நீதி நூல்கள் எட்டு வகையான திருமணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அதில் எட்டாவதாக உள்ள பைசாச திருமணம், ஒரு கேவலமான காரியம் என்றும் கூறுகிறது. அதைச் செய்பவன் ஒருபோதும் நல்லவனாக இருக்க மாட்டான் என்று நீதி நூல்கள் வலியுறுத்த, காசி நாட்டு இளவரசிகளை, அவர்கள் சுயம்வரம் நடக்கும் நேரத்தில், அவர்களின் விருப்பம் இல்லாமல், கவர்ந்து வந்து விசித்திரவீரியனுக்கு மணமுடிக்கிறார் பீஷ்மர். ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல், கவர்ந்து வந்து திருமணம் செய்வது நற்காரியமன்று என்று நீதி நூல்கள் கூறினாலும், சத்யவதி தன்னுடைய குலம் தழைக்க, பைசாச திருமணம் செய்வதுதான் ஒரே வழி என்று பீஷ்மரை வலியுறுத்திக் கூறுகிறாள்.
அம்பை அவருடன் வாதாடி, காதலனுடன் சேர்ந்து வாழச் சென்றால், அங்கே பீஷ்மரால் வீழ்த்தப்பட்ட காதலன், அம்பையை ஏற்க மறுக்கிறான். அம்பை பீஷ்மரிடம் வந்து முறையிட்டு, அவரைப் பழிதீர்க்க சிகண்டினியாகப் பிறந்து காத்திருந்து பாரதப் போரில் அவரை வீழ்த்தியதெல்லாம் நாம் அறிந்த கதைதான். நீதி மற்றும் தர்மம் என்னும் வார்த்தைகளின் வழியே நமக்கு வலியுறுத்திக் கூறுவது, சம்மந்தப்பட்ட ஆண்களின் அதிகாரத்தைக் காபந்து செய்யவோ என்று தோன்றுகிறது.
அம்பாலிகாவும் அம்பிகாவும் விசித்திரவீரியனை மணமுடித்தாலும், நோயின் வீரியத்தால் அவன் இறந்துபோகிறான். இறந்துபோனவனைத் தகனம் செய்யும் முன்னரே, அம்பிகாவும் அம்பாலிகாவும் கருவுற வேண்டும் என்று அடுத்த திட்டத்தை வகுக்கிறாள் சத்யவதி. ஒரு சத்ரிய குலத்தில் உள்ள கடைசி ஆண்மகன் இறந்துவிட்டால், அக்குலப் பெண்கள் ஒரு பிராமணனுடன் உறவு கொண்டு, குல வாரிசைப் பெற்றெடுப்பார்கள். இந்தக் கோட்பாட்டைத் தர்ம சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன. அந்த வழியில் குல வாரிசைப் பெற்றுவிட, வியாசரை அழைக்கிறாள் சத்யவதி.
வியாசரைக் கண்டு அருவருத்து, அம்பிகை விழிகளை மூடிக்கொண்டதால், திருதராஷ்டிரன் விழியற்றவனாகவும், அம்பாலிகா பயந்து வெளிறிப் போனதால், பாண்டு வெள்ளைத் தோலுடன் (Albino) பிறப்பதாகக் கதை எழுதப்பட்டிருக்கும்.
மகாபாரதம் என்பது பல சிறப்பம்சங்கள் நிறைந்த கதை. காந்தாரி நூறு குழந்தை பெற்ற கதையை அறிவியல் புனைவென்று கூறலாம். ஒவ்வொரு கதாபாத்திரக் குணத்திலும் பல்வேறு படிநிலைகளைக் காணலாம். ஆன்மிகம், போர்க்கலைகள், மந்திரம், தந்திரம் என்று மகாபாரதக் கதை தொடாத வகைகளே இல்லை எனலாம். லட்சம் வரிகளைக் கொண்ட மிக நேர்த்தியாக எழுதப்பட்ட மிகுபுனைவு. ஒரு கற்பனை இலக்கியம்.
ஆனால் இந்தக் கற்பனை இலக்கியம் தோன்ற காரணமாக இருந்த காரணிகள் எவை என்று ஆராய்ந்தால், தர்மசாஸ்திரங்கள் கண்முன் வந்து நிற்கின்றன. எனக்கு மனுதர்ம சாஸ்திரம் மட்டுமே பரிச்சயம் என்பதால், மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்கும் ஸ்மிகிதைகள் பலவற்றிற்கு, பல கிளைக் கதைகள் மகாபாரதத்தில் இருக்கிறதென்பதே உண்மை. மனு தர்மம் சொல்லும் பெண்ணுக்கான தர்மங்கள் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
இவ்வாறு தர்மம் எனப் பெயரிடப்பட்டவை, உண்மையில் பெண்களின் தேர்வுகளை அழிக்கும் சட்டங்களாகவே செயல்பட்டுள்ளன.
எகிப்தியர்கள் ஐசிஸை ஒசைரிஸின் மனைவியாக நினைவில் வைத்திருக்கவில்லை. அரசை மீட்டெடுத்த அறிவாகவும், ஒசைரிஸுக்கு மறுவாழ்வு அளித்தவளாகவும், பெண் ஆளுமையாவும் நினைவில் வைத்தார்கள்.
ஆனால் மகாபாரதம் திரௌபதியின் துயரத்தை நினைவில் வைத்திருந்தாலும், அவளின் சுய விருப்பத்தை நினைவில் வைத்திருக்கவில்லை.
திரௌபதி சபையில் கேட்ட கேள்வி தர்மத்தை உடைக்கும் அளவுக்கு ஆழமானது. ஆனால் அந்தக் கேள்வி சமூக நினைவில் நிலைக்கவில்லை. நிலைத்தது அவளின் அவமானம் மட்டுமே.
ஐசிஸ் கணவனின் மரணத்தை அரசியல் மறுபிறப்பாக மாற்றினாள். திரௌபதி தனது அவமானத்தைக் கேள்வியாக மாற்றினாள். ஆனால் வரலாறு இரண்டு பெண்களையும் ஒரே விதமாக நடத்தவில்லை. ஒருத்தி தாய் தெய்வமாக உயர்த்தப்பட்டாள். இன்னொருத்தி தர்மத்தைக் காப்பாற்றிய பெண்ணாக மட்டுமே நினைவில் வைக்கப்பட்டாள்.
ஐசிஸ் தன்னைத்தானே மீட்டெடுத்துப் போராடியதாகப் புராணம் கூறுகிறது. ஆனால் திரௌபதி அவளைக் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தபின், கிருஷ்ணன் அவளைக் காப்பாற்றுவதாகக் கதை நகர்கிறது.
ஒரே உலகில் பிறந்த இரண்டு புராணங்களும், பெண்ணை இரண்டு வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்தன.
அந்தக் கற்பனைகளின் நிழலில்தான், பின்னர் வந்த சமூகங்களும் பெண்களை நடத்த கற்றுக்கொண்டன.
மெடூசா
அவள் பேரழகி. பளிங்குச் சிலை. கூந்தலழகி என்றும் கூறலாம். நட்சத்திர துகள்கள் மின்னும் இடைதொடும் அலைக்கூந்தலில் விழுந்தவர் எழவே முடியாது போல. அவள் சூடியிருந்த ஊதா நிறம் கொண்ட பூக்கள் அவள் கூந்தலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. அவள் ஏதெனாவின் பளிங்குக் கோயிலுக்குள் நுழைகிறாள். அங்குள்ள பளிங்குக் கற்கள் அவளின் வருகையில் மேலும் பொலிவு பெற்றது. ஏதெனாவிற்கு ஆலிவ் இலைகளும் வெள்ளை லில்லிகளும் மிகவும் பிடிக்கும். கைகளில் தும்பை நிற லில்லிகள் நீள்காம்புகளோடு நிறைய இருந்தன. கோயிலின் அருகில் இருந்த ஆலிவ் மரத்தில், ஒரு கூடையில் இலைகளைப் பறித்தாள்.
ஒரு திண்டின் மறைவில் பொசைடன் நின்றிருந்தான். இமைக்காமல் மெடூசாவையே பார்த்திருந்தான். விழித்திரைகள் திராட்சை மதுவைச் சுரந்து கொண்டே இருந்தது. அவள் விழியை உற்று நோக்கும் ஒவ்வொரு கணமும் கள்ளுண்ட தாக்கம் அவனைக் கிரக்கத்துக்கு உள்ளாக்கியது. ஏதெனா போல் பொசைடனும் ஒரு கிரேக்கக் கடவுள்.
கடவுளுக்கே காதலை வரவழைத்தவள் மெடூசா. பொசைடன் அவளைத் தினமும் ரசிப்பது வாடிக்கை. ஒருமுறை தன் காதலை மெடூசாவிடம் வெளிப்படுத்தினான். ஆனால் அவள் புறக்கணித்தாள். அதற்கொரு காரணமும் இருக்கிறது.
கிரேக்கத்தின் காவல் தெய்வமான ஏதெனாவிடம், காலம் முழுக்க அவள் கன்னியாகவே இருப்பதாக ஆலிவ் மரத்தின் மேல் சத்தியம் செய்திருந்தாள். அதனால் விடியல் பொழுதில் ஏதெனாவிற்குப் பூக்கள் சமர்ப்பித்து பூசை செய்வதே அவள் வழக்கம். வெள்ளை லில்லிகள், ஊதா வைலட்டுகள் என்று தினம் தினம் புதிதாக மலர்ந்த மலர்களைக் கொய்து ஏதெனாவிற்குச் சமர்ப்பிப்பாள்.
அவள் மறுக்க மறுக்க, பொசைடனுக்கு அவளின் மேல் ஆசை அதிகமாகிறது. ஒருநாள் ஏதெனாவின் கோயிலில் மெடூசாவை வன்புணர்கிறான். வன்புணர்விற்குப் பின் பொசைடனின் காதலும் முடிவுக்கு வருகிறது. ஏதோ சாதித்த உணர்வு பொசைடனுக்கு உருவாகிறது. ஆனால் மெடூசாவின் துயரம் அங்குதான் தொடங்குகிறது. இச்சம்பவத்தால், ஏதெனா ஆலயத்தின் புனிதம் நீங்கியதாகக் கோபம் கொள்கிறாள்.
தன்னைக் தற்காத்துக் கொள்ள முடியாத மெடூசா, ஏதெனாவின் காலடியில் சரண்புகுகிறாள். ஏதெனா எப்படியும் அவளுக்கு நியாயம் வழங்குவாள் என்று எதிர்பார்த்தாள் மெடூசா. ஆனால் ஏதெனாவோ மெடூசாவைச் சபிக்கிறாள். அவளை ஒரு கோர்கனாக மாறும்படிச் சபித்த கணம், மெடூசாவின் அலையலையாகத் திரண்டிருந்த கூந்தல் முழுக்க, விஷ நாக்குள்ள பாம்புகளாக மாறின. மேலும் அவளை யாரேனும் நேராகப் பார்த்தால், அவர்கள் கல்லாக உறைந்து போவார்கள் என்றும் ஏதெனா சபிக்கிறாள். அதுவரை அவள் அழகிற்காக அவளின் பின்னே சுற்றிய ஆண்கள் அனைவரும் அவளை நேராக உற்று நோக்கவே பயந்தனர். ஏனெனில் ஏதெனா கோயிலின் முன் கல்லாக சமைந்த பலர் நின்றிருந்தனர்.
இந்தக் கதை ஒவிட் என்னும் ரோமானியக் கவிஞரின் மெட்டாமார்சிஸ் என்னும் கதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. ஓவிடின் கருவை என் பாணியில் ஒரு சிறிய கதையாக எழுதியிருக்கிறேன்.
கிரேக்கப் புரணாங்களின்படி, மெடூசா ஒரு கோர்கன் என்கிற குறிப்பிருக்கிறது. அவள் அழகியாக இருந்து அரக்கியாக மாற்றப்பட்டாள் என்கிற குறிப்பேதும் இல்லை. கிரேக்கப் புராணக் கதைகளை வாசித்த ஓவிட், அவற்றைத் தன் காலத்தின் சமூகச் சூழல், அதிகார உறவுகள் மற்றும் அரசியல் நுணுக்கங்களோடு இணைத்து மீளுருவாக்குகிறார்.
கடலின் கடவுளான பொசைடனும் ஞானம் மற்றும் போர்த் தந்திரத்தின் தெய்வமான ஏதெனாவும், ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வமாகப் போட்டியிட்டனர். மக்களுக்கு யார் சிறந்த பரிசை வழங்குகிறார்களோ அவர்களே நகரின் காவல் தெய்வமாக ஏற்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. பொசைடன் தனது திரிசூலத்தால் பாறையைப் பிளந்து உப்பு நீர் ஊற்றை உருவாக்கினான். ஏதெனா ஓர் ஆலிவ் மரத்தை மக்களுக்குப் பரிசாக அளித்தாள். உணவு, எண்ணெய், மரப்பொருள் உள்ளிட்ட பல பயன்களை வழங்கிய ஆலிவ் மரம், உப்பு நீர் ஊற்றைவிட மக்களுக்கு அதிக நன்மை பயப்பதாகக் கருதப்பட்டது. இதனால் ஏதெனா போட்டியில் வெற்றி பெற்று, ஏதென்ஸ் நகரின் பாதுகாவலர் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
கோர்கனாக இருக்கும் மெடூசாவின் பாம்பு தலையும், அவளை நேரே பார்த்தால் கல்லாக உறையும் தன்மையும் கிரேக்கப் புராணங்களில் இருக்கிறது. பாலிடெக்டஸ் என்னும் அரசன் பெர்சியஸ் என்னும் வீரனின் தாயை மணக்க விரும்பினான். அதை விரும்பாத பெர்சியஸ், அரசனை தடுக்க முயன்றான். மெடூசாவின் தலையையே கொண்டு வருவேன் என்று அரசனிடம் சவால் விடுகிறான் பெர்சியஸ். பாலிடெக்டஸ் திட்டமிட்டு பெர்சியஸை ஆபத்தான பணிக்கு அனுப்பினான்.
காவல் தெய்வமான ஏதெனா அவனுக்குப் பிரதிபலிக்கும் கேடயத்தையும், ஹெர்மீஸ் கூர்மையான வாளையும் கொடுத்தனர்.
அந்தக் கேடயத்தின் பிரதிபலிப்பில் தெரிந்த மெடூசாவை ஹெர்மீஸ் அளித்த வாள் கொண்டு கொல்கிறான். வெட்டப்பட்ட பிறகும் மெடூசாவின் தலையை நேராகப் பார்த்தவர்கள் கல்லாக உறைந்தனர். அதனால் பெர்சியஸ் மெடூசாவின் தலையை ஏதெனாவிடம் வழங்கினான். தனது ஏஜிஸ் (Aegis) கவசத்தில் மெடூசாவின் தலையைப் பொருத்திக்கொள்கிறாள். பொசைடனுடன் சில தொடர்புகள் மெடூசாவிற்கு இருந்திருக்கிறது. அதனால் அவள் தலை வெட்டப்பட்டவுடன், அதிலிருந்து பெகாசஸ் மற்றும் க்ரைசயோர் பிறந்ததாகப் புராணம் கூறுகிறது. கிரேக்கப் புராணங்களின் மையக்கரு – ஏதெனாவின் உதவியுடன் அசுரவதம் பெர்சியஸ் செய்தான் என்பதே. அவளின் இறப்பிலிருந்து பெகாசஸ் (சிறகுள்ள வெள்ளைக் குதிரை) மற்றும் க்ரைசயோர் (தங்க வாள் கொண்ட வீரன்) பிறந்தது அசுர வதத்திலிருந்து பிறந்த நல்ல சக்தி என்று குறியீடாக வாசிக்கப்படுகிறது.
இந்தப் புராணக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஓவிட் மெடூசாவின் கதையை மறுபுனைவு செய்கிறார். பொசைடனுக்கும் ஏதெனாவிற்கும் இடையிலான முரண்பாட்டை, மெடூசா கோர்கனாக மாற்றப்படுவதற்கான பின்னணியாக அவர் பயன்படுத்துகிறார். அதன் பின்னர் உலகளவில் பரவிய மெடூசாவின் உருவம் பெரும்பாலும் ஓவிடின் பதிப்பின் வழியாகவே அறியப்படுகிறது.
ஓவிடின் கதை ஏன் இவ்வளவு பரவலாக மக்களிடம் சென்று சேர்ந்தது என்கிற கேள்விக்குச் சில பதில்கள் கிடைக்கின்றன. அவரது கதையில் மெடூசாவின் துயரமும், எந்தக் குற்றமும் இழைக்காத அவள் அனுபவிக்கும் தண்டனையும் மைய இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்டவளே தண்டிக்கப்படுகிறாள் என்கிற இந்த முரண்பாடே கதைக்கு ஆழமான உணர்ச்சி வலிமையை அளிக்கிறது.
இன்றுவரை பல கதைகள், நாவல்கள், திரைப்படங்கள் மற்றும் பிற கலை வடிவங்களில் பெண்களின் துயரம், அவமானம், ஒதுக்கப்படுதல் மற்றும் தண்டனை ஆகியவை மீண்டும் மீண்டும் சித்தரிக்கப்படுகின்றன. அவ்வகையான கதைகளின் நீண்ட மரபிற்குள் ஓவிடின் மெடூசாவும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
பொசைடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மெடூசாவை வன்புணர்வதும், எந்தத் தவறும் இழைக்காத மெடூசாவையே ஏதெனா சபிப்பதும், வேறு வேறு வடிவங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
“அவளுக்கு அந்த நேரத்தில் அங்கு என்ன வேலை?”, “அவள் ஏன் சிரித்தாள்?”, “அவள் ஏன் அப்படி உடையணிந்திருந்தாள்?” போன்ற கேள்விகள் இன்றும் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. குற்றவாளியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள், பாதிக்கப்பட்டவரிடமே கேட்கப்படுவது சமூகத்தின் நீடித்த முரண்பாடாக இருக்கிறது.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களைச் சமூகம் பல நேரங்களில் ஒதுக்கி வைக்கிறது. அவர்களின் அனுபவத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்களின் நடத்தையையும் வாழ்க்கை முறையையும் விசாரிக்கிறது. இந்தப் பின்னணியில், மெடூசாவின் கதையை வெறும் புராணக் கதையாக அல்லாமல், பாதிக்கப்பட்டவரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக அவப்பெயரின் குறியீடாகவும் வாசிக்க முடிகிறது.
மெடூசா கோர உருவம் எடுப்பதும், அவளை நேரில் பார்க்கும் மனிதர்கள் கல்லாக உறைவதும் ஒரு மிகுபுனைவு. ஆனால் அந்த மிகுபுனைவின் பின்னால் சமூக உண்மைகளின் நிழல்கள் இருக்கின்றன. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை ஓவிட் தனது காலத்தின் சமூகப் பார்வையின் அடிப்படையில் புனைந்தாரா, அல்லது அக்கால சமூகத்தில் நிலவிய கருத்துகளையே தனது கதையின் வழியாகப் பிரதிபலித்தாரா என்கிற கேள்வி எழுகிறது.
மெடூசாவின் கதையை வாசித்து முடித்த பின்பு, அந்தக் கதையின் பாத்திரங்களை மட்டுமல்ல, அதை எழுதிய ஓவிடின் பார்வையையும் விமர்சனரீதியாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தோன்றுகிறது.
ஏதெனா ஒரு பெண் தெய்வம். அவளைக் கொண்டே மெடூசாவிற்குத் தண்டனை அளிப்பதன் மூலம், ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறாளா என்கிற கேள்வியை ஓவிட் முன் வைக்கிறாரா என்றும் பார்க்க வேண்டியுள்ளது.
அதனால்தான் மெடூசாவின் கதை இன்றும் வாசிக்கப்படுகிறது. அது ஒரு தொன்மக் கதையாக மட்டுமல்ல; இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத ஒரு சமூகக் கேள்வியாகவும் நம்முன் நிற்கிறது.
(தொடரும்)
படைப்பாளர்:
மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.


