தமயந்தியும் அகலிகையும் இதிகாசக் கதைகளின் பாத்திரங்கள். மகாபாரதமும் ராமாயணமும் நிகழ்ந்த காலமும் சமூகச் சூழலும் இன்று வரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை; அவை குறித்து பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் மட்டுமே உள்ளன. ஆனால் அதற்குப் பிந்தைய தென்னிந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்ள சங்க இலக்கியங்கள் நமக்குப் போதிய சான்றுகளை வழங்குகின்றன. சங்க இலக்கியங்களை வெறும் அதீத கற்பனையாகக் கடந்துவிட முடியாது. அவை அக்கால மக்களின் வாழ்வியல், உணர்வுகள், உறவுமுறைகள், தொழில்கள், சமூகப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றோடு நெருக்கமாகப் பொருந்துகின்றன. குறிப்பாக, அரசர்களை மட்டுமல்லாமல் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்திருப்பதே அவற்றின் தனிச்சிறப்பு.
பொதுவாகச் சங்க இலக்கியங்களில் பெண்களின் செயற்பாட்டு வெளி அதிகமாகக் காணப்படுகிறது. பக்தி இலக்கியங்களில் பெண் பெரும்பாலும் பக்தி, கற்பு, துறவு போன்ற அடையாளங்களின் வழியே சித்தரிக்கப்படுகிறாள். பல நாகரிகங்களில் பல பெண்களின் சுவடுகளை வாசித்து வருகிறோம். பெண்களின் சமூக நிலையைக் காலத்தின் அடிப்படையில் மட்டும் அளவிட முடியாது.
ஏனெனில் சங்க இலக்கியங்களில் வரும் தலைவி, தோழிகளைப் படிக்கும்போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால், அதன்பின் பக்தி இலக்கியக் காலத்தில், இதிகாசக் காலச் சிந்தினைகள் துளிர்த்தெழுந்ததோ என்கிற ஐயம் தோன்றுகிறது. டேஃப்னே, மெடூசா, அகலிகை போன்ற பெண்களை நினைவுகூரும் கதையமைப்புகள் பக்தி இலக்கியங்களிலும் இருக்கின்றன.
காரைக்கால் அம்மையாரின் கதையை நாம் அனைவரும் அறிந்திருப்போம். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்தார். வீட்டிற்குத் திரும்பி வந்த கணவன், அந்த மாம்பழத்தினைக் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனைச் சரணடைந்தார்.
அம்மை கேட்டவுடன் கடவுள் மாங்கனிகளை வழங்கியதால் பயந்து போன கணவன் பரமதத்தன், இவரை விட்டு விலகுகிறான். வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு, வேறொரு ஊரில் வாழ்ந்து வருகிறான்.
காரைக்கால் அம்மையார் இறையாண்மை பொருந்திய பெண் என்கிற காரணத்திற்காக, அவருடைய கணவர் ஏன் அவரை விட்டுச் செல்ல வேண்டும்? ஏன் வேறொரு பெண்ணை மணக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தால், பெண் என்பவள் எப்போதுமே அறிவிலும் ஆற்றலிலும் ஆண்களுக்குக் கீழானவளாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கிறாளோ என்கிற ஐயம் எழுகிறது. ஒருவேளை காரைக்கால் அம்மையாரின் அதீத பக்தியும் ஆற்றலும், அவர் பரமதத்தனைவிட உயர்ந்தவர் என்கிற எண்ணத்தை அவர் கணவரின் மனதில் விதைத்திருக்குமோ? கணவனைக் காணாத காரைக்கால் அம்மையார், அவர் வேறொரு திருமணம் பற்றி அறிந்துகொண்டு, அவரைக் காண அந்த ஊருக்குச் செல்லும்போது, பரமதத்தன் தனது குடும்பத்துடன் அவர் காலில் வந்து விழுகிறார். கணவனின் இந்தச் செயலைத் தாங்க முடியாத காரைக்கால் அம்மையார் பேயுருவம் பூண்டு, இமயமலைக்குச் சென்று இறைவனடி சேருகிறார்.
அம்மையாரின் கதை ஏன் இவ்வாறு அமைய வேண்டும்? மனைவிக்கும் மேல் கடவுள் என்று நினைத்த கணவன், தன்னுடைய வாழ்க்கையைத் துறந்ததாக எந்த இலக்கியமும் கூறவில்லை. இதிகாசங்களும் கூறவில்லை.
பிறந்ததிலிருந்து பேணி பாதுகாத்த உடலை, கணவருக்காக வேண்டாமென்கிறார். கணவனே ஆராதிக்காத இந்தப் புற அழகு எதற்கென்று, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்கிறார். இறைவனும், ‘தாம் வேண்டிய அதனையே பெறுவாயாக’ என்று அருளியதாக கதையில் வருகிறது. உடம்பில் தசையும் அதனைக் கொண்டு அடைந்த அழகும் வேண்டாமென்று உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.
அதாவது அவர் தன்னையே வருத்திக் கொண்டு சிவபூதகண வடிவம் பெற்றிருக்கலாம். தலையில் உள்ள முடியை மழித்துக் கொண்டு, பல நாட்கள் உண்ணாமல் உறங்காமல் தன்னையே வருத்தியிருக்கலாம். அதன்பொருட்டு அவரின் உருவம் மாறியிருக்கலாம். சுருங்கிப்போன தோளும், பொலிவிழந்த முகமும் பேயுருவமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அதைக் கடவுள் அளித்ததாக ஏற்றுக் கொண்டதில், அதிலிருந்த துன்பத்தையும் இழப்பையும் எளிதாகக் கடந்துவிடுகிறார் அம்மையார்.
பல சமூகங்களில், பெண்ணின் வாழ்க்கை திருமணத்தையும் குடும்பத்தையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதன் விளைவாக, தன் உடலையும் உயிரையும் பற்றிய முடிவுகளை அவளே எடுக்கும் உரிமை பல நேரத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது.
பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழாரின் பெரிய புராணத்தில் காரைக்கால் அம்மையாரைப் பற்றிய குறிப்புகள் நமக்குப் பெரும்பாலும் கிடைக்கின்றன. 600 வருடங்களாக அம்மையாரின் கதை வாய்மொழியாக சொல்லப்பட்டே வந்திருக்கிறது. அம்மையார் சிவபெருமானின் மீது அதிக பக்தியுடன் இருந்தார் என்பதை மறுக்கவே முடியாது.
மாங்கனி கதை, பக்தி இலக்கியங்களில் காணப்படும் மிகுபுனைவுக் கூறுகளுள் ஒன்றாகத் தோன்றுகிறது. மாங்கனி கதையை ஒதுக்கி வைத்துப் பார்த்தால், அம்மையாரின் கதையை வேறொரு பரிமாணத்தில் வாசிக்க முடிகிறது.
அம்மை சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டுள்ளார். ஏதோ சில காரணங்களுக்காக அம்மையாரின் கணவன் பரமதத்தன் அவரைப் புறக்கணித்து வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளார். அம்மையாருக்கு இறைவனின் திருவருள் இருக்கிறது என்று அறிந்து கொண்ட பரமதத்தன், குடும்பத்துடன் அம்மையாரின் காலில் விழுகிறார்.
பரமதத்தன் காலில் விழுவதிலிருந்து, அவரின் குற்ற மனப்பான்மையை உணர முடிகிறது. அம்மையாருக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணியிருக்கலாம் அல்லது அவரின் இறையாண்மை கண்டு பயந்து காலில் விழுந்திருக்கலாம்.
அந்தக் காலச் சமூகத்தில், பெண்ணின் வாழ்க்கை பெரும்பாலும் கணவனை மையமாகக் கொண்டு அமைந்திருந்த சூழலில் வளர்ந்த அம்மையாருக்கு, கணவரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.
‘ஐயோ, என் காலில் அவர் விழுந்துவிட்டாரே’ என்று அம்மை விரக்தியில் கடவுளிடம் சரண்புகுகிறார். புற அழகை அழித்துக்கொள்கிறார். சிவனின் திருவடிவம் காண, கைலாயம் செல்கிறார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்குத் தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றதாகக் கதை அமைந்திருக்கிறது.
அவரின் பக்தி கண்டு மெய்மறந்த இறைவன், அம்மையே என்று அவரை அழைத்து, தன் திருத்தாண்டவம் காண திருவாலங்காட்டிற்கு வருமாறு பணித்தார் என்று கதை முடிகிறது.
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் பாடல்கள், காரைக்கால் அம்மையாரின் பக்தியையும், சிவபெருமானின் நடனக் காட்சியையும் நனிசிறக்க விவரிக்கின்றன. குறிப்பாக, பாடல்களில், பேய்களுடன் சிவபெருமான் ஆடும் நடனம், சுடுகாட்டில் எரியும் பிணங்கள், கூகைகளும் ஆந்தைகளும் பாடும் ஓசை போன்ற காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இப்பதிகங்களில் புனிதவதி என்று தன்னுடையப் பெயரைக் குறிப்பிடாமல் காரைக்கால் பேய் என்றே அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
திருவாலங்காட்டைப் பற்றிய அவரது வருணனைகள், அவரது மனநிலையைப் பற்றியும் சில கேள்விகளை எழுப்புகின்றன.
பேயுருவம் பூண்டு, திருவாலங்காடு சென்று, திருவாலங்காட்டின் பிணங்களையும் கொள்ளிவாய் பிசாசையும் அவர் பாடலில் எடுத்தியம்பிய விதம் தனியழகுதான். அவரின் தமிழ் புலமையும் செழிப்பான செய்யுள் வளமும், அம்மை ஓர் அசாதாரண பெண்மணி என்பதை வலியுறுத்துகிறது. அவருடைய கதையில் மிகு புனைவுகளை அகற்றிப் பார்த்தால், அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சகமனிதராக மறுவாசிப்பு செய்யலாம்.
பரமதத்தனை மணந்துகொள்கிறார். சிவனின் மேல் அலாதி அன்பு கொண்டுள்ளார். அவர் தெய்வத்தின் அருள் பொருந்தியவர் என்று கணவன் பிரிந்து செல்கிறான். அவர் பிரிந்து சென்றதற்கு வேறு காரணங்களும் இருக்க வாய்ப்புண்டு. வேறு திருமணமும் செய்து கொள்கிறான். அம்மையின் பெயரான புனிதவதியை, அவனுடைய குழந்தைக்கு இடுகிறான். அம்மை அவனைத் தேடிச் செல்ல, குற்றவுணர்வில் அவர் காலில் விழுகிறான். அதிர்ச்சியில் உறைந்த அம்மை, மொத்தமாகக் கடவுளைச் சரணடைகிறார்.
இந்தக் கதையில், காரைக்கால் அம்மையாரின் தவறென்று எதுவுமே இல்லை. கணவரின் புறக்கணிப்பால் தன்னுடைய அழகைத் தானே அழித்துக் கொள்ள ஒரு பெண்ணால் முடிகிறது. அதாவது கணவன் தன்னை வேண்டாம் என்று கூறியபின், இந்தப் புற அழகு இருப்பதே தவறென்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம். அப்படிக் கூறி வளர்க்கப்பட்டிருக்கலாம்.
அம்மையின் கதையில் நான் கருத்து கூறுவதால், அவரைப் பழித்துக் கூறுவதாக யாரும் எண்ண வேண்டாம். அவருடைய காலக்கட்டத்தில், அவர் வாழ்ந்த வாழ்வை நம்மால் விமர்சிக்க முடியாது. பக்தி இலக்கியத்தில் போற்றப்படும் மிகுபுனைவுகளால், சில விஷயங்களுக்குப் புகழொளி சார்த்திக் கொண்டே இருக்கிறோம். அதே சூழல் நமக்கு நிகழ்காலத்தில் நிகழ்ந்தால், அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் தெரியுமா என்கிற தொடக்கம் அதெல்லாம் அந்த காலம்… இப்போ அப்படியே இருக்க முடியுமா என்று வாததிற்கு ஏற்றவாறு வாக்கியத்தை மாற்றிவிடுகிறோம்.
ராமனைப் போல் கணவன் வேண்டும் என்று சிலாகிக்கும் பெண்கள், ராமன் சீதையைத் தீக்குளிக்க வைத்ததை மறந்து விடுகின்றனர். நிகழ்காலத்தில் கணவன் சந்தேகமாகக் கேள்வி கேட்டால், வெகுண்டெழுவதில்லையா? கணவனை எதிர்த்து பேசத் தெரியாத பெண்ணாக இருந்தாலும், மன சுணக்கம் வருவதைத் தடுக்க முடியாதே. சீதையின் கற்பை நிரூபணம் செய்யவே தீக்குளிப்பு நடந்நது என்று சப்பைக்கட்டும் பெண்கள்கூட, தன் மீது சந்தேகம் கொள்ளும் கணவன் மேல் நல்லெண்ணம் கொள்ளமாட்டார்கள். முன்னது தெய்வீகம். பின்னது சந்தேகப்பிராணி என்று வாதிடுவார்கள்.
ராமனின் கதைக்குள் சீதையை தேடுவதால் சீதையின் உணர்வுகளை ஒருபோதும் படிக்க முடியாது. சீதையின் உணர்வுகளைச் சீதை இயம்பும் கதைகளின் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
அம்மையார் இயற்றிய நூலான திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்களில் திருவாலங்காட்டில் உள்ள சிவனைப் போற்றிப் பாடியுள்ளார். இது பதிக முறையில் பாடப்பட்ட முதல் நூல் என்பதாலும் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களுக்கு முன்னோடியாக திகழ்ந்ததாலும் இன்னூலை ஆதி பதிகம் என்றும் கூறுவது உண்டு.
தமிழுக்கும் பக்தி இலக்கியத்திற்கும் பெரும் தொண்டாற்றியவராகப் போற்றப்படும் காரைக்கால் அம்மையார், தனிப்பட்ட வாழ்க்கையில் கணவனின் பிரிவால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாகவும் வாசிக்கப்படலாம். பக்தியின் உச்சமாக மட்டுமே வாசிக்கப்பட்ட காரைக்காலம்மையாரின் சொல்லப்படாத மௌனத்தை வாசிப்பதன் மூலம், அம்மையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.
சமகாலத்தில்கூட நாம் ஒரு சொலவடையைக் கடந்து செல்வோம். சாதனைப் பெண்களெல்லாம், குடும்பத்தை விட்டுவிடுவார்கள். வேலை மற்றும் தொழில் என்று கொடிகட்டிப் பறக்கும் பெண்களைப் பார்த்துச் சமூகம் கேட்கும் முதல் வினா இதுவாகத்தான் இருக்கும்.
“ஒரு பெண்ணா குடும்பத்தையும் பார்த்து எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது?” என்கிற வினாவே கொஞ்சம் பிற்போக்குதனமாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் கேள்வி உயிர்ப்புடன் சமூகத்தின் அங்கமாக இருக்கிறதென்பதை மறுக்க முடியாது. இருபாலருக்கான பொதுவான கேள்வி சமூத்தில் கேட்கப்படும் நாளில் பெண்ணுக்கான சம உரிமை நோக்கிச் சமூகம் நகர்வதாகப் புரிந்துகொள்ளலாம்.
மீண்டும் மீண்டும் பெண்களின் கதைகளில் ஏதோ ஓர் ஒற்றுமை இருந்து கொண்டே இருப்பதுபோல் தோன்றுகிறது. மெடூசா, டேஃப்னே, அரக்னே, அகலிகை, அம்மை என்று பல நாகரிகங்களில், பல காலக்கட்டங்களில் வாழ்ந்த பெண்களிடம் ஓரு ஒற்றுமை இருக்கிறது.
ஒரே கருத்துப்படிவங்களை மீண்டும் மீண்டும் பல தலைமுறைகளுக்குக் கூறும் புராணங்கள் சமூகத்திற்குச் சலிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அவற்றின் அடிப்படைக் கருத்துகளை ஏன் என்று கேள்விக்குள்ளாக்கும்போது மட்டும் அசௌகரியம் உருவாகிறது. அந்த அசௌகரியமே இந்தக் கேள்விகள் இன்னும் தேவையானவை என்பதை நினைவூட்டுகின்றன.
(தொடரும்)
படைப்பாளர்:
மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.


