்சிடப்பட்டிருந்த ஃப்ரம் டூ வில் அவளுடைய பெயரையும் என்னுடைய பெயரையும் வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான நிறங்களில் செதுக்கியதைப்போல் வரைந்து எழுதினேன். வாசகம் அச்சிடப்பட்டிருந்த பின்பக்கம் வெற்றிடமாக இருப்பது தெரிந்தது. எழுதினேன்.

‘நீ முதன்முதலில் பிறந்தநாள் அன்று உன்னைப் பெற்றோர்களும் உன் உறவினர்களும் மகிழ்ந்திருப்பார்கள். இன்று உன்பிறந்தநாளில் நான் மீண்டும் புதிதாய்ப் பிறந்திருக்கிறேன்.’

அதனுடன் வாங்கி வைத்திருந்த டைரி மில்க் சாக்லேட்டையும் இரண்டு இலைகள் மட்டும் இருந்த காம்புடன் கூடிய சிவப்புரோஜாவையும் இணைத்து வைத்தேன். அன்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளங்களாக அன்றையத் திரைப்படங்கள் அனைத்தும் அப்படித்தான் காட்சிப்படுத்தின. ‘உன்ன நான் எதிரியா பார்க்கல. எல்லாரையும் மாரி எனக்கும் உன்ன புடிக்கும்’ என்று சொல்லி பிறந்தநாள் வாழ்த்து கூறவேண்டும் என்பதுதான் திட்டம்.

வழக்கமாக அவள் வரும் நேரம் கடந்து முதல் மணிநேர அறிவியல் வகுப்பு தொடங்கியிருந்தது. நான் பாடத்தைக்  கவனிக்காமல் வாசலையே கவனித்துக்கொண்டிருந்ததை ஆசிரியர் கவனித்துவிட்டார். பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, பெயரைச் சொல்லி அழைத்தார். மிகவும் பிடித்த ஆசிரியர் முதல்முறையாக அறிவுரைத்தார். அதுவரை வகுப்பில் எதற்காகவும் கூனிக் குறுகாத நான் குற்றவுணர்வில் தலைகவிழ்ந்து நின்றேன். நிமிர்ந்து பார்த்தால், அழுவது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் ஆசிரியர் முகத்தைப் பார்க்காமலேயே. ஆசிரியர் என் அருகில் வர முயற்சிக்கும்போது அனுமதி கேட்டு நின்ற அவளுடைய குரல் கேட்டது.

என்மீது இருந்த கோபத்தோடு அவள் மீதிருந்த அக்கறையில் தாமதமாக வந்ததைக் காரணமாக வைத்து ஆசிரியர் அனைவரையும் திட்டினார்.  பிறந்தநாள் அன்று அவளுக்குப் பிடித்தமான ஆசிரியரிடம் திட்டு வாங்குவாள் என்று நினைத்திருக்கமாட்டாள். ஒருவழியாக, ‘டியூசனில் கணிதத் தேர்வு. கணித ஆசிரியர் வர நேரம் ஆகிவிட்டது. அதனால்தான் நானும் லேட்’ என்று சொல்லி முடித்துவிட்டு அவளுடைய வரிசையில் அமர்ந்தாள். அன்று எப்படியாவது வாயைத் திறந்து அவளிடம் நேரடியாகப்  பேசி அவளுக்கு வாழ்த்து சொல்லிவிடவேண்டும் என்று நினைத்த என் எண்ணம் ஈடேறாமல் போனது.

மதிய உணவு இடைவேளையின்போது அவள் கைகழுவச் சென்ற நேரத்தில் அவள் பையின் மீது வைத்துவிட்டேன். அதைப் பார்த்த  அவள் என்னைத் திரும்பி முறைத்தாள். அதற்கு என்ன அர்த்தம்  என்று புரியவில்லை. பாடவேளை தொடங்கியது. வழக்கம்போல் அன்றைய வகுப்பு முடிந்து அவள் வெளியே சென்றாள். நான் அவளைப் பின்தொடராமல் விலகி நடந்தேன்.

அடுத்த இரண்டு நாள்களில் அரையாண்டுத் தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன. தமிழ் ஆங்கிலம் அறிவியல் மூன்று பாடங்களிலும் இருவரும் ஒரே மதிப்பெண். கணிதத்தில் அவள் முதல் மதிப்பெண். நான் இருபத்தைந்து மதிப்பெண் பெற்று தோல்வி. அப்பொழுதும் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்போதும் போல் இயல்பாக இருந்தேன். அவள் என்னை ஏதோ ஒருவித மனோபாவத்தில் பார்த்தாள். நான் கண்டுகொள்ளாமல் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

பாடத்தொடங்கினாள். ‘தீவானா! தீவானா! நெஞ்சை நனைத்தவன் நீதானா?’ திடீரென நடுவில் ஏதோ புரியாத பாஷையில் பாடினாள். ‘பெரிய வடநாட்டுக்காரி தமிழ் பாட்டு பாடாம இந்தி பாட்டு பாடுறா. சரியான சீன் பார்ட்டி சைனா பேட்டரி’ நான் கொடுத்த ரன்னிங் கமெண்ட் நாலு பேர் வழியாகக் கடந்து அவள் காதுக்கு சென்றது. “தைரியம் இருந்தா என்முகத்துக்கு நேரா நின்னு பேசனும் அதவிட்டுட்டு பிட்டு பேப்பர்ல துண்டுத்துண்டா பேசறது பின்னாடி பேசறதெல்லாம் வேணாம் சொல்லிட்டேன்” மிகவும் சாதாரணமாகத்தான் சொன்னாள். அவள் சொல்லி முடித்துதான் தாமதம். என்னைச் சுற்றியிருந்தவர்கள் உசுப்பேற்றினார்கள். “அவ உன்ன வேற எதாவது விதத்துல கொறச்சி சொல்லிருந்தாகூட பரவால்லனு  நாங்க கம்முனு இருப்போம். போயும் போயும் உன்னோட தைரியத்தப் பத்தி தெரியாம பேசிட்டா. இதுக்கு முன்னாடி படிச்ச ஸ்கூல்ல மூனு வருசமா எப்பவும் நீதான் குத்துச்சண்டையில ஜெயிப்ப. அஜி, விஜி,  ஜகா எல்லாம் உங்கிட்ட தோத்து  ஓடுவாங்க. அதெல்லாம் இவளுக்குத் தெரியல இப்பவே நீ யாருனு அவளுக்குக் காட்டனும். நாங்க அதப் பாக்கனும்”.

ஒன்றரை வருடமாக இருக்கிற இடம் தெரியாமல் இருந்த எனக்கு கைகளும் கால்களும் பரபரத்தன. முன்பு படித்த பள்ளியின் வழக்கத்தின்படி வலது கையின் நான்கு விரல்களையும் மடக்கி கட்டை விரலை ஆள்காட்டி விரலுக்குள் பொருத்தி மொத்த பலத்தையும் முறுக்கேற்றிக்கொண்டு அவளுடைய இடதுபுறத் தோள்பட்டையில் குத்தினேன்.

கண்ணிமைப்பதற்குள் அவள் சாய்ந்து கீழே விழுந்தாள். என்னுடன் இருந்தவர்கள் எல்லோரும் கை தட்டினார்கள். வகுப்பறையில் அதுவரை பார்த்திடாத பேரமைதி. நான் பெரிய யுத்தத்தில் வென்றுவிட்ட களிப்பில் முஷ்டியை உயர்த்தி என் வீரத்தை நிலைநாட்டினேன். நான் பார்த்த திரைப்படங்கள் எல்லாம் தைரியத்தை அப்படித்தான் படம்பிடித்துக் காட்டின. அவள் எதிர்பாராத அந்தத் தாக்குதலில் இருந்து நிதானித்து எழுவதற்கு சில நாள்கள் தேவைப்பட்டன.

 அந்த சம்பவத்திற்கு பிறகு அவள் தெரியாமல்கூட என் பக்கம் பார்வையைச் செலுத்தவில்லை. என் மனதில் சொல்ல முடியாத குற்றவுணர்வும் துக்கமும் படிந்திருந்தது. மீண்டும் ஒரு துண்டு சீட்டை அனுப்பினேன். அவள் பார்க்கவில்லை. மீண்டும் மீண்டும் அனுப்பினேன் அவள் பார்க்கும்வரை. இறுதியாக அனுப்பியதை அவள் பிரித்துப் படித்தாள்.

‘உன்னைக் குத்தி சாய்த்தது கைகள் என்றாலும் குற்றவுணர்வில் வருந்திக் கொண்டிருப்பது  இதயம். உனக்கு உண்டான காயம் ஆறிவிட்டது. என் மனம் ஆறாத ரணமாகிவிட்டது. எல்லாத்துக்கும்  SORRY’

அவள் திரும்பிப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள். துண்டு சீட்டில் இருந்த வாசகங்கள் நீலம் கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்படவில்லை. என் இடதுபக்கத்து கையில் பிளேடால் கிழித்து வந்த ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அவள் அதைக் கிழித்து எறிந்துவிட்டு வலதுகையின் கட்டைவிரலை என்னை நோக்கி நீட்டினாள். நான் புன்னகைத்தேன். பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள். இருவரும் பேசிக்கொள்ளாமல் மௌனமாய் விடைபெற்றோம். அவள் முதலில் பேசாதபோது நான் மட்டும் எப்படி பேசுவது? அப்போதும் சுயகௌரவம் தடுத்தது.

ஒரு வாரத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. அப்போதுதான் முதன்முதலில் கணித ஆசிரியர் என் மொத்த மதிப்பெண் பட்டியலைப் பார்த்தார். கணிதம் தவிர்த்து மற்ற பாடங்களில் எல்லாம் எண்பதுக்கு மேல் வாங்கியிருந்தேன். அடுத்த ஒருவார வகுப்பில் எந்தெந்த பகுதிகளில் எளிதாக மதிப்பெண் வாங்கலாம் என்று என்னைக் கவனப்படுத்திக் கூறினார். பொதுத்தேர்வுக்கு முன்னதான திருப்புதல் தேர்வில் அறுபது மதிப்பெண்கள் பெற்றேன். முதல்முறையாக கணித ஆசிரியர் அனைவருக்கும் முன்பு என்னைப் பாராட்டினார். அவளுடைய பார்வை என்பக்கம் திரும்பியது. அந்த பார்வைக்கான அர்த்தம் எனக்கு விளங்கவில்லை.

அடுத்த வாரத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. ஒவ்வொருவரும் ஒரு நாட்குறிப்பை வைத்துக்கொண்டு அவரவர்களுக்கு பிடித்தவர்களிடம் கையொப்பமும் முகவரியும் பெற்றனர். அவள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அவள் இறுதிவரை கேட்கப்போவதும் இல்லை, பேசப்போவதும் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். என் தோல்வியை ஒத்துக்கொண்டு நான் என்னுடைய நாட்குறிப்பை அவளிடம் நீட்டினேன். அவள் கையொப்பம் முகவரியோடு தொலைபேசி எண்ணையும் குறித்திருந்தாள். வழக்கமான விடைபெறுதலுக்காகக்கூட நாங்கள் இருவரும் கைகளைப் பிடித்து குலுக்கிக் கொள்ளவில்லை. அப்படிச் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றவும் இல்லை.

பொதுத்தேர்வின் இறுதித் தேர்வு முடிந்தது. அவளுக்கும் எனக்கும் ஒரே தேர்வுமையம்தான். அறைகள் வேறுவேறு. அவள் வரும்வரை நான் காத்திருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அவள் என்னைக் கடந்து செல்லவில்லை நின்றாள். “அடுத்து நீ என்ன குரூப் எடுக்கப்போற? எங்க படிக்கப்போற? நான் இதே ஸ்கூல்ல தான் பயாலஜி படிக்கப்போறேன்” முதன்முறையாக என்னிடம் பேசிய அவளைக்  கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“தெரியல. ரிசல்ட் வரட்டும். இந்த ஸ்கூல்ல தமிழ் மீடியம் இல்ல. இங்கிலீஷ் மீடியம்தான். பத்து வரைக்கும் தமிழ்ல படிச்சிட்டு பதினொன்னு பன்னண்டு இங்கிலீஷ்ல படிக்கனும்னா கஷ்டமா இருக்கும். பாஸ் ஆகிடலாம். மார்க் ஸ்கோர் பண்ணமுடியாது” எல்லோரும் அவரவர் மேல் இங்க் தெளித்துக் கொண்டார்கள். நான் என் பையில் ஆயில் தடவி வைத்திருந்த குறும்பைக்காயை எடுத்து அவள் முதுகில் அச்சு வைத்து “என்ன எப்பவும் மறந்திடாத” சொல்லிக்கொண்டே ஓடிவிட்டேன். அதன்பிறகு நான் வேறு பள்ளிக்கூடம். அவள் வேறு பள்ளிக்கூடம். கல்லூரியிலாவது தொடர்வோம் என்று காத்திருந்தோம். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக இரண்டு மூன்று முறை சந்தித்துப் பேசியிருப்போம்.

முதல் சந்திப்பு அவள் வீட்டில். எங்கிருந்து எப்படி அப்படியொரு தைரியமும் துணிச்சலும் வந்ததென்று தெரியவில்லை. குறைந்தது எட்டு கிலோமீட்டர் இருக்கும். பதினொரு மணி உச்சி வெயிலில் ஊருக்குள் நீண்டு வளைந்து சென்ற ஒத்தையடிப் பாதையின் முடிவில் ஊருக்கான வழித்தடமாக அவள் முகவரியில் குறிப்பிட்டிருந்த அம்மன் கோவில். நம்பிக்கை வீண்போகவில்லை. ஊரிலேயே ஒரேயொரு மெத்தைவீடு என்றார்களே நான்காவது தெருவில் உள்ளடங்கியிருந்தது. ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்கு தெருமுனையில் அவளுடைய அப்பாவின் பெயரைக் கூறினேன். அந்த வீடுதான் என்றார்கள். இரும்புக் கேட்டுக்குள் நுழைந்தபோது இதயம் இரண்டு மடங்காக துடித்தது. மூச்சுவிடும் சத்தம் வெளியில் கேட்டது. வயதான பாட்டி தலைக் குனிந்தபடி வெற்றிலைக் கல்லில் பாக்கை இடித்துக்கொண்டிருந்தாள். நான் பாட்டி என்றழைத்து அவளுடைய பெயரைக் குறிப்பிட்டேன். வாஞ்சையோடு உள்ளே அழைத்தாள், பெயர்த்தியின் பெயரைக் கூப்பிட்டபடி.

வெளியே வந்து பார்த்தவள் அதிர்ச்சியில் அசையாமல் பேச்சின்றி ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள். அவள் பெற்றோர் உள்ளிருந்து வந்தார்கள். என் ஊரையும் பெயரையும் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினாள். அவர்கள் தனியாக நான் அவ்வளவு தூரம் சைக்கிளில் சென்றதை அறிந்து அதிசயித்தார்கள். “ஏன் அவள் தினமும் சைக்கிளில்தானே  பள்ளிக்கு வருகிறாள்” சாதாரணமாகக்  கேட்டேன். “இல்லை டியூசனிலிருந்து பள்ளிக்கு வருவதற்கு மட்டும்தான் சைக்கிள். வரும்போது அங்கேயே விட்டுவிட்டு பஸ்ஸில்தான் வீட்டுக்கு வருவா”. அப்போது தான் என் சாதனையின் கனம் தெரிந்தது. “அது பரவால்ல. எனக்கு இதலாம் பெரிய விஷயம் இல்ல”. அவளுடைய அக்காவிடமும் பக்கத்து வீட்டுத் தோழியிடமும் புருவங்களை மேலுயர்த்தி கண்ஜாடையில் ‘கவிதை’ என்று மெல்லிய குரலில் கூறினாள். அவளுடைய அம்மா கொடுத்த கூல்ட்ரிங்க்ஸைக் குடித்துவிட்டு இளைப்பாறிய திருப்தியோடும் அவளைப் பார்த்த மகிழ்ச்சியோடும் விடைபெற்றேன். நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பொதுத்தேர்வு முடிந்த ஒரு மாத இடைவெளியில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

அவள் சொன்னதுபோலவே அதே பள்ளியில் பயாலஜி இங்கிலீஷ் மீடியத்தில் சேர்ந்துபடித்தாள். நான் கணிதமே இல்லாத பாடப்பிரிவு எந்தப் பள்ளியில் இருக்கிறது என்று தேடி வேறொரு பள்ளியில் பயின்றேன். இரண்டாண்டுகளுக்கு இடையில் அவளை இரண்டு முறை சந்தித்திருப்பேன். ஏதோவொரு காரணமாக எனக்கு வகுப்புகள் அரைநாளோடு முடிந்தபோது வேகமாக சைக்கிள் மிதித்துவந்து அவளைப் பார்த்து ஐந்து அல்லது பத்து மணித்துளிகள் பேசிய ஞாபகம்.

ஒருவழியாக இரண்டு ஆண்டுகள் கடந்து கல்லூரி சேர்க்கைக்காகக் காத்திருந்தோம். அவள் பத்தாம் வகுப்பு ரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு பதினொன்று பன்னிரண்டாம்  வகுப்பில் இங்கிலீஷ் மீடியத்தில் படித்ததனால் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. அதனால் அவள் எதிர்பார்த்த பாடப்பிரிவு எதிர்பார்த்த அரசு கல்லூரியில் கிடைக்கவில்லை. நான் தமிழ் மீடியத்தில் படித்ததனால் அவளைவிட அதிகமான மதிப்பெண் பெற்று விரும்பிய கல்லூரியில் விருப்பமான பாடப்பிரிவில் சேர்ந்தேன். மூன்று மாத காத்திருப்புக்கு பிறகு கடைசிச் சுற்றுக்கான கலந்தாய்வுக்கு வந்திருந்தாள். பிரெஞ்சு இந்திய ஏகாதிபத்திய  உடன்படிக்கை சதித்திட்டத்தினால் பாண்டிச்சேரியின்  மத்தியில் இருந்தாலும் தமிழ்நாடு குடியிருப்பின்கீழ் நிராகரிக்கப்பட்டாள். வேறு வழியின்றி புதிதாக தொடங்கப்பட்ட தனியார் கல்லூரியில் அவளுக்குப் பிடித்தமான கணிதப் பிரிவில் சேரப்போவதாகச் சொன்னாள். அதுதான் நாங்கள் இருவரும் இறுதியாக  சந்தித்துக்கொண்ட சந்திப்பு.

நானும் அவளும் பேசத் தொடங்கியபோது பேசுவதற்கு  வாய்ப்பு கொடுக்காமல் காலம் எங்களை இருவேறு திசைகளில் பயணிக்கச் செய்தது. ஒருமுறை எஸ் டி டி பூத்திற்குச் சென்று ஐந்து நிமிடங்கள் தொலைபேசியில்  பேசினேன். முப்பது ரூபாய் வாங்கினார்கள். என்னுடைய இரண்டு மாத சேமிப்புத் தொகை அது. அத்துடன் அவளோடு பேச வேண்டும் என்ற ஆசை  அஸ்தமனமாகிப் போனது. அதன்பிறகு அவளைப் பற்றி நானும் என்னைப் பற்றி அவளும் தேடுவதற்கு முயற்சிக்கவில்லை.

இடையில் எட்டாண்டுகளுக்கு முன்பு அலைபேசியில் அளவளாவிய நினைவு. அதுவும் இரண்டு மூன்று நாள்கள் தான். வழக்கமான பேச்சுகள்தான்.

“இப்போது என்ன செய்கிறாய்? எங்கிருக்கிறாய்? உள்ளூரிலா? அல்லது வெளியூரிலா? காதல் திருமணமா? பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமா? எத்தனை குழந்தைகள்? தனிக்குடும்பமா? கூட்டுக்குடும்பமா? சாப்பிட்டாயா? எந்த மாதிரியான வேலை? எவ்வளவு சம்பளம்?”

 இதுபோன்ற உரையாடல்கள்தான்.

எனக்குக் காதல் திருமணம் என்று சொன்னேன். அவளுக்கு பெற்றோர் நிச்சயம் செய்த திருமணம் என்று மிடுக்கோடு கூறினாள். எனக்கு இப்போது குழந்தை அவசியம் இல்லை என்றேன். அவள் ‘எனக்கு ஒரு மகன் இருக்கிறான்’ என்றாள், பெருமை பொங்க. நான் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தேன். பதிலுக்கு அவள் என் நிலைமைக்கு வருத்தம் தெரிவித்தாள்.

ஒரு சிறிய புன்னகையோடு முடித்துக்கொண்டோம் உரையாடலை. எனக்கும் அவளுக்கும் எவ்வளவு முரண்பாடு என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின் சில நாள்கள் கைப்பேசியில் குறுஞ்செய்திகளில் பேசினோம். அவள் துண்டுத் துண்டாகப் பேசினாள். நான் பழையபடி துண்டு சீட்டில் பேசியதை போல கவிதையாகப் பேசினேன். பதில் இல்லை. நாளடைவில் அவள்  வேலை காரணமாகத் தொடர்ந்து பேசவில்லை அல்லது வேறு எண் மாற்றியிருப்பாள் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆண்டுதோறும் அவளுடைய பிறந்தநாள் அன்று வாழ்த்து சொல்வதற்காக  அவளுடைய எண்ணைத் தொடர்புகொள்வேன். அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. ஆனாலும் நேரம் கிடைத்தபோதெல்லாம் அவளைப் பற்றிய நினைவுகளையும் பார்த்து பேச முடியாத ஏக்கங்களையும்   கவிதைகளாக ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருந்தேன்.

எதிர்பாராமல் கிடைத்த அந்த நாட்குறிப்பில் அவளுடைய அப்பாவின் எண் குறிக்கப்பட்டிருந்ததை அந்த எண்ணிற்குத் தொடர்புகொண்டு அறிந்துகொண்டேன். நான் யார் என்ற விவரங்களைக் கேட்டறிந்த பிறகு, என் எண்ணை அவர் வாங்கிக்கொண்டார் அவளிடம் தெரிவிப்பதாக. நான்கு நாட்கள் கழித்து என் எண்ணிற்கு அவள் குறுஞ்செய்தி அனுப்பினாள். அந்த எண் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் அவளுடைய பெயரைக் காட்டியது.

பின்பு ஏன் இத்தனை வருஷமாக என்னால் அவளைத் தொடர்புகொள்ள முடியவில்லை? அவள் ஏன் எட்டாண்டுகளாக என்னைத் தொடர்புகொள்ளவில்லை? குழப்பமாக இருந்தது. அதற்குள் அவளிடமிருந்து செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

“எங்கிருக்கிறாய்? என்ன செய்கிறாய்? எத்தனை குழந்தைகள்?”

 “அங்கேயே தான் இருக்கிறேன். அதே வேலைதான். இரண்டு குழந்தைகள்”.

“நீ இப்போது எங்கிருக்கிறாய்? என்ன செய்கிறாய்? எத்தனை குழந்தைகள்?”

“இப்போது சென்னையில். வீட்டில் இருந்து வேலை செய்யவில்லை. ஆபிசுக்குச் செல்கிறேன். ஒரு பையன்தான்”.

“ஏன் இன்னொன்று பெற்றுக்கொள்ளவில்லை? இனிமேல் ஐடியா இருக்கிறதா?”

“இல்லை. இரண்டாவது  குழந்தை வந்தால் முதல் குழந்தையின் மீதான பாசம் குறைந்துவிடும். அதனால் வரும் பாதிப்பை நான் உணர்ந்திருக்கிறேன். எனவே என்னுடைய ஒட்டுமொத்த அன்பையும் என் ஒரே மகனுக்குக் கொடுக்கிறேன்”.

“அருமையான முடிவு. வாழ்த்துக்கள்.”

“உன்னை இத்தனை ஆண்டுகள் எப்படி மிஸ் பண்ணேன் தெரியுமா? உன் ஊரில் இருந்து நம்முடன் படித்த வானதி, சாந்தி இருவரிடமும் விசாரித்தேன். தொடர்பில்லை என்றார்கள்”.

“நீ முகநூலில் இல்லையா? அதில் தேடியிருந்தால் நான் கிடைத்திருப்பேனே”

“இல்லை. அதெல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை”

“ஆபிஸ் முடித்து வீட்டுக்குச் செல்கிறேன். நாளை விடுமுறை. நிறைய பேசுவோம்”

“சரி டேக் கேர் மை டியர், பாய்…”

 உரையாடலை மீண்டும் மீண்டும் படித்தேன். கால்கள் தரையில் ஊன்றாமல் எங்கோ பறப்பதைப் போன்றதொரு உணர்வு. வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கைப்பேசியை எடுத்தேன். இரவு பதினொரு மணி. உறக்கம் வரவில்லை. மனம் மிகுந்த உற்சாகத்தில் பழைய நினைவுகளில் பறந்து திரிந்தது.

 “முடிந்து போன  அன்பை  மீண்டும் தொடர்வதற்கு இருபது ஆண்டுகள் காக்க வைத்தாய். எத்தனையோ கவிதை நூல்களைப் படித்தேன் மனதில் உன்பிம்பத்தை எண்ணி. முன்னமே நீ வருவாய் என்று தெரிந்திருந்தால் முதலில் முகநூலை வாசித்திருப்பேன்.”

பதிவிட்ட மறு நொடியில் “உன்னைக் கொல்லப் போகிறேன். நீ இன்னும் மாறவேயில்லை. அப்படியே தான் இருக்கிறாய்!” பதில் வந்தது.

“உன் கையால் கொல்வதாக இருந்தால் என் இதயம் துடிதுடித்து இறப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியில் வெடிவெடித்து இறக்கும்.”

 “சரி நான் தூங்கப் போகிறேன். நாளை விடுமுறையில் மாவரைக்கணும். துணி துவைக்கணும். இட்லிப்பொடி நுணுக்கணும். மிளகாய்த்தூள் அரைக்கணும். என் நாத்தனார் மகளுக்கு நலுங்கு வைக்கணும். குட் நைட்”

இதற்கிடையில் “இந்த நேரத்தில் ஆன்லைனில் இருக்கிறாயே கணவர் மகன் என்ன செய்கிறார்கள்” என்று பதிவிட்டேன்.

“அவர்கள் இருவரும் தூங்கி ஒருமணி நேரம் ஆகிவிட்டது. நான் பூண்டு உறித்துக்கொண்டே மெசேஜ் அனுப்புகிறேன்.”

“விடியும் வரையில் உறித்தாலும் சரி விடியற்காலையில் உறித்தாலும் சரி நான் உடனிருப்பேன். மறக்காமல் ஒரு செய்தி அனுப்பு. உறக்கத்தில் இருந்தாலும் விழித்துக் கொள்வேன் உனக்காக. உனக்கு தான் வணக்கம். இரவுக்கல்ல”

என்று உரையாடலை முடித்துக்கொண்டேன்.

மணி பன்னிரெண்டைக் கடந்தபோதும் உறக்கம் வரவில்லை. கைப்பேசியை அணைத்துவிட்டு கண்களை இறுகமூடி கடந்தகாலத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் பத்தாம் வகுப்பில்.

இரவு நீண்ட நேரம் விழித்திருந்த சோர்வு தலையை வலிக்கச் செய்தது. விடுமுறையாக இருந்தாலும் செய்ய வேண்டிய வேலைகளை நான்தானே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எழுந்திருக்கச் செய்தது. காலைப்பொழுதிற்கான வேலைகளை முடித்த கையோடு, கைப்பேசியை ஆன்செய்தேன். எத்தனையோ பெயர்களில் எவ்வளவோ செய்திகள் வந்துகொண்டே இருந்தன. அவள் பெயரில் ஏதும் செய்தி வந்திருக்கிறதா என்று கண்ணிமைக்காமல் பார்த்தேன். அவள் பெயரில் ஐந்து செய்திகள் பதிவாகியிருந்தன. மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்திட கண்கள் அகன்றன. விரல் அவள் பெயரில் சொடுக்கித் திறந்தது.

“நீ அனுப்பிய கவிதைகள் அர்த்தமற்றவை”.

“நீ இப்படி என்னிடம் பேசுவது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை”.

 “பள்ளியில் படிக்கும்போது எப்படிப் பேசினாயோ, அப்படியேதான் இப்போதும் பேசுகிறாய்”

“எட்டு வருடங்களுக்கு முன்பும் நீ இப்படித்தான் பேசினாய். அதனால்தான் உன் நம்பரை நான் ப்ளாக் செய்துவிட்டு விலகிச் சென்றேன்”.

“இப்போதும் நீ திருந்தவேயில்லை. ஐ அம் சாரி”

ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை படித்தேன். ஒரே அர்த்தம்தான். உன் கவிதைகள் அர்த்தமற்றவை.

“சரி மன்னித்துவிடு. நான் கவிதையாகப் பேசுவது உனக்கு பிடிக்கவில்லை என்றால் சாதாரணமாகப்  பேசுகிறேன். நான் பேசுவதே உனக்கு பிடிக்கவில்லையென்றாலும் ஒரு பிரச்னையும் இல்லை. உனக்கு விருப்பம் இருந்தால் பேசு இல்லையென்றால் வேண்டாம். உன்மனம் வருந்தியிருந்தால் அதற்காக மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”

பதிவிட்டு இரண்டு மணிநேரம் கடந்தது. இருபத்து நான்கு மணிநேரம் ஆகியது. அவளிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.

அப்போது தான் கவனித்தேன். நான் அனுப்பிய செய்தி போகவே இல்லை. அவளுடைய மகனின் புகைப்படம் இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது.

படைப்பாளர்

ப. அமிர்தவள்ளி

ப. அமிர்தவள்ளி, புதுச்சேரியில் பிறந்து தற்போதுவரையில் அங்கேயே வசித்துவருகிறார். அவர் பயின்ற பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இரண்டு நாவல்கள் வெளியிட்டுள்ளார். முதல் நாவல் ‘செங்கேணி’ 2021ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது பெற்றது. 2024 ஆம் ஆண்டு ‘கால் நனைத்த பொழுதுகள்’ என்ற நாவல் வெளிவந்தது. இரண்டு நாவல்களும் நெய்தல் நிலச் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டவை. குறிப்பாக நெய்தல் நிலப் பெண்களை மையமிட்டவை. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

Exit mobile version