Site icon Her Stories

தீப்பாஞ்சாயி

ஹூக்ளி நதி சுழித்தோடிக் கொண்டிருந்தது. கரையோர மரங்கள் உதிர்த்த இலைகளையும், மலர்களையும், சருகுகளையும் நதி பாரபட்சமின்றி இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டு, நதிநீர் தங்கச் சரிகையாக மின்னிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கே கூடியிருந்த ராதாநகர் மக்கள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

அங்கே ஒரு ஆணின் இறந்த சடலம் கொண்டு வந்து கிடத்தப்பட்டது. உறவினர் சிலர் ஆற்று நீரைப் பானைகளில் நிரப்பி வந்து சடலத்தின் மீது ஊற்றிக் குளிப்பாட்டினர். பச்சை ஓலைகளால் பின்னப்பட்ட பாடையில் உடல் கிடத்தப்பட்டது. புத்தம் புதிய வெள்ளைப் பருத்தித் துணியால் அதனை மூடினர். மலர்களை மேலே தூவினர். சந்தனம் மற்றும் புனிதப் பொருட்களால் உடல் அலங்கரிக்கப்பட்டது. உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து வணங்கி மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

அப்போது பதினெட்டு அல்லது இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருத்தி அங்கு அழைத்து வரப்பட்டாள். மாநிறமான மெலிந்த தேகம். வெள்ளை நிற ஆடையால் தனது உறுதியான இளம் மூங்கில் போன்ற தோள்களை மூடியிருந்தாள். பெரிய கரிய கண்கள். அழுது வீங்கியிருந்தன. அடர்ந்த தலைமுடியை கொண்டையாக முடிந்திருந்தாள். முன் நெற்றியில் முடிக்கற்றைகள் பிரிபிரியாகத் தொங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் செக்கச் செவேர் என்று குங்குமம் கனமாக அப்பிருந்தது. அவள் முகமெல்லாம் வியர்த்துக் களைத்திருந்தாள். நிற்கத் தெம்பில்லாமல் துவண்டிருந்தவளை அவளை விட மூத்த பெண்ணொருத்தி தனது தோள்மேல் சாய்த்தவாறு அணைத்துப் பிடித்திருந்தாள்.

சடங்குகள் துவங்கின. புனித மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. இன்னொரு புறம் உடலைத் தகனம் செய்ய மரக் கடைகளை அடுக்கி சிதையைத் தயார் செய்யத் தொடங்கினர். அந்தப் பெண் சடலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என் வாழ்வில் நீங்கள் வந்த இந்த சில வருடங்களில் உங்கள் முகம்கூட என் மனதில் பதியவில்லை. பார்த்துக் கொள்ளக்கூட நேரமின்றி வீட்டு வேலைகள் என்னை அழுத்திக் கிடக்கின்றன. உங்களுக்கும் எனக்கும் வயது  பல வருடங்கள் வித்தியாசமாக இருந்தாலும், என் குடும்பத்தின் வறுமைச் சூழலை உங்களுக்கு சாதகமாகத் திருப்பிக் கொண்டீர்கள். கல்வி கற்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். ஆனால்..? எனக்கு உங்களைப் பிடித்ததா என்று ஒப்புக்குக் கூடக் கேட்காமல் திருமணம் செய்து கொண்டு, ஒரு இளம் நாற்றை வெடுக்கென்று பறித்து வந்து உங்கள் வீட்டில் பதியனிட்டீர்கள். அதில் வேறுவழியின்றி என்னைப் பொருத்திக் கொள்ள இன்னும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். நம்மிடையே இருந்த பந்தம் இருட்டுகூட அறியாதே. பொருந்தாக் காமமோ? குருட்டுக் காமமோ? என்னவோ ஒன்று. அவசரச் சோறு. நின்று நிதானித்து ரசித்து உண்டதில்லை. பசிக்கிறதோ இல்லையோ கிடைக்கிறபோது சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். 

எதையுமே நான் மனதார, உடலார அனுபவிக்கவில்லை என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?’ அவள் நெடுமூச்செறிந்தாள்.

‘விடிகாலையில் உறக்கம் கலையாமலே எழுந்து காலை, மதியம், மாலையென மூன்று வேளை உணவையும் இந்த மண் அடுப்பில் வயிற்றை எக்கி எக்கி ஊதி, நெருப்பு மூட்டி சமைத்திருக்கிறேன். இந்த வீட்டில் உள்ள அத்தனை ஜீவன்களுக்கும் அன்னமிட்டு இருக்கிறேன். ஒருமுறை கூட நீங்கள் சாப்பிட்டு நல்ல உணவு என்று சொன்னதாக என் நினைவடுக்குகளில் பதியவில்லை. இங்கிருக்கும் ஆடு மாடுகள் போல் சத்தமின்றித்தான் சாப்பிட்டிருக்கிறீர்கள். மீதமிருக்கும் நேரங்களில் மசாலா அரைத்து, தானியங்களை சுத்தம் செய்து, குடிநீர் கொணர்ந்து, துணிகளைத் துவைத்து உலர்த்தி இடுப்பொடிந்து விடும். எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் இரவுகளில் நீங்கள் என்னருகில் வரும்போது ஒருநாளும் ஆறுதலாக நான் உணர்ந்ததில்லை.’ அவள் கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தன. அருகில் நின்ற முதியவள் கைத்தாங்கலாக அவளைத் தரையில் அமர வைத்தாள்.

‘பூஜைகள் செய்து, புருஷனின் நன்மைக்காக எத்தனை விரதங்கள் இருந்தேன். நீங்கள் ஒருமுறை கூட என் தலையை ஆதரவாகத் தடவியதே இல்லையே. உங்களுக்காகவா நான் உணவைத் தவிர்த்தேன்? என் உடல் நலனைக் கெடுத்துக் கொண்டேன்? ச்சே…’அவள் தலையை உலுக்கிக் கொண்டாள். ஒரு பெண் அவள் குடிக்க நீர் கொண்டு வந்தவள் புரோகிதரால் தடுக்கப்பட்டாள். “அவ எதையும் சாப்பிடக் கூடாதுன்னு தெரியாதா? பூஜை முடியட்டும்.” லேசாக உறுமினார். 

‘இனி என் வாழ்க்கை என்ன ஆகும்.? மீண்டும் தந்தைக்கு பாரமாகச் சென்று அமரப் போகிறேன். வண்ண ஆடைகள் உடுத்த இயலாது. நல்ல உணவுகள் சாப்பிட முடியாது. அசைவம் தரமாட்டார்கள்.  அலங்காரங்கள் செய்து கொள்ளக் கூடாது. கல்வியும் இல்லை. வெளியிடங்களுக்கு செல்வதா… மூச்! போய் மூலையில் உட்காரென்று சொல்லுவார்கள். இந்த நீளமுடியை மழித்துக் கொள்ள வேண்டும்’. அவள் தன்னையறியாமல் கூந்தலை எடுத்து முன்புறம் போட்டுக் கொண்டு நீவிக் கொடுத்தாள். கைப்பிடிக்குள் அடங்காமல் கட்டாக இருந்தது கூந்தல். அவளை எழுப்பி அழைத்துச் சென்றார்கள்.

குளிக்கவைத்து உடைமாற்றி, மங்கலப் பொருட்களால் அவளை அலங்கரித்து மீண்டும் அழைத்து வந்தார்கள். புரோகிதர் அவள் அமர்ந்ததும் மதச் சடங்குகளைத் தொடங்கினார். 

“வாழ்வின் புனிதமான உறவை இழந்து விட்ட இந்தப் பேதைப் பெண் மோட்சம் அடைந்து மீட்சி பெற வேண்டும். சொர்க்கத்தில் உன் கணவனுக்கு சேவைகள் செய்வது உன் கடமை. அப்போதுதான் மறுமையிலும் நீ அவனையே பதியாகப் பெறுவாய். புராண, இதிகாசப் பெண்கள் கணவருடன் சிதையேறி அழியாப் புகழ் பெற்றனர். அந்த வரிசையில் இன்று முதல் நீயும் இணைவாய். ததாஸ்து.” புரோகிதர் பேசி முடித்து மந்திரங்கள் ஓதத் தொடங்கினார். அவள் பயங்கரமான அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள். திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். வறுமையின் பிடியில் சிக்கி ஒடுங்கிய அந்த முகம் கூப்பிய கைகளுடன் வானம் பார்த்து சேவித்துக் கொண்டிருந்தது. தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்று ஏக்கத்துடன் தந்தையைப் பார்த்தாள். அவர் கவனமாக அவள் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தது புரிந்தது.

சிதையில் சடலத்தைக் கிடத்தி விட்டு மலர்களைத் தூவினர். அந்தப் பெண்ணை எழுப்பி சிதையில் ஏற்ற முனைந்தனர். அவள் திமிறிக் கொண்டு ஓட முனைந்தாள். கண்கள் பீதியில் பிதுங்கின. இரண்டு பக்கமும் பெண்கள் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு சிதையை நோக்கி இழுத்தனர். அவள் கத்திக் கதறினாள். விட்டு விடுமாறு கெஞ்சினாள். கூடியிருந்த மக்கள் கூப்பிய கைகளுடன் ‘சதி மாதாகி ஜெய்’ என்ற கோஷத்தை எழுப்பினர்.

“நிறுத்துங்கள்!” என்று ஒரு உரத்த குரல் எழுந்தது. இது மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான பாவச் செயல்!”  வார்த்தைகள் கூர்மையாக ஒலித்தன. 

அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு உயரமான மனிதர் வந்தார். வட இந்திய பாணியில் நீள அங்கி ஆடை உடுத்தியிருந்தார். தலையில் ஒரு பெரிய தலைப்பாகை. கால்களை ஆங்கிலேயரின் சப்பாத்துகள் கவ்வியிருந்தன. கம்பீரமாக நடந்து வந்தவர் அதிர்ந்து நின்றிருந்த பெண்ணைப் பார்த்தார். அவர் இறந்துபோன ஆணின் தம்பி. பக்கத்தில் இருந்த தனது தந்தையைப் பார்த்தார். 

“வா ராம். இன்னும் உன்னைக் காணவில்லை என்று நினைத்திருந்தேன். உன் தமையன் திடீர் மரணம் அடைந்து விட்டான். உனக்கு தகவல் கிடைத்ததோ,  இறுதியாக அவன் முகம் காண எங்கே நீ வராமல் போய்விடுவாயோ என்று தவித்தேன். அதோடு இன்னொரு புனிதக் காரியமும் சிறிது நேரத்தில் நடக்கவிருக்கிறது.” தந்தை முடிப்பதற்குள் அவர் குறுக்கிட்டார்.

“இன்னும் இந்த ஊர் நாகரீகம் அடையவில்லையா? நான் போனபோது எப்படி இருந்தீர்களோ அதே போல் தான் இன்றும் இருக்கிறீர்கள். உங்களை முன்னேற்ற நான் துடித்துக் கொண்டு வந்தது வீண் தானா? இது என்ன முட்டாள்தனம்?” வார்த்தைகள் கோபமாக வந்து விழுந்தன.

கூட்டத்தில் ஒரு முதியவர் எழுந்து, “இது நமது மரபு! பாரம்பரியம்! நீ யார் அதை மாற்ற?” என்று கேட்டார். அவர் ஒரு கணம் அமைதியாக முதியவரைப் பார்த்தார். “பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் மனித உயிரைப் பலி கொடுப்பது மாபெரும் தவறு. அநீதி. இந்தப் பெண்ணின் உயிர், உங்கள் மகளின் உயிர் போன்றதுதானே.  இவளை எரிப்பது உங்கள் எல்லோரது மனசாட்சியையும் எரிக்காதா?” என்றார். 

“என் மகளாக இருந்தாலும் இதுதான் கதி. என் குடும்ப கௌரவத்தை அவள் தானே உயிர்த்தியாகம் செய்து காக்க வேண்டும்?” முதியவர் எதிர்க் கேள்வி கேட்டார்.

“இந்தப் பெண்ணை உயிருடன் எரிக்க அவள் விருப்பத்தைக் கேட்டீர்களா..?”

 “அவளை என்ன கேட்பது? பெண்ணுக்கென்று தனி விருப்பு, வெறுப்புகள் உண்டா என்ன? அவள் ஆணின் உணர்வுகளுக்கு அடிபணிந்தால் போதும். அதுதானே நமது நாட்டின் வழக்கம்? அவள் மறுத்தாலும் அவளை சிதையில் ஏற்றாமல் இருக்க முடியாது,” என்றார் முதியவர். “மேலும் இவள் இளம்பெண். இவளால் இன்னும் எத்தனை காலம் தனிமையில் கழிக்க முடியும்.? கைம்பெண் நோன்பு கடைப்பிடிக்க வேண்டும். பிற ஆடவர் கவனத்தை ஈர்த்தால் என்ன செய்வது?”

“என்ன செய்வது? மறுமணம் செய்து வைத்து விட வேண்டியது தான்,” அவர் முடிப்பதற்குள் ஊரார் மறுப்புக் குரல் எழுப்பினர்.

“பெண்ணுக்கு வாழ்வில் திருமணம் ஒருமுறைதான். அப்போதுதான் நமது மதத்தை நாம் உண்மையாகப் பின்பற்றுபவர்கள் ஆவோம்.”

“ஆணின் உயிர் போல பெண்ணின் உயிரும் மதிப்பு வாய்ந்ததல்லவா? மனைவி இறந்தாளென்று எந்த ஆணாவது உடன்கட்டை ஏறியிருக்கிறானா?ஆண் மாத்திரம் பலதார மணம் செய்து கொள்ளலாம், ஆனால் பெண் கட்டாய மரணம் அடைய வேண்டும்? இதுதான் உங்கள் நியாய, தர்மமா? பெண்ணின் வாழ்வு கணவனின் மரணத்துடன் முடிவடைந்து விடாது. அவள் கணவன் மீது கொண்ட நேசத்தை நெருப்பில் இறங்கித் தான் நிரூபிக்க வேண்டுமா? மேலும்…” அவர் குரலைத் தாழ்த்தினார். “உண்மையிலேயே அவள் நேசிக்கும் விதமாக அவள் கணவன் இருந்தானா? மரபு, கலாச்சாரம் என்று இத்தகைய கொடுமையான பழக்கத்தைத் தொடர்வது நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள் எல்லாம் இது போன்ற சதி முறையை ஆதரிக்கவில்லை. ஆணாதிக்கம் கொண்ட சமூகம் தனது தேவைகளுக்காக, போலி கௌரவத்தைக் காப்பாற்ற ஏற்படுத்திக் கொண்ட ஒரு வழக்கம். அவ்வளவுதான்.”

அவர் பொறுமையாக விளக்கினார். ஆவேசம் கொண்ட அந்தக் கூட்டம் அவரது பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவரது அண்ணனின் இளம் மனைவி சிதையில் வலுக்கட்டாயமாகத் தூக்கி எறியப்பட்டாள். கூடியிருந்த மக்கள் “மஹா சதி! மஹா சதி! மஹா சதி!” என்று பெரிய கோஷம் எழுப்பினர்.

நெருப்பு மிகப் பெரிய ஆவேசத்துடன் அவளைத் தழுவிக் கொண்டது. சரசரவென்று அவள் மீது பரவியது. முதலில் தலைமுடி, கண்ணிமை மயிர்கள், புருவங்கள் கருகின. தோல் உரிந்து மேல்பகுதி எரியத் தொடங்கியது. தசைகள் எரிந்து கொழுப்பு உருகத் தொடங்கியது. அவள் பயங்கரமாக வீறிட்டாள். உடலின் நீர்ச்சத்து ஆவியாகி, உடல் கருகத் தொடங்கியது. சகிக்க முடியாத வீச்சம் எழுந்தது. அவளது குரல் வலுவிழந்து தேயத் தொடங்கியது. அவளது இறுதி நினைவில் இதுவரை கணவனிடம் இருந்து ஒரு முத்தம்கூடப் பெறாதது மின்னி மறைந்தது. அவள் அதன்பின் குரல் எழுப்பவேயில்லை.

***

எதிர்பாராத இந்த நிகழ்வில் அவர் ராஜா ராம்மோகன் ராய் நிலைகுலைந்து போனார். இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த நிகழ்வு அவரைப் பெரிதும் பாதித்து, இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்த யோசனையைத் தூண்டியது.  பெண்கள் உரிமைக்காகவும், கைம்பெண்கள் மறு திருமணம் செய்யவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும் போராட்டம் செய்தார். பெண்களுக்குக் கட்டாயக் கல்வியைத் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். 1811 ம் ஆண்டு நடந்த இந்தக் கொடூரமான நிகழ்வால் சதி என்ற உடன்கட்டை ஏறும் எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். தமிழகத்தில் இதுபோல் உடன்கட்டை ஏறும் பெண்கள் தீப்பாஞ்சாயி, தீப்பாஞ்ச அம்மன், சீலைக்காரி என்ற பெயர்களில் வணங்கப்பட்டார்கள். 

ராஜா ராம்மோகன் ராயின் இடையறாத தொடர் முயற்சிகளால் அப்போதைய கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் பிரபு 1829 இல் சதி முறையை தடை செய்யும் சட்டத்தை இயற்றினார். அதன் பின்னர் இந்தக் கொடூர வழக்கம் பெருமளவு குறைந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு 1987-ம் ஆண்டு ராஜஸ்தானில் ரூப் கன்வர் என்னும் பதினெட்டு வயது இளம்பெண் உடன்கட்டை ஏறிய நிகழ்வுதான் இந்தியாவில் இறுதியாக நிகழ்ந்த சதி.

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

Exit mobile version