எழுத்தாளரின் முதல் துபாய் பயண அனுபவத்தின் தொடர்ச்சியாக…
ஒவ்வொரு ஆளா லைன்ல போயிக்கிட்டே இருந்தாங்க. என் முறை வந்ததும் ஆபீசர், “ வாம்மா”ன்னு கூப்பிட்டார். என்ன இவரும் தமிழ்ல பேசுறாருன்னு யோசிச்சுட்டே அவர் பக்கத்துல போனேன். என் பாஸ்போர்ட், விசா எல்லாம் காட்டினேன். “ என்னம்மா ஊரு சுத்தி பாக்கவா போறே?” ன்னு கேட்டார். அய்யோ இந்த கேள்விக்கெல்லாம் நான் பிரிப்பேர் பண்ணலையேன்னு, “அதெல்லாம் இல்ல சார். என் ஹஸ்பெண்ட் கூட போறேன். அதோ அங்க நிக்குறாரு அவர்ட்ட கேளுங்க”ன்னு கைய காட்டி விட்டுட்டேன். அவரும் என் ஹஸ்பெண்ட கூப்பிட்டு, “ ரெண்டு பேருமா போறீங்க? நீங்க எங்க வேலை பாக்குறீங்க? எப்போ கல்யாணம் ஆச்சு, சர்டிபிகேட்ஸ் காட்டுங்க..”ன்னு எல்லாத்தையும் செக் பண்ணார்.
நானும் எங்கிட்ட இருந்த ஆதார் கார்டு, பேன் கார்டு ன்னு ஒண்ணு விடாம எல்லாத்தையும் காட்டினேன். அதெல்லாம் வேணாம்மான்னு என்ன பார்த்து பாவமா சிரிச்சார் அந்த ஆபீசர். ஆதார் கார்டுக்கு எங்கயுமே மரியாத இல்ல போல. அப்புறம் பார்மாலிட்டிக்கு என்னையும் ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு, இங்க் பேட்ல இருந்து ஸ்டாம்ப்ப எடுத்து அந்த வரலாற்று சிறப்பு மிக்க முத்திரைய என் பாஸ்போர்ட்டுல வெச்சார். என் பாஸ்போர்ட்டுலயும் துபாய் ஸ்டாம்பிங் பண்ணியாச்சு. ஆமா நான் துபாய்க்கு போறேன் துபாய்க்கு போறேன்.
சரியா சொல்லணும்ன்னா ஷார்ஜாக்கு போறேன். ஆனா என்ன பொருத்த வரைக்கும் கல்ப்(gulf) ன்னாலே துபாய் தான். இமிகிரேசன் முடிஞ்ச அஞ்சாவது நிமிசம் அங்க போட்டிருந்த சேர்ல போய் உக்காந்த நான் அசதில தூங்கிட்டேன். லேசா பிரியாணி வாசம் மூக்க தொளச்சப்ப தான் முழிப்பு வருது. டக்குன்னு கண்ண திறந்து பாத்தா நான் பிளைட்டுக்குள்ள உக்காந்துட்டு இருக்கேன். ‘என்னாச்சு. ஒரு வேளை தூங்கிட்டு இருக்கும்போதே தூக்கிட்டு வந்துட்டாங்களா?’ பிளேன் ஏறினது கூட தெரியாத அளவுக்கு தூங்கியிருக்கேன். நமக்கு நேரம் கெட்ட நேரத்துல தான் இந்த தூக்கம் வரும். நான் எப்படி இங்க வந்தேன்? அய்யோ முக்கியமான நேரத்துல இப்படியா தூங்குவேன்? நிஜமாவே இப்போ வரைக்கும் அப்போ என்ன நடந்ததுன்னு எனக்கு ஞாபகமே இல்ல. ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சது… அப்பவும் அந்த பிரியாணி வாசம் தான் என்னை எழுப்புச்சுன்னா பாத்துக்கோங்க. அதுவும் இல்லேன்னா ஷார்ஜா வர வரைக்கும் தூங்கிட்டே தான் இருந்திருப்பேன்.
சரி அதான் முழிச்சுட்டோம்ல, நல்லா கண்ண தொறந்து பார்ப்போம்ன்னு எல்லாரையும் ஒரு ரவுண்டு சுத்திப் பார்த்தேன். எல்லாரும் கொல பசியில இருப்பாங்க போல. சாப்பாட்ட வெளுத்து வாங்கிட்டு இருந்தாங்க. காலங்காத்தால உங்களுக்கெல்லாம் எப்படி தான் பசிக்குதோ தெரியல. சில பேர் டிக்கெட்டோட சேர்த்து சாப்பாடு ஆர்டர் பண்ணிப்பாங்க. இன்னும் சில பேர் அங்க வந்து ஏதாவது ஆர்டர் பண்ணுவாங்க. இன்னும் சில பேர் நம்ம பாரம்பரியத்த மறக்காம வீட்டுல இருந்தே சாப்பாடு கட்டி கொண்டாந்துருவாங்க. என்கிட்டயும் ஒரு சாண்ட்விச்சும் ஒரு தண்ணி பாட்டிலும் இருந்துச்சு.
நாமளும் கூட்டத்தோட ஐக்கியமாவோம்னு சண்ட்விட்ச எடுத்து வாயில வெச்சேன். பிளைட்ல கொடுக்குறதெல்லாம் சாப்பிட தனி ஒரு தைரியம் வேணும். உப்பு, காரம் எதுவும் இருக்காது. பணக்காரங்களுக்கு உப்பும் காரமும் தேவை இல்லயா என்ன? அப்போ அந்த பிரியாணி வாசம் செமயா இருந்துச்சே? அது கண்டிப்பா வீட்டுல இருந்து யாரோ கொண்டு வந்ததுதான். கவர பிரிச்சு மனோரமா ஆச்சி மாதிரி பிரியாணி வாசனைய புடிச்சுட்டே கொஞ்சம் சாண்ட்விச் சாப்பிட்டேன். ரெண்டு வாய்க்கு மேல அத சாப்பிட முடியல. அப்படியே அத ஓரமா வெச்சுட்டு என் கணவர்ட்ட, “இது இன்டர்னேஷனல் பிளைட் தான? சரக்கு எல்லாம் தர மாட்டாங்களா?”ன்னு மெதுவா கேட்டேன்.
அதெல்லாம் இந்த பிளைட்ல குடுக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டார். என்னது சரக்கு கிடையாதான்னு ஓக்கே ஓக்கே படத்துல வர்ற சந்தானம் மாதிரி பிரச்சனை பண்ணலாம்ன்னு பார்த்தேன். ஆனா ஷார்ஜா பிளைட்டுல அதெல்லாம் தடையாமா. அவங்க சவுதி சட்டங்கள பாலோ பண்றதால இந்த பிளைட்டுல நோ சரக்குன்னு சொல்லிட்டாரு. ரொம்ப பேசுனா குனிய வெச்சு கழுத்த வெட்டிருவாங்கன்னு நக்கலா வேற சொல்றாரு. முதல் தடவையா இருக்குறதால நம்மள எப்படி எல்லாம் பயமுறுத்துறாங்க. நானும், “அப்படியே கொடுத்தாலும் நான் என்ன குடிக்கவா போறேன்? நான் தான் ஒரு டீடோட்டலர் ஆச்சே. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்..”னு சொல்லிட்டு அந்த பேச்சுல இருந்து நழுவிட்டேன். நழுவித்தான ஆகணும்?
என்ன பண்றதுன்னு தெரியாம என் கேபினில் இருந்த சேப்ட்டி மேனுவல(safety manual) ஒரு நாலு தடவ பொரட்டி பாத்தேன். சேஃப்ட்டி இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லும்போது தான் நான் தூங்கிட்டேனே. அதுனால இத கொஞ்சம் சீரியசா படிக்கலாம்ன்னு முடிவு பண்ணேன். நாம கடலுக்கு மேல போறோமே நடுவுல ஏதாச்சும் ஏடாகூடமா ஆகிருச்சுன்னா என்ன பண்றது? ஏர் ஜாக்கெட் எங்க வெச்சிருக்காங்கன்னு படத்த பார்த்துட்டு என் சீட்டுக்கு அடியில கால விட்டு தேடிப்பார்த்தேன். கடைசி வரைக்கும் அது சிக்கல. ஒரு ஆத்தர அவசரத்துல எப்படி எடுக்குறதாம்? என்னங்கடா உங்க டெக்னாலஜின்னு கொஞ்சம் கடுப்பாகிருச்சு. சரி அத விடுவோம்ன்னு உள்ள இருந்த இன்னோரு புத்தகத்தை எடுத்து பொரட்டினேன். இத வாங்குங்க அத வாங்குங்கன்னு ஒரே அட்வெர்டைஸ்மென்ட். அதுக்கு மேல என்னால அந்த புத்தகத்தை படிக்க முடியல.
எல்லாரும் என்னதான் பண்றாங்கனு தலைய தூக்கி பார்த்தேன். கொஞ்சம் பேரு பாதி தூக்கத்துல இருந்தாங்க, குழந்தைங்க போன்ல கேம் விளையாடிட்டு இருந்தாங்க, பொம்பளைங்க சில பேர் மடியில புள்ளைங்கள வெச்சுட்டு அதுக எப்போ தூங்கும்ன்னு பாத்துட்டு இருந்தாங்க. இதென்ன பிளைட் ஜர்னி இவ்வளவு போர் அடிக்குதேன்னு யோசிச்சுட்டு என்னோட சீட்டுல தலைய சாய்ச்சேன். தலைக்கு மேல பாத்தா “சட்டை மேலே அவ்ளோ பட்டன்ஸ்”ங்கற மாதிரி அத்தனை பட்டன்ஸ். சிவப்பு வொயரா, இல்ல பச்சை வொயரா ன்னு தெரியாம எதாச்சும் ஒண்ண கட் பண்ற சினிமா ஹீரோ மாதிரி, ஏதோ ஒரு பட்டனை அமுக்கிட்டேன். “அய்யோ அத ஏன் அமுக்கின? அது cabin crew call button” ன்னு அவரு பதற, நான் பேந்தப் பேந்த முழிச்சேன். அதாவது நமக்கு ஏதாச்சும் வேணும்ன்னா அந்த பட்டனை அமுக்கினா ஏர் ஹோஸ்ட்டஸ் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. இப்போ இத undo பண்ண முடியாதான்னு யோசிச்சுட்டு இருக்கும் போது என்னை நோக்கி ஒரு உருவம் வர்றத பார்த்தேன்.
ஆகா இது என்ன இப்படி ஒரு காட்சி. இது என்ன கனவா? நான் தான் தூங்கி எழுந்துட்டேனே? நமக்கெல்லாம் ஏர்ஹோஸ்ட்டஸ்ன்னா சிவப்பா, அழகா சினேகாவும், ஹன்சிகாவும் தான ஞாபகம் வருவாங்க. அய்யோ… இங்க அப்படியே ஒரு ஆண் என்னை நோக்கி வர்றார். ஏர் ஹோஸ்ட்ன்னா என் மனசுல இவ்வளவு நாளா இருந்த பிம்பத்த எல்லாம் நட்ராஜ் எரேசர் போட்டு அழிக்க ஆரம்பிச்சுட்டேன். இனிமே ஏர் ஹோஸ்ட்ன்னா ஆர்யாவும், அஜீத்தும் தான். அந்த ஏர் ஹோஸ்ட்( air host) என் பக்கமா வந்து, “யெஸ் மேம்” ன்னு சொன்னார். பொண்ணுங்கன்னா தேவதைன்னு சொல்லிடலாம். இவங்கள என்னன்னு சொல்லுறது. அவசரத்துக்கு தமிழ்ல ஒரு நல்ல வார்த்தை கிடைக்குதா பாரு… “மேடம்” ன்னு மறுபடியும் அவர் என்ன கூப்பிட்டப்போ சுய நினைவு வந்து, “சாரி. I mistakenly pressed the button” ன்னு சொல்லி நல்லா வழிஞ்சேன். என்னைப் பாத்துட்டு ஒரு சின்ன ஸ்மைல் பண்ணார். இவங்க சிரிக்கும் போது இன்ச் டேப் வெச்சு அளந்து பாத்து தான் வேலைக்கு எடுப்பாங்க போல. நானும் பதிலுக்கு நல்லா பல்ல காட்டி சிரிச்சு வெச்சேன்.
அவரு என்னமோ எல்லாரையும் பாத்து அதே மாதிரி தான் சிரிக்குறாரு. எனக்கு தான் என்னமோ நம்மள மட்டுமே பாத்து சிரிக்குறது மாதிரி ஒரு பீலிங்கு. இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க வித்யாசாகர் சார்? ஸ்டார்ட் மியூசிக்… ‘சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சரவென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?’ மனசுக்குள்ளே பாடிட்டே லேசா கண்ண மூடினேன். அப்படியே கொஞ்ச நேரம் கனவுல இருந்த எனக்கு, என் பக்கத்துல ஏதோ ஒரு சத்தம் கேட்க, கண்ண முழிச்சு பார்த்தேன். ரெண்டு ஏர்ஹோஸ்டஸ் பொண்ணுங்க வந்து நாங்க சாப்பிட்ட பிளேட்ஸ், கப் எல்லாத்தையும் எடுத்துட்டு போக ஒரு கார்பேஜ் பையோட வந்தாங்க. அந்த நிமிசம் நம்ம ஊர்ல கல்யாண பந்தியில இலையெல்லாம் எடுக்க வர்ற அக்காங்க தான் ஞாபகம் வந்தாங்க. இது ரெண்டுமே ஒரே மாதிரி வேலைதானன்னு எனக்கு தோணிச்சு. எந்த வேலையும் கேவலம் இல்ல. சூழ்நிலையும் , பொருளாதாரமும் தான் எந்த ஒரு வேலையையும் ஏற்றத்தாழ்வு பாக்க வெக்குதுன்னு நான் நினைச்சேன்.
என்ன மதி கெட்ட மனசு இது. ஒரு ஐஞ்சு நிமிசம் முன்னாடி காலேஜ் பொண்ணு மாதிரி சைட் அடிச்சுட்டு அடுத்த நிமிசம் என்னமோ பெரியாரோட பேத்தி மாதிரி சமூக நீதியெல்லாம் பேசுதே. அடடே ஆச்சர்யக்குறி. ஆனா இந்த மனச மட்டும் நம்பவே கூடாது. அது ஏடாகூடமா கண்டதையும் நினைச்சு பிரச்சனைய இழுத்து விட்டுரும். கோவையைத் தாண்டி எங்கயும் போக மாட்டேன்னு இருந்தேன். இப்போ துபாய்ல என்ன ஷாப்பிங் பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன். மனசு பொல்லாதது. பொய் சொல்லாதது. இதுல விசித்திரம் ஏதும் இல்லயே. அது அப்படி இல்லாம இருந்தாதான் தப்பு. டாட். இனி எதும் யோசிக்கப்போறது இல்ல. இன்னும் ஏண்டா முழிச்சுட்டு இருக்க தூங்க்குடான்னு மனச சரி பண்ணேன். ஆனால் மனசு எதாவது யோசிக்காமல் இருக்குமா? அது பாட்டுக்கு எதிர்ல இருக்குற வளைகுடா வாழ்க்கையப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிருச்சு.
அப்புறம் ஒரு டிஸ்கிளைமர். இதுல காதல் கல்யாணம் பண்ணவங்க எல்லாம் விதிவிலக்கு. அவங்களுக்கு ஆப்சனே இல்ல. ஸோ அத நாம டச் பண்ண போறது இல்ல. பெத்தவங்க கல்ப்(gulf) நாடுகளை அதிகமா செலெக்ட் பண்ணாம போறதுக்கு முக்கியமான காரணம் இது ஒரு பாலைவனம்ன்னு தான? அந்த வெப்பத்துல போய் நான் என்ன பண்ணுவேன்னு தெரியலயே? அங்க இருக்குற என் பிரண்ட் ஒருத்திகிட்ட முன்னாடியே கிளைமேட் பத்தியெல்லாம் கொஞ்சம் கேட்டு வெச்சிருந்தேன். வீட்ட விட்டு வெளியவே போக முடியாது. பயங்கரமான வெய்யிலா இருக்கும்ன்னு சொல்லிருக்கா. சரி அப்படியே வெய்யிலா இருந்தா தான் என்ன. இப்போ கோவைல மட்டும் என்ன பாலாறும், தேனாறுமா ஓடுது? ரோடு போடுறோம்ன்னு மரத்த எல்லாம் வெட்டி கோவையவே கிட்டத்தட்ட வெப்ப பூமியாத்தான் மாத்தி வெச்சிருக்காங்க. அங்க போய் சமாளிப்போம்.
அதோட எனக்கு குளிர்தான் அதிகமா ஒத்துக்காது வெயில் நம்மள என்ன செஞ்சுட போகுதுன்னு ஏதேதோ நினைச்சுட்டே கண்ணயர்ந்துட்டேன். கோயம்புத்தூர் டூ ஷார்ஜா பயணத்த பாத்தீங்கன்னா அது கோயம்புத்தூர் டூ சேலம் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் மாதிரி தான். நாலு மணி நேரத்துல ஷார்ஜால இறக்கி விட்டுடுவாங்க. பிளைட் ஏறினதும் ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தோம்ன்னா பிளைட் லேண்ட் ஆகப் போகுது எல்லாரும் சீட் பெல்ட் போடுங்கன்னு அறிவிப்பு வந்திரும். நேர வித்தியாசமும் அதிகமா கிடையாது. ஒன்றரை மணி நேரம் இந்தியாவிலிருந்து பின்னோக்கி இருக்கோம்.
எங்க பிளைட் லேண்ட் ஆக ஆரம்பிச்சிருச்சு. கிழக்கு வெளுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏற்றி வீட்டிருந்த ஜன்னல் வழியா சூரிய வெளிச்சம் நல்லா உள்ளே வர ஆரம்பிச்சிருச்சு. எத்தனை முறை பறந்தாலும் சரி, விமானம் ஏறும் போதும், இறங்கும்போதும் நம்மை அறியாம ஒரு படபடப்பு வந்துடும். “அம்மா மேரி மாதா எப்படியாச்சும் நல்லபடியா இறக்கிவிட்டுடு. உனக்கு நாலு மெழுகுவர்த்தி ஏத்துறேன்”ன்னு நம்மள அறியாம மனசு படபடக்கும். கொஞ்சம் ஜன்னலுக்கு வெளியே பாக்கலாம்ன்னு எட்டி பாத்தேன். நான் இந்த ஓரமா இருந்ததால நல்லா தெரியல. குட்டி குட்டியா சீட்டு கட்டு மாதிரி கட்டிடங்கள். நடுநடுவே பரமபதத்துல இருக்குற பெரிய பாம்பு மாதிரி வளைஞ்சு வளைஞ்சு இருக்குற ரோடு. சின்ன புள்ளியா ரோட்டு மேல ஊர்ந்துட்டு போற கார்கள். அழகான காட்சி அது.
உயரம் குறைஞ்சுட்டே வந்த விமானம் ஒரு பெரிய சத்தத்தோட லேண்டிங் வீலை ஓப்பன் பண்ணுச்சு. உயரப் பறந்துட்டு இருக்குற கழுகு இரையை கண்டதும் தன் கால்களை பலப்படுத்துற மாதிரி எனக்கு தோணுச்சு. விமான சக்கரம் வேகமா தரைய உரசி கொஞ்சம் கொஞ்சமா வேகத்த குறைச்சு, வெண்ணைக்கட்டி மாதிரி வழுக்கிட்டே போய் ரன்வேயில நின்னுச்சு. எல்லாரும் சீட் பெல்ட்ட கழட்டுற சத்தம் கேட்டுச்சு. நான் இன்னும் கழட்டல. ஏன்னா அறிவிப்பு இன்னும் வரல. நான் ரூல்ஸ் எல்லாம் சரியா பாலோ பண்றவ தெரியுமா? வண்டி ஒரு டர்ன் அடிச்சு மெதுவா போய் அதோட இடத்துல நின்னுச்சு.
‘அல்லாகு அக்பர், அல்லாகு அக்பர். வெல்கம் டூ ஷார்ஜா இன்டெர்னேசனல் ஏர்போர்ட். அவுட்சைட் டெம்ப்ரேச்சர் 25 டிகிரி செல்சியஸ். ஹோப் யு ஆர் ஹேப்பி டு பிளை வித் ஏர் அரேபியா’ன்னு காக்பிட்டிலிருந்து ஆங்கிலத்திலும், அரபியிலும் மாறி மாறி அறிவிப்பு வந்தது. சீட் பெல்ட்டை கழட்டிட்டு என் ஹேண்ட்பேக்கை திறந்து பர்ஸிலிருந்த கண்ணாடியில என் முகத்தை பார்த்தேன். நீல கலர் காட்டன் சுடிதார், அதுக்கு மேட்ச்சாக போட்டிருந்த பெரிய கம்மல், நெற்றியில் இருந்த சிறிய பொட்டு, கலைஞ்சிருந்த கண்மை. “தமிழ்நாட்டு மகளான நீ இப்போ வளைகுடா மருமகளாக மாறிட்டே”ன்னு அந்த பொல்லாத மனசு சொல்லுச்சு.
இறங்கிப் போவோம்…
முந்தைய பகுதி
கட்டுரையாளர்
சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.