Site icon Her Stories

உங்க நிறவெறி தான் எங்க ஜாதி வெறி

அடுக்களை டூ ஐ.நா. – 13

 “கேள்விகளை  நாங்க தான் கேட்போம், நாங்கள் மட்டுமே தான் கேட்போம்”னு ஒரு பெரிய கும்பலே தருமிகளாய் மாறவிட, வேற வழியில்லாம நக்கீரன்களாக  மாறிய  ஏழு பேருக்கும், “ தடக் தடக்…தடக் தடக்”னு நெஞ்சாக்கூட்டுக்குள்ள ட்ரெயின் ஓட,  விடிய விடிய ப்ரீ பயர் விளையாடிட்டு,   எக்ஸாம் ஹாலுக்குள்ள ‘பெப்பப்பே’ னு முழிக்கற மாணவர்கள் போல உட்கார்ந்திருந்தோம்.

அமெரிக்காவின் கேதரினுக்கு பதில் சொல்ல வாய்ப்பே வரல…பின்ன ? பொதுப்பள்ளி, தனியார் பள்ளி, வீட்டுப்பள்ளின்னு மூணுவிதமான பள்ளிகள்  உள்ள அமெரிக்காதான்  உலகிலேயே ஒவ்வொரு மாணவனுக்கும்  அதிகமாக பணம்  செலவழிக்கிறது. கல்விக்காக,  பட்ஜெட்ல 1.3 ட்ரில்லியன் அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில 7.2 % ஒதுக்குகிறது அமெரிக்கா. 1910-லேயே 72 சதவீத பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில பிடிச்சுப் போட்டவங்க, தொடர் முயற்சியாலும்  பலவித சட்டங்களாலும், 1930-ல சிறப்புக் குழந்தைகள் உள்பட 100 சதவீத பள்ளி வயதுக் குழந்தைகளை, பள்ளிக்கூடத்தில சேர்த்துட்டாங்க. 

National School Lunch Act மூலமாக 1946லயிருந்தே வசதிக் குறைவான பிள்ளைகளுக்கு மதிய உணவு, மற்றும்  No Child Left Behind  என்ற  முழக்கத்துடன் கூடிய ஆபரேஷனின் விளைவு , இன்றைக்கு 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற நாடாகியிருக்கு அமெரிக்கா.

அடேங்கப்பா….எங்களுக்கு 74 %  கல்வியறிவு  கொண்டுவர்றதுக்குள்ளேயே  நாக்கு தள்ளிருச்சி. அதுவும் இந்த கல்வியறிவு…. கல்வியறிவுன்னு பெருமைப் பட்டுக்கறோமே , அது எப்படி தெரியுமா ?  “ஏழு வயதுக்கு மேற்பட்ட ஒருவன் ஏதேனும் ஒரு மொழியை வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருந்தால்  அவன் கல்வியறிவு பெற்றவன்” என்கிறது யுனெஸ்கோ. ஆனால் இங்கோ, சாமி பட சொர்ணாக்கா, கையில் பச்சை குத்தி படம் போடுவது மாதிரி,  தங்கள் பெயரை எழுதும் அனைவரும் கல்வியறிவு பெற்ற கணக்கில் வந்திடுவாங்க! அப்படி சேர்த்ததுதான் இந்த 74 சதவீதம்.  இதுக்கே கிட்டத்தட்ட எழுபது வருசமா எத்தனையெத்தனை  திட்டம், கல்விக்கான கமிஷன்கள்,  பயிற்சி,  புள்ளிவிபரம், ஆய்வுகள் ,தெருத்தெருவா…வீடுவீடா  புள்ளபுடி சம்பவங்கள்!)

உலகின் சிறந்த கல்வியமைப்பு  பெற்ற நாடுகளில் 14 வது இடத்தில் இருக்கும் அமெரிக்கர்களின்  ஒரே குறை, பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை என்பது மட்டுமே.  பெற்றோர் குழந்தைகளின் படிப்பை கவனிப்பதில்லை,   வாசிக்க உதவி செய்வதில்லைன்னு ஐ.நா.வில் வந்து புலம்பும்  அண்ணாச்சிகள் அறிய மாட்டார்கள், எங்க பெற்றோருக்கெல்லாம் புள்ள எந்த வகுப்பில படிக்குதுங்கறதே தெரியாது என்பதும், சாயங்காலம் வீட்டுக்குப் போய் புத்தகப்பையைத் தூர வீசுபவன், காலையில அதைக் கண்டுபிடிச்சு எடுத்திட்டு வர்றதே அரும் பெரும் சாதனை என்பதும்.  இதில்  வாசிக்க வைக்க பெற்றோரின்  ஒத்துழைப்பா…ம்ம்ம்ம்… என்னமோ போடா கொமாரு அமெரிக்கா  எங்கியோ போய்ட்டு இருக்கு! 

எங்களை ஒண்ணும் சும்மா எடை போட்றாதீங்க, உங்கள விட நாங்க ஒண்ணும் கொறஞ்சவுங்க இல்லன்னு பின்னாடியே  வருது பெல்ஜியம் . டச்சு, பிரெஞ்சு , ஜெர்மன் என்று மூன்று மொழி பேசும் மக்களுக்காக சமுதாயப் பள்ளி, பொதுப்பள்ளி, கத்தோலிக்க சர்ச்சுடன் இணைந்த இலவசப் பள்ளின்னு மூன்று விதமான பள்ளிகள் இங்க இருக்கு. 5 முதல் 18 வயது வரைக்கும்- அதாவது பட்டப்படிப்பு வரைக்கும் கட்டாயக் கல்வின்னாலும்,  முன்பருவக் கல்வி தொடங்கும் இரண்டரை வயசிலேயே 90 சதவீதம் குழந்தைகளை பள்ளியில சேர்த்திடறாங்க பெற்றோர்.

2003 லேயே கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 99! 11.2 மில்லியன் மக்கள் இருக்கும் பெல்ஜியத்தில், கிட்டத்தட்ட 12.5 சதவீதமானோர் வெளிநாட்டு ஆட்கள் இருப்பதால்தானோ என்னவோ, சர்வதேசப்பள்ளிகளால் நிரம்பிக் கிடக்கிறதாம் ப்ரசல்ஸும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும். மொத்த மக்கள்தொகையில் 97 சதவீதமானோர் நகர்ப்புறங்களில் வசிப்பதால், குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகமாம்.  அட போங்கப்பா,  உங்ககிட்ட கேட்க ஒண்ணும் இல்லை….போய் ஓரமா உட்கார்ந்து குச்சி மிட்டாய் சாப்பிடுங்கன்னு லெபனானின் ரியாட், அமெரிக்காவின் கேதரின், பெல்ஜியத்தின் டேவிட்  மூணுபேரையும் உட்கார வைச்சிட்டாங்க . 

நாம எவ்வளவுதான்  பக்காவா ப்ளான் பண்ணி, ரிகர்சல் எல்லாம் பார்த்து, ரோபோ போல் ஒப்பிக்கத் தெரிஞ்சவன முதல் வரிசையில கொலுபொம்மை மாதிரி  உட்கார வைச்சிட்டு,  டைம்பாசுக்கு அப்பப்ப இஸ்கூல் பக்கம் எட்டிப்பார்க்கிறவனை,  அங்கங்க கண்ணுக்கு தட்டுப்படாதபடி தூவி விட்டிருந்தாலும்… இன்ஸ்பெக்‌ஷன் வர்ற  சி இ ஓ  ,  மூணாவது வரிசையில ஏழாவதா உட்கார்ந்திருக்கிறவனை கரெக்டா கண்டுபிடிச்சு கேள்வி மேல கேள்வியா கேட்டு  டீச்சர்களை பதறடிப்பார். அதுபோல ஆயிடிச்சி, கல்வியில பிரச்சினை இருக்குனு சொன்ன எங்களோட நிலைமை.      

ஜாகூர்ட்ட மலாலா பற்றியும், மிக மோசமான பெண்குழந்தைகளின் கல்வி பற்றியும், பாலின பேதம் பற்றியும்  தோண்டித் துருவ,  பாவம், “ ஏய்யா…ஒரு புள்ளி விபரம் கொடுத்தது தப்பாய்யா “ன்னு  கண்ணெல்லாம் வேர்த்துப் போயிட்டான்.

212 மில்லியன் மக்கள் தொகையுள்ள பாகிஸ்தானில் இளைஞர் பட்டாளம் அதிகமிருக்கின்றனர். அதாவது,  64 சதவீத மக்கள்தொதையினர்  30 வயசுக்கும் கீழிருக்கின்றனர். ஆனால், கல்வியறிவுடையோர் பட்டியலில் 183 நாடுகளில் 154 வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானில், 12 சதவீத குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை. பாதுகாப்புக் காரணத்திற்காக பெண்குழந்தைகளை படிக்க அனுப்ப, குடும்பத்தினரே விரும்புவதில்லையாம். கேள்வியால் துளைத்தெடுத்தே இத்தனை விபரத்தையும் ஜாகூர் வாயிலயிருந்து வரவழைச்சிட்டாலும், இதுக்கெல்லாம் என்ன காரணம், அரசியலா, சமூகமா, மதமான்னு தோண்டித் துருவ, ஏதேதோ மாற்றி மாற்றி பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் தவித்தான். 

 டோகோவின் க்பாசகோ புல்செரிக்கு வந்த கேள்விகளை, ஃபூன்னு ஊதித் தள்ளிட்டாங்க. ஒரு காலத்தில் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த டோகோ இன்றும் பிரெஞ்சு கல்வி முறையையே பின்பற்றி வருகிறது. கல்விக்கட்டணம் மிகக் கடுமையாக குழந்தைகளின் படிப்பை பாதிக்க, 2008ல் “புள்ளைங்க படிப்பை கெடுத்துறாதீங்கப்பா, நாங்களே காசு கட்டிடறோம்”னு  ஐ.நாவின் யுனிசெஃப் அமைப்பு  தலையிட்டு கல்விக் கட்டணத்தை ஏத்துக்கிச்சாம்.  “என்னாதாம்ப்பா உங்க பிரச்சினை, இப்படி 37 சதவீத பிள்ளைங்க படிப்பை பாதியில நிறுத்திட்டு ஓட?”ன்னு கொக்கி போட,   “ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஸ்ட்ரைக் பண்ணிட்டு இருக்காங்க, காரணம் ஆசிரியர் சம்பளம் 33 டாலர்ல ஆரம்பிச்சு  அதிகபட்சம் 111 டாலர் தான்”னு பதில் வந்தது. “ஓ மை காட்” னு எல்லாரும் உச்சுக்கொட்ட, நம்ம மனசு ஆட்டோமேட்டிக்கா நம்ம சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்க, மீண்டும் புண்ணியபூமி மேல  ப்யார் ப்யாரா ஆத்தா ஹை.. ஒரு  வகுப்பிற்கு 100, 120 மாணவர்கள் இருப்பதையும்,  கட்டாயக் கல்யாணத்தையும், குழந்தைத் திருமணத்தையும் இடைநிற்றலுக்கு காரணங்களாகச் சொல்லி அவையின் பரிதாபத்தை ஈர்த்தார்.

நைஜீரியாவின் ஒசினுகோ அபியோலாவிடம்   இவ்வளவு மோசமான கல்விப் பின்னடைவிற்கு காரணம் கேட்கப்பட, பெருகிவரும் கட்டுக்கடங்காத மக்கள் தொகைப் பெருக்கத்தை முக்கிய காரணமாகச் சொன்னார்.  44 சதவீத மக்கள் தொகையினர் 15 வயதுக்குக் கீழ் உள்ளதால், அனைவருக்கும் கல்வி கொடுக்க அரசு தடுமாறுவதையும், இது தவிர மோசமான நிதிநிலைமை, ஊழல், லஞ்சம், அரசியலாகிப்போன கல்வி, நேர்மையற்ற கல்வித்துறை, வழிகாட்டலில்லாத அதிகாரிகள், மோசமான நிர்வாகம், திறமையற்ற ஆசிரியர்கள் என உள்நாட்டு நிலையை எந்த ஒளிவு மறைவுமின்றி, புட்டு புட்டு வைத்துவிட்டார். 

மிஸ். ரெமா டெவி, மிஸ். ரெமாடெவின்னு   வளைச்சி வளைச்சி , நாலுக்கு மூனு கேள்வி ரெமா ‘டெவிலு’க்குதான்(!!)  பாவம்புள்ள,  பல கேள்விகளுக்கு சிரிச்சிக்கிட்டே சிக்ஸர் அடிச்சு தூக்கிட்டாலும்,  சாதீய அமைப்பு முறைன்னா என்ன, அது எப்படி கல்வியைப் பாதிக்க முடியும்ங்கற கேள்விக்கு திணறிப் போயிடுச்சு….என்ன சொல்லி புரிய வைக்க? 

‘உங்களோட நிறவெறி தான் எங்களோட ஜாதிவெறி’ன்னு ஒரு வரில டப்புனு போட்டு உடைச்சிடலாமான்னு தோணினாலும், சபை நாகரிகம் கருதி இடக்கரடக்கலோடு அதையே  சொல்லி முடித்தேன். 

ஒரே நாட்டில் ஐந்து வகையான பாடத்திட்டம் என்பதை நம்ப முடியாம, அப்புடியா? நடக்குமா? என்ன வித்தியாசம்னும் , எதை வைத்து மாணவர்கள்  தாங்கள் படிக்க வேண்டிய போர்டை செலக்ட் பண்றாங்கன்னும் வந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி களைப்பாயிடிச்சி. ‘பெத்தவய்ங்க சேர்த்து வைச்சிருக்கிற  காசுக்கேத்த மாதிரி பிள்ளைங்க போர்டு செலக்ட் பண்ணிக்கிடலாம்’னு சொல்ல வந்த வார்த்தைகளை கடிவாளம் போட்டு நிறுத்திட்டு, பக்கத்து தெருவுக்கு போக, நாலு ரோடு சுத்தி கொண்டு போய் விடற ஆட்டோக்கார்ர்ர்ர்ர் போல சுத்தி வளைச்சி ஆனா சரியான  இடத்துக்கு போய் நின்னாச்சு. 

சந்தடிசாக்கில் இந்தியப் பெருநாட்டின் பரந்து விரிந்த பன்முகப்பட்ட கலாச்சாரம் பற்றிய செய்திகளையும், வேற்றுமையில் ஒற்றுமையையும்(!!!)  (அவங்க கேட்காட்டியும்) கொசுறா சொல்லி, ‘சும்மா’ பேசுறா மாதிரி  பெருமையடிச்சிக்கிட்டேன். இதுல பாதிப் பேர் வாய்க்குள்ளயே மென்னு முழுங்கின இங்கிலீஷ் வேற புரியாம, பேட்ரிக்கைப் பார்க்க, அவர்  செந்தமிழை  சென்னைத்தமிழுக்கு மொழிபெயர்க்கும் விவேக் –  மயில்சாமி காமெடி போல   இங்கிலீஷ் ட்டூ இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு பண்ண   ஒருவழியா  சமாளிச்சாச்சு.   

பிக் பாஸ் ஆரி போல நல்ல புள்ளையா நான் விளக்கம் குடுக்க… நல்லாத்தாய்யா  போயிட்டு இருந்திச்சு கூட்டம். ஆனா,  திடீர்னு  வந்த ஒரு கேள்வியால ஒரு சம்பவம்  நடந்து போச்சு.  “பொம்பள புள்ளைங்க இடைநிற்றல் ஏன் இவ்வளவு அதிகம் , அதை ஏன் தடுக்க முடியல, தடுக்க இதுவரை என்ன முயற்சி பண்ணினீங்க”ன்னு  கேட்டதும் ,  வைல்ட்கார்ட் ரவுண்டுல திரும்பிவந்த பிக்பாஸ் வனிதாவா மாறி பொங்க வேண்டியதாப் போச்சு . அதுவரை யோசிச்சி யோசிச்சு பேசிய ஆள், பிரேக் புடிக்காத ஆட்டோவா கன்ட்ரோலில்லாமப் போக……கொடுக்கப்பட்ட வழிகாட்டல்கள்  எல்லாம் சஞ்சய் ராமசாமிக்கு ஆனது போல மறந்துபோச்சு.

“ குடும்பப் பொறுப்பு, வீட்டுவேலை, தம்பி, தங்கை பாராமரிப்பு, பாதுகாப்பு, கழிவறை உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளின்மை, வறுமை , குழந்தைத் திருமணம், சாதீயப் பாகுபாடு , பெண்கள் மீதான இறுக்கமான சமுதாயக் கட்டமைப்பு, பெண்கல்வியில் அக்கறையில்லாத பெற்றோர், பெண்களை இரண்டாமிடத்தில் வைத்துப் பார்க்கும் மனோபாவம், பெண்கல்விக்கு செலவழிக்கும் பணம் வீண் என நினைக்கும் பொதுப்புத்தி”ன்னு  ‘மண்ணில் இந்தக் காதலன்றி’  எஸ்.பி.பி. போல  மூச்சுவிடாம நான் அடுக்க, ஒரு நிமிஷம் அமைதியோ அமைதி.

அடுத்த நிமிஷம் ஒவ்வொரு காரணத்திலிருந்தும் துணைக்கேள்விகள் …..துணை துணைக் கேள்விகள்…துணை துணை துணைக் கேள்விகள்னு  புறப்பட… சோன முத்தா  போச்சா…..மண்டமேல இருக்குற கொண்டைய மறந்து உணர்ச்சி வசப்பட்டுட்டியே னு உள்ளருந்து இன்னொரு ரமா குரல் கொடுக்க,  தூரத்திலிருந்து சசிமேம் சிரிச்சிகிட்டே தம்ஸ்அப் காட்டி உற்சாகமூட்ட, பிறகென்ன, இது நம்ம ஏரியால்லன்னு அடிச்சு ஆடியாச்சு.

இந்தியாவில் மட்டுமல்ல , உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை,  ஆண் பெண் சமத்துவமின்மையை, உலகத்தின் கடைசி ஆண் இருக்கும்வரை  சரிபடுத்தவே முடியாதுன்னு முடிக்க, ஆண்களிடமிருந்தே அதிக கைத்தட்டல்கள். ஒரு விசில் சத்தம் கூட கேட்டது.  ஒருவழியா கேள்வி பதில் பகுதி முடிய , ரொம்பப் பேசிட்டமோன்னு  லேசாகக் குழப்பம் வந்தது. ஆனால் நிகழ்வின் முடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது! 

தொடரும்

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!

Exit mobile version