Site icon Her Stories

சுடச்சுட நோன்புக் கஞ்சி, கண்ணாடி வளையல்கள்

Vector image by VectorStock / Muslim_Vector

சுடச் சுட நோன்புக் கஞ்சி

அப்போது ஏரலில் பெரும்பாலும் நாங்கள் அனைவரும் கல்வி கற்றது தூய தெரசாள் நடுநிலைப்பள்ளி, TDTA நடுநிலைப்பள்ளி என்ற இவ்விரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்களில்தான். எங்கள் தூய தெரசாள் பள்ளியில் நோன்பு ஒரு மாதத்துக்கும் முஸ்லிம் மாணவர்கள் மதியம் மூன்று மணிக்கே வீட்டுக்குச் சென்று விடலாம் என்ற சலுகை இருந்தது.

நான் நான்காவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலமது. மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து பைக்கட்டைப் போட்டுவிட்டு தெருவுக்கு வந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் தோழிகளுடன் நோன்புக் கஞ்சி வாங்க பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டுமே. அதற்குத்தான் தெருவில் யார் தலை தென்படுகிறது என நோட்டமிடுகிறேன். இதோ முந்தாஜி (மும்தாஜ்! ) வந்து விட்டாள். பின்மதியம் மூன்றரை மணியளவில் அஸர் என்ற மூன்றாவது வேளைத் தொழுகைக்கான நேரம் தொடங்கும். அதைக் குறிக்க பள்ளிவாசலில் நகரா அடித்து பாங்கு சொல்வார்கள். ‘அஸருக்கு அடிச்சாச்சுன்னா’ வழங்குவதற்குத் தயாராக அண்டாவில் கஞ்சி சுடச்சுட தயாராகி விட்டது என்று எங்களுக்குத் தெரியும். இனி வீட்டிலிருந்து தூக்கு வாளியைத் தூக்கிக் கொண்டு பள்ளிவாசலுக்கு ஒரே ஓட்டம்தான்.

https://strfn.blogspot.com/2012/07/sltj_5691.html

பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கென்றே தனி அண்டாக்கள் இருக்கும். நல்ல கனமான இரும்பு அல்லது தாமிர அண்டாக்கள். தாமிர அண்டா எனில் உள்ளே ஈயம் பூசப்பட்டிருக்கும். கஞ்சி காய்ச்சுவதற்கு, அதை விநியோகிப்பதற்கு என தனித்தனியாக ஆட்கள் இருப்பார்கள். யார் வேண்டுமானாலும் சென்று நோன்புக்கஞ்சி வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு தெருவில் ஒரு நாளைக்கு இவ்வளவு கஞ்சி தேவைப்படும் என்ற அனுபவப்படி முப்பது நாள்களும் நோன்புக்கஞ்சி செய்யப்படும். அதற்குத் தேவையான பணத்தை தெருக்காரர்களில் சிலர் இன்னின்ன நாள் கஞ்சி எங்கள் கணக்கு எனப் பள்ளிவாசலுக்குக் கொடுப்பதும் உண்டு. எல்லா வீட்டினரும் கட்டாயம் தரவேண்டும் என்பதில்லை. முடிந்தவர்கள் விரும்பி கஞ்சிச் செலவை ஏற்பார்கள். அப்படி ஏற்கும்போது சிலர் இன்று எங்கள் கணக்கில் கறிக்கஞ்சி என்று சொல்லி அதற்குரிய தொகையைத் தந்தால் அன்று மட்டும் அந்தத் தெருவில் கறிக்கஞ்சி. ஆட்டிறைச்சியை கொத்துக்கறியாக்கி அதற்குரிய மசாலாப் பொருட்கள் சேர்த்து கஞ்சி தயாரிப்பார்கள். அல்லாமல் மற்ற நாள்களில் பச்சரிசி, பூண்டு, வெந்தயம், சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்ப் பால், சிறிது முருங்கைக்கீரை எல்லாம் சேர்த்து நெய்யில் ஏலம், பட்டை, இஞ்சி பூண்டு விழுது தாளித்த நோன்புக் கஞ்சிதான். மஞ்சள், தக்காளி, மசாலாப்பொடி , புதினா போன்றவை எதுவும் சேர்க்கப்படுவதில்லை. அதனால் அன்று ஏரலின் எல்லாத் தெருக்களிலும் காய்ச்சப்படும் நோன்புக் கஞ்சி வெள்ளையாகவே இருக்கும்.

எங்கள் வாப்புமாவுக்கு பள்ளிவாசல் கஞ்சி குடிக்க கொஞ்சம் பயம் உண்டு. செம்பு(தாமிர)ச் சட்டிச் சோறு, செம்மறி ஆட்டுக்கறி இவைகளைப் போன்று பச்சரிசியும் வாதத்துக்கு ஆகாது என்று அவர்களுக்கு ஒரு எண்ணம். வாப்புமாவுக்கு அடிக்கடி கால்வலி உளைச்சல் தொந்தரவினால் தைலம் தடவிய வண்ணமே இருப்பார்கள். அதனால் கஞ்சியைத் தொட்டும் பார்ப்பதில்லை.

கீழத்தெரு மேலத்தெரு தெற்குத்தெரு ஆகிய மூன்று தெருக்களும் அருகருகில் அமைந்திருப்பவை. நான் இந்த மூன்று தெருப் பள்ளிகளிலிருந்தும் சில நாள்களில் கஞ்சி வாங்கி வருவேன்.

எங்க வாப்புமாவோ, ம்மாவோ இதை விரும்பவே மாட்டார்கள். ‘நம்ம தெருவுக்கு (கீழத்தெருவுக்கு)மட்டும் போனாப் போதாதா ஏன் இப்படி நெடூவ அலையிற?’ என ஏச்சு கிடைக்கும்தான். ஆனால் மூன்று தெருக்களிலிருந்தும் வாங்கி வந்து கொஞ்சம் கொஞ்சம் குடித்துப் பார்த்துவிட்டு, மறுநாள் வகுப்புக்குச் சென்று, “ஒங்க தெரு கஞ்சி நல்லாவே இல்ல… எங்க தெருவுலதான் நல்லா வாசமா இருந்திச்சி”, என ஆளாளுக்குப் பெருமை பேச வேண்டுமே!

அதற்காகத்தான் இப்படி ஓடுவது!தோழிகளோடு வரிசையில் நின்று சிறு தூக்குவாளியில் வாங்கிக் கொண்டு கொதிக்கும் கஞ்சி கையிலோ மேலிலோ பட்டுவிடாமல் தூக்குவாளியை அலுங்காமல் நலுங்காமல் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வருவோம்.

சரி. மூன்று தெருவிலிருந்தும் கஞ்சி வாங்கிவந்து வைத்தாயிற்று. மணியைப் பார்த்தால் நாலரைதான் காட்டுகிறது. நோன்பு துறப்பதோ ஆறு மணிக்கு மேல்தான். அதுவரை ஓடியாடிக் கொண்டிருந்தது இப்போதுதான் லேசாகக் களைப்பு தெரிவது போலிருக்கிறது. ஆறு மணிவரை கொஞ்ச நேரம் படுத்து எழும்பலாம். சட்டென நேரம் ஓடிப் போய்விடும் என வீட்டினுள் சென்று படுத்தாச்சு. விழிப்பு வந்தபோது நெடுநேரம் ஆனது போல் ஓர் உணர்வு. “ஐய்யா! மணி ஆறைத் தாண்டியிருக்கும். ம்மா அடுப்படில தடுக்கு விரிச்சு செம்பு நெறய குளுந்த தண்ணி வாத்து வச்சி, பேர்ச்சம் பழமும் தயாரா எடுத்து வச்சிருப்பாங்க. நம்ம கை கால் கழுவிட்டு நேர போய் நோம்பு தொறக்க உக்காந்துரலாம் . இன்னா மஃரிபுக்கு ‘வாங்கு’ சொல்லப் போறாங்க” எனக் கோட்டை கட்டியவாறே கடிகாரத்துப் பக்கம் கண்ணை நிமிர்த்தினால் ஐந்தரை மணியோடு ஒட்டிக்கொண்டு நகராமல் சாதிக்கிறது கடிகார முள்! போட்டும் போ! ‘இன்னின்னும் அஞ்சரைதான் ஆவுதாக்கும்’ என சிணுங்கிக்கொண்டே வாசலுக்குச் சென்று தெருவில் ஒரு கண்ணும், நகராச் சத்தம் எப்போதடா கேட்கும் என்றொரு காதுமாக உட்கார்ந்து கொள்கிறேன்…

ஆறரை மணியளவில் டமடமடமவென நகரா அடித்ததும் துள்ளியெழுந்து உள்ளே ஒரே ஓட்டம். ம்மா, காக்கா(அண்ணன்), இரண்டு லாத்தாக்களுடன் குளிரக் குளிர நோன்பு துறந்தாயிற்று.

இங்கு அன்றைய நோன்பு துறப்பு (இஃப்தார்) குறித்துக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இன்றைக்கு நோன்பு துறக்க பழங்கள், கஸ்டர்ட் , அகர்அகர் என்ற கடல்பாசி, புடிங் ,ரோஸ்மில்க் ,சர்பத், ஜுஸ், சமோசா, வடை , கட்லெட் , ரோல் போன்ற தின்பண்டங்கள், இவற்றுள் ஒன்றோ இரண்டோ பலவோ என அமர்க்களப்படுகிறது இல்லையா? அன்று இந்த விதவிதமான தின்பண்டங்களை நாங்கள் நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. வடை, சமோசா வீடுகளில் பொரிக்கும் வழக்கம் அறவே இருந்ததில்லை. கடைகளிலிருந்து அடிக்கடி வாங்கி உண்ணும் பழக்கமும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆக பேரீச்சம்பழம், கஞ்சி, குளிர்ந்த மண்பானைத் தண்ணீர் இவற்றிலேயே வயிறும் நெஞ்சும் நிறைந்துவிடும் அன்று.

எப்போதாவது எலுமிச்சம்பழ சர்பத் வீட்டில் கரைப்பதுண்டு. எண்பதுகளிலிருந்துதான் வீடு, தெரு, ஊர் எல்லாவற்றிலுமே நிறைய மாற்றங்கள் வரத் தொடங்கின எனலாம். இன்று எந்த விதமான தின்பண்டமானாலும் செய்து பார்ப்பதற்குரிய வசதியும் வாய்ப்பும் பெருகியிருப்பதால் அரிதான உணவென்று எதுவுமில்லை. அன்று நாம் உண்ண இயலாதிருந்த உணவுகளை இன்று நம் குழந்தைகள் உண்டு மகிழ்வதைப் பார்த்து மன நிறைவடைந்து கொள்ளலாம்.

பூப்போட்டச் சேலையும் ரப்பர் வளையலும்

https://5.imimg.com/data5/SELLER/Default/2021/7/ZR/QN/ST/134784813/arvind-cotton-sarees.jpeg

பெருநாள் வருகிறது என்றாலே அது கொண்டுவரும் செல்லமும் சேர்ந்து வரும்தானே. பெருநாளை எதிர்நோக்குவதின் ஆவலில் கிடைக்கப்போகும் புதுப் பாவாடைச் சட்டைக்கும் பங்குண்டு அல்லவா? ஆண்டுக்கொருமுறை நோன்புப் பெருநாளைக்குப் புதுத்துணி பெரும்பாலும் கிடைத்துவிடும் எங்களுக்கு . ஹஜ்ஜுப் பெருநாளைக்குச் சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும். நோன்புப் பெருநாள் வந்த இரண்டரை மாதங்களிலேயே ஹஜ்ஜுப் பெருநாள் வந்துவிடுமாதலால் பலரும் அதற்கெனத் தனியாகப் புதுத்துணி எடுப்பதில்லை.

தாமிரபரணி ஆற்றின் இருங்கரையோரங்களிலும் சற்று உட்புறமாகவும் அமைந்துள்ள பல சிறுசிறு ஊர்களின் மக்களிடையே அன்றிலிருந்து இன்றுவரை ஜவுளி எடுப்பதற்கும் பாத்திரம் வாங்கவும் ஏரல் பஜார் பிரசித்தி பெற்றது. அன்றைக்கு ஏரல் முஸ்லிம் பெண்கள், ஊர் பஜாரிலுள்ள ஜவுளிக்கடைக்குச் செல்லும் வழமை இல்லை என்பதால் பெருநாள், கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குச் சேலை எடுக்க ஜவுளிக் கடைகளிலிருந்து சேலைக்கட்டு வீட்டுக்கு வந்துவிடும்.

சேலை எடுக்க ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து ஜவுளிக் கடைக்கும் ஆளனுப்பிச் சொல்லி விடுவார்கள். அன்றைய நாளில் நாலைந்து வீட்டுப் பெண்களும் ஒரு வீட்டில் கூடிவிடுவார்கள். மதியம் இரண்டு மூன்று மணிபோல ஜவுளிக்கடையிலிருந்து கடைச் சிப்பந்தி சைக்கிள் கேரியரில் வெள்ளை வேட்டியில் அடுக்கிக் கட்டப்பட்ட சேலைக்கட்டுடன் வந்து இறங்குவார். அதைப் பார்த்தவுடனே சும்மா வேடிக்கை பார்ப்பதற்கென்றாலும் அடுத்த வீட்டிலிருந்தும் எதிர் வீட்டிலிருந்தும் மாமிகளும், சாச்சிகளும் வந்து விடுவார்கள். தெருவீட்டில் (வீட்டுக் கூடத்தில்) பாய் விரித்து சுற்றிலும் பெண்கள் அமர்ந்திருக்க, வண்ண வண்ணப் புதுச்சேலைகளை விரித்துப் போட்டிருக்கும் அந்தக் காட்சி இன்றும் கண்ணில் நிற்பது. எழுபதுகளின் இறுதியில், எண்பது தொடக்கத்தில் கிடைத்த இரவும் பகலும் நைலக்ஸ்சேலைகள், ஹஜ்ஜுஹஜ்ஜு, உல்லி உல்லி சேலைகள், அகலப் பூப் போட்ட பளிச்சென்ற வண்ணங்களில் பாலியெஸ்டர் சேலைகள், அரக்கு சிந்தாமணி கிளிப்பச்சை போன்ற கண்ணைப் பறிக்கும் நிறங்களில் அரவிந்த் வாயில் சேலைகள் இப்படிச் சில இன்னும் என் நினைவில் இருக்கின்றன. சிறுமிகளுக்கு பாவாடை சட்டைக்கு சீட்டித் துணிதான் அப்போது. நல்ல அழுத்தமான வண்ணங்களில் சிறுசிறு பூக்களோ பெரிய பெரிய பூக்களோ போட்ட சீட்டிப் பாவாடையும் சட்டையும். சிறுமிகளுக்குத் துணிகளைத் தேர்ந்தெடுக்க அத்தனை நேரமெல்லாம் செலவாவதில்லை. வாய்க்கால் கல்லில் போட்டு கும்மு கும்மெனக் கும்மி, தப்பு தப்பெனத் தப்பும்போது சாயம் போய்விடக்கூடாது; நன்றாக உழைக்க வேண்டும் என்ற இரண்டே எதிர்பார்ப்புகள்தான் ம்மாமார்களுக்கு. சீட்டித்துணிதான் அதை ஈடு செய்து விடுமே! அதற்கு மேல், “எனக்கு அந்தக் கலர் வேணும் இந்தக் கலர் வேணாம்” எனப் பிள்ளைகளும் சொன்னதில்லை; ம்மாக்களும் கேட்டதில்லை!

http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=2175

புதுச் சேலைகளைப் பிரித்துப் போட்ட வாசத்தோடு இணைந்தது புது ரப்பர் வளையல்களின் வாசம். பெருநாளைக்கு முன் எப்படியாவது ஒருநாள் தெருவுக்கு வளையல்காரர் பெட்டியோடு வந்து விடுவார். வளையல்காரர் கொண்டுவரும் அந்தப் பெரிய்ய்ய்…ய வளையல் பெட்டியைத் திறந்தவுடனேயே புது வளைகளின் மணம் மனதை நிறைக்கும். லாத்தாமார்கள் எல்லாம் கண்ணாடி வளையல், நைலான் வளையல் என்று வாங்கினால், சிறுமிகளான எங்களுக்கு ரப்பர் வளையல்தான். உடையாமல் ரொம்ப நாளைக்குக் கையில் கிடக்கும் என்பதால்… ரப்பர் வளையலுக்குத்தான் ஒரு வாசமும் உண்டு. அப்போது இளம் பொன்னிறத்தில் மஞ்சளும் கருப்புமாகக் கோடும் புள்ளியும் போட்டு ‘பல்லாண்டு வாழ்க’ வளையல் என்று புதிதாக வந்திருந்தது. கடைசியாக அந்த ரப்பர் வளையல் அணிந்திருந்த நினைவு எழுகிறது… மனதில் கம்மென்ற மணத்தோடு.

ரப்பர் வளையல் கைநிறைந்த கண்ணாடி வளையலாக மாறிவிட்ட காலம். எனக்குப் பெரியவள் பிறந்திருந்தாள். என் கணவரின் நண்பருடைய மனைவி என்னைப் பார்க்க வந்தவர் கேட்டார், ” சினிமாவில் பிரசவம் என்றாலே கட்டிலின் தலைமாட்டை இரண்டு கையாலயும் பிடித்துக்கொண்டு தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆ ஆவென அலறுவது போல் காட்டுவாங்களே நீங்களும் அப்படித்தானா ஜமி? அலறி கையைக் கால உதறுனதுல கைல போட்டிருந்த வளையல் எல்லாம் உடைஞ்சு போச்சா?” என. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எனச் சிரித்துக்கொண்டே மறுத்த என்னை ‘கை வளையல்கள் உடைந்து போதல்’ என்ற அவருடைய குறிப்பு வேறொன்றின் பக்கம் இழுத்துச்சென்றுவிட்டது.

ஊரில் தலை நோன்புக்குக் குமரிகள் எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்குவார்கள் எனக் கூறினேன் இல்லையா? அந்தக் கூட்டாஞ்சோறு தினத்தில் ‘தோழி போடுதல்’ என்ற இன்னொரு சுவையான நிகழ்வும் நடக்கும். பத்துப் பன்னிரண்டு வயது சிறுமிகள் இருவர் அன்று மாலை வெற்றிலை பாக்கு வாங்கி வந்து இருவரும் போட்டுக் கொள்வார்கள். பிறகு ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நம்ம ரெண்டு பேரும் இன்னையிலயிருந்து தோழிகள்’, எனச் சொல்லிக் கொள்வார்கள். அதிலிருந்து அப்படித் தோழி போட்ட இருவரும் எப்போதுமே ஒருவரையொருவர் தோழி என்றுதான் அழைத்துக் கொள்வார்களே தவிர, பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. அதேபோல, ‘நீ, வா, போ’, என ஒருமையிலும் பேசுவதில்லை. ‘நீங்க, வாங்க, போங்க’ என்றுதான் தோழிகளிடையே உரையாடல் நடக்கும். என்னுடைய ம்மா மாமி தலைமுறையில் இருந்த இப்பழக்கம் எங்கள் காலத்திலேயே ஏனோ தொடராது போயிற்று. ஆனால் என் ம்மா பூமா மாமி வயதையொத்தவர்கள், “என்ன தோழி எப்படி இருக்கியோ? பிள்ளைலுவோ பேத்திமாருலாம் லீவுக்கு வந்துருக்காவொ போல?” எனப் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்.

அப்படி ஒரு தோழியைப் பற்றி எங்க ம்மா சொன்னது இது. அவரை எனக்கும் நன்றாகத் தெரியும். ம்மாவின் தோழி, அந்த மாமி. நல்ல சிவந்த நிறமுடையவராம். அடர்ந்த நீலம், பச்சை, சிவப்பு, அரக்கு போன்ற நிறங்களில் கண்ணாடி வளையல் அணிவது அவருடைய வழக்கமாம். மாமியின் சிவந்த கைகளில் அடர் வண்ண வளையல்களின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாமாம். அப்படித்தான் ஒருநாள் மாமி அவருடைய வீட்டுக் கூடத்தில் நின்றிருந்தவர், வாசலுக்கு வெளியே அவர் கணவர் யாருடனோ பேச்சுக் கொடுப்பதைக் கேட்டு தலையில் முக்காடு போடக் கையை உயர்த்தியிருக்கிறார். கையை உயர்த்தவும் கையில் அணிந்திருந்த கண்ணாடி வளைகள் கலகலவென ஒலி எழுப்பியுள்ளன.

வாசலில் நின்று பேசி முடித்துவிட்டு வீட்டினுள் நுழைந்த மாமியின் கணவர், “நீ கைல போட்டுருக்கிற வளையல் சத்தம் வாசல் வரைக்கும் கேக்குது”, என முகம் கடுத்தவாறு மாமியின் கைகளை வளையலோடு இறுகப் பற்றி அத்தனையையும் நொறுக்கி விட்டாராம். அதிலிருந்து மாமியின் கைகளை வண்ண வளையல்களுடன் பார்த்ததே இல்லையாம் யாரும்.

https://chinnuadhithya.wordpress.com/wp-content/uploads/2020/08/2.jpg

இதை ம்மா சொல்லக் கேட்கும்போது தரையில் உதிர்ந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளோடு அந்த மாமியின் ஆசையும் அத்தோடு உதிர்ந்து போயிருந்தால் எத்தனை எளிதாயிருந்திருக்கும் எனத் தோன்றும் எனக்கு.

இன்றைக்கும் கண்ணாடி வளையல்கள் அணிந்து கொள்வது எனக்குப் பிடித்தமானது. சென்னையில் புரசைவாக்கத்திலோ, பாண்டிபஜாரிலோ கடைகடையாய் ஏறி வண்ண வண்ண வளையல்களைத் தேடி அணிந்து கொள்ளும்போது, உடைந்த கண்ணாடி வளை கீறி, ரத்தப் பூ துளிர்த்த சிவந்த கரமொன்றுக்கும் அவ்வளையல்களை அணிந்து பார்த்து, அவை குலுங்கும் ஓசையை கேட்டுக் கொள்கிறேன் மனதோடு…

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.

Exit mobile version