Site icon Her Stories

ஆர்கா பாட்டிகளின் சமூகப் பங்களிப்பு

Photo by Thomas Lipke on Unsplash

“மரபு” என்பது மனிதர்களின் தனித்துவமான பண்பு என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. ஆனால், தீராத ஆச்சரியங்களை தினம் தினம் தந்துகொண்டிருக்கும் அறிவியல், இந்தப் பெருமையையும் உடைத்து எறிந்திருக்கிறது.

“ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் அம்சம் தலைமுறை தலைமுறையாகக் கற்றுத்தரப்பட்டு, அதன் தன்மை பாதுகாக்கப்படுவதே மரபு என்றால், விலங்குகளிலும் மரபு உண்டு” என்கிறார்கள் விஞ்ஞானிகள். கடலுக்கடியில் பேணப்படும் இசை மரபு ஒன்றை ஆர்காக்கள் குடும்பத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆர்கா

ஆர்கா (Killer whale/Orca) என்பது பெருங்கடல் ஓங்கில் (டால்பின்) குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கடல் பாலூட்டி. கறுப்பு வெள்ளையாலான இதன் வழுவழுப்பான உடலைப் பார்த்தாலே இந்த விலங்கை நாம் எளிதில் இனம்கண்டுவிடலாம். இந்த விலங்குகளில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு “வட்டார வழக்கு மொழி” (Family dialect) உண்டு என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஓங்கில், திமிங்கிலம் உள்ளிட்ட கடல் பாலூட்டிகள் க்ளிக், விசில் போன்ற சிறு சத்தங்களைக் கோர்வையாக்கி இசை போன்ற ஒரு ஒலியை எழுப்பும் என்பதும், அதை வைத்தே அவை தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், ஆர்காக்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தனி மொழி உண்டு. தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது இவை அந்த மொழியை இசைப்பாடலாக்கிப் பயன்படுத்துகின்றன. மற்ற நட்புக்குடும்பங்களோடு பேசும்போது இவை ஆர்காக்களின் பொது மொழி ஒன்றைப் பயன்படுத்துகின்றன! இந்த மொழி, பிறக்கும் குட்டிகளுக்குக் கற்றுத்தரப்பட்டு தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படுகிறது.

ஆர்கா குட்டி ஒன்று கூட்டத்திலிருந்து தொலைந்துபோய், “குடும்பப் பாடல்” மூலம் மீண்டும் தன் குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதாக ஒரு திரைக்கதையைக் கற்பனை செய்துகொள்கிறேன்.

மேட்ரிலைன்

கற்பனையை விட்டுவிட்டு ஆர்காக்களின் குடும்ப அமைப்புக்குத் திரும்புவோம். ஆர்காக்களின் சமூக அமைப்பு சற்றே சிக்கலானது. அதில் பல படிநிலைகள் உண்டு. ஆர்காக்கள் தாய்வழி மற்றும் தாயுரிமை சமூகமாக (Matriarchial and matrilineal) இயங்குகின்றன. ஆர்கா குடும்பங்களுக்குக் குடும்பத் தலைவன் கிடையாது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆர்காதான் தலைமைப் பொறுப்பில் இருக்கும். தலைமைப் பெண் ஆர்காவின் மகன்கள், மகள்கள், பேரன்களாலானது ஒரு குடும்பம் (Matriline). சில சமயங்களில், மகள் ஆர்காக்கள் வெளியேறி தனிக்குடும்பத்தை உருவாக்கும், ஆனாலும் அவை தாய்க்குடும்பத்தினருக்கு அருகிலேயேதான் காணப்படும்.

ஆர்கா பாட்

அடுத்த படிநிலை pod. ஒரே பெண் மூதாயிடமிருந்து வந்த பல குடும்பங்கள் சேர்ந்தால் அது ஒரு பாட் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஒரு பாட் அமைப்புக்குள் மொழியும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும்.

அடுத்த படிநிலை இனம்/குலம் (Clan) என்று அழைக்கப்படுகிறது. ஒரே மாதிரி ஒலிக்கிற மொழிகளைப் பேசும் ஆர்காக்கள் ஒரு இனமாக வரிக்கப்படுகின்றன. மனிதர்களின் பார்வையில் சொல்வதானால் “ஒரேமொழிக்குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள்” என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இறுதியாக, சூழல்சார் இனம் (Ecotype) என்ற படிநிலை. இதுதான் ஆர்காவின் சமூகப் படிநிலைகளிலேயே மிகவும் சுவாரஸ்யமானது. கிட்டத்தட்ட ஒரு சிற்றினமாக, தனி வகைமையாகவே (Sub species) பிரிக்கும் அளவுக்கு இவை மிகவும் தனித்துவமானவை. ஒவ்வொரு சூழல்சார் இனத்திலும் மொழி, உண்ணும் உணவு, குடும்ப அமைப்பு, வேட்டை முறை, நடந்துகொள்ளும் விதம், உடல் அளவு, உடல் தோற்றம் என்று எல்லாமே தனித்துவமானதாக இருக்கும். அலாஸ்காவைச் சேர்ந்த ஹாலிபட் மீன் தின்னும் ஆர்காக்கள், ரஷியாவைச் சேர்ந்த சால்மன் விரும்பிகள், கடல் பாலூட்டிகளை உண்ணும் ஆர்டிக் ஆர்காக்கள், ஆழ்கடல் ஆர்காக்கள், வட அட்லாண்டிக்கின் திமிங்கில உண்ணிகள் என்று பத்து எகோடைப்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சூழல் சார் இனங்கள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதில்லை, உணவுக்குப் போட்டி போடுவதில்லை. இவற்றிடையே இனப்பெருக்கமும் நடைபெறுவதில்லை. பெரும்பாலும் இவை மரபணு ரீதியாகவும் தனித்துவமானவை.

ஆர்காக்களுக்குத் தனியாக மரபு என்பது ஏன் தேவைப்படுகிறது என்று இப்போது புரிந்திருக்கும். இத்தனை சிக்கலான சமூக அமைப்பைக் கொண்ட இவை தனியாக இயங்குவதேயில்லை. பிறக்கிற ஒரு ஆர்கா குட்டியின் வாழ்வு எப்படி அமையப்போகிறது என்பது அது எந்த ஆர்கா சமூகத்தில் வளர்கிறது என்பதைப் பொறுத்தது. அது என்ன உணவு உண்கிறது, என்ன மொழி பேசுகிறது என்பதெல்லாம் அந்தக் குடும்பத்தையும் இனத்தையும் பொறுத்தது. ஆகவே ஆர்காக்களின் சமூக அமைப்பில் குழந்தை வளர்ப்பு என்பது முக்கியமான பணி. அந்தந்த குட்டிகளின் அம்மாக்கள் இதில் பெரும்பாலான நேரத்தை செலவழிக்கின்றன.

குட்டி பிறந்த முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து குட்டியுடன் பேசி, மொழியைக் கற்றுத்தருகின்றன. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், பேசக் கற்றுக்கொண்டிருக்கும் குழந்தையிடம்,” ஜூஜூஜூஜூ”, “தாக்லேட் ஆணாமா”, “தோ தோ பாரு” என்றெல்லாம் மழலை மொழியில் நாம் பேசுவோம் இல்லையா, ஆர்கா அம்மாக்களும் குட்டியுடன் பேசும்போது இந்த Babytalk முறையையே கடைபிடிக்கின்றன!

அம்மாவும், குட்டியும்

அம்மா சொல்லித் தருவதை சரியாகக் கற்றுக்கொள்ளாத குட்டிகளிடம் அம்மாக்கள் கடுமை காட்டுகின்றன. கற்றலுக்கு உதவுவது (Teaching) என்று மட்டுமல்லாமல், ஒழுக்கத்தைக் கற்பிப்பது (Disciplining) மீறினால் தண்டிப்பது (Punishment) எல்லாமே ஆர்கா சமூகத்தில் உண்டு. குட்டிகள் செய்வது பிடிக்காவிட்டால் ஆர்கா அம்மாக்கள் வாலை நீரின்மேல் ஓங்கி அடிக்கின்றன, தலையை அப்படியும் இப்படியும் வேகமாக அசைக்கின்றன, பெரிதாக ஓலமிடுகின்றன. குட்டிகள் புரிந்துகொண்டு தங்களைத் திருத்திக்கொள்கின்றன.

ஒரு ஆர்கா குட்டி எந்த அளவுக்கு வேட்டை முறையையும் சமூக வழக்கங்களையும் மொழியையும் கற்றுக்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அது பிழைக்கும் விகிதம் அதிகரிக்கிறது என்பதால் பதின் பருவத்தை (Teenage)அடைந்த பிற ஆண்/பெண் குட்டிகள் குழந்தை வளர்ப்பில் ஆர்வத்துடன் பங்கெடுக்கின்றன. இந்த babysitting பயிற்சி அவை குட்டிபோடும்போதும் உதவுகிறது.

ஆர்காக்களின் குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது பாட்டிகளின் பங்களிப்பு எனலாம். இதுவரை மெனோபாஸ் என்பது மனிதனைத் தவிர ஐந்து விலங்குகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஆர்காவும் ஒன்று. 40 முதல் 45 வயதில் குட்டிபோடுவதை நிறுத்திக்கொள்ளும் ஆர்காக்களின் சராசரி வாழ்நாள் 90. அப்படியானால்,கிட்டத்தட்ட 45 வருடங்கள் இவை இனப்பெருக்கம் செய்யாமலேயே இருக்கின்றன. இனப்பெருக்கம் செய்வதைத் தலையாய கடமையாக வைக்கும் பரிணாமக் கொள்கையின்படி பார்த்தால் இந்த 45 வருடங்கள் வீண் என்றே தோன்றும்.

“இல்லை” என்று வேகமாக மறுக்கிறார்கள் ஆர்காக்களின் சமூக வாழ்வை அறிந்த அறிவியலாளர்கள். “பாட்டி கருதுகோள்” (Grandmother hypothesis) என்ற ஒரு கருத்தாக்கம் 1960களின்போது உருவாக்கப்பட்டது. பாட்டிகளின் அனுபவ அறிவைப் பெறும் பேரக்குழந்தைகள் நன்றாக வாழ்கிறார்கள் என்கிறது அந்தக் கருத்தாக்கம். இது ஆர்காக்களுக்கும் பொருந்துகிறது. பல ஆண்டுகள் வாழ்ந்து, வேட்டையாடிய அனுபவம் உள்ள ஆர்கா பாட்டிகள், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு அந்த அனுபவ அறிவைக் கற்றுத்தருகின்றன. எங்கு உணவு கிடைக்கும், எந்த மாதிரியான இரையை எப்படி வேட்டையாடவேண்டும், எங்கு மனிதர்களால் வரும் ஆபத்து அதிகம், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று எல்லாமே பேரக்குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படுகிறது. குறிப்பாக, இரை குறைவாக உள்ள காலகட்டத்தில் குட்டிகளை மட்டுமல்லாமல் மொத்த கூட்டத்தையும் பாட்டிகள்தான் வழிநடத்துகின்றன. மெனோபாஸ் முடிந்த ஆர்கா பாட்டிகளை தலைமைப் பொறுப்பில் வைத்திருக்கும் குடும்பங்கள் இரை இல்லாத காலத்திலும் சமாளித்துப் பிழைத்துவிடுகின்றன.

திமிங்கில வேட்டை

இது சும்மா பாட்டி சென்டிமெண்ட் அல்ல, ஒரு கூட்டத்தில் உள்ள பாட்டிகள் இறந்துவிட்டால் அந்தக் கூட்டத்தில் உள்ள மூன்றாம் தலைமுறை குட்டிகளின் இறப்பு விகிதம் திடீரென்று அதிகரிக்கிறது! அதிலும் குறிப்பாக பாட்டி இறந்த முதல் இரண்டு வருடங்களில் குட்டிகள் பெருமளவில் இறக்கின்றன என்கின்றன ஆய்வுகள்.

பேரக்குழந்தைகளைக் காக்கும் பாட்டி என்பதெல்லாம் சரிதான்…. அதற்கு ஏன் மெனோபாஸ் வரவேண்டும்? அத்தைகளும் சித்திகளும் அம்மாக்களும் பாட்டிகளுமாகக் குட்டியை வளர்க்கும் யானைக்குடும்பத்தில் மெனோபாஸ் இல்லையே?

இதற்கு ஒரு தரவை சுட்டிக்காட்டுகிறார்கள் அறிவியலாளர்கள். ஆர்கா குடும்பத்தில் ஒரே நேரத்தில் தாயும் மகளும் குட்டிகளை ஈன்றால், தாயின் குட்டிகள் இறக்கும் விகிதம் 1.7 மடங்கு அதிகரிக்கிறது. பெரும்பாலும் தாய் ஈனும் குட்டிகள் பிழைப்பதில்லை…. ஆகவே சொந்தக் குட்டிகளை கவனிப்பதில் நேரம் போக்காமல், பேரக்குழந்தைகளை மட்டும் கவனிக்கவே இந்த ஏற்பாடு.

இத்தனை பொறுப்புகளில் ஆண் ஆர்காக்களின் பங்கு என்ன? தாத்தாக்கள் பேரக்குழந்தைகளை கவனிப்பதில்லையா?

ஆண் ஆர்காக்கள் பெரும்பாலும் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்துடனே இறுதி வரை இருக்கின்றன. இனப்பெருக்க காலத்தின்போது குடும்பத்துக்கு வெளியில் சென்று இணைசேர்ந்துவிட்டு மீண்டும் குடும்பத்திற்குத் தனியாகத் திரும்பிவிடுகின்றன. பிறக்கும் குட்டிகளை கவனிப்பது வெளியிலிருக்கும் பெண் ஆர்காவின் பொறுப்பு. ஆகவே, அப்பா/தாத்தா ஆகிய பொறுப்புகளில் ஆண் விலங்குகள் பங்களிப்பதில்லை. ஆண் ஆர்காக்கள் பொறுப்பற்றவை என்று நாம் சொல்லிவிட முடியாது. இது ஆர்காக்களின் சமூக அமைப்பு. அவ்வளவே.

ஆர்கா வேட்டை

பேரக்குழந்தைகளை கவனிக்கும் பாட்டிகள், குடும்பத்தின் புதுவரவுகளை கவனித்துக்கொள்ளும் பதின்பருவ ஆர்காக்கள், அம்மாவின் கோபத்தைப் புரிந்துகொள்ளும் குட்டிகள் என்று ஆர்காக்களின் சமூகம் சுவாரஸ்யமானது. திமிங்கிலங்களையும் வேட்டையாடும் அளவுக்கு திறனுடைய ஆர்காக்கள், கடலின் ஓநாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. இன்றும் அவை கடலில் வெற்றிகரமாக இயங்குவதற்கு இந்த சமூக அமைப்பும் ஒரு காரணம்.

ஆண்-பெண் என்ற இறுக்கமான பால் இருமைகளுக்கு அப்பாற்பட்ட விலங்குகளும் உண்டு. அவை எந்த மாதிரியான விலங்குகள்? அவை எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன?

பார்க்கலாம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.

Exit mobile version