நாற்பது வருடங்களாகத் தனித்த மரமொன்று மண் துளைத்து வேரூன்றி நின்றிருந்தது. அந்த மரத்தின் நிழலில் அவள் நடை பழகியிருக்கிறாள். அவளுடைய அம்மா அவளுக்கு உணவு ஊட்டியிருக்கிறார். தோழிகளோடு கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடியிருக்கிறாள். அம்மரத்தின் அருகில் முள்வேலியில் வளர்ந்து கிடக்கும் காட்டாமணுக்குச் செடியில் கழுத்துச் சங்கிலியும் வளையலும் செய்துபோட்டு அழகுப் பார்த்திருக்கிறாள். முன்னூறு வருட மரமாம். அம்மா பெரிதாகத் தண்ணீர் ஊற்றியதில்லை. வரண்ட நிலத்திலும் நிலைத்து நிற்கும் மரம். மண்ணின் வளத்தைப் பெருக்கும். ராசியான மரமாம். செல்வத்தை ஈர்க்க வல்லதாம். எதிர்மறை எண்ணங்களை அழித்துவிடுமாம். அம்மா என்றோ அவள் செவியுள் நொதித்த சொற்கள் இவை.
இன்று ஏதேதோ நினைவுகள்… பெண்டுலம் போல் ஊசலாடிக் கொண்டிருந்த மனதில் எண்ணற்ற எண்ணங்கள் கவனமாக கவனமில்லாமல் வந்து வந்து போனது. அவள் எதையும் நினைவுகூர முனையவில்லை. தலைதெறிக்க ஓடும் செழித்த நினைவுகளை வெட்டியொட்டி, தொடர்பற்ற காட்சிகளைக் கோர்வையாக வண்ணமூட்டி மனத்திரையில் காட்சியாக்கி மாயவித்தை செய்து கொண்டிருந்தது மனம். அதில் திருப்பங்கள் ஏதுமில்லை. திருத்தங்கள் இருந்திருக்கலாம் என்கிற தருணங்கள் ஏராளம். சில சன்ன சிரிப்புகளும் செல்ல சிணுங்கள்களும் விரிய விழையாத உதடுகளைத் தொட்டுச் சென்றது. அவையெல்லாம் சொற்பமோ என்று தோன்றினாலும், ஊழி நினைவுகளுள் மூழ்கி மூச்சுத் திணறும்போது, மூச்சுமிழவும் திசைதிரும்பவும் மனம் சிலிர்க்கும் காட்சிகளை மனம் சேகரம் செய்து வைத்திருப்பது உண்மைதான்.
இதன் பெயர் வன்னி மரம். அதுவே அவளுக்குச் சில காலம் முன்புதான் தெரியும். அவளும் அந்த வன்னி மரமும் ஒன்றுதான். அவளும் அப்படித்தான் வளர்க்கப்பட்டாள். பிறந்ததும் மகாலட்சுமியானாள். அவளோடு வீட்டின் செல்வமும் வளர்ந்தது. மகாலட்சுமியாகப் பெயர்க் காரணத்தோடு வளர்க்கவும்பட்டாள்.
‘பெண்பிள்ளைய பெத்து வச்சிருக்க. இனி தங்கத்தைச் சேரு’ என்கிற சொந்தங்களின் அறிவுறுத்தல்கள் வீடு முழுக்க ஒலித்துக் கொண்டேயிருந்தது. அவள் ஆசைகளை ஆழப்புதைத்து எழுப்பிய சமாதியில், வீட்டு அலமாரியில் தங்கம் புதையலாகச் சேர்ந்தது. திருமணம் என்கிற வாழ்நாள் இலக்கை அடைய அவளும் காத்திருந்தாள். மெத்தனம் மொத்தமாக அவளைச் சூழ, ஏதோ படித்தால் போதுமென்கிற எண்ணம். கொழுத்த மீனைக் கொத்தியெடுக்கக் காத்திருந்த கொக்குபோல, அவளின் எதிர்காலமும் அவளைக் கழுவிலேற்ற காத்திருந்தது.
நூறு பவுன் நகையுடன் அவளையும் ஓரிடத்தில் அடமானம் வைத்தனர். இந்த வீட்டின் மகாலட்சுமி அந்த வீட்டிற்குச் சென்றாள். நூறு பவுன் அவளுடைமை போல் அவளோடு வளர்ந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அது அவளது குடும்பச் சொத்தானது. தொழில் நொடித்துப்போக முதலில் அவள் புற அனுமதியோடு அடகுக்கடைக்கு இடம்பெயர்ந்தது. அவளுக்கு வேறு வழிகள் இல்லை. அம்மா கொடுத்தார். அண்ணி கொடுத்தார். அவளும் கொடுத்தாள். அவ்வளவுதான். உனக்குக் கொடுக்க விருப்பமா என்கிற கேள்வியெல்லாம் யாரும் கேட்கவில்லை. கேட்கப்படாத கேள்விக்கு விடை எப்படிச் சொல்ல முடியும்?
கணவனின் மீண்டெழாத தொழிலால் மீண்டும் மீண்டும் மனவுளைச்சலுக்கு ஆளானாள். அவளை அடித்து கொடுமைப்படுத்தி பணம் கேட்டனர். அண்ணனோ அவள் அம்மா வீட்டின் படியேறவிடவில்லை. நகைபோட்டு விமர்சையாகத் திருமணம் முடித்ததோடு, பந்தமே முடிந்ததுபோல் பேசினான். அப்பா பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. அவளை நினைத்து வருத்தப்பட அம்மா இல்லை.
புகலிடம் தேடி வந்த அவளை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. சில பல மன்றாடலுக்குப் பிறகு அவளும் அவள் குழந்தையும் அம்மா வீட்டில் தஞ்சம் புகுந்தனர். சொத்தோ உரிமையோ அவளுக்கேதும் இல்லை என்று கையொப்பமில்லா ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தபின், அடுக்களையில் ஓரமாக ஓர் இடம் கிடைத்தது.
வன்னி மரத்தடியில் அமர்ந்திருந்தவள், அதனடியில் உலர்ந்து போயிருந்த மண்ணை, ஒரு பிடி அள்ளி மீண்டும் கீழே தூவினாள். இந்த வன்னி மரம்போல்தான் பெண்களும் போல. வேர் பிடுங்கி வேறிடம் நட்டாலும், வேரூன்றி வளர வேண்டும். அன்பெனும் நீரூற்றி அவள் பராமரிக்கப்படவில்லை என்றாலும், வளமாக இருக்க வேண்டும்.
பெண்ணிற்குக் கணக்கில்லாமல் தங்கம் வழங்க தயாராக இருக்கும் இன்றைய சமூகம், அவளுக்கான உரிமைகளைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறது. சில சதவீதப் பெண்கள் வேலைக்குச் சென்று பொருளீட்ட தொடங்கியிருந்தாலும், பெரும்பாலும் பொருளாதாரச் சுதந்திரம் இல்லை என்பதே இன்றைய நிலை.
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்கூடப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் போது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அதைப் பற்றிப் பழம்பெரும் நாகரிகங்களில் உற்று நோக்குகையில் சில சிறப்பான தகவல்கள் கிடைத்தன.
நைல் நதி மிகப் பழமையான பெருநதி மட்டுமல்ல. வானளாவி நிற்கும் கலாச்சாரச் சின்னங்கள் எகிப்து முழுக்கப் பரவி விரவியிருந்தாலும், பொங்கிப் பெருகிய நதி வெள்ளம் சொல்லும் தொல்மனித வரலாறு, அதன் கரைகளில் படிந்திருக்கும் கருமணலைப் போல வளமிக்கதாகவே இருக்கிறது.
மனிதகுலம் நாகரிகம் வளர்ந்ததன் மூலமாவும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கங்களாலும் சமத்துவம் பேணி சமநிலை அடைகிறது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த போது, எகிப்து பெண்ணின் உயிலொன்று அதை உடைத்துவிடுகிறது.
அவள் பெயர் நவுனாக்டே. நான்கு வயது சிறுமியாக இருந்த போது, அவளின் அம்மா அவளை நைல் நதிக் கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் ஈச்ச மரத்தின் நிழலில் அமர்ந்து நைல் நதியின் நீளத்தை அளப்பதே அவளுக்கு வாடிக்கை. அவ்வப்போது காற்றில் அசைந்த இலைகளும், அதைக் கண்ணாடியாகப் பிரதிபலித்த நைல் நதியும் அவளுக்குப் பிடித்தமானவை. குலைகளாகத் தொங்கும் ஈச்சம் பழங்கள் இளமாலை சூரியனின் தீப்பாய்ந்த கரங்களால் செந்நிறமாக ஒளி வீசியது.
நைல் நதியின் இரு கரைகளிலும் கணக்கில்லாத ஈச்ச மரங்கள் இருந்தாலும், அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள மரம் அவளுக்குப் பிடித்தமானது. அவ்வப்போது நன்கு பழுத்த பழங்கள் நீருள் விழும்போது அதிரும் நீரும், தோன்றும் ஒலியும் ஏழு சுரங்களை மிஞ்சிவிடும்.
ஈச்ச மரம் மட்டுமல்லாமல், அங்கு நிறைய பப்பைரஸ் செடிகளும் இருக்கும். பப்பைரஸ் என்பது நீர்ச்செடி. நீளமான, மென்மையான தண்டு கொண்ட செடி. பப்பைரஸ் தண்டை நறுக்கி, அடுக்கி, அழுத்தி காகிதம் போல தயாரித்தனர் எகிப்தியர்கள். அதை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். பல தொன்மையான அரச ஆவணங்கள் பப்பைரஸில் நமக்குக் கிடைத்திருக்கிறது. பப்பைரஸில் காகிதம் செய்வதுதான் நவுனாக்டே அம்மாவின் வேலை.
எங்கிருந்தோ வளமான கருமணலை நைல் நதி புரட்டி எடுத்து வருவதுபோல், அவள் வாழ்வின் வளமை நினைவுகளைக் கிளறிவிட்டது நைல் நதியும் ஈச்ச மரமும். அறுபது ஆண்டுகள் ஓடிக் கடந்திருந்தாலும், நைல் நதியின் நனியோட்டம் மாறவில்லை. ஈச்ச மரத்தின் கிளைகளின் பசுமை மாறவில்லை. அதே நதியோட்டம். அதே இலையாட்டம். அவள் மனதில் ஈர நினைவுகளை உழுதுவிட்டுச் சென்றது.
அதுவரை அமைதியின்றி தவித்த மனம் சமநிலைக்கு வந்தது. அவள் குழந்தைப் பருவம் தொடங்கி, தற்போது உந்தித் தள்ளும் நிகழ்கால நொடிவரை பொறுமையாக அசை போட்டாள். திருமணம் முடித்து எட்டுக் குழந்தைகள் பிறந்தன. நன்றாகச் சென்று கொண்டிருந்த திருமண வாழ்வில் திடீரென பெருந்துயரம் ஒன்று நிகழந்தது. அவளின் கணவன் இறந்து போனான். அடுத்து அவள் நோய்வாய்ப்பட, அவளின் ஐந்து பிள்ளைகள் அவளைப் பராமரித்துப் பார்த்துக் கொள்கின்றனர். சில காலத்திற்குப்பின் அவள் மற்றொரு துணையைத் தேடிக் கொள்கிறாள். வாழ்வு பல மலர்ச்சிகளையும் அயர்ச்சிகளையும் அவளுக்குக் கொடுத்திருந்தது. இப்போது இறப்பின் விளிம்பில் இருக்கிறாள். தனது சொத்துகளைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். பல மாதங்களாகப் பிள்ளைகள் சொத்திற்காகச் சண்டையிடுகின்றனர். அவளுக்கு முடிவெடுக்க முடியவில்லை. குழம்பிப்போன மனதுடன் நைல் நதிக்கரையை நாடி வருகிறாள். ஈச்ச மரத்தின் நிழல் அவளை அரவணைத்துக் கொள்கிறது. அவள் மனம் வேண்டும் முடிவை அகழ்ந்து எடுத்துவிட்டாள்.
மனம் ஏதேதோ கேள்விகளை அடுக்க, அதற்கான பதில்களை அடுக்கிக் கொண்டே போனாள். பல நாட்களாகப் பதில் எழுதப்படாமல் இருந்த கேள்விக்கு ஈச்ச மரமும் நைல் நதியும் பதில் கூறின. இதோ இந்த நைல் நதி வற்றாத உயிர்நதியாக இருந்தாலும், ஈச்ச மரம் நதியுடனான உறவை என்றுமே முறித்துக் கொள்ள முனைந்ததில்லை. நைல் நதி கரையுடைத்துப் பொங்கிப் பெருகிய போது, பொறுமை காத்தது. நதி உருட்டிப் பிரட்டி கொணரும் வளத்தை ஈச்ச மரம் உறுஞ்சிக்கொள்கிறது.
என்னைப் பராமரிக்காதவர்களுக்கு என் சொத்துகளில் பங்கில்லை என்று உயில் எழுத முடிவு செய்கிறாள். வீடு சென்று அதை ஆவணப்படுத்துகிறாள்.
அந்த ஆவணத்தில் அவளுடைய இரண்டாவது கணவனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் முக்கியமானது,
அவள் சொத்துகளைப் பகிர்வதில் எந்த ஆண் அனுமதியும் இல்லாமல், தன் விருப்பப்படி முழு உரிமையுடன் முடிவு செய்திருக்கிறாள்.
நவுனாக்டேவின் உயில் டெயர் எல் மெடினாவில் கிடைத்தது. இந்த ஆவணம் பெண்களுக்குச் சட்ட சுதந்திரம் மற்றும் சொத்துரிமை இருந்ததை உறுதிபடுத்துகிறது.
நாம் இன்று பேசும் பெண்களின் உரிமை, பொருளாதாரச் சுதந்திரம், சுய முடிவு என்று அனைத்தும் நவீன உலகத்தின் கண்டுபிடிப்புகள் அல்ல. அவை ஏற்கெனவே குறுமீன்கள் போல ஆங்காங்கே மினுக்கிக் கொண்டிருந்த உரிமைகள் என்று தோன்றுகிறது.
இந்த ஓர் உயிலை மட்டும் வைத்து எகிப்து பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது. நைல் நதியின் வளம் போல் எகிப்திய மாகாணத்தில் உலக வரலாற்றில் ஒளிச்சிறப்பைப் பரப்பிய பெண் ஆட்சியாளர்கள் பலர் உள்ளனர்.
நைல் நதியின் கரைகளில் எழுந்த எகிப்து, வெறும் பிரமிடுகளின் நாகரிகம் மட்டுமல்ல. கல்லில் காலத்தை உறைய வைத்த கோயில்கள், வானைத் தொட முயலும் கட்டிடங்கள், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைக்கூடச் சிந்தித்த மத நம்பிக்கைகள் அனைத்தும் சேர்ந்து மனித வரலாற்றின் நீண்ட நதியில் எகிப்தைத் தனித்துவமாக நிறுத்துகின்றன.
ஆனால் எகிப்தின் இன்னோர் ஆச்சரியம், அதன் பெண்கள். உலகின் பல நாகரிகங்களில் பெண்கள் அரண்மனைச் சுவர்களுக்குள் மறைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலங்களில், எகிப்தில் அவர்கள் பரோவாக அரியணை ஏறினர். ஆட்சியும், மதமும், அரசியல் முடிவுகளும் ஆண்களின் கைகளில் மட்டுமே சிக்கிக் கிடக்கவில்லை. மெர்நீத் தொடங்கி க்ளியோபாட்ரா வரை பல பெண்கள் எகிப்தின் வரலாற்றில் வெறும் அரசிகளாக அல்ல, அரசை வழிநடத்திய ஆட்சியாளர்களாகப் பதிந்திருக்கிறார்கள்.
நாம் ஏற்கெனவே பார்த்த கில்கமேஷின் சுமேரிய நாகரிகம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் எகிப்தின் பழைய ராஜ்ஜியம் விண் முட்டும் பிரமிடுகளைக் கட்டிக் கொண்டிருந்தது.
எகிப்தின் நீண்ட வரலாற்றில் மெர்நீத், ஹட்செப்சுட், நெஃபர்டிட்டி, அஹ்ஹோத்தெப், அஹ்மோசே-நெஃபர்டாரி மற்றும் கிளியோபாட்ரா போன்ற பெண்கள் எகிப்தின் அரியணையை அலங்கரிக்கும் அழகு நங்கையாராக மட்டுமன்றி, அரசியல், மத, சாம்ராஜ்ய சம்மந்தமான விஷயங்களில் பல தீர்மானங்களை எடுத்தும், அரசை வழிநடத்தியும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பிற நாகரிகங்கள் சட்டரீதியாகப் பெண்களை ஒடுக்கிய காலக்கட்டத்தில், எகிப்தில் பெண்களின் குரல் சற்று உரக்கவே ஒலித்திருக்கிறது. அதிகாரத்தின் நிழலில் பிற நாகரிகப் பெண்கள் வாழ, எகிப்தில் பெண்கள் பரோவாக உயர்ந்தனர். எகிப்து நாகரிகத்தில் பெண்கள் சொத்துகள் வாங்கவும் விற்கவும் செய்திருக்கின்றனர். அரசவைக்கு வழக்குகளை எடுத்து வந்தனர். எகிப்தில் குடியுரிமை கொண்ட சாதாரணப் பெண்களுக்கும் நிலவுரிமை இருந்திருக்கிறது என்பதை வில்பர் பப்பைரஸ் தகடு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
நைல் நதியின் கரைகளில் கிடைத்த வில்பர் பப்பைரஸ் என்பது நிலவரி மற்றும் நில பதிவேடு ஆவணம் மட்டுமல்ல. நில அளவோடு பெண்களின் பெயர்களும் பதிவாகியிருக்கிறது. இது ராம்சேஸ் 5 (கிமு 1147–1143) காலத்தைச் சேர்ந்தது.
ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தில் பெண்களின் நிலையைத் தெரிந்து கொள்ள, அந்த நாகரிகத்தின் கோயில்களையும் மாடமாளிகைகளையும் மட்டும் ஆராய்தல் போதாது. நிலம் யாருடைய பெயரில் இருந்தது, சொத்தின் மீது யாருக்கு உரிமை இருந்தது, நீதிமன்றத்தில் யாருடைய குரல் ஒலித்தது — இவையெல்லாம்தான் அந்தச் சமூகத்தின் உண்மையான வடிவத்தைக் காட்டுகின்றன.
உலகின் பல பழைய சமூகங்களில் அதிகாரத்தின் மையத்தில் ஆண்களே நின்றனர். பெண்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலும் தந்தை அல்லது கணவனின் நிழலுக்குள் மட்டுமே இருந்தன. ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும், உலகின் பல பகுதிகளில் அந்த நிலை முழுமையாக மாறிவிடவில்லை. இன்றும் மிகக் குறைவான பெண்களுக்கே தங்கள் பெயரில் சொத்துகள் இருக்கின்றன.
வில்பர் பப்பைரஸ் நிலவரி பதிவேட்டில் பெண்களின் உரிமைச் சட்டங்கள் நேரடியாகச் சொல்லப்படவில்லை. எனினும் பெண்கள், தங்கள் பெயரில் சொத்துகளை வாங்கவும், விற்கவும், பராமரிக்கவும் அதிகாரம் பெற்றிருந்தனர் என்பதை ஐயமின்றி அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிலப் பதிவேடு பெண்களைச் சிறு நிலக்காரர்கள் (women small holders) என்று குறிப்பிடுகிறது. அந்தக் காலத்தில் பெண்கள் எவ்வளவு உயர்ந்த நிலை பெற்றிருந்தனர் என்பதையும், அவர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு நிலையில் இருந்ததையும் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த ஆவணத்தில் பெண்கள் பொதுவாக ‘nh(t) n niwt’ எனப்படும் ஒரு சமூக அடையாளத்தால் குறிப்பிடப்படுகிறார்கள். இதன் பொருள் ’நகரத்தின் சட்டரீதியான குடியினர்’ அல்லது ’குடியுரிமைப் பெற்ற பெண்’ என்பதாகும்.
இதன் மூலம் பெண்கள் அடிமைகள் அல்ல, முற்றிலும் உரிமை பெற்ற குடிமக்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் சமூகத்தில் தனித்த சட்ட அடிப்படை கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆண் பாதுகாப்பின் கீழ் இருந்தவர்கள் எனவும், கணவரின் சொத்து உரிமைக்கு உட்பட்டவர்கள் எனவும் எங்கும் குறிக்கப்படவில்லை.
நில உரிமை பெண்களின் கணவர்களின் பெயரில் இருந்திருந்தால், இன்னாரின் மனைவி என்கிற குறிப்பிருந்திருக்கும். ஆனால் பெண்களின் பெயரிலேயே உள்ளது. இது அந்தப் பெண்கள் தங்கள் சொத்துகளில் முழுக் கட்டுப்பாடு கொண்டிருந்தனர் என்பதற்கான முக்கியமான ஆதாரமாக வில்பர் பப்பைரஸ் திகழ்கிறது.
பெண்கள் கொண்டிருந்த நிலங்கள் பெரும்பாலும் தனிநபர் சொத்து பகுதிகளில் காணப்படுகின்றன. அரசு அல்லது கோயில் நில மேலாண்மையில் பெண்கள் அதிகம் காணப்படவில்லை என்றாலும், தனிநபர் நிலங்களில் அவர்களின் பெயர் இடம்பெறுவது, பெண்கள் குடும்பத் தலைவிகளாகவோ, அல்லது கணவர் மரணத்திற்குப் பின் முதன்மை உரிமையாளராகவோ இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. அக்காலத்தில் எகிப்து பெண்கள் சொத்து வைத்திருப்பது விதிவிலக்கல்ல, ஒரு வழக்கமான செயல்முறையாக இருந்தது என்பதைப் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது. குழந்தைகள் தாயின் சொத்தை மரபுரிமையாகப் பெற்றுக் கொள்கிறார்கள். நிலம் பெண்ணின் சொத்தாக இருந்ததால், எகிப்தில் பெண்கள் சமவுரிமை பெற்றிருந்தனரோ என்கிற எண்ணம் தோன்றுகிறது.
இது மெசப்படோமியா, கிரேக்கம் போன்ற உலகின் மற்ற நாகரிகங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முன்னேற்றமான சட்ட அமைப்பு. நாம் முன்பு பார்த்த ஹமுராபி சட்டத்தொகுப்பில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குத் தந்தையோ கணவனோ பாதுகாவலர்களாக இருந்தனர்.
எகிப்தில் பெண்கள் நில உரிமையாளர்களாகக் காணப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நிலத்தின் உற்பத்தி, வரி செலுத்துதல், கடன் கொடுத்தல், நிலப் பராமரிப்பு போன்ற பொருளாதாரப் பொறுப்புகளிலும் பங்காற்றினர். இதனால் வில்பர் பப்பைரஸ் எகிப்தில் பெண்கள் கோயில் பணி, தொழில், வீட்டுப் பணி போன்றவற்றில் மட்டுமல்லாமல், நேரடிப் பொருளாதாரப் பங்கேற்பாளர்களாக இருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
வில்பர் பப்பைரஸ் பெண்களின் சொத்துரிமை பற்றிப் பேச, ககூன் பேப்ரிஸ் பெண்களின் உடல்நலத்தில் அக்கறை காட்டுகிறது. ககூன் பேப்ரிஸில் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் இருக்கிறது. கருப்பை சம்மந்தமான பல நோய்களுக்குத் தீர்வுகள் வழங்குகிறது. மதவிடாய் வலிகள், கருத்தடை, உடல் சூடு, அதிக ரத்தப்போக்கு போன்ற பலவிதமான பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வுகளைச் சொல்கிறது.
டெயர் எல் மெடினா பேப்ரஸ் பெண்ணின் சமூகநிலையை நிறைய ஆணித்தரமான காரணங்கள் கொண்டு வலுவாகச் சொல்கிறது. பெண்களின் விவாகரத்து கோரிய வழக்குகள், கணவன் மனைவிக்கு இடையிலான சொத்து ஒப்பந்தங்கள் என்று ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எகிப்தின் புது ராஜ்ஜிய தொடக்கத்தில் டெயர் எல் மெடினா கிராமத்தில் மக்கள் கணக்கெடுப்பு ஆவணங்களின்படி, ஒருவொரு வீட்டிலும் ஒரு கணவனுக்கு ஒரு மனைவி என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவருக்குப் பல மனைவிகள் இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை.
பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரடோடஸ், தனது புத்தகத்தில் ’எகிப்தியர்கள் கிரேக்கர்களைப் போலவே, ஒரே ஒரு மனைவியையே திருமணம் செய்து கொள்கிறார்கள்; என்று பதிவு செய்திருக்கிறார்.
அடுத்து விவாகரத்துச் சட்டமும் இருவரையும் சமமாகவே நடத்தியது. கணவனோ மனைவியோ, தன் இணையைப் பிடிக்கவில்லையெனில் பிரிந்து செல்லலாம். அல்லது வேறொருவர் மீது விருப்பம் இருந்தாலும் பிரிந்து செல்லலாம். பிரிவு என்பது திருமண ஒப்பந்தத்தை உடைப்பதை மட்டும் சட்டம் கருத்தில் கொள்ளவிவ்லை. திருமண வாழ்க்கையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஈட்டிய பொருளையும் சொத்துகளையும் பிரித்துக் கொடுக்கிறார்கள். எந்தவோரிடத்திலும் பெண் ஆணின் சொத்தாகப் பார்க்கப்படவில்லை. தனி நபராக, நாட்டின் குடியுரிமை பெற்றவளாகவே இருந்திருக்கிறாள்.
டூரின் நீதிமன்ற ஆவணத்தில், ஹரீம் சதி வழக்கும், அதற்கு வழங்கிய தண்டனையும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ராணி டியே தனது மகனை அரியணையில் ஏற்றி வைக்க அரசரான ராம்சேஸ் lllஐ கொல்ல முயன்றார். இந்தச் சதியில் பல அரசவைப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆவணம் பெண்களின் அரசியல் பங்கு மற்றும் அவர்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. எகிப்திய பெண்கள் அழகு பொம்மைகளல்ல என்பதைத் தெளிவாகப் பல ஆவணங்கள் விளக்குகின்றன. எகிப்தின் நீண்ட நெடிய வரலாற்றில், பெண்கள் அடக்கியாளப்படவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.
(தொடரும்)
படைப்பாளர்:
மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.


