Site icon Her Stories

குகைக்குள் ஒரு சிற்பக்கூடம்

காடார்ந்த கிழக்கு- 1

அதிகம் பேசப்படாத, நாம் கேள்விப்பட்டிராத தென் கிழக்கு அமெரிக்காவை தன் பயணம் வாயிலாக நமக்கு அறிமுகம் செய்கிறார் கட்டுரையாளர் பாரதி திலகர். இந்த குறுந்தொடர் தென் கிழக்கு அமெரிக்காவின் முக்கிய சுற்றுலாத் தலங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது

2020 மார்ச் முதல் ஏறக்குறை 2021 ஜூன் இரண்டாம் வாரம் வரை ஊரடங்கில் இருந்த எங்களுக்கு எங்காவது வெளியே போனால் தேவலாம் என இருந்தது. கடந்த வாரம் மகனுக்கு சான் அண்டனியோவிற்குப்  (San Antonio) போக வேண்டியிருந்தது. நாங்களும் கிளம்பி விட்டோம்.

விமானப் பயணம்

சான் அன்டோனியோ அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். டெக்சாஸ் என்றவுடன், ” பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன் டெக்சாசில் ஆடி வருது”, என்ற முக்காலா முக்காபுலா பாடல் தான் நினைவிற்கு வந்தது. டெக்சாஸ், அமெரிக்கா மாநிலப், பரப்பளவு மற்றும் மக்கள் தொகை ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இரண்டாவது பெரிய மாநிலம்.

நாங்கள் வசிக்கும் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 1,700 மைல் தூரத்தில் சான் அன்டோனியோ உள்ளது. சான் பிரான்சிஸ்கோ / சான் அன்டோனியோ பயணச்சீட்டு மிக விலை அதிகமாக இருந்ததால், சான் அன்டோனியோவில் இருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் ஆஸ்டினில் இறங்கி அங்கிருந்து வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சான் அன்டோனியோ சென்றோம். வழியில், ஏறக்குறைய ஆஸ்டினுக்கு அருகில் Buc ee’s என்ற பெயரில் ஒரு பெட்ரோல் நிரப்பும் இடம் (Gas Station) உள்ளது. அது தான் உலகிலேயே மிகப் பெரிய பெட்ரோல் நிரப்பும் இடம். ஒரே நேரத்தில் 120 வண்டிகளுக்கு நிரப்பலாம். அதனுடன் கூடிய மிகப்பெரிய கடையும் இருக்கிறது.

இயற்கை வடித்த சிற்பக்கூடம்

வழியில் சான் அன்டோனியோவிற்கு அருகில் நேச்சுரல் பிரிட்ஜ் கேவர்ன்ஸ் குகை (Natural Bridge Caverns) உள்ளது. குகை மொத்தம் 230 அடி ஆழம் கொண்டது. சுற்றுலா பயணிகள் 180 அடி ஆழம் வரை செல்லலாம். 

குகை, அருகிலுள்ள செயின்ட் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் மார்ச் 27, 1960 அன்று தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.  அதன் பிறகு அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்னமும் நடத்தப் படுகின்றன. அகழ்வாராய்ச்சியின் போது, ​​கிமு 5,000 காலகட்டத்தைச் சேர்ந்த மனிதனின் பல், அம்புக்குறிகள் மற்றும் ஈட்டித் தலைகள் அழிந்து போன கருப்பு கரடியின் தாடை எலும்பு மற்றும் தொடை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

1964 ஜூலை 3 ஆம் தேதி, இந்தக் குகை நிலத்தின் உரிமையாளரால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது. இன்றும் அவர்களாலேயே பராமரிக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணம் உண்டு. 1971ம் ஆண்டு இது அமெரிக்காவின் தேசிய இயற்கை அடையாளமாக பதிவு செய்யப்பட்டது. இதன் அருகில் வனவிலங்கு சஃபாரி, லட்சக்கணக்கில் வெளவால்கள் வாழும் பிராக்கன் குகை (Bracken Cave) போன்றவை உள்ளன. 

குத்தீட்டிகளாக மேலிருந்து இறங்கும் பாறைகள்
இயற்கை செய்த சான்டலியர் விளக்குகள்!

பிராக்கன் குகை தான் உலகின் மிகப்பெரிய வௌவால் குகை. இந்தக் குகையில் இரண்டு கோடி வௌவால் உள்ளன. இக்குகைக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 20,000,000 வெளவால்கள் மெக்சிகோவிலிருந்து குட்டிகளைப் பெற்றெடுக்க கிட்டத்தட்ட 1,000 மைல்கள் பறந்து வருகின்றன. வௌவால்கள், பருத்தியை பாதிக்கும் பூச்சிகளை  உண்கின்றன. இதனால், இவை, பருத்தி விவசாயிகளுக்கு நண்பனாக இருக்கின்றன என சொல்லப் படுகிறது. 

நாங்கள் நேச்சுரல் பிரிட்ஜ் கேவர்ன்ஸ் குகை (Natural Bridge Caverns) மட்டுமே சென்றோம். அதனால் மற்றவை குறித்து எனக்கு எந்தப் புரிதலும் இல்லை.

ஈஸ்டர், தேங்க்ஸ் கிவிங் நாள், கிறிஸ்துமஸ் நாள் மற்றும் புத்தாண்டு நாள் தவிர அனைத்து நாள்களும் காலை ஒன்பது மணி முதல், இரவு ஏழு மணி வரை நேச்சுரல் பிரிட்ஜ் கேவர்ன்ஸ் குகை திறந்திருக்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும், நாற்பது பேர் கொண்ட குழுவை ஒரு வழிகாட்டியின் உதவியுடன் உள்ளே அனுப்புகிறார்கள்.

குகை வெளியில் இருந்து பார்க்கும் போது ஒழுங்கற்ற கற்பலகையினுள் செல்லும் ஒரு குறுகலான பாதை போல உள்ளது. உள்ளே நுழைவதற்கு ஒரு பாதையும் வெளியே வருவதற்கு ஒரு பாதையும் வைத்திருக்கிறார்கள். இவை போக ஒரு சில பாதைகள் உள்ளன. யாராவது உள்ளே செல்வதற்கு பயந்தார்கள் என்றால் அந்த பாதைகளின் வழியே பாதுகாப்பாக வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

குகைக்குள் இறங்கும் போது அரசர் படங்களில் வரும் சுரங்கப்பாதையினுள் நுழையும் அனுபவம் தான் கிடைத்தது. உள்ளே நுழைந்தால், இயற்கை வடிவமைத்த அந்த குகையைக் காண, கண் கோடி வேண்டும். குகை முழுவதும் சுண்ணாம்பினால் ஆன சிறிய பெரிய கோபுரங்கள், சிற்பங்கள் போன்றவை விதவிதமான வடிவங்களில், நிறங்களில் உள்ளன.

இயற்கையின் ஓவியம்!

அவர்கள் ஏதேதோ வர்ணனைகள் தருகிறார்கள். ஆனால் இந்தியாவில், பல்வேறு கோவில்களைப் பார்த்த நமக்கு பிரம்மன், விசுவாமித்திரர், சிவலிங்கம், சிவன், என அனைத்து தெய்வங்களின் உருவங்களும் தான் தெரிகின்றன. மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடு கொண்ட கோபுரங்கள், குறிப்பாக அங்கோர்வாட் ஆலய கோபுரத்தின் வடிவம் நம் நினைவிற்கு வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. 

குகைக்குள் தேங்கி நிற்கும் நீர்

உள்ளே இறங்க இறங்க, கிணறுகளில் நீரூற்று போன்று தண்ணீர் வருவதால் ஆங்காங்கே தண்ணீர் வழிகிறது. சொட்டு சொட்டாக நீர் நம் தலையிலும் விழுகிறது. அந்த தண்ணீர் சிறு குட்டை போன்று தேங்கி நிற்கிறது.

ஏறக்குறைய அரை மணி நேர பயணத்தில், நாம் பெற்ற அனுபவத்தில் பத்து விழுக்காட்டை கூட புகைப்படத்தில், கொண்டு வர முடியாது என்பதே உண்மை.

பயணம் தொடரும்…

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version