Site icon Her Stories

வாழை தரும் பாடம்

வாழை திரைப்படம் ஒரு இலக்கிய வாசிப்புபோல் இருந்தது. பெரும்பாலும், டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு,’ மக்சீம் கார்க்கியின் ‘தாய்’, ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற இலக்கியங்கள் எப்படி நம் மனதில் இன்றும் தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டே நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றனவோ, அது போன்ற ஒரு சிறந்த இலக்கியமாக வாழை ஒவ்வொருவர் இதயத்திலும் வாழையடி வாழையாய் வாழ்ந்திருக்கும்.

எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் வலியை அறிவிலிருந்து மட்டும் அல்ல, இதயத்திலிருந்து அணுகுவதை அழகாகக் கற்றுத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். நமது தமிழ்த்  திரைப்பட வரலாற்றில் இயக்குநர் மகேந்திரனின் உதிரிப் பூக்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல் வாழையும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. வாழையும் ஒரு பாடமாகியிருக்கிறது.

இது மாரி செல்வராஜின் தன் வரலாறு  என்பதாக வாழையில் சொல்லப்பட்டாலும், இது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வரலாறு என்பதாகவே இருக்கிறது.

சிவனணைந்தானின் அக்கா, அடடா எளியவராய் அழகிய புன்சிரிப்பிலேயே தன் எதிர்கால வாழ்வையும் காதலையும் எடுத்துக்காட்டும் அழகோவியமாக இருக்கிறார். அந்த அழுக்கும் கறையும் படிந்த முழுக்கை சட்டையில் தெரியும் ஏழ்மைகூட நம் மனதில் ஒரு சோகத்தை, வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவனணைந்தானின் அம்மா – அம்மா என்றாலே அன்புதான், அரவணைப்புதான் என்பதுதான் பொது  இலக்கணம். ஆனால் வறுமையான வாழ்வில்  காட்டப்படும் அன்பு அத்தகைய அழகியலை , இலக்கணத்தைக் கடந்து யதார்த்தத்தில் அது கோபம், வெறுப்பு, ஆற்றாமை, ஆதங்கமாகவே வெளிப்படுகிறது.

பெற்ற தாயின் அன்பை, அரவணைப்பைக் காட்ட முடியாமல் வறுமையின் கோரப் பிடியில் தின்னப் பேயாய் ஆன அந்தத்  துயரம் – மனித குலம் உள்ள வரை சுமக்கும் துயர வலி அது. மாரி செல்வராஜ் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வறுமையில்  பீடிக்கப்பட்ட  தாய்மாரின்  ஆற்றாமையான அன்பை – உண்மையை காட்டியிருக்கிறார். சோறு தின்னக் கூட விடாமல், ‘வண்டி வந்துவிட்டது, காய் சுமக்கப் போ’ என்று அனுப்பி வைக்கும் காட்சியும், காய் சுமக்கப் போகாமல் வீட்டில் சோறு தின்னும்போது, அடித்துத் துரத்திவிட்டுக் கண்ணீர் விடும் காட்சியும் அன்பைக் கரிசனமாய்க் காட்டக் கூட வறுமை விடாது என்கிற யதார்த்தத்தை அழகாகக் காட்டியிருக்கிறார்.

அத்தோடு ‘காசுக்காக மட்டும் சிவனணைந்தானைக் காய் சுமக்க அனுப்பவில்லை, உழைக்கக் கத்துக்கணும்’ என்று சொல்லும்போது, அவரது அன்பே தன் பிள்ளைக்கு நல்லது செய்வதாக மன்றாடுகிறது என்பதையும் நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

பசி.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும், அதுதான் உண்மை. பசி கொண்ட விலங்கு இன்னொன்றைக் கொன்று உண்கிறது. இங்கு பசி கொண்ட மனிதனும் நெறி தடுமாறுகிறான். இந்த நெறி பிறழ்வு வறுமையினால் ஏற்பட்டது.

சிவனணைந்தானின் பசி, வாழைப்பழத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்குகிறது. அம்மாவுக்குத் தெரியாமல் சாப்பிடச் செய்கிறது. ஆனால், இத்தகைய  நெறி பிறழ்வின் மீது சமூகம் இரக்கத்துடன் கூடிய நீதியைக் காண்கிறது. சிவனணைந்தானின் தாளாத  பசிக்கு, முதலாளித்துவம் காரணம். முதலாளித்துவ சுரண்டலின் கோரப்பசிக்கு முன்னால் எளிய உழைக்கும் மக்களின் பசி, பத்தும் பறக்க வைக்கிறது. ‘துலாபாரம்’, ‘பராசக்தி’ என பல திரைப்படங்கள் கொடும் பசியினால் ஏற்பட்ட நெறி பிறழ்வைக் காட்டியிருக்கின்றன.

நம் சமூகம் ஏழைகளின் வயிற்றுப் பசியினால் ஏற்படும் நெறி பிறழ்வை அக்கறையுடன், கருணையுடன் அணுகுகிறது. அதுதான் நீதி. அது ஒரு தனி மனிதரின் நெறி பிறழ்வல்ல. சமூக நெறியின் பிறழ்வு. இதற்கு இன்னொரு சுரண்டும் வர்க்கம் காரணம் என்பதால் சிவனணைந்தானின் பசி, நெறி பிறழ்வு, நம் இதயத்தை உலுக்குகிறது. நம் மனசாட்சி, அவனின் அம்மாவுக்காகப் பரிந்து பேசுகிறது.

சிவனணைந்தான் பசியோடு அலையும் காட்சிகள், அம்மாவுக்குத் தெரியாமல் உணவு உண்ணும் காட்சி போன்றவை கடந்த முப்பதிலிருந்து அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஏழை மக்களின் பசியை நினைவு படுத்துகிறது. ஆம், எத்தனையோ ஏழை மக்கள்  அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தருகின்ற உணவை , மாணவர் முதல் முறை வாங்கி சாப்பிட்டு விட்டு, இரண்டாம் முறை வாங்கி வந்து தம்பி, தங்கைகளுக்குக் கொடுத்ததை நினைக்க வைக்கிறது. சுடச்சுட பூண்டு – மிளகாய் வாசத்துடன் புளி சோறும் , பெரிய கோதுமை ரவை உப்புமாவும் பெற்றோருக்கும் கொடுத்து மகிழ்ந்த குழந்தைகள் உண்டு. அரிசிச் சோறு கிடைக்காத காலத்தில், வறக் காப்பியும் வர்க்கியும் இரவு உணவாக, பசி மயக்கத்தில் தூக்கக் கலக்கத்தில் உண்ட குடும்பங்கள்  அனைத்தும் சிவனணைந்தானின் பசியைத் தன் பசியாய் உணர்வது இத்திரைப்படத்தின் மூலம் நடக்கிறது.

ஆனால், இன்றைய காலத்தில் உணவு அபரிமிதமாகக்  கிடைக்கிறது. பட்டினி என்பதறியாத நிலைமைக்கு திராவிட இயக்கம் பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து நம்மை முன்னேற்றி இருக்கிறது. எனவே, பசியறியாத இளம் தலைமுறையினருக்கு இந்தப் படம் ஒரு பாடம்.

வரலாறை சொந்த அனுபவங்கள் ஊடாக ஒவ்வொருவருக்கும் நாம்  கொடுக்க முடியாது. ஆனால், அதனை அறிந்து கொள்ளும் ஈரத்தை, அனுபவத்தை வரலாறு கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. எனவேதான், இன்றைய இளையோரும் வாழையைத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். அந்தப் பசியின் கனத்தை இதயங்களில் சுமக்கிறார்கள். அத்தகைய ஒரு சிறந்த படைப்பை மாரி செல்வராஜ் வழங்கியிருக்கிறார்.

திரைப்படத்தின் இன்னொரு முக்கிய விஷயம், சிவனணைந்தானின் நேசம். பூங்கொடி ஆசிரியர் மேல் அவர் கொண்ட அன்பு. அவருக்கு ஊக்கத்தை, வாழ்வின் மீதான பிடிப்பை ஏற்படுத்துகிறது. இது இயற்கையாய், இயல்பாய் வரும் நேசம். இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஒரு முரட்டு சுபாவம் உள்ள மனிதனுக்கும் கூட கல்லுக்குள் ஈரம் போல் ஊறும் ரசவாதம் அறிந்தது அன்பு. அதற்குக் காரண காரியங்கள் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. இதுவும் எல்லோர் வாழ்விலும் நிகழும்  அற்புதம்தான்.

பூங்கொடி டீச்சரின் கைக்குட்டை மணம், அது தரும் ஊக்கம் அவனுக்குள்ளாகவே ஒரு நம்பிக்கையை, ஊக்கத்தை விதைக்கிறது. பல பேர் தாம் நேசித்தவரின் புடவையைத் தலைக்கு வைத்தும், போர்த்தி அணைத்துக் கொண்டும் அவரது வியர்வை மணத்தை உயிரூக்கமாகவும் எடுத்துக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

இது போன்று ஏதோ ஒரு ஈர்ப்பால் உருவாகும் அன்பு, பல தவறான  நபர்களைக்கூட தவறிலிருந்து  விடுவித்திருக்கிறது. இந்த ஈர்ப்பைப் பற்றிய சரியான தெளிவு இல்லாத போது, தடுமாறவும் வைத்திருக்கிறது. எப்படி ஆயினும், தாம் நேசிக்கும் ஒருவரின் நினைவு அவரை வாழவும் வைக்கிறது. வீழவும் வைக்கிறது. அது சிவனணைந்தானுக்கும் நடக்கிறது. பூங்கொடி டீச்சருடன் நேரம் கழிக்க ஆசைப்பட்டு தனது பசு மாட்டைத் தொலைத்து விடுவார். அப்போது அவரின் பதட்டம், சங்கடம், பயம், எல்லாம் சேர்ந்து அவர் பா… பா… என்று கத்தும் காட்சியும், அவரது அம்மா அந்தத் துயரம், அவமானத்தால் உடைந்து உட்காரும்போது, ‘பேசும்மா… பேசும்மா…’ என்ற சிவனணைந்தானின் கதறலும் ஏழ்மை தரும் வலியை நமக்குள் கடத்துகிறது.

நானறிந்த மாணவி ஒருவர் கூறியது நினைவுக்கு வருகிறது. ‘எனக்கு பெஞ்சமின் ஆசிரியர்தான்  எல்லாம்’ என்பார். ஆனால், அதனை அந்த ஆசிரியர் உணர்ந்திருந்ததில்லை. அந்த மாணவி சுமாராகப் படிப்பவர்தான். 5ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை அவரிடம் தான் படிக்கிறார். அந்த ஆசிரியருக்கு நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மீது அலாதி பிரியம். அவர்களுக்காக அவர் சாப்பாடு செய்து எடுத்து வந்து தருவார். பேனா, பென்சில் வாங்கி வந்து தருவார். இந்த மாணவிக்கு அந்த ஆசிரியர் மீது ஏற்பட்ட பிரியம், சுமாராகப் படிக்கும் இவரை வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியாக மாற்றியது. அவரது வகுப்பில் படிக்கும் வரை அந்த மாணவி எப்போதும் படிப்பில் முதலிடம்தான் வாங்கினார். ஆசிரியர் பரிசாய்த் தந்த பேனாவை, வெகு காலம் அந்த மாணவி அவரது நினைவாக வைத்திருந்தார். இது, எல்லோர் வாழ்விலும் நிகழ்ந்த கதைதான். சிவனணைந்தானின் பூங்கொடி டீச்சர் மீதான பாசம் அவரவரது சொந்த ஆசிரியர் மீதான பாசத்தை மீண்டும் புதுப்பித்துப் புத்துயிரூட்டியிருக்கிறது.

எல்லா அன்புக்கும் காதல் என்கிற எல்லையிட்டுப் பார்க்கத் தேவையில்லை என்பதையும் சிவனணைந்தான் – பூங்கொடி டீச்சர் உறவு உறுதிப்படுத்துகிறது.

பூங்கொடி ஆசிரியராக வருபவர் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.

அடுத்து போராளி கனி.
80 களின் முற்போக்காளர்களின் இயல்பான தோற்றம். அவர் போராடும்  காட்சிகள் எல்லாமே கம்யூனிஸ்ட்டுக் கட்சியினரைத்தான் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு. நீதியுடையோர் மீது சிவனணைந்தானுக்கு இயல்பாகவே அன்பு பிறக்கிறது. தனது அக்காவுக்கு அவரைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற அவரது ஆசை, அக்காவின் மருதாணியுடன், சுத்தியல் – அரிவாள் , பொறித்த மார்பொட்டியையும் அவரிடம் கொடுக்க வைக்கிறது.

சிவனணைந்தானின் நண்பன் – என்ன ஒரு கலைநயமான அழகான முகம். அழகான நடிப்பு. குறும்பு. காய் சுமக்கப் போகாமலிருக்க நொண்டி நடந்து அம்மாவிடம் வாங்கும் ஏச்சு என எல்லாக் காட்சியிலும் இதயத்தை அள்ளுகிறார். கனி, சிவனைந்தன் அக்கா, நண்பர் என மூன்று பேர் உருவத்தையும் இறப்புக் காட்சியின் போது , தனித்து எடுத்துக் காட்டும்போது, நெஞ்சே உடைவது போலிருந்தது. அந்தத் தனித்து எடுத்துக் காட்டும் காட்சி கூட வானில் மிதப்பது போன்றும், கறுப்பு, வெள்ளையில் காட்டப்படும் அந்த நிழற்படம் சோகத்தை நம் முகத்திலும் இதயத்திலும் அப்பி விடுகிறது.

உழைப்பு, நேர்மை, பொய் பேசாமை, வாக்குத் தவறாமை, என்கிற மனித மாண்புகளுக்கான அறங்கள் எல்லாம் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் படும் அவலங்களும், மீண்டும் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கும் ஆற்றாமையாகவும் வாழை படம் திகழ்கிறது.

பால்ய கால ஆட்டங்கள், காட்சிகள் என எல்லாமே பசுமையாய் மீண்டும் பழைய கால கட்டங்களை மனதிற்குள் மலரும் நினைவுகளாய் மலரச் செய்தது. ஆக மொத்தம் இப்படம் இலக்கியமாய், கவிதையாய் வரலாறாகி விட்டது.

வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்ளும் படத்தின் மீது  வன்மம் தூற்றப்படுவது ஏன்?

ஒரே காரணம்தான். மாரி செல்வராஜ். அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்கள் நேரிடையாக வந்து தங்கள் கதைகளைத் தாங்களே சொல்லி, கொடி கட்டிப் பறக்குமளவு உயர்வதை இங்கு சிலர் விரும்பவில்லை. அந்த சிலர்  ஆதிக்க சாதிப் பற்றாளர்கள் என்றே தெரிகிறது. திரைப்படத்தை என்னவென்று விமர்சனம் செய்ய வேண்டும் என்பதில்லாமல் விமர்சித்தே ஆக வேண்டும் என்பதற்காகவே விமர்சனம் என்கிற பேரில் வன்மத்தைக் கக்கியிருக்கின்றனர்.

‘இப்போது எதற்கு தன் வரலாற்றுப் படம்? இன்னும் கொஞ்ச காலம் வெயிட் செஞ்சிருக்கலாமே?’ என்பதெல்லாம் ஒரு விமர்சனமா? அவர் ஏன் கொஞ்ச காலம் காத்திருக்கவேண்டும்? அவரது வலியை ஏன் அவர் சுமந்து கொண்டேயிருக்க வேண்டும்? அவரது படைப்பு சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறதா இல்லையா என்பதை ஏன் இவர்களால் அளவு கோலாகக் கொள்ள முடியவில்லை? இதுதான் வன்மம்.

‘வாழையில் மாரி செல்வராஜின் வலி என்ன பெரிய வலி ? அதை விடப் பெரிய வலியைக் கடந்திருக்கிறோம்’ என்று எளிதாகப் பல பேர் கூறுகின்றனர். உண்மைதான். ஆனாலும், ஒரு கலைஞன் தனது வலியை, சமூக வலியாய் உணரச் செய்கிறான். சமூகத்தை அதன் மூலம் இளைப்பாறுதல் அடையச் செய்கிறான். அதற்கான காரணங்களை ஆய்வு செய்து முன் வைக்கிறான். தீர்வை நோக்கி சிந்திக்க வைக்கிறான். அதனை எல்லோராலும் செய்து விட முடியாது தானே? பிறகு எதற்கு இப்படிப் பேச வேண்டும்? இதுவும் ஒரு வகையான எதிர்மறை உணர்வுதான்.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த திரைக் கலைஞர்கள், இயக்குநர்கள் தமக்குரிய அங்கீகாரத்தை இலவசமாகக் கேட்கவில்லை. இந்த மாபெரும் வணிக சந்தையுடன் போட்டியிட்டே தமது திறமையைக் காட்டி வென்றிருக்கின்றனர். அதற்கு உழைக்கும் மக்கள் அங்கீகாரம் கொடுத்திருக்கின்றனர்.

‘சின்னக் கவுண்டர்,’ ‘ தேவர் மகன்’ போன்ற சாதி ஆணவப் படங்கள் வந்தன. அப்போது வாய் மூடி அமைதியாய் இருந்த  சமூகம் , ஒடுக்கப்பட்டோர் அவர்களின் கதைகளை திரைப்படமாக எடுக்கும்போது, வயிற்றெரிச்சல் வரும் எனில், அதில் விமர்சிப்போர் வெந்து நொந்து போவது தவிர்க்க முடியாதது.

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்கள் சாதியாதிக்கத்தை நேரடியாகப் பேசிய படங்களே. அவை மக்களால் போற்றப்பட்டன. அந்தப் படங்கள் பேசியதை எல்லாம் இந்தப் படத்தில்  பேசாது போனது குறையே. ஒரு தரப்பார் பிரச்னையை மட்டுமே அழுத்தமாகப் பேசியுள்ள படம் இது. மறு தரப்பாரைப் பெரிதாக குற்றம் எதுவும் சொல்லாமலேயே படம் நகர்ந்திருக்கிறது. இருப்பினும் எதிர்ப்பு வருகிறதெனில், அந்த வன்மத்தை மக்களின் வரவேற்பு புறந்தள்ளும்.

வணிக நோக்கத்தில் இந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்று, கதையை மட்டுமே நம்பி படம் எடுப்பதற்குத் துணிச்சல் வேண்டும். அதற்கு மாரி செல்வராஜுக்கு மனத்துணிவு இருக்கிறது. பணத்தை நம்பாமல் அறத்தை நம்பி எடுத்திருக்கிறார்.

எப்போதும்  மானுட அறத்தைக் காக்கும் பணி கலைஞர்களுக்கு இருக்கிறது. அதன்படி மாரி செல்வராஜ் தனது கடமையை செய்திருக்கிறார். நிறைவான வாழ்த்துகளை அவருக்கு உரித்தாக்குகிறோம்.

படைப்பாளர்

செல்வி (எ) தேன்மொழி

வாசிப்பில் ஆர்வம் கொண்டவர், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர்.

Exit mobile version