Site icon Her Stories

திருக்கார்த்திகை விளக்குகள்

விளக்கு என்பது நமது பண்பாட்டுடன் வாழ்க்கையுடன் இருந்துவருகிறது. இருள் வந்ததும், நாம் புழங்கும் இடத்தில் வெளிச்சத்திற்காக விளக்கு தேவைப்படுகிறது.

நாம் புழங்குகிறோமோ இல்லையோ வீட்டின் முன் அறையில் விளக்கேற்றுவது என்பது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. சூரியன் அடைந்து, இருள்வரும் நேரத்தில், வீடுகளில் விளக்கு ஏற்றுவது என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது. அவ்வாறு இருள் தொடங்கும் நேரத்தில், விலங்குகள் அடைவதற்காக இடம் தேடி அலையும். அவ்வாறு அலையும்போது, வெளிச்சம் இருந்தால் அந்த இடத்திற்கு அவை வராது என நினைத்து வீட்டின் முன் அறையில் விளக்குகள் ஏற்றும் வழக்கம் வந்தது. அதே நேரம் பின்பக்கம் வழியாக அவை வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பின்பக்க கதவைப் பூட்டி விடுவார்கள். அவ்வாறு பூட்டவில்லை என்றால் வீட்டில் உள்ள செல்வம் வெளியேறிவிடும் எனச் சொல்வதெல்லாம் இதற்காகத்தான்.

இது குறித்து எனக்கு அனுபவம் உண்டு. ஒருநாள் இருட்டும் நேரம் எங்கள் வீட்டின் பின்கதவு அருகில், சில தவளைகள் வந்திருந்தன. எனக்கு அது சிறிது நெருடலாகத் தெரிந்தாலும், கதவைப் பூட்டி வீட்டிற்குள் போய்விட்டேன். சிறிது நேரம் கழித்து டெக் எனச் சொல்லப்பட்ட VCR இல் படம் போட்டேன். அப்போது, ஒரு வீட்டில் அனைவரும் திரைப்படம் பார்க்கும் காலம். வீட்டினுள் கூட்டம். பின் அறையில் இருந்தவர்கள் புழுக்கமாக இருக்கிறது எனக் கதவைத் திறந்து போட்டுவிட்டார்கள். படம் நன்கு தெரிய வேண்டும் என்பதற்காக எரிந்துகொண்டிருந்த குண்டு பல்பையும் அணைத்துவிட்டார்கள். அன்று எங்கிருந்தோ பாம்பு வந்திருக்கிறது. அதனால்தான் தவளைகள் வாசல் அருகில் பயந்து வந்திருக்கின்றன. அந்தப் பாம்பு, வீட்டிற்குள் வெளிச்சம் இல்லாமல், வீடு திறந்து கிடந்ததால் உள்ளே வந்துவிட்டது.

ஆட்கள் புழங்கும் தெருவாக இருந்தால், வீட்டின் வாசலிலும் ஓரிரு மணி நேரம் விளக்கு வைத்திருப்பார்கள். ஊரில் திருவிழாவோ அருகில் இருக்கும் வீட்டில் இறப்போ நிகழ்ந்தால் இரவு முழுவதும் விளக்கு வைத்திருப்பார்கள். அதாவது, ஆட்கள் நடமாட்டம் இருந்தால் விளக்கு எரியும்.

அதேபோல மார்கழி மாதம் விடியற்காலையில் விளக்கு ஏற்றி வைப்பார்கள். ஆண்டாள் விடியற்காலை குளிக்கப் போகும்போது, அவருக்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக ஏற்றப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், மார்கழி மாதம் விடியற்காலை என்பது மிகவும் இருட்டாக இருக்கும். அப்போது விடிகாலை வைக்கப்படும் விளக்கு, அனைவருக்கும் பயன்படும்.

கடவுளை நம்புபவர்களுக்கு ‘ஒளியாம் இறையே வாராய், நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்; நம்பாதவர்களுக்கு ‘ஒளியே எழிலே வருக என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ஒளி என்பது மனிதனின் மனத்தில் இருக்கும் பயத்தைக் கணிசமான அளவிற்குக் குறைப்பதாக இருக்கிறது.

எங்கள் வீட்டில் முன் அறை சுவரில் விளக்குழி (விளக்கு + குழி) என ஓர் இடம் இருந்தது. அதில் ஒரு விளக்கு எப்போதும் எண்ணெயுடன் வைத்து இருப்பார்கள். தேவையான நேரத்தில் உடனே பொருந்தும்படி அதில் ஒரு தீப்பெட்டியும் வைத்திருப்பார்கள். இவ்வாறு பல வீடுகளும் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். புதிதாக வீடு கட்டும்போதுகூட சுவரில் இருந்த பழைய விளக்குழியை மூடாத வீடுகள் உண்டு. விளக்கு வைத்த இடத்தை மூடுவதா எனப் பெரியவர்கள், அதை மூடுவதற்கு விரும்பியதே இல்லை.

புதிதாக மருமகள் வரும் நிகழ்வைக்கூட விளக்கேற்ற பெண் வந்திருக்கிறாள் எனச் சொல்வார்கள்.

திருக்கார்த்திகை, தீபாவளி என ஒளி குறித்த விழாக்கள் பல உண்டு. திருக்கார்த்திகையை, முதல் நாள் முருகனுக்கு, இரண்டாவது நாள், பெருமாளுக்கு (இது முடக்கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது), மூன்றாவது நாள் சக்திக்கு என மூன்று நாட்கள் தோழி தனது வீட்டில் கொண்டாடுவதாகச் சொன்னாள்.

பச்சை விளக்கு, பாவை விளக்கு, ஒளிவிளக்கு, அகல்விளக்கு என விளக்கு பெயர் கொண்ட பல படங்கள் வெளிவந்துள்ளன. பாடல்கள் என எடுத்துக்கொண்டால், குத்து விளக்கெரிய, விளக்கே நீ கொண்ட ஒளி நானே, விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும் என நூற்றுக்கணக்கான பாடல்கள் உள்ளன.

குலவிளக்கு

குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த விளக்கை குலதெய்வமாக வைத்து வழிபடுவர் என்பதால், குலவிளக்கு எனப் பொதுவாக வழங்கப்படுகிறது. குலதெய்வம் என்று சொன்னதும் ஒன்று நினைவிற்கு வருகிறது. எங்கள் பகுதியில், குலதெய்வம் யாரென்றே தெரியாதவர்களும், குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குப் பங்குனி உத்திரம் அன்று சென்று வழிபடுவார்கள். புராணப்படி, தென்கரை மகாராஜா, பந்தள நாட்டு மன்னரின் (ஐயப்ப சாமியின் வளர்ப்புத் தந்தை) மகன். ஐயப்ப சாமி, சபரிமலை சென்று, தெய்வமானதால், இவர், அண்ணன் இல்லாத அரண்மனை வாழ்வு தனக்கு வேண்டாம் என, சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில் மணல் திட்டில் வந்தமர்ந்தார்.

வாகைகுளம் விளக்கு

பொதுவாக கேரளா விளக்குகள் தான் நான்கு முகங்கள் கொண்டதாக இருக்கும். கேரள நான்கு முக விளக்கில் கிளி இருக்கும் அல்லது அன்னம் இருக்கும்.

இது வாகைகுளம் என்ற இடத்தில் செய்யப்பட நான்கு முக விளக்கு. விளக்கிற்குப் புகழ்பெற்ற, இந்த வாகைக்குளம் அம்பாசமுத்திரம் அருகில் இருக்கிறது. திருநெல்வேலி பகுதியில், நான்கு திசையைக் குறிக்குமாறு வீடுகளில், இந்த நான்கு முகம் விளக்கு ஏற்றப்படுகிறது. வீடுகளில் ஏற்றப்படும், நான்கு முக விளக்கில் பெரும்பாலும் வேல் இருக்கும். கோயிலில் ஏற்றப் படும் விளக்கில்தான் அன்னம் இருக்கும்.

இந்த பகுதியில், திருமணத்தின் போதும், ஒற்றை விளக்குதான் கொடுக்கிறார்கள். ஆனால், மதுரை போன்ற வடபகுதியில் (பொதுவாக மதுரையைத் தென் தமிழகம் என்பார்கள். நாங்கள் அதை வடக்கில் உள்ள ஊர் என்போம். எங்களுக்கு அது வடக்கு தானே!) இரட்டை விளக்குகள் கொடுப்பார்கள்.

நாச்சியார்கோயில் விளக்குகள்

கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியர்கோயிலில் இந்த விளக்குகள் உள்ளூர் கைவினைஞர்களால் செய்யப்படுவதால், இப்பெயர் பெறுகிறது. ’நாச்சியார்கோயில் குத்துவிளக்கு’ என்ற பெயரில் இவற்றிற்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ராணி ராஜா விளக்குகள். இவற்றில் ஒன்று உயரம் குறைவாகவும் இன்னொன்று உயரமாகவும் உள்ளது. இவை ஐயப்பன் கோயில் விளக்குகள்

கேரளா விளக்கு

பாவை விளக்கு

பாவை விளக்கு என்பது பெண்ணின் கைகளில் வைத்திருக்கும் விளக்கு. இவ்வாறு விளக்கு ஆண்கள் ஏந்தியிருந்தால் அவர்களைத் திருவிளக்குச் சீலர் என்பார்கள்.

பாவை விளக்கு என்ற பெயரில் எழுத்தாளர் அகிலன், கல்கி இதழில் தொடராக எழுதி, பின் 1960ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், எம். என். ராஜம் போன்றோர் நடித்த திரைப்படமாக அது வெளிவந்தது. அதில் இந்தப் பாவை விளக்கும் ஒரு கதாபாத்திரமாகவே வலம்வரும்.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 4 நூலில், இவ்வாறு குறிப்பு உள்ளது. அந்தக் காலத்தில் எல்லா நாடுகளிலும் எண்ணெய் விளக்கு பயன்பட்டது. மண்ணால் செய்த அகல் விளக்கையும் இரும்பினால் செய்த விளக்கையும் (இரும்பு செய் விளக்கு, நெடுநல் வாடை, 42) தமிழர் பயன்படுத்தினர். யவன நாட்டிலிருந்து வந்த, பெண் வடிவமாக அமைத்த ‘பாவை’ விளக்கைத் தமிழர் பயன்படுத்தினர்.

‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை

கையேந் தையகல் நிறைய நெய் சொரிந்து

பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி’

என்றும் (நெடுநல்வாடை 101:103), ‘பாவை விளக்கின் பரூஉச்சுடர் அவிழ’ என்றும் (முல்லைப்பாட்டு 85) பாவை விளக்கு கூறப்படுகிறது.

சிலப்பதிகாரமும் (5:154) மணிமேகலையும் (1:45) பாவை விளக்கைக் கூறுகின்றன. ‘யவனர் ஓதிம விளக்கைப்’ பெரும் பாணாற்றுப்படை கூறுகிறது (வரி 316-317).

ஐந்து முக இணை விளக்குகள்

தண்டுப் பகுதி ஒல்லியாக கம்பிபோல பெரிய அளவில் வேலைப்பாடுகள் இல்லாமல் இருப்பதால், கம்பி இணை விளக்குகள் என்கிறார்கள்.

தாமரை வடிவ விளக்கு

இது கூம்பி இருக்கும் விளக்கு. கீழே திருகினால் தாமரைப்பூ மாதிரி விரியும்.

சிவன் பார்வதி விளக்கு

மகாலட்சுமி விளக்குகள்

யானைகளின் நடுவில் இருப்பதால், இவர் வேழத்திரு (கஜலட்சுமி) என அழைக்கப்படுகிறார். லட்சுமி, பாற்கடல் கடையப்பட்ட நேரத்தில் தோன்றிய போது இருபுறம் யானைகள் வந்து நீர் ஊற்றின என்பதை இந்தச் சிற்பம் குறிக்கிறது.

கொம்புலட்சுமி விளக்கு

குழலூதும் கண்ணன் விளக்கு

அனுமார் விளக்கு

திருமால் விளக்கு

பிள்ளையார் விளக்குகள்

சங்கு, சக்ரம், நாமம் விளக்குகள்

சங்கு / சக்ரம் விளக்குகள்

நாமம் விளக்கு

கார்த்திகை விளக்குகள்

அன்னம் விளக்குகள்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 4 நூலில், யவன நாட்டிலிருந்து வந்த அன்னப் பறவையின் உருவமாக அமைக்கப்பட்ட ‘ஓதிம’ விளக்கைத் தமிழர் பயன்படுத்தினர் என்று குறிப்பிடுகிறார்.

கிளி விளக்குகள்

பூ விளக்கு

அனைவருக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version