Site icon Her Stories

அரக்னேவும் டேஃப்னியும்

மெடூசாவின் கதையை வெறும் வன்புணர்வு கதையாக மட்டுமே வகைப்படுத்திவிட முடியாது. அதில் மிக முக்கியமான சமூகக் குறியீடுகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மெடூசாவைப் பெண் தெய்வமே தண்டிப்பதன்  மூலம், அந்நிலைக்கு ஆளான பெண்கள் யாவரும் பெண்களாலே வெறுக்கப்படுகின்றனர். விமர்சிக்கப்படுகின்றனர். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது, சேலையில் முள்ளு பட்டா சேலைக்குத்தான் நஷ்டம் என்று ஓரிரு வரிகளில் பெண்களின் துயரத்தை எளிதாகக் கடந்து செல்கிறது சமூகம். அதற்கு இம்மாதிரியான புராணக் கதைகள் ஒருவகையில் காரணம் என்பதை மறுக்க முடியாது. 

இதே நிலை சீதைக்கும் ராமாயணத்தில் வந்தது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாவே இருக்கிறது. ராமனைப் பற்றிய என் கருதுகோளைப் பலர் விமர்சித்துள்ளனர். ராமன் அப்படி என்ன பிழை செய்துவிட்டார். அவர் இதிகாசத் தலைவர். மாமன்னர். அனைத்தையும் தாண்டி மாமனிதர். கம்பரின் ராமனை எப்படி உங்களால் விமர்சிக்க முடிகிறது. சீதையைச் சுதையேற்றியது பிழை என்று பிதற்றும் கடவுள் மறுப்பாளர்களுக்கு ராமன் அதை செய்யச் சொன்ன காரணம் விளங்குவதே இல்லை என்று ஒரு பெண் கூறினார். 

கம்பரே என்ன சொல்கிறார் என்று கூறினால்கூட, அதற்கும் வேறொரு பரிமாணம் இருக்கிறது என்று வாதிடும் பலரும் இருக்கிறார்கள். கடவுளாகிய ராமன் சீதையை மீட்கிறார். பிரிவின் பிணியிலிருந்து மீண்டவர் சீதையிடம் என்ன பேசியிருக்க வேண்டும்? சீதை எப்படியெல்லாம் அசோவனத்தில் துயரத்தில் இருக்கிறாள் என்று அனுமனின் வாய்மொழியாக அறிந்தாயிற்று. அதன் பின்னும் அவர் உதிர்க்கும் மொழியில் வேறு பொருள் இருப்பதாகத் தோன்றவில்லை. 

“அரக்கன் ஊரின் உணவு வகைகளை 

உண்டுகொண்டு நெடுநாள் இருந்தாய்;

ஒழுக்கம் அழிந்து போகும்படி 

சாகாமல் உயிருடன் இருந்தாய்; 

நீதிநெறியும் அறமுறையும் இல்லாத 

அரக்கனது இலங்கை நகரில் 

அவனுக்கு  அடங்கியிருந்தாய்;

பயம் இல்லாமல் என்னிடம் இப்பொழுது 

திரும்பி  வந்தது எதை எண்ணி?

‘என்னை ராமன் விரும்புவான்’ 

என்பது உன் நினைவா?”

என்று ராமன் சீதையிடம் கேட்டான்.

ஊண்திறம் உவந்தனை என்னும் கம்பராமாயணப் பாடலில் வரும் செய்தி. சீதை சிதையேறும் முன் ராமன் உதிர்த்த சொற்கள். சீதையின் கற்பு நெறியை உலகிற்கு உணர்த்துவதற்காக ராமர் கடுஞ்சொற்களை வீசினார். அதிலுள்ள பொருளை மறைமுகமாக ஏற்க வேண்டும் என்றும் பலர் பொருள் கூறிக் கேட்டிருக்கிறேன். 

விருப்பமில்லாத பெண்ணை ராவணன் தீண்டினால், அவனது பத்து தலைகளும் வெடித்துவிடும் என்னும் சாபம் இருக்கையில், ராவணனைப் போர்க்களத்தில் கொன்ற ராமனுக்கும் உலகத்திற்கும் சீதையின் புனிதம் புலப்படவில்லை. கடவுளாகிய ராமனே சீதையைச் சுடு சொற்களால் தூற்றுவதன் மூலம், பெண்களே மனசுணக்கமின்றிப் புரியாத கற்பு நிலையை ஏற்கும்படி ஆயிற்றா?

மெடூசாவின் கதையிலும் ராமனின் கதையிலும் சிறு பிழைகூட இழைக்காத பெண்கள் சோதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களே தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். பின்வந்த சமூகத்தின் நினைவு பெட்டகத்தில் மெடூசா அச்சுறுத்தலாகவும், சீதை கற்புநெறியின் சின்னமாகவும் நிலைத்து நிற்கின்றனர். 

இது போன்ற‌ கதைகளின் மூலம் புராணங்களில் சமூக அரசியலை நம்மால் ஆராயமுடிகிறது. புராணங்களில் உள்ளோடியிருக்கும் பொருளை வாசிப்பதன் மூலம் அன்றைய பெண்களின் நிலை மற்றும் அவர்கள்‌மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளையும் ஆராய முடிகிறது.

ஓவிடின் கதைகளில் வரும் பல பெண்கள் இன்றைய சமுதாயத்தைச் சிந்திக்க வைக்கிறார்கள்.

ஓவிடின் கதைகளில் மெடூசா போல் என்னைச் சிந்திக்க வைத்த பெண்கள் ஏராளம். 

ஆரக்னே லிடியா நாட்டைச் சேர்ந்தவள். நெசவு தொழிலில் கை தேர்ந்தவள். பல சித்திரங்களை நுண்ணிய‌ வேலைப் பாடுடன் நூலில் நூற்றுவிடுவாள். அவள் நெய்யும் துணிகளைக் காண மக்கள் திரள் திரளாக வருவார்கள். அவளின் பெருமை ஊர் முழுக்கப் பரவியது. நெசவு, போர்த் தொழிலின் தெய்வமான ஏதெனாவைவிட, சிறப்பாக நூல் நூற்பேன் என்று தன்னைத்தானே பெருமை பேசிக் கொண்டாள். 

அதைக் கண்டு கோபம் கொண்ட ஏதெனா, கிழவியின் உருவில் சென்று அவளை எச்சரிக்கிறாள். ஆனாலும் அவளுடைய திறமையை அவள் உறுதியாக நம்பியதால், ஏதெனாவைவிடச் சிறப்பாக நூல் நூற்பேன் என்று வாதிடுகிறாள். 

அவள் அரக்னேவுக்கு ஒரு நெசவுப் போட்டிக்குச் சவால் விட்டாள். இருவரும் ஒரே அறையில் தங்களுடைய தறிகளை அமைத்து, அதிகாலை முதல் இரவு வரை நெய்தனர். பின்னர் தாங்கள் நெய்தவற்றை ஒப்பிட்டுப் பார்த்தனர். ஏதெனா ஒலிம்பஸ் மலையில் அமர்ந்திருந்த தெய்வங்களையும் தேவியரையும், அவர்கள் மக்களுக்காகச் செய்த நற்செயல்களையும் காட்டும் அழகிய துணியை நெய்திருந்தாள். நெய்து முடித்ததும் கடவுளை யாராலும் வெல்ல முடியாது என்கிற கர்வம் அவள் விழிகளில் மின்னியது. 

ஆனால் அரக்னே தெய்வங்களையும் தேவியரையும் கேலி செய்யும் வகையில் ஒரு துணியை நெய்தாள். ஒலிம்பஸ் மலைக் கடவுள்கள் மனிதப் பெண்களிடம் நிகழ்த்திய ஏமாற்றங்கள், பாலியல் வன்முறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றை அதில் சித்தரிக்கிறாள். இருந்தாலும், அந்த நெசவு ஏதெனாவின் நெசவைவிடச் சிறந்ததாகத் தெளிவாக இருந்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஏதெனா.

ஏதெனாவால் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. முன்பைவிட இன்னும் அதிகமாகக் கோபமடைந்தாள். அரக்னேயின் நெசவு சிறந்ததாக இருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அவளுக்குத் தண்டனை அளிக்க முடிவு செய்தாள். அவள் தன் விரலை அரக்னேயை நோக்கி நீட்டியவுடன், அரக்னேயின் மூக்கும் காதுகளும் சுருங்கின. அவளுடைய தலைமுடி அனைத்தும் உதிர்ந்துவிட்டது. கைகளும் கால்களும் நீண்டு மெலிந்தன. இறுதியில் அவளுடைய உடல் முழுவதும் சுருங்கி, ஒரு சிறிய சிலந்தியாக மாறிவிட்டாள் (கிரேக்க மொழியில் ஆரக்னே என்கிற சொல்லுக்கு சிலந்தி என்று பொருள்).

நூல் நூற்பதில் உன்னை வெல்ல யாருமில்லை என்கிற தலைக்கணம் கொண்டதால், இனி வாழ்நாள் முழுக்க நூல் நூற்றுக் கொண்டே இரு என்று சபித்தாள் ஏதெனா.

கடவுள்களைக் கேலிச்சித்திரங்களாக ஆராக்னே நெய்தது பெரும்பிழையாகி போனது. அதன்பொருட்டே அவள் தண்டிக்கப்பட்டாள் என்பது கதையின் மையக்கரு. பொதுவாக எல்லா நாகரிகங்களிலும் இந்த கருதுகோல் இருந்திருக்கலாம்.

ஏதோ ஒரு தருணத்தில் குழந்தையாய் இருந்த போது வெகுளியாய் கடவுளைப் பற்றிய சில பகுத்தறிவு கேள்விகளை நாம் கேட்டிருப்போம். அந்த கேள்வி என்னவாக இருந்தாலும் அதற்கான பதில் ஒன்றுதான். 

‘சாமியைப் பத்தி தப்பா பேசாத. சாமி கண்ணை குத்திடும்’ என்று பயமுறுத்துவது நம் சமூகத்தில் இயல்பு. அதுவும் பெண்களுக்கு அது அதிகமாகவே இருந்திருக்கிறது. சில புரணாங்களைச் சொல்லி பெண்களை அடக்கி பழகுவதும், கேள்வி கேட்பவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று கதைகள் சொல்வதன் மூலமும், சமூதாயத்தில் ஆதிக்கம் நிறைந்த ஒழுங்குமுறையை நிறுவியிருக்கிறார்கள்.

அரக்னே தனக்கிருக்கும் கலையின் மீது தலைகணமாய் இருக்கவில்லை. அவள் தன்னம்பிக்கையுடன் இருந்தாள். ஏதெனாவைவிட நுணுக்கமான வேலைபாடுகள் அவளால் செய்ய முடிந்தது. 

ஏதெனா கடவுள்களின் அதிகார புகழ்ச்சியை நெய்தாள். அரக்னே அதைக் கேள்விக்குள்ளாக்குகிறாள். கடவுள்களை விமர்சிக்கிறாள். அதிகாரத்தை விமர்சித்ததன் விளைவாக அவள் தண்டிக்கப்படுகிறாள். 

ஓவிடின் மெட்டாமார்ஃபோசிஸ் கதைகளில் இன்னும் ஒரு கிரேக்கப் பெண் இருக்கிறாள். அவள் பெயர் டேஃப்னே. நதி கடவுளின் மகள் அவள். 

வேட்டையாடித் திரிவதும் காட்டில் சுதந்திரமாக அலைவதும் மிகவும் பிடிக்கும். திருமணம் மற்றும் காதல் வேண்டாம் என்று நினைத்திருந்தாள். அவள் வணங்கும் கன்னி தெய்வமான ஆர்டிமெஸைப் போல கன்னியாக வாழ வேண்டும் என்பது ஆசை. 

ஒருநாள் காதல் தெய்வமான யூரோஸைக் கேலி செய்கிறான் அப்பல்லோ. அதைப் பொறுக்க முடியாத யூரோஸ் தனது கைகளில் இருந்த தங்க அம்பை அவன் மீது ஏவுகிறார். ஈய அம்பை டேஃப்னி மீது ஏவுகிறார். 

அந்த நொடியிலுந்து அப்பல்லோ டேஃப்னியைக் காதலிக்கத் தொடங்குகிறான். அவள் விலகிச் செல்கிறாள். அதுதான் காதல் கடவுளான ஈரோஸின் தண்டனை. 

டேஃப்னேயைத் துரத்துகிறான் அப்பல்லோ. அவளை எப்படியாவது காதலில் விழ வைக்க முடிவு செய்தவன், “நான் இசையின் கடவுள், ஒளியின் கடவுள். என்னை எப்படி நிர்கரிக்கலாம்” என்றெல்லாம் தன்னைப் பிரகனப்படுத்திக் கொள்கிறான். ஆனால் டேப்னே அவனை ஏற்கவில்லை. காடு முழுக்க ஓடினாள். அவனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடினான். 

அவள் கால்கள் தளர்ந்து போயின. ஒரு கட்டத்துக்கு மேல் அயர்வாக உணர்ந்தாள்‌ டேப்னே. ஓவிட் இந்தக் காட்சியை ஒரு வேட்டைக்காரன் முயலைத் துரத்துவது போல வர்ணிக்கிறார். அன்றிலிருந்து இன்றுவரை மாறாத வர்ணனை இது.

அவன் தன்னை அணுகிவிடுவான் என்று தெரிந்ததும் தன் தந்தையிடம் மன்றாடுகிறாள். 

‘இந்த அழகுதான் என் நிலைக்குக் காரணமெனில் அது தேவையில்லை. அழித்துவிடுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று மன்றாடுகிறாள். 

அவள் வேண்டியவுடன் அவளுடைய உடல் மாறத் தொடங்கியது.

கால்கள் மண்ணில் வேரூன்றின.

தோல் மரப்பட்டையாக மாறியது.

கைகள் கிளைகளாக நீண்டன.

தலைமுடி இலைகளாக மாறின.

சில நொடிகளில் டேஃப்னே ஒரு லாரல் மரமாக மாறிவிட்டாள்.

இந்தக் கதையில் வரும் டேஃப்னே தன் உடல் மீது இருக்கும் உரிமையை நிலைநாட்ட, அவளின் உடலையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். கேலி செய்தது அப்பல்லோ. தண்டனையளித்தது யூரோஸ். ஆனால் இதில் ஒரு பெண் எங்கிருந்து வந்தாள் என்றுதான் தெரியவில்லை. 

மெடூசா வன்முறைக்குப் பிறகு அரக்கியாக மாற்றப்படுகிறாள். அரக்னே அதிகாரத்தை விமர்சித்ததற்காக சிலந்தியாக மாற்றப்படுகிறாள். டேஃப்னே துரத்தலிலிருந்து தப்பிக்க மரமாக மாறுகிறாள்.

மூவருமே மனித வடிவங்களை இழக்கிறார்கள். மனித இனத்தில் வாழத் தகுதியற்றவர்களாகக் கதைகள் சித்தரித்தாலும், குறியீடுகளாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வழி நடக்க அடுத்த தலைமுறை பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்தக் கதைகளில் நிகழ்வது ஒரே விஷயம்தான். அதிகாரம் கொண்ட ஆண்களின் செயல்களோ, அதிகாரம் கொண்ட கடவுள்களின் செயல்களோ கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக அந்த அதிகாரத்தின் விளைவுகளைச் சுமப்பது பெண்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு பெண் வேண்டாம் என்றால் அதைச் சமூகம் காது கொடுத்துக் கேட்க பழகவே இல்லையோ? விமர்சிக்கும் குரல்கள் ஏன் முடக்கப்படுகிறது. 

மெடூசா, அரக்னே, டேஃப்னே ஆகிய மூவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதாபாத்திரங்கள். ஆனால் அவர்கள் எழுப்பும் கேள்விகள் இன்னும் நம் காலத்தில் உயிரோடு இருக்கின்றன. பதில் எழுதப்படாத கேள்விகளாகவே இன்றளவும் இருக்கின்றன. ஒரு பெண்ணின் மறுப்பு மதிக்கப்படுவதில்லை? அதிகாரத்தை விமர்சிக்கும் குரல் ஏன் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது? பாதிக்கப்பட்டவர்களே ஏன் மீண்டும் மீண்டும் தங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது?

அந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதால்தான் பழைய புராணங்கள் இன்னும் புதிதாக வாசிக்கப்படுகின்றன. 

(தொடரும்)

படைப்பாளர்:

மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.

Exit mobile version