Site icon Her Stories

அங்காடித் தெரு

Boanerges

வெள்ளிக்கிழமை அதிகாலைல தலைக்கு குளிச்சு காக்குற கடவுளான அல்லாவுக்கு ஒரு சலாம போட்டுட்டு, மொத தடவையா ஊர சுத்திப்பாக்கக் கிளம்பினோம். இங்க பெட்ரோல் விலை தான் கம்மி. மத்தபடி டாக்ஸில போகணும்ன்னா சொத்தைத்தான் எழுதி வைக்கணும். ரோட்ல இறங்கி கை நீட்டுனா டாக்ஸி நிக்குது. ஆனா அதுல மீட்டர் தான் நிக்காம ஓடுது! டாக்ஸியில இருந்து பஸ் ஸ்டாப்பு போய் அதாங்க துபாய் பஸ்ஸெல்லாம் வந்து நிக்கும்ல அங்க போய், துபாய்க்கு ஒரு டிக்கெட் வாங்கலாம்ன்னு பார்த்தா அதுக்கும் கார்டு தான் வெச்சிருக்காங்க. அந்த கார்ட வாங்கி ப்ரீபெயிட் பண்ணி வெச்சுக்கணும். பஸ்ஸில ஏறும்போது அதை ஸ்வைப் பண்ணிட்டு நம்ம ஸ்டாப்பு வந்தா இறங்கிக்கலாம். நம்ம தூரத்துக்கு ஏத்த மாதிரி பணம் எடுத்துக்குவாங்க. கண்டக்டர் எல்லாம் கிடையாது.

சரின்னு ஒரு கார்ட வாங்கிட்டு பஸ் நிக்குற இடத்துக்கு வந்தா ஒரு மாடி பஸ் நின்னுட்டு இருக்கு. மாடி பஸ்ஸெல்லாம் நான் ‘ஊர்வசி ஊர்வசி’ பாட்டுக்கு பிரபுதேவா ஆடும்போது பார்த்தது. பஞ்சுமிட்டாய கையில வாங்குன பச்ச கொழந்தை மாதிரி பஸ்ஸில ஏறி பயணத்தை ரசிச்சு ருசிக்க ஆரம்பிச்சேன். ஒரு மணி நேரம் கழிச்சு ஒரு பஸ் ஸ்டாப்புல போய் இறங்கினோம். அங்கிருந்து ஒரு மெட்ரோ ரயில புடிக்க போனோம். ஆனா நான் எங்க போறேன்னு எனக்கே தெரியாது. அதெல்லாம் நான் கேட்டுக்குறதும் இல்ல.

மெட்ரோ ரயில பொருத்தவரைக்கும் நாம எவ்வளவு பெரிய எக்ஸ்பர்ட்டா இருந்தாலும் ஒரு நிமிசம் அசந்தோம்னா, தப்பான ரூட்டுல போற மெட்ரோவ புடிச்சிருவோம். அங்க இருந்த அறிவிப்பு பலகையைக் காமிச்சு எனக்கு மெட்ரோ எப்படி ஏறணும்ன்னு என் கணவர் விளக்க விளக்க, ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு.


திருக்குறள் மாதிரி சிவப்பு பச்சைன்னு ரெண்டே லைனு. ஆனா இதுக்கு விளக்க உரை எழுத திருவள்ளுவரே திரும்ப பொறந்து வரணும் போல இருக்கு. ஒரு வழியா மெட்ரோல ஏறி டிரைவர் சீட்டுக்கிட்ட போனா ஒரு நிமிசம் என் இதயமே நின்னுருச்சு. அதுல டிரைவரே இல்லீங்கோ. அது ஃபுல் ஆட்டோமேட்டிக்காமா. ‘அய்யோ அம்மா என்ன வுட்டுடுங்க நான் என் அம்மா வீட்டுக்கே போறேன்’ னு ஆகிருச்சு. சந்திராயன்ல வெச்சு அனுப்புற சோதனை மனுசன் மாதிரி இதென்ன சோதனைடான்னு பதைபதைப்பாயிருச்சு. என்னங்கடா பஸ்ஸூன்னா கண்டக்டர் இல்ல, ரயிலுன்னா டிரைவர் இல்ல என்ன டிசைனோ போங்க. என்னோட திக் திக் நிமிடங்களோட ஒரு வழியா இறங்குற ஸ்டாப்பு வந்ததும் பத்தே செகண்டு தொறக்குற கதவுக்கு நடுவுல சிக்காம சமத்தா வெளிய வந்துட்டேன்.

சரி இப்பவாச்சும் எங்க கூட்டிட்டு போறோம்னு சொல்லுவார்ன்னு பாத்தா ஏதோ மால்க்கு போறோம்ன்னு சொல்லுறாரு. ப்ப்பூ இதுக்குத்தான் இத்தன பில்டப்பா. நாங்க பாக்காத மாலா. சரி போவோம்னு நடக்க ஆரம்பிச்சோம். அங்க இருந்து ரொம்ப தூரம் நடக்கணும்னு சொன்னார். அது முழுசும் மூடியிருக்குற பெரிய நடைபாதை. சரி நடக்கலாம்னு நடந்தா அது பாட்டுக்கு போயிட்டே இருக்கு. நகரும் படிக்கட்டுகளைத்தான பார்த்திருக்கீங்க. தரையே நகர்ந்து பார்த்திருக்கீங்களா? ஆமா நடக்க முடியலயா? அந்த டிராவலேட்டர்ல ஏறி நின்னா போதும், அதுவே நகர்ந்து போகும். அப்புறம் என்ன…கொஞ்சம் நடங்க, கொஞ்சம் நில்லுங்கன்னுட்டே இன்னும் எவ்வளவு தூரம்ன்னு கேட்டா, “தோ கிலோ மீட்டர்”ன்னு தீரன் பட தாத்தா மாதிரி ரெண்டு விரல காட்டிட்டு என் கணவர் வேகமா நடந்துட்டே இருந்தார். பாலைவனத்துல தண்ணிய பாத்த ஒட்டகம் மாதிரி ஒரு வழியா மாலோட என்ட்ரன்ஸ் என் கண்ணுக்கு தெரிஞ்சிருச்சு.

வெளிய இருந்து பாக்குறதுக்கு சாதாரணமாத்தான் இருந்துச்சு. ஆனா உள்ள போனா தேவலோகமேதான். சுத்தி இருக்குற ஏஸில இருந்து வர்ற காத்து சாமரம் வீசுறது மாதிரியும், கீழ தரையில முகமே தெரியுற அளவுக்கு பளபளன்னு இருக்குறதும், ரம்பா, ஊர்வசி, மேனகான்னு எல்லாரும் அரைக்கால் டவுசரோட சுத்திட்டு இருக்குற அழகு இருக்கே… நிஜமாவே பிரம்மாண்டமா இருந்தது. அந்த மால்தான் துபாய்லயே, ஏன் ஆல் இன் ஆல் வோர்ல்டுலயே பெரிய மாலாமா. அரை மணி நேரம் மேலேயும் கீழேயும் சுத்தினதுல நான் கண்டுபுடிச்ச விசயம், அங்க இருந்த பொண்ணுங்கள்ல லாங்க் டாப்ஸ் போட்டிருந்த ஒரே ஆள் நான்தான். என்னமோ டிரஸ்ஸே போடாம வந்துட்ட மாதிரி ஐ பீல் வெரி அஷேம்டு! பக்கத்துல இருந்த அங்காடிக்குள் நுழைந்து இரண்டு மணி நேரம் கடையையே அலசி ஒரு அரை சட்டை வாங்கி போட்டவுடன் தான் எனக்குள்ள “போன உசிரு வந்துருச்சு….”

சரி இப்போ வாங்க மால சுத்திக் காட்டுறேன். அதான் இம்மாம் பெரிய மாலாச்சே, வழியெல்லாம் எப்படி கண்டுபுடிக்கிறதுன்னு கேட்டீங்கன்னா சத்தியமா கண்டுபுடிக்க முடியாது. அங்கங்க வழிகாட்டி மாதிரி கியோஸ்க் (kiosk) வெச்சிருப்பாங்க. அதுல போய் எங்க போகணும், என்ன வேணும்ன்னு டைப் பண்ணி பாத்துட்டுப் போக வேண்டியது தான். சில சின்ன மால்கள தவிர இங்க எல்லாமே அப்படித்தான். அப்புறம் ஷாப்பிங் பண்ணணும்னெல்லாம் இங்கே அனேகம் பேர் வர்றது கிடையாது. வாக்கிங், ஜாகிங்ன்னு நல்ல பழக்கங்கள் ஏதும் இல்லாததால அப்படியே மால்ல ஒரு சுத்து சுத்தினோம்ன்னா அந்த வாரத்தோட டார்கெட் முடிஞ்சிரும்.

பல முறை நான் ஏதாவது வாங்கலாம்ன்னு போயிட்டு, அத விட்டுட்டு வேற ஏதாச்சும் தான் வாங்கிட்டு வந்திருக்கேன். பல மால்களுக்கு பலமுறை விசிட் அடிச்சதோட பலன் லிப்ஸ்டிக்ல ஆரம்பிச்சு லாஞ்சரீ வரைக்கும் ஒரு நூறு பிராண்ட்ஸ் தெரிஞ்சு வெச்சிருக்கேன்.

நாள் முழுக்க சுத்துறதுக்கு இடம் இருந்தாலும், நமக்கு சோறு தான் முக்கியம்ன்னு அப்படியே புட் கோர்ட் பக்கம் ஒதுங்கினோம். கண்டிப்பா பீட்சா, பர்கர் தான் இருக்கும்ன்னு நல்லாவே தெரியும். ஆனா ‘சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட்’ன்னு ஒண்ணு இருக்குல்ல? அதுனால நான் பர்கர மட்டும் சாப்பிட்டு பழகிட்டேன். ஹாம்பர்கர், சீஸ் பர்கர், வெஜ்ஜீ பர்கர், ஃபிஷ் பர்கர், பீஃப் பர்கர், அதுலயே சிங்கிள், டபுள், மெக்சிகன், ஹவாயன்னு விதவிதமான அளவுகள்ல அற்புதமான ஸ்டஃப்பிங் வெச்சு தருவாங்க. ஆனா முதல் தடவை நான் ஃபிஷ் பர்கர் வாங்கினப்போ அதோட விலைய பாத்து மூச்சடைச்சு போனேன்.

முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டேனே. இங்க வந்ததும் எல்லாரும் செய்யுற மொத விசயம், ஏதாவது பொருள் வாங்கினா அதோட இந்திய மதிப்ப அண்ணாச்சி மூளை மாதிரி கணக்கு போட ஆரம்பிக்கிறதுதான். மொதல்ல கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் கணக்கு போட மாட்டோம்னா கேக்குறீங்க? இல்ல… அப்புறம் அதுவே பழகிரும்.

உலகத்துலயே பெரிய மால்ல இருந்து என்ன பிரயோசனம் தண்ணி வேணும்னா கூட மைல் கணக்குல நடந்து ஒரு கடையப் பாத்து தண்ணி வாங்கிக் குடிக்குறதுக்குள்ள… ஸ்ஸப்பா… அதுவும் கோடைக்காலத்துல ரொம்ப கஷ்டம். சரி ஏதாச்சும் ஜூஸு குடிப்போம்னு தள்ளுவண்டி மாதிரி செட்டப்புல இருக்குற கடை பக்கம் ஆசையா ஓடிப்போய் எட்டிப்பாத்து ஜூஸு என்ன விலைன்னு கேட்டுட்டு அப்படியே ஓடிப் போயிடணும்.

ஆனாலும் இந்த ஊரோட அழகில “அக்கரைச்சீமை அழகினிலே “ நான் பாட முக்கியமான காரணம் இங்க இருக்குற டாய்லெட் வசதிகள். என்னடா டாய்லெட்டுல அப்படி என்ன இருக்குன்னு நினைக்காதீங்க. அதுவும் நம்ம ஊரு பொதுக்கழிப்பிடங்கள்ல நான் பட்ட துயரங்களெலாம் கண்ணு முன்னாடி வரும்போது, இந்த ஊரில நான் பாத்த டாய்லெட்டுக்கெல்லாம் நான் அவார்டே கொடுப்பேன். பீச்சுக்கு போனாக்கூட சுத்தமான டாய்லெட் வெச்சிருக்காங்க. நாம நடந்துபோகும்போது கதவு தானா தொறக்குறது, கைய காட்டினதும் வாஷ்பேஷன்ல இருந்து தண்ணி கொட்டுறதுன்னு சிலபல மாயாஜால வித்தையெல்லாம் நமக்கும் தெரியும்ன்னு ரொம்ப உஷாரா தான் இருந்தேன்.

ஆனா எவ்வளவு உசாரா இருந்தும் இந்த முறை டாய்லெட்டுல தம்மாத்தூண்டு சென்சார கண்டுபுடிக்க முடியாம மாட்டிக்கிட்டேன். டாய்லெட்டுக்குள்ள போயிட்டு வந்த வேலை முடிஞ்சதும் ஃப்ளஷ்(flush) பண்ணலாம்ன்னு பட்டன தேடினா காணோம். நானும் சிஐடி ஜெய்சங்கர் மாதிரி பூந்து பூந்து தேடுறேன் கண்ணுக்கு சிக்கல. சரி போனா போகுது அப்படியே போயிடலாம்னு பாத்தா… வாசல்ல கிளீன் பண்றவங்க சத்தமெல்லாம் கேக்குது. அடேய் கோவாலு… என்ன எப்படியாச்சும் கூட்டிட்டு போயிருடான்னு நினைச்சுட்டு சரி மானம் போனாலும் பரவால்ல, மரியாத போகக்கூடாதுன்னு (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு தெரியல) நினைச்சு அந்த சுத்தம் பண்ற அக்காட்ட, “ அக்கா ஃப்ளஷ் பட்டன எங்கக்கா ஒளிச்சு வெச்சிருக்கீங்க”ன்னு பாவமா கேக்க, அந்த அக்கா உள்ள வந்து கைய நீட்டுனதும், தண்ணி அருவியா கொட்டி என் மானத்த காப்பாத்துச்சு. சென்சார் வெச்சீங்க சரி அந்த சென்சார் எங்க இருக்குன்னு ஒரு குறியீடு போடலாம்லடா. குறியீடு போடத்தெரியாத பசங்களா இருக்காங்க. எங்க ஊருக்கு வாங்க எப்படி குறியீடு போடணும்ன்னு சொல்லித்தாரோம். ச்ச்சை…..

அப்புறம் இங்க டாய்லெட் போறதுக்குன்னு சில புரொசீஜர்(procedure) இருக்கு. சும்மா அப்படியே வந்தோமா, போனோமான்னு எல்லாம் போக முடியாது. மொதல்ல நமக்குன்னு ஒரு டாய்லெட் கிடைச்சதும், கதவ தொறந்து உள்ளபோய் நம்ம ஹேண்ட்பேக்கை அதுக்குன்னு இருக்குற இடத்துல மாட்டிட்டு, பக்கத்துல இருக்குற டிஷ்யூ ஹோல்டர்ல இருந்து அனுமார் வால் மாதிரி ஒரு அரை கிலோமீட்டருக்கு டிஷ்யூவ எடுத்துடணும். அப்புறம் அத சின்ன சின்னதா கிழிச்சு டாய்லெட் சீட் மேல போடணும். மெதுவா டிஷ்யூ நகர்ந்திடாம பதமா அது மேல உக்காரணும். அப்புறம் பொறுமையா எல்லாத்தையும் முடிச்சுட்டு மறுபடியும் பதமா எந்திரிக்கணும். டிஷ்யூ எல்லாம் வாரிச் சுருட்டி டஸ்ட்பின்னுக்குள்ள போட்டு, அப்புறமா ஃப்ளஷ் பட்டன் எங்க இருக்குன்னு கண்டு புடிக்கணும். கண்டுபுடிச்சு ஃப்ளஷ் பண்ணிட்டு, வெளிய வந்து சானிடைசர் போட்டு கை கழுவிட்டு ஹேண்ட் டிரையர்(hand dryer) வெச்சு கைய தொடச்சிட்டு வெளிய வந்தோம்ன்னா நாம டாய்லெட்டுக்குள்ள போகும்போது சினிமா பாக்க தியேட்டருக்குள்ள போனவங்க, இடைவேளைல வெளிய வந்து பாப்கார்ன் சாப்பிட்டு நின்னுட்டு இருப்பாங்க. அம்புட்டு நேரமா ஆச்சுன்னு நமக்கே கொஞ்சம் கடுப்பாகும்.

சரி இந்த மால்கள் எல்லாமே ஒரே மாதிரியா தான் இருக்கே, எப்படி கல்லா கட்டுறாங்கன்னு பாத்தா எல்லா மாலுமே ஒரே மாதிரி கிடையாது. குழந்தைகளுக்கு பிளே ஏரியா வெச்சது நிறைய இருக்கும், அப்புறம் ஆஃபர்ன்ற பேர்ல வருசத்துக்கு முக்காவாசி நாள் எதையாச்சும் வித்துகிட்டே இருப்பாங்க. ஒவ்வொரு தபா போறப்பவும், வேற வேற டிசைன் டிரஸ் வெச்சிருப்பாங்க. என்னதான் வின்டோ ஷாப்பிங்கா இருந்தாலும் நமக்கும் வெரைட்டி வேணுமுல்ல. அப்புறம் மால்கள் ஒவ்வொண்ணும் பாக்குறதுக்கே ஒவ்வொரு ஸ்டைல்ல கட்டியிருப்பாங்க. சிலது அரேபியன் ஸ்டைல், சிலது யுரோப்பியன் ஸ்டைல், சிலது எகிப்தியன் ஸ்டைல், சிலது மார்டன் ஸ்டல்ன்னு நமக்கு எப்பவுமே சுவாரஸ்யம் தான்.

ஆரம்பத்தில் மால்கள் மீது பெரிய ஈடுபாடே இருந்ததில்லை. ஆனா இங்க வந்து இந்த பெரிய பெரிய மால்களை பார்க்கும்போது எனக்கே தெரியாமல் அதன் மேல் கொஞ்சம் பற்று வந்திருச்சோன்னு தோணுது. இங்க உலக பிரசித்திபெற்ற இன்னோரு மால் இருக்கு. அதுக்கு பெரிய வரலாறு இருக்கு. அது தனி எபிசோட் தான். மால்கள்ல அடுக்கி வெச்சிருக்குற அழகு பொருள்களாகட்டும், விதவிதமான உடைகளாகட்டும், மணக்குற வாசனை பொருள்களாகட்டும் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் தொட்டுப்பார்க்க, அணிந்து பார்க்க அனுமதி இருக்குது. இந்த மாதிரி மால்கள் எல்லாம் பல நிறங்கள், பல உயரங்கள்,பல உடைகள், பல மொழிகள், பல அலங்காரங்கள், கொண்ட பலதரப்பட்ட மக்களை பார்த்தாலும், எல்லாருக்கும் பொதுவான ஒன்றை கொடுத்துக் கொண்டிருக்குதுன்னு தோணுதுல்ல. அடிமைகளின் தேசம்னே சொல்லி பழக்கப்பட்ட இந்த அரபு தேசத்தில் மால்கள் சமத்துவத்தை போதிக்கும் போதி மரங்களாவே எனக்குத் தெரிந்தது. ஆமா மால்னா தமிழ்ல என்ன? நான் போய் டிக்ஷ்னரிய பாக்குறேன். நீங்களும் போய் பாருங்க…

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.

Exit mobile version