உலகில் ஆடியோ பதிவு செய்யப்பட்ட முதல் பாடல்! – 6
சிறு வயதில் ‘மேரி ஹாட் அ லிட்டில் லேம்ப்’ (Mary had a little lamb) பாடலைப் பாடாத மனிதர்களே உலகில் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு உலகப் பிரபலமான பாடல் அது. வீட்டுக்கு யார் விருந்தாளியாக வந்தாலும், அடாவடியாக குழந்தைகளை ஹால் நடுவே நிறுத்தி, “’மேரி ஹாட் அ லிட்டில் லேம்ப்’ பாடு கண்ணா”, என்று படுத்தி எடுத்த/எடுக்கும் சமூகம் நாம். இத்தனைக்கும் அந்தப் பாடலில் பெரிய பாடுபொருளோ, அரிது என சொல்லக்கூடிய இலக்கிய அமைவோ கிடையாது. அதன் எளிமையே அதை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தது எனலாம். ஆங்கிலத்தின் மிகப் பிரபல பாடலான மேரி, இங்கிலாந்தில் தோன்றவில்லை, அமெரிக்காவில் தோன்றியது!
1830ம் ஆண்டு சாரா ஜொசிஃபா ஹேல் (Sarah Josepha Hale) என்ற அமெரிக்க எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ‘போயெம்ஸ் ஃபார் அவர் சில்ட்ரன்’ (Poems for our children) என்ற நூலை பதிப்பித்தார். அந்நூலில் தான் முதல்முறையாக ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ பாடல் வெளியானது. சாரா அமெரிக்காவின் மிக முக்கிய செயற்பாட்டாளர். இன்றும் ‘தேங்க்ஸ்கிவிங்’ (Thanksgiving) விடுமுறை நாளை நமக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லும் பொது விடுமுறையாக அமெரிக்கா கொண்டாடுகிறது என்றால், அதற்கு முழு காரணமும் சாரா ஆவார். அவரை ‘தேங்க்ஸ்கிவிங்கின் தாய்’ (Mother of Thanksgiving) என்றும் சொல்வோருண்டு. இவர் தொகுத்த குட்டிக் குழந்தைகள் நூலில் இடம்பெற்ற பாடல் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், பின் ஆங்கிலம் அறிந்த உலகின் அத்தனை நாடுகளிலும் புகழ் பெறத் தொடங்கியது.
மேரி இருந்தாரா?
1815ம் ஆண்டு மேரியின் வீட்டு செம்மறியாடு குட்டி ஒன்றை ஈன்றது. போதிய உடல் வலுவற்ற அந்தக் குட்டியை அதன் தாய் ஒதுக்கிவிட, அதன் மேல் பரிதாபம் கொண்ட மேரி, அந்தக் குட்டியை தூக்கி வளர்த்தார். சிறுமி மேரி செல்லும் இடமெல்லாம் ஆடுக்குட்டியும் சென்றது. அவள் படித்த ரெட்ஸ்டோன் பள்ளிக்கும் அவளைப் பின்தொடர்ந்தது. வகுப்பறையில் ஆட்டுக்குட்டி ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது பள்ளியின் பேசுபொருளானது. அடுத்த நாளே மேரியின் வகுப்புத் தோழன் ஜான் ரோல்ஸ்டோன் (John Roulstone), ஆட்டுக்குட்டியின் சாகசத்தை கவிதை வடிவில் எழுதிவந்து மேரியிடம் தந்தான்.
“மேரியிடம் ஒரு சின்ன ஆட்டுக்குட்டி இருந்தது
அதன் ரோமம் வெள்ளைப் பனி போல் இருந்தது
மேரி எங்கு சென்றாலும் அவளோடு சென்றது
ஒரு நாள் அது அவளைத் தொடர்ந்து பள்ளிக்குச் சென்றது
அதைக் கண்ட குழந்தைகள் சிரித்து விளையாடினார்கள்.”
ஆட்டுக்குட்டி வளர்ந்து மூன்று குட்டிகளை ஈன்றது. அதற்கு நான்கு வயதானபோது, மேரியின் வீட்டிலிருந்த மாட்டின் கொம்பில் சிக்கி உயிர்விட்டது. இந்தப் பாடலை எழுதிய ரோல்ஸ்டோனும் தன் 17வது வயதில் அகால மரணமடைந்தார். இந்த சூழலில் தான் 1830ம் ஆண்டு சாராவின் நூல் வெளியாகி உலகமெங்கும் மேரியின் ஆட்டுக்குட்டி பிரபலமானது.
1877ம் ஆண்டு எடிசன் பதிவு செய்த இந்த ஒலிப்பதிவு தான் உலகின் முதல் ‘ஆடியோ’. இந்த ஒலிப்பதிவு அப்போது அமெரிக்காவில் வயோதிகராக வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்த மேரி சாயரின் செவிகளை எட்டியது. அவர் தன் மகனுடன் சேர்ந்து 1880ம் ஆண்டு தள்ளாத வயதில், ‘ஆட்டுக்குட்டி மேரி நான் தான்’, என்று எழுதினார். ரோல்ஸ்டோன் எழுதிய பாடல் சாரா கைகளில் எப்படிக் கிடைத்தது என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.
சாராவோ, அந்தப் பாடல் தான் எழுதியதே என்று வாதிட்டார். விடை தெரியாத இந்த வழக்கை சட்டை செய்யாத பெரும் பணக்காரரும் ஃபோர்ட் குழும நிறுவனருமான ஹென்றி ஃபோர்டு, மேரி சொன்னதே உண்மை என்று நம்பினார். 1920ம் ஆண்டு மேரியின் ரெட்ஸ்டோன் பள்ளியை விலைக்கு வாங்கி, அதை சட்பரி என்ற ஊருக்கு மாற்றினார். மேரியின் ஆட்டுக்குட்டி பாடலின் கதை நூலை பதிப்பித்தார். மேரி பிறந்த ஸ்டெர்லிங் நகரில் அவரது ‘ஆட்டுக்குட்டிக்கு’ சிலை வைத்திருக்கிறார்கள்! எடிசனின் குரலில் பதிவு செய்யப்பட்ட உலகின் முதல் ஆடியோவில், மேரியின் ஆட்டுக்குட்டி பாடலை நாம் கேட்கலாம்.
தொடரின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம்:
கட்டுரையாளர்:
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், வரலாற்றாளர்.