Site icon Her Stories

தண்டனை

18 (இறுதி அத்தியாயம்)

ஈஸ்வரி பாலில் ரஸ்க்கை நன்றாக நனைத்து, கயல்விழிக்கு ஊட்டினாள். சின்னவளும் அவள் ஊட்ட ஊட்ட, அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

“ஈஸ்வரி, நாலு டீ” என்று ஒரு பெண்மணி சொம்பைக் கொண்டு வந்து வைக்க, “தோ வர்றேன் அத்த” என்றாள்.

“நீ ஊட்டிட்டு பொறுமையாதான் வந்து போட்டு கொடு” என்றவாறு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார். “காலையிலயே என்னா வெயில் காயுது” என்று முந்தானையால் விசிறிக்கொண்டார்.

ஈஸ்வரி கயலுக்கு ஊட்டி முடித்ததும், “சமத்து” என்று தண்ணீரில் வாயைத் துடைத்துவிட்டு கயலை இறக்கிவிட, அவள் கிடுகிடுவென்று நிகாவிடம் ஓடினாள்.

“நிகா, பார்த்துக்கோ” என்ற ஈஸ்வரி, டிகாஷனை எடுத்து ஊற்றிக் கொண்டே, “எத்தனை டீ அக்கா சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“நாலு.”

“தோ போட்டுடுறேன்.” அவள் சர்க்கரையை அளந்து போட, அந்தப் பெண்மணி, “உன்கிட்ட அந்த புள்ளைங்க நல்லா ஒட்டிக்குச்சு இல்ல” என்றாள்.

“முதல அழுதுட்டுதான் இருந்துச்சுங்க, இப்போ பரவாயில்ல.”

“பாவம், வயித்துல புள்ளையோட போய் சேர்ந்துடுச்சு” என்று அவர் சொன்னதுமே ஈஸ்வரியின் கைகள் நடுங்கின. பாத்திரத்தில் ஊற்றிய பால் மேடையில் சிதறியது.

“பார்த்து, பொறுமையா செய். கையில ஊத்திக்கப் போற.”

அவசரமாக அங்கிருந்த துணியை எடுத்து மேடையைத் துடைத்தாள். பின்னர் டிகாஷனையும் பாலையும் கலந்து ஆற்றி சொம்பில் ஊற்றிக் கொடுத்தாள்.

“இந்தா ஈஸ்வரி, காசு” என்று பணத்தை எடுத்து வைத்துவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.

ஈஸ்வரி அங்கிருந்த முக்காலியில் அப்படியே கால்களை மடித்து உட்கார்ந்து கொண்டாள்.

ரேகாவின் மரணம் நடந்து ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டது.

அவள் கையைப் பிடித்துக்கொண்டுதான் அந்தப் பெண் உயிரை விட்டாள். அவளுக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை. ஒட்டும் இல்லை. ஒரே ஒரு நாள் அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உதவிக்குச் சென்றாள்.

பாவம்! தனியாகப் படுத்திருந்தாள். உடனடியாகச் சுடு தண்ணீர் வைத்துக் குடிக்கக் கொடுத்தாள். குழந்தைக்கும் பாலைக் காய வைத்துத் தந்தாள்.

“நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க, உங்களுக்குதான் என்னையும் என் வூட்டுக்காரரையும் பிடிக்காது இல்ல” என்றதும் ஈஸ்வரி நிமிர்ந்து அவள் முகம் பார்த்தாள்.

“எல்லாம் எனக்குத் தெரியும் அக்கா, என் வூட்டுக்காரர் சொல்லிட்டாரு” என்றதும் ஈஸ்வரி உதட்டைச் சுழித்தாள்.

“அப்படி என்னத்த சொன்னாரு உன் வூட்டுக்காரரு?”

“உங்க பின்னாடி அவரு சுத்துனதாகவும், நீங்க அவரைத் திரும்பிக்கூட பார்த்தது இல்லைனும் சொன்னாரு.”

ஈஸ்வரி எதுவும் பேசவில்லை. கயலுக்கு அமைதியாகப் பாலை ஆறவைத்து புகட்டினாள்.

“மனசுக்குள்ள எந்தத் தப்பும் இல்லாமதான் நடந்துக்கிட்டாரு, அவரை மன்னிச்சுருங்க அக்கா” என்று ரேகா கெஞ்ச, ஈஸ்வரி கயலின் உதட்டைத் துடைத்துவிட்டு எழுந்து நின்றாள்.

“சரி, நான் கஞ்சி செஞ்சு என் பொண்ணுகிட்ட கொடுத்துவிடுறேன்.”

அந்தச் சமயம் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே வந்த யோகேஷ், ஈஸ்வரியைக் கண்டதும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

ஆனால் அவன் முகத்தைக்கூட அவள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. கடந்து சென்றுவிட்டாள். அதன் பிறகு ரேகா மயங்கிக் கிடந்த அன்றுதான் அவள் மீண்டும் அவர்கள் வீட்டிற்குச் சென்றது.

அந்த நாளை நினைக்கும்போதே நெஞ்சை அடைத்தது. அதுவும் அவள் இறக்கும் தருவாயில் இவள் கரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அப்படியே அவள் உயிரும் பிரிந்துவிட்டது.

‘ஏதாவது சொல்ல நினைத்திருப்பாளோ?’

ஒரு தாய் தன்னுடைய கடைசி நிமிடங்களில் என்ன நினைத்துக்கொண்டிருப்பாள் என்பதை அவளால் அறிந்துகொள்ள முடிந்தது. வேறு வேறு சூழ்நிலைகள், வேறு வேறு மாதிரியான வாழ்க்கைகளை வாழ்ந்தாலும் எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியில் இணையத்தான் செய்கிறோம்.

அவள் கைகள் இன்னும் அந்தப் பிடியின் சூட்டை உணர்கின்றன. கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.

அவள் கர்ப்பிணியாக இறந்தது ஊர் மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மொத்தக் கூட்டமும் அவள் இறுதி காரியத்திற்குத் திரண்டன.

யோகேஷ் நெஞ்சிலடித்துக்கொண்டு கதறிக் கதறி அழுதான்.

“இந்த முறை ஆம்பளப் புள்ள பொறக்கலன்னா நான் தூக்குல தொங்கிடுவேன்டி” என்பதுதான் கடைசியாக அவன் அவளிடம் பேசிய வார்த்தைகள். 

 அந்த வார்த்தைகள் அவளை எந்தளவுக்கு பாதித்திருக்கும். அவள் மனதை எப்படி எல்லாம் கூறு போட்டிருக்கும் என்பதை அவன் அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இனி உணர்ந்தும் பயனில்லை. அவள் போய்விட்டாள். வயிற்றிலிருந்து சிசுவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு…

மறுபுறம் ரேகாவின் அண்ணன், ‘எல்லாம் இவனாலதான், இவன்தான் என் தங்கச்சியைக் கொன்னுட்டான்’ என்று அப்போதும் யோகேஷின் மீதான வன்மத்தைதான் கொட்டிக் கொண்டிருந்தான்.

ஐஸ் பெட்டியின் முன் சொந்தக்காரப் பெண்கள் எல்லாம் குமுறி குமுறி அழுது ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்திற்குள் நுழைந்த ஈஸ்வரியின் கண்கள் தேடியது அந்த குழந்தைகளை மட்டும்தான்.

அவள் வீட்டிற்குள் சென்றாள்.

அங்கே மலர் ஓயாமல் அழுதுகொண்டிருந்த தங்கையிடம், “அழாத பாப்பா… அழாத… அம்மா வந்துருவாங்க” என்று சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

அத்தனை நேரம் நெஞ்சை அழுத்திப் பிழிந்துகொண்டிருந்த சோகமெல்லாம் ஈஸ்வரியின் கண்களில் கண்ணீராக வழிந்தூற்றியது.

கயலை ஓடிச் சென்று தூக்கிக்கொண்டவள், மலரை இன்னொரு கையால் அணைத்துப் பிடித்தாள். ஈமசடங்குகள் எல்லாம் முடிந்ததும், ‘பாவம் இந்த குழந்தைகள எல்லாம் யார் பார்த்துக்கப் போறா?’ என்று புலம்பிக்கொண்டே ஒவ்வொருவராகக் கிளம்பிவிட்டனர்.

ரேகாவின் அண்ணனும் அண்ணியும் குழந்தையின் பொறுப்பு தங்கள் தலையில் விழுந்துவிடப் போகிறது என்று ஆரம்பத்திலிருந்தே பெரிதாக முனைப்புக் காட்டவில்லை.

ரேகாவின் பெரியம்மா மட்டும் பத்து நாள் வரை உடனிருந்தார். அதன் பிறகு சின்னவளைச் சமாளிக்க முடியாமல் யோகேஷ் திணறினான்.

குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்டது. ஈஸ்வரியால் பொறுக்க முடியவில்லை.

அவன் வீட்டிற்குச் சென்றவள், “கொடுங்க இப்படி” என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள்.

அன்றிலிருந்து மலர், கயல் இருவரையும் பார்த்துக் கொள்வது ஈஸ்வரிதான். அவளிடம் வந்த பிறகு குழந்தைகளும் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தனர்.

சின்னவள் உறங்கியதும் யோகேஷ் வந்து தூக்கிக்கொண்டு சென்றான்.

ஒரு நாள், இரண்டு நாள், அதற்கு மேல் குணாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“அவன் பெத்த குழந்தையை அவனால பார்த்துக்க முடியாதாக்கும்? நீ என்னத்துக்கு பெத்த தாய் மாதிரி குளிப்பாட்டி சோறூட்டி விட்டுட்டு இருக்கவ?” என்று கேட்டு அவளை உக்கிரமாக முறைத்தான்.

“இந்த மொறப்பெல்லாம் வேற யார்கிட்டயாச்சும் வெச்சுக்கோ, என்கிட்ட வேணாம்.”

“ஈஸ்வரி!” என்று குரலை உயர்த்த, நிதானமாக அவனைப் பார்வையால் அளந்தவள், “சரி, நான் புள்ளையைப் பெத்துட்டு ஒருவேளை பிரசவத்தில போய் சேர்ந்திருந்தா நீ நிகாவை பார்த்துக்குட்டு இருந்திருப்பியா?” என்று கேட்டாள்.

“ஏன் என் பொண்ணை நான் பார்த்துக்குக்க மாட்டனா?”

அவன் சொன்ன பதிலில் அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

“கிழிப்ப, மூணாம் மாசமே வேறொருத்தியை கட்டிக்கிட்டு வந்திருப்ப” என, அவனுக்கு ஏறிவிட்டது.

“ஆமாண்டி, நான் ஆம்பளை. நான் எத்தனை கல்யாணம் வேணா பண்ணிக்குவேன்!”

“யாரு வேண்டானு சொன்னது? போய் பண்ணிக்க… போ, போ… போய் உங்க அம்மாவை நல்ல பொண்ணா பார்க்கச் சொல்லி பண்ணிக்க” என்று சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

குணாவால் தாங்க முடியவில்லை. கண்டமேனிக்குக் குடித்துவிட்டு வந்து சத்தமிட்டான். அவளைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முயல, இம்முறை ஊர்க்காரர்கள் ஈஸ்வரிக்கு ஆதரவாக வந்து நின்றனர்.

இதனால் கடந்த மூன்று நாள்களாக அவன் வீட்டுப் பக்கமே வருவதில்லை. அதெல்லாம் அவளை பாதிக்கவும் இல்லை.

நடந்ததை எல்லாம் யோசித்திருந்த ஈஸ்வரி கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது, “அம்மா அம்மா” என்று நிகா ஓடி வந்தாள்.

கூடவே மலரும் வந்து நின்றாள்.

“என்னாச்சு?”

“பாப்பா வாந்தி எடுத்துட்டா ம்மா” என்று சொல்ல, ஈஸ்வரி உடனடியாக வீட்டிற்கு ஓடினாள். கயல் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்திருந்தாள். உடம்பு வேறு அனலாகக் கொதித்தது.

உடனடியாகக் குழந்தையைச் சுத்தம் செய்து தூக்கிக்கொண்ட ஈஸ்வரி, மலரிடம், “உங்க அப்பா வீட்டுல இருக்காரா?” என்று கேட்டாள்.

அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

“உடம்பு இப்படி கொதிக்குதே, இப்போ என்ன பண்றது?” என்று பதறியவள், “சரி நான் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போறேன், நீயும் மலரும் வீட்டுல பத்திரமா இருங்க?” என்றாள்.

“சரிமா” என்று நிகா வேகமாகத் தலையசைக்க, மலரும் அதேபோல ஆட்டினாள்.

கடையை மூடியவள், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், “கயலுக்கு ஜூரம் அடிக்குது, நான் அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன். மலரும் நிகாவும் வீட்டுல தனியா இருக்காங்க, கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றாள்.

“ஆகட்டும் ஈஸ்வரி, போயிட்டு வா. நான் பார்த்துக்கிறேன்.”

உடனடியாக ஈஸ்வரி பேருந்தைப் பிடித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தாள். அங்கிருந்த தேவிகாவிடம் விவரத்தைக் கூறினாள்.

“அந்த ஆளுக்கு பெண்டாட்டிதான் பார்த்துக்கத் துப்பில்ல, பெத்த புள்ளைங்களையும் பார்த்துக்கக்கூட முடியலையாமா? இதுல ஆம்பளப் புள்ள வேணும்னு சொல்லி அந்தப் புள்ளையைச் சாவடிச்சுட்டான். பாவி! எல்லாம் அவனால வந்ததுதான். என்னத்த சொல்ல, கடைசியில பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கமாகிடுச்சு” என்று ஆதங்கப்பட,

“என்ன பழி? யாரு மேல?” என்று கேட்டாள் ஈஸ்வரி.

“வேற யாரு மேல, நம்ம அகல்யா மேடம் மேலதான் எல்லா பழியும் விழுந்திடுச்சு. ரேகா செத்ததுக்கு அவங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.”

“என்னக்கா சொல்றீங்க? இப்போ டாக்டரம்மா இங்க இல்லையா?”

“இல்லை” என்று வருத்தத்துடன் சொன்ன தேவிகா, “வேற ஆளு போட்டிருக்காங்க. சரி, குழந்தையை இப்படி கொடு, வெயிட் பார்க்கலாம்” என்று வாங்கிக்கொண்டாள்.

ஈஸ்வரியின் முகம் சுணங்கியது. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் மட்டும் இல்லை. அங்கே வந்த நோயாளிகள் எல்லாம் ‘அகல்யா டாக்டர் இல்லையா?’ என்றுதான் கேட்டனர். பெரும்பாலானோர் முகத்தில் அகல்யா இல்லை என்கிற ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அகல்யா தன் வீட்டு வாயிலில் காபியுடன் வந்து அமர்ந்தாள். இத்தனை நாளாக அவள் தனியாகத்தான் இருந்தாள். ஆனால் இன்றுதான் அந்தத் தனிமையை உணர்கிறாள்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக அவள் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறாள். அங்கு வரும் பெரும்பாலானோரின் உடல்நிலையைப் பற்றி மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.

அங்கு வரும் பலவிதமான பெண்களின் வலிகளையும் கேட்டுப் பழகியவளுக்கு, இன்றைய இந்த அமைதி சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அதேநேரம் இந்த தண்டனை கிடைக்காமல் போயிருந்தாலும் அவள் மனம் அமைதியடைந்திருக்காது.

ரேகாவின் மரணத்திற்கான காரணம் ‘Antepartum Hemorrhage’. ஒரு வேளை அவள் சுகாதார நிலையத்தில் இருந்திருந்தாலும் ரேகாவை அங்கே வைத்து சிகிச்சை கொடுத்திருக்க முடியாது. தேவிகா செய்ததைத்தான் அவளும் செய்திருப்பாள்.

அதேநேரம், இரவு மருத்துவர் வரும்வரை அவள் அங்கே இருந்திருக்க வேண்டும். என்ன தலை போகிற காரியமாக இருந்தாலும், அவள் சென்றிருக்கக் கூடாது. அது தப்புதான். 

ஆனால் சந்துரு அந்த காரணத்திற்காக மட்டுமா அவளை சஸ்பண்ட் செய்தான்?

‘கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம நடந்திட்டு இருக்கீங்க, எப்படி இவ்வளவு கேர்லெஸா உங்களால் இருக்க முடிஞ்சுது. இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல இதையா கத்துக்கிட்டீங்க?’ என்று எல்லோர் முன்பாகவும் வைத்து அவளைச் சரமாரியாக நிந்தித்தான். குற்றம் சாட்டினான்.

அவள் தன்னை காப்பாற்றிக்கொள்ளும்படியான எந்த எதிர்வாதமும் புரியவில்லை. தேவிகாவையும் அவளுக்காகப் பேச வேண்டாமென்று சொல்லிவிட்டாள்.

ஏனெனில் என்ன பேசினாலும் சந்துருவின் முடிவு மாறப் போவதில்லை. 

‘ஆயுள் தண்டனைக்கு இந்த இடைக்கால வேலை நீக்கம் எவ்வளவோ பரவாயில்லை’ என்று மனதிற்குள் சத்தமில்லாமல் நகைத்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

முற்றும்.

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Exit mobile version