Site icon Her Stories

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் பூதத்தீவு

வரலாறும் புனைவும் சந்திக்கும் இலக்கியக் கடலான பொன்னியின் செல்வன், எத்தனை முறை வாசித்தாலும் திகட்டாத இலக்கியப் பொக்கிஷம். நாவலை எழுதுவதற்காக மூன்றுமுறை இலங்கைக்குச் சென்றுவந்த கல்கியின் இலங்கை குறித்த விவரணைகள்தாம், இன்றுவரை தமிழர்கள் விரும்பும் வெளிநாட்டுப் பயணப்பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். வரலாறைத்தாண்டிய கற்பனைக் கதாபாத்திரங்களாக நந்தினி, குடந்தை ஜோதிடர், மந்தாகினி, சேந்தன் அமுதன், வாணி, ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, முருகைய்யன், ராக்கம்மா, ஈசான சிவபட்டர், பாண்டிய வாரிசு சிறுவன், பினாகபாணி, கருத்திருமாறன் ஆகியோரைப் படைத்தாலும், மக்கள் அவர்களையும் வரலாற்றுப் பாத்திரங்களாகவே ஏற்றுக் கதையுடன் ஒன்றிப்போயினர்.

மூன்றரை ஆண்டுகாலம் தொடர்கதையாக வெளியான நாவல் எழுபதாண்டுகள் கழித்தும் தமிழர் வாழும் தேசமெங்கும் கொண்டாடப்படும் என்று கல்கியே எதிர்பார்த்திருக்க மாட்டார். வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப மீண்டும், மீண்டும் தொடராகவே வெளியாகியது. வெளியாகும் போதெல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றது. புதுப்புது வாசகர்கள் பெருகினர். வாசித்து மகிழ்ந்த ரசிகர்கள் நாவலின் கதாபாத்திரங்களோடு கற்பனையில் உலாவினார்கள். பெண்கள் வந்தியத் தேவனை எண்ணிப் பித்துப்பிடித்தார்கள்; அருள்மொழி வர்மனின் வீரத்தை எண்ணி வியந்தார்கள்; ஆதித்த கரிகாலனின் முடிவு கண்டு கவலை கொண்டார்கள்; நந்தினியைத் திட்டித் தீர்த்தார்கள். ஆண் பெண் பேதமின்றி பூங்குழலியை ரசித்தார்கள்; ஆழ்வார்க்கடியானை வெறுக்கவும் முடியாமல், விரும்பவும் முடியாமல் குழம்பினார்கள். தங்கள் வீட்டுப் பெண்கள் முகத்திலெல்லாம் குந்தவையைக் கண்டார்கள். சக வாசகர்களைச் சந்திக்கும்போதெல்லாம் ராஜராஜ சோழனின் பெருமை பேசினார்கள். தமிழ்த் திரையுலகமே அந்நூலைப் படமாக்கும் லட்சியம் கொண்டது. எம்ஜிஆரும் சிவாஜியும் கமலும் ரஜினியும் வந்தியத்தேவனாக வாழ்ந்து பார்க்க விரும்பினர். திரைத்துறையின் ஜாம்பவான்கள் எல்லாம் அந்த மந்திர எழுத்துகளை ஒலிஒளி ஓவியமாக்க முயற்சித்தனர். ஆனால், காலம் அவர்களை ஏமாற்றி மணிரத்தினத்தின் கையில் பொன்னியின் செல்வனைத் தூக்கிக் கொடுத்தது. அதன்பின் நடந்துகொண்டிருப்பது நாளைய வரலாறு. நூலுக்குச் சற்றும் குறையாமல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் திரைப்படத்தைக் காணச் சென்று ஒவ்வொரு காட்சிக்கும் ஆரவாரித்த மக்கள் வெள்ளத்தின் உணர்வுகளைக் கண்டு வியந்துகொண்டிருந்த போதுதான், இலங்கையில் வந்தியத்தேவன் பயணம் செய்த இடங்களின் வழித்தடம் பற்றும் ஆவல் தோன்றியது. நான் பார்த்த இடங்களுடன், பிறவற்றைக் கேட்டும், அறிந்தும், தேடத் தொடங்கினேன். அந்த வழித்தடத்தின் தொல்லியல் எச்சங்கள் இன்னும் ஆங்காங்கே மிச்சமிருக்கத்தான் செய்கின்றன.

பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் ‘சுழற்காற்று’ முழுக்க முழுக்க இலங்கையை மையமிட்டே இருக்கிறது. பழையாறையிலிருந்து இலங்கையை நோக்கிய வந்தியத்தேவனின் பயணம் கோடியக் கரையிலிருந்து துவங்குகிறது. தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அன்று கோடிக்கரை என்று அழைக்கப்பட்ட கோடியக்கரை. கோடிக்கரையிலிருந்து இலங்கை செல்ல வந்தியத்தேவனை அழைத்துச் செல்லும் பூங்குழலி முதலில் இறங்கும் இடமாகச் சொல்லப்படுகிறது பூதத்தீவு. இந்த இடத்தில்தான் வந்தியத்தேவனை கரையிலேயே நிறுத்திவிட்டு, பூங்குழலி மட்டும் பூதத்தீவிற்குள் சென்று ஊமை ராணியைச் சந்தித்து அருள்மொழிவர்மன் இருப்பிடம் கேட்டறிந்து, அதன்பிறகு வந்தியத்தேவனை நாகத்தீவில் இறக்கிவிடுகிறாள். பூதத்தீவு இலங்கையில் புத்தர் முதல் முதலாகக் கால்பதித்த இடமாக நம்பப்படுகிறது. இலங்கையில் மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்க்க வந்த புத்தர் இங்குள்ள அரச மரத்தடியில் போதனை செய்ததாகவும், அதனால் முதலில் போதர் தீவு என்று அழைக்கப்பட்டு பின்னர் பூதத்தீவாக மருவியிருக்கிறது என்கிறார்கள். ஆனால், இலங்கையைச் சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட தீவுகளில் பூதத்தீவு என்ற பெயரோடு தற்போது எந்தத் தீவும் அழைக்கப்படவில்லை என்றும் யாழ்ப்பாண தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள புளியந்தீவு பகுதிதான் முற்காலத்தில் பூதத்தீவு என அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் யூகத்தின் அடிப்படையில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

கதையின்படி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சுந்தரச் சோழர் ஒருமுறை இலங்கைக்குப் போகும்போது தனியாக ஒரு தீவில் ஒதுக்கப்பட்டார். அந்தத் தீவுதான் பூதத்தீவு. அங்கு அவர் ஓர் ஊமைப்பெண்ணைச் சந்திக்கிறார். அந்த ஊமை ராணி அவருக்கு அன்புகாட்டி பணிவிடை செய்கிறார். இறுதியில் சுந்தர சோழருக்கு ஆபத்து வரும்போது அவரைக் காத்து மடிகிறார். சோழ வம்சத்துக்கே குல தெய்வம் ஆகிறார்.

வட இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான ஆறு மைல் நீளமும் நாலு மைல் அகலமும் கொண்ட அழகிய தீவான புங்குடு தீவுதான் பூதத்தீவு என்கிறது மற்றொரு யூகக்கதை. வரலாற்றின்படி, புத்தபகவானின் உபதேசங்களைப் பயின்று கொண்டு தொள்ளாயிரம் புத்த குருமார் புங்குடு தீவில் வாழ்ந்தார்கள் என்று சிங்கள சரித்திரம் கூறுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் கண்டு, கப்பல் வாணிபம் செய்தவர்களாகவும், வைத்தியம், சோதிடம், சித்தாந்த தத்துவம் போன்றவற்றில் கை தேர்ந்தவர்களாகவும் இருந்தார்களாம். ஆனால், இவை எவையும் நிரூபிக்கப்படாமல் செவிவழிச் செய்திகளாகவே இருக்கின்றன.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.

Exit mobile version