Site icon Her Stories

விசில் – ஊதுவோம்!

விசில்

ஆசிரியர்:- நிவேதிதா லூயிஸ்

வெளியீடு:- ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83

செல்:- 96003 98660

விலை ரூ 350/-.

எழுத்தாளர், பெண்ணிய ஆய்வாளர், வரலாற்றாளர், ஊடகவியலாளர், ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பக இணை நிறுவனர் எனப் பன்முகங்கொண்ட நிவேதிதா லூயிஸ் அவர்கள், தன்வரலாற்றுடன் மெல்லிய சரடாகப்  புனைவையும் கலந்து கதைபோல இந்நூலைப் படைத்தளித்துள்ளார்.

தன்னை ‘நான்’ என்று குறிப்பிடாமல், ‘இவள்’ என்றே நூல் முழுக்கக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். “தன்னை, தன் வாழ்வை ஒரு புறநிலையில் இருந்தபடி – விலகி பார்த்துக் கொள்ள இதை மிகச் சரியானதொரு உத்தியாகக் கையாண்டிருக்கிறார் நிவேதிதா” என்கிறார், அணிந்துரையில் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா.   

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டுச் சென்னை பள்ளியில் இரண்டாண்டு தொழிற்கல்வியில் சேர்வது முதல், ரயில்வேயில் சேர்ந்து 17 ஆண்டுகள் பணிபுரிந்த காலக்கட்டம் வரையிலான இவரது பணி அனுபவங்களும், போராட்டங்களும், எண்ண ஓட்டங்களும் இதில் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. இடையில் இவருக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக அனுபவித்த துன்பம் பற்றியும் இதில் எழுதியிருக்கிறார். மேலும் மீட்டர் ரயில் பாதை, அகல ரயில் பாதை, சரக்கு மாற்று நிலையம், மூன்று நடைமேடைகள் எனத் தெரியாத ரயில்வே பணி சார்ந்த பல தொழில்நுட்ப விஷயங்களையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வாழ்வின் விழுமியங்களிலிருந்து வழுவாத இவரது நேர்மையும், அசாத்திய துணிச்சலும் வியக்க வைக்கின்றன. ரயில்வே பணியில் இருந்து கொண்டே தம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளத் துறை சார்ந்த மேல்நிலைத்தேர்வுக்குப் படிப்பதும், கிடைக்கும் சொற்ப ஓய்வில் அஞ்சல்வழி மூலம் கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்ள விழைவதும் நொடிப்பொழுதும் சோராத இவரது கடின உழைப்பையும், உழைப்பின் மேல் இவருக்கிருக்கும் நம்பிக்கையையும் பறைசாற்றுகின்றன.

பதின்வயதில் கெவினுக்கு ‘இவள்’ பால் ஏற்படும் ஈர்ப்பும், காதல் படுத்தும் பாடும், அதைச் சொல்லியிருக்கும் விதமும் வாசிக்கச் சுவாரசியமாயிருக்கின்றன.

அத்தியாயத் தலைப்புகள் எல்லாமே எண்களாக இருப்பது புதுமை. எண்களுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பும், எண்கள் மேல் இவருக்குள்ள காதலும், இவரது பரவலான ஆழமான புத்தக வாசிப்பும் நம்மை மலைக்க வைப்பவை. 420க்கும் மரியுவானாவுக்கும் உள்ள கனெஷன், அகில்லஸ் கதை, ஹிட்லரைப் போற்ற எண் 88 பயன்படுத்தப்பட்டது போன்று எனக்குத் தெரியாத பல புதுச் செய்திகள் இதிலுள்ளன.

பார்த்ததை அப்படியே மூளையில் பதித்துக் கொள்ளும் நினைவுத் திறன் இவருக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. இந்த அபூர்வத் திறமையே ரயில்வே எடை மெஷினில் நடந்த 12600 கோடி கொள்ளையைக் கண்டுபிடிக்க இவருக்குக் கைகொடுக்கிறது. ஆனால் இந்த பயங்கரக் கொள்ளையைக் கண்டுபிடித்துக் கொடுத்த இவருக்கு ரயில்வே நிர்வாகம் பதவி உயர்வுடன்  விருதும் கொடுத்துப் பாராட்டிக் கெளரவித்திருக்கவேண்டும். ஆனால்? மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஊழல் புரையோடிக் கிடக்கும் அரசு நிறுவனங்களில் இந்த விசில் புளோயர்களுக்கு ஆபத்து அதிகம். உயிருக்கு உத்தரவாதமில்லை. நல்லவேளையாக இவர் தப்பித்து வந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தேர்வில் முதலாவதாக வந்திருந்தும், ஊழலைக் கண்டுபிடித்த இவருக்கு 135 கிமீ தள்ளி விருத்தாசலத்தில் பணி. ஆனால் இவரை விடக் குறைந்த மதிப்பெண் பெர்றவர்களுக்குத் திருச்சி மண்டலத்திலேயே வணிக கண்காணிப்பாளர் பணி. இவருக்கு நெருக்கடி கொடுத்து ராஜிநாமா செய்ய வைத்ததன் மூலம் ரயில்வேயிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்ற கூட்டுக் கொள்ளையரின் சதிகார எண்ணம் ஈடேறியிருக்கிறது.

பணியிடங்களில் பெண்ணுடன் நட்புடன் பழகும் நல்ல உள்ளம் கொண்ட ஆணை அவளுடன் இணைத்துக் கதை கட்டி விடுவது, மொட்டைக் கடுதாசி போட்டு வதந்தி பரப்புவது, இரவில் பணிபுரியும் பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாச் சூழல், பாலியல் சீண்டல், புக்கிங் அலுவலகத்தில் தரையிலேயே படுத்துறங்க வேண்டிய அவலம் என ரயில்வே துறையில் பணிபுரியும் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்நூல் காத்திரமாகப் பேசுகின்றது.

எ.கா:-1.

“கவுண்டரில் வேலை செய்யும் பெண்களுக்கு ஐம்புலன்களும் எல்லா நேரமும் அலர்ட்டாக இருக்க வேண்டும். சற்றுக் கவனம் பிசகினால் கூட யாராவது கையைத் தடவி விடுவார்கள். அல்லது அசிங்கமாக சைகை செய்துவிடுவார்கள்.  ஏதாவது பேசியும்விடுவார்கள்.  ஒவ்வொரு சொல்லும் ஆயுதம். ஒவ்வொரு தொடுகையையும் தடுத்தாள வேண்டிய கேடயமாக உடல் இருக்கவேண்டும். இதில் மிக முக்கியமாக வேலை செய்வது உள்ளுணர்வு. எந்த கவுண்டரிலும் மறைவு என்பதே கிடையாது. மாதவிடாய் ரத்தம் ஒழுகி ஆடையில் படிந்தால் கூட எழுந்து பின்னாலுள்ள கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றால் உள்ளேயும் வெளியேயும் எந்த ஆணுமே இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னே எழுந்து செல்லமுடியும்.” (பக் 170)

நகைச்சுவையும் அங்கதமும் இழையோட இவர் எழுதியிருப்பதில் நான்  ரசித்த சில வரிகள்:-

“அந்த விடுதி பறவைகள் சாலையில் இருந்தது. கான்வென்ட் ஒன்றின் பணியாற்றும் மற்றும் படிக்கும் பெண்கள் விடுதி. கான்வெண்டில் இருந்தால் மட்டுமே மகள் ‘ஒழுக்கமாக’ இருப்பாள் என்று நம்பிய பெற்றோர் கிடைத்தது சோகத்திலும் பெரும் சோகம். சிஸ்டர்கள் ஒழுக்க விதிகளை விடுதிப் பெண்களுக்கும், சிக்கன் துண்டுகளைத் தங்களுக்கும் பிரித்துக் கொண்டார்கள்.  (பக் 115)

ஊருக்கு ஒதுக்குப்புறமான இந்த நிலையங்களில் ரயில் வரும் நேரம் மட்டுமே மக்கள் நடமாட்டம் இருக்கும். மற்ற நேரத்தில் எல்லாம் ஓலைப் பாம்புகள் தான் குசலம் விசாரித்துச் செல்லும். (பக் 130).

மிகச் சிறப்பான தன்வரலாற்று நூலைப் படைத்திருக்கும் நிவேதிதா லூயிஸ் அவர்களுக்குப் பாராட்டுகளும், இனிய வாழ்த்துகளும்!

நூலை வாங்க வாட்ஸப் எண்: 7550098666

படைப்பாளர்

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.

Exit mobile version