Site icon Her Stories

ஜெல்லி, ப்ரெட் மற்றும் பல்லாயிரம் சேவகிகள்

Photo by Dustin Humes on Unsplash

சமூகப் பூச்சிகளாக வாழ்வது, தேன் கிடைக்கும் இடத்தை சக தேனீக்களுக்கு உணர்த்துவதற்காக நடனமாடுவது, வலுவான அறுகோண வடிவ அறைகளைக் கொண்ட தேன்கூட்டைக் கட்டிப் பொறியாளர்களுக்கு சவால் விடுவது என தேனீக்களை நாம் வியந்து பார்க்கப் பல காரணங்கள் உண்டு. நமக்கு உணவாகும் பல செடிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு அவை உதவுவதை அடிநாக்கின் தேன் தித்திப்புடன் நாம் நினைத்து நன்றிகூறவேண்டும்.

தேனீக்களின் அடிப்படை சமூகக் கட்டமைப்பு அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அந்தக் கட்ட்டமைப்பில் பால்வேறுபாடுகள், அதையொட்டிய வேலைப் பங்கீடு, சமூக அந்தஸ்து ஆகியவை எப்படி இருக்கின்றன என்பது அதிகம் பேசப்படாத ஒன்று. ராணித்தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்கள், ஆண் தேனீக்களாலான ஒரு இறுக்கமான சமூகம் இது.

தேனீக்கள் சமூகக் கட்டமைப்பு

இதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.

ஒரு சராசரித் தேன்கூட்டில், ஒரு ராணித்தேனீ, பல்லாயிரம் பெண் வேலைக்காரத் தேனீக்கள், சில நூறு ஆண் தேனீக்கள், சில ஆயிரம் முட்டைகள், குஞ்சுத் தேனீக்கள் சில ஆயிரம் இருக்கும். இதில், ராணித்தேனீயைத் தவிர, அந்தக் கூட்டில் இருக்கும் மற்ற எல்லா பெண் தேனீக்களுக்கும் வேலைக்காரத் தேனீ என்று பெயரிடப்பட்டிருப்பது ஏன் தெரியுமா? ஒரு கூட்டில் அவை மட்டுமே வேலை செய்கின்றன. ஆண் தேனீக்களோ ராணித்தேனீயோ எந்த வேலையும் செய்வதில்லை. அவற்றின் ஒரே பொறுப்பு இனப்பெருக்கம் செய்வது!

ராணியின் உடலெங்கும் மினுங்கும் பொன்னிற முடிகள் உண்டு…. ராணியில்லையா?! ராணித்தேனீக்குக் கொடுக்கு உண்டு, ஆனால் அதை அது எதிரி ராணிகளுடன் போரிடும்போது மட்டுமே பயன்படுத்தும். மற்ற பிரச்சனைகளிலிருந்து ராணியைக் காக்கவேண்டுமானால் அதற்கு வேலைக்காரத் தேனீக்களின் மகளிர் ஆர்மிதான் வரவேண்டும்!

தேன் கூட்டில் கூட்டுப்புழுக்கள்

பல பூச்சியினங்களைப் போல, தேனீக்களிலும் லார்வா, கூட்டுப்புழு ஆகிய நிலைகள் உண்டு. ஒரு கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!

சில நாட்களில் இனப்பெருக்கத்துக்காக ராணி கூட்டை விட்டு வெளியேறி, ஆண் தேனீக்களைத் தேடிச் செல்லும். அங்கு பல ஆண் தேனீக்களிடம் உறவாடி, உயிரணுக்களை சேகரித்துக்கொண்டு கூட்டுக்குத் திரும்பும். பிறகு தேவைப்படும்போதெல்லாம் அந்த உயிரணுக்களைத் தனது முட்டைகளில் செலுத்திக்கொள்ளும். தொடர்ந்து முட்டையிட்டுக்கொண்டே இருப்பதுதான் ராணியின் வேலை. ஒருநாளைக்கு 1500 முட்டைகளை இடும்.உயிரணு செலுத்தப்பட்ட முட்டைகளிலிருந்து பெண் லார்வாக்கள் வெளியில் வரும். உயிரணு செலுத்தப்படாத முட்டைகளிலிருந்து ஆண் லார்வாக்கள் வெளியில் வரும். சூழ்நிலையைப் பொறுத்து இந்தப் பெண் லார்வாக்கள் ராணிகளாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் மாறும்.

வேலைக்காரத் தேனீக்களின் வாழ்க்கை முழுக்க இடையறாத வேலைதான். கூட்டுப்புழுவிலிருந்து வளர்ந்து வந்த பிறகு முதல் ஏழு நாட்களுக்கு தேன்கூட்டையும் ராணியையும் முட்டைகளையும் பராமரிக்கும் வேலை, அடுத்த 14 நாட்களுக்கு தேன்மெழுகு உருவாக்கும் வேலை, பிறகு வெளியில் பறந்து சென்று தேன் சேகரிப்பது, தேன்கூட்டைப் பாதுகாப்பது, எதிரிகளுடன் சண்டையிடுவது ஆகிய வேலைகளைத் தொடர்ந்து செய்கின்றன. ராணித் தேனீக்கு உணவளிப்பது, அது இடும் முட்டைகளைப் பாதுகாப்பது, கூட்டைப் பராமரித்து எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவது, முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு உணவளிப்பது என்று 24 மணிநேரமும் வேலை இருக்கும்!

தேனீ வாழ்க்கை

பெண் லார்வாக்கள் ராணியாக வேண்டுமா இல்லையா என்பது வேலைக்காரத் தேனீக்களின் கையில்தான் இருக்கிறது. வெவ்வேறு உணவுகளைத் தருவதன்மூலம் இவை லார்வாக்களை ராணியாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்க்கின்றன.

“ராயல் ஜெல்லி” என்ற ஒரு வகை சர்க்கரை கலந்த உணவை சாப்பிடும் லார்வாக்கள் ராணிகளாகவும், தேனீ ப்ரெட் என்ற உணவை சாப்பிடும் லார்வாக்கள் வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்கின்றன. தேனீ ப்ரெட்டில் மகரந்தத் துகள்கள், தேன், தேனீக்களின் எச்சில் புரதம் ஆகியவை உண்டு.மகரந்தத் துகள்களில் காணப்படும் பினாலிக் அமிலம், இனப்பெருக்க உறுப்புக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆகவே, வேலைக்காரத் தேனீக்களால் இணைசேர முடியாது. ராணித் தேனீக்கு எதுவும் ஆகாதவரை, வேலைக்காரத் தேனீக்கள் எல்லா பெண் லார்வாக்களையும் வேலைக்காரத் தேனீக்களாகவே வளர்க்கின்றன.

வளர்ந்த ஆண் தேனீக்களுக்கு உணவளிக்கும் பொறுப்பும் வேலைக்கார தேனீக்களுடையதுதான். வேலைக்காரத் தேனீக்களை விட அளவில் பெரிய ஆண் தேனீக்கள் எந்த வேலையும் செய்யாமல் மந்தமாக இருக்கும் இயல்பு கொண்டவை. இனப்பெருக்க வயது வந்த உடன் இவை வெளியில் சென்று மற்ற கூடுகளின் ராணிகளுடன் இணைசேருகின்றன. இவற்றுக்குக் கொடுக்கு கிடையாது. இவற்றால் தேன் சேகரிக்கவோ தன்னைப் பாதுக்கொள்ளவோ முடியாது. இவற்றின் உடலில் தேன்மெழுகு சுரக்கும் சுரப்பிகளும் கிடையாது என்பதால் தேன்கூடு கட்டும் வேலையிலும் இவற்றால் பங்களிக்க முடியாது. சரியாக சொல்லபோனால், இனப்பெருக்கத்தைத் தவிர, ஒரு தேன்கூட்டின் அன்றாட இயக்கத்தில் ஆண் தேனீக்களின் பங்களிப்பு என்று எதுவுமே கிடையாது. அதனால்தானோ என்னவோ, தேன் குறைவாக இருக்கும் பனிக்காலங்களில், வேலைக்காரத் தேனீக்கள் அலுத்துப்போய் ஆண் தேனீக்களை வெளியில் துரத்திவிட்டுவிடுகின்றன.

ராணித்தேனீ திடீரென்று இறந்துவிடும் பட்சத்தில் அதன் உடலிலிருந்து வெளிவரும் ஃபெரோமோன் என்ற வேதிப்பொருள் வேலைக்காரத் தேனீக்களை உசுப்பிவிடும். அப்போது அவை, இருப்பதிலேயே சத்தான பெண் லார்வா முட்டைகளாகத் தேடி, அவற்றுக்கு ராயல் ஜெல்லி கொடுத்து ராணிகளாக வளர்க்கும். ராணிகள் ஒவ்வொன்றாக வளர்ந்ததும், சுழற்சி மீண்டும் தொடரும்.

சில நேரங்களில் அபூர்வமாக சில வேலைக்காரத் தேனீக்கள் முட்டையிடுவது உண்டு. சரியாக வளராத இனப்பெருக்க உறுப்புகளிலிருந்து வரும் இந்த முட்டைகள் ஆண் லார்வாக்களை உருவாக்குகின்றன. அப்போது தேன்கூட்டில் ஒரு சலசலப்பு ஏற்படும். ராணித்தேனீக்களின் லார்வாக்களை மட்டுமே வளர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் வேலைக்காரத் தேனீக்கள், தங்கள் லார்வாக்களைக் கூடுதல் பாசத்தோடு வளர்த்துவிடுமோ என்று ராணித் தேனீக்கள் பயந்துவிடும். ஆகவே மற்ற வேலைக்காரத் தேனீக்கள் ராணிக்கு உதவுவதற்காக அந்த முட்டைகளை ஒளித்துவைக்கும், வெளியில் தூக்கி வீசும், இதுபோல முட்டையிட்ட வேலைக்காரத் தேனீக்களைத் தாக்கவும் மற்ற வேலைக்காரத் தேனீக்கள் தயங்குவதில்லை!

படிக்கப் படிக்க, “ஐயே! ஒரு ராணிக்கு அடிமையா, முட்டையும் இடமுடியாம எல்லாரையும் கவனிச்சிட்டு என்ன வாழ்க்கை” என்று தோன்றலாம். ஆனால், இது சமூகக் கட்டமைப்பில் வேலைக்காரத் தேனீக்களின்மீது திணிக்கப்பட்ட பொறுப்பு இல்லை. தேனீக்களின் மரபணுவிலேயே இது பொதிந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வேலையே செய்யாத ராணித் தேனீ ஒரு சர்வாதிகாரி என்றோ, உணவைக் கூடத் தேட முடியாத ஆண் தேனீக்களை ஒட்டுண்ணிகள் என்றோ, பொறுப்புகளில் உழலும் வேலைக்காரத் தேனீக்களை தியாகிகள் என்றோ சொல்லிவிட முடியாது.

அவை மனித மதிப்பீடுகள், விலங்குகளின் உலகில் இது செல்லுபடியாகாது.

அதே சமயம், தேனீக்களின் உதாரணத்தைச் சொல்லி, மனித சமூகத்திலும் இதுபோல ஓயாமல் உழைக்கும் பெண்களின் நிலையை நியாயப்படுத்திவிடவும் முடியாது. அப்படிப் பார்த்தால், கூட்டில் உணவு குறையும் காலங்களில், ஆண் தேனீக்களுக்கு உணவு மறுக்கப்படுகிறது, அவை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றன. அதைப் பின்பற்றி உணவு குறையும் காலங்களில் வேலை செய்யாமல் வீட்டில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாரையும் நாம் வெளியேற்ற முடியுமா என்ன?!

அறிமுகக் கட்டுரையில் சொன்னதுபோல, விலங்குகளின் உலகில் பால் மற்றும் பாலின வேறுபாடுகள் எவ்வாறு இயங்குகின்றன என்று விரிவாகப் பேசுவதே இந்தத் தொடரின் நோக்கம். மனித சமூகத்தில் இயங்கும் பால்சார்ந்த மதிப்பீடுகளை நாம் மறு ஆய்வு செய்ய, விவாதங்களைத் துவக்கி வைக்க இந்தத் தொடரின் சில அம்சங்கள் உதவியாக இருக்கலாம். அவ்வளவே.

அயராது உழைக்கும் பெண் பூச்சிகளைப் பார்த்துவிட்டோம், விலங்குகளின் உலகம் முழுக்கவே பெண் விலங்குகளுக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட வேலையை ஒரு ஆண் விலங்கு செய்கிறது… அது என்ன விலங்கு?
பேசலாம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.

Exit mobile version