எங்கள் விருப்பத்திற்கு எதிராக – 3
பர்மா, மாலி, மியன்மார், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாலஸ்தீன், ருவாண்டா, தென் சூடான், சூடான், பொஸ்னியா, சியரிலியோன், கெயிட்டிலும், கிழக்குத் திமோரிலும் இன்னும் பல நாடுகளிலும் பாலியல் வல்லுறவு என்கின்ற கறைபிடித்த வரலாறு தொடர்கின்றது. 1990 இல் குவைத் பெண்கள் ஈராக்கியத் துருப்புகளால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ஈராக்கை அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்தபோது ஈராக் பெண்கள் அதே நிலைக்கு அகப்பட்டார்கள். பொஸ்னியப் பெண்களை சிறைப்பிடித்து அடைத்து வைத்திருந்து கருவுறச் செய்தபிறகு, ”இனக்கலப்பு முடிந்துவிட்டது. பொஸ்னியர்களின் தூய்மையைக் கெடுத்துவிட்டோம்” என்று சேர்பிய இராணுவம் சொன்ன கூற்று மோதலில் பாலியல் வன்முறையின் ஓட்டுனர்களைப் புரிந்துகொள்ளவும் பாலின இயக்கவியலைப் புரிந்துகொள்ளவும் இடமளிக்கிறது.
எந்தவொரு குழுவினருக்கும் எதிராக சமன் செய்யக்கூடிய மோசமான ஒன்றாகப் பாலியல் வன்புணர்வு ஆயுதம் கையிலெடுக்கப்படுகின்றது. இனரீதியாகவும், மத ரீதியாகவும் சமூகத்தை அவதூறு செய்வதற்கான நியாயமான ஆயுதமாகப் பெண் உடல்களைக் கையாளும் முதலாளித்துவ அதிகாரவர்க்கத்தின் மிருகத்தனமான ஒழுங்கமைப்பு ஒரு நிலையான தன்மையுடன் உலகெங்கும் பரவியிருக்கிறது.
பாலுறவு, பாலியல் அடையாளம் பற்றிய மெதுவான ஆரம்பங்களும் தத்துவார்த்த வறட்சிகளும் பெண்கள் இயக்கத்திற்குள் உள்ள பலவீனங்கள், விவாதங்கள் நமது பாலியல் கலாச்சாரத்தின் விளைவாக பெண்களை ஆண் பாலியல் பலாத்காரம் செய்வதற்கான பார்வையையே இன்றளவும் நிறுவுவனவாக உள்ளன. பாலியல் வன்புணர்வு, துஷ்பிரயோகம் போன்ற பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளையும் முதலாளித்துவம், அந்நியப்படுத்தலின் கட்டமைப்புகளின் விளைவு என்றே பார்க்க வேண்டியுள்ளது.
பெண்களின் விடுதலைக்காக போராடும் அனைவருக்கும் தெரியும், பாலியல் வன்கொடுமைகள், வீட்டு வன்முறைகள் ஆகியவை பெண் அடக்குமுறையின் மிக மோசமான வெளிப்பாடு. உலகெங்கிலும் – அவை பெண்களின் குறைந்த சமூக அந்தஸ்து, பெண்களின் உடல்களின் பாலியல் புறநிலைப்படுத்தல், மனிதநேயமயமாக்கல் ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆயினும்கூட, சட்ட, சட்ட அமலாக்க அமைப்புகள், பல்கலைக்கழக நிர்வாகிகள், முதலாளித்துவ சமுதாயத்தில் “வழக்கமான ஞானம்” என்று அழைக்கப்படுபவை அனைத்தும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறும்போது நம்ப மறுப்பதற்கு முன்கூட்டியே தயாராக உள்ளன. இதனை மீ டூ இயக்கம் மிக அழகாக வெளிச்சம்போட்டுக் காட்டியது.
ஏகாதிபத்தியத்தியத்தையும் போரையும் போலவே, ஒடுக்குமுறையும் மூலதன ஆட்சியின் அவசியமான ஒரு தயாரிப்பாகும். சுரண்டல் என்பது ஆளும் வர்க்கம் உபரி மதிப்புள்ள தொழிலாளர்களைக் கொள்ளையடிக்கும் முறை. பல்வேறு வகையான அடக்குமுறைகள் (பாலியல், இனவாதம், எல்ஜிபிடி போன்றவை) சிறுபான்மையினரின் மேல் பெரும்பான்மை ஆட்சியை உலகளாவிய அளவில் பராமரிப்பதில் முதன்மை பங்கு வகிக்கின்றன.
நிச்சயமாக, பாலியல் வன்கொடுமைகள் ஒட்டுமொத்தமாக “அமைப்பால்” ஏற்படுத்தப்படுவதில்லை, மாறாக தனிப்பட்ட நபர்களாலே ஏற்படுத்தப்படுகின்றது. ஆயினும்கூட, பெண் அடக்குமுறை தனிப்பட்ட நபர்களிடமிருந்து தோன்றவில்லை. இது பாரம்பரிய குடும்ப அமைப்பு, சட்ட அமைப்பு, பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக வரையறுக்கும் பிற சமூக கட்டமைப்புகளின் மேலே இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன ஏற்றத்தாழ்வுகளிலிருந்து உருவாகிறது. முதலாளித்துவ அமைப்பை விலக்கினால் மட்டுமே அது தனிப்பட்ட மட்டத்தில் முடிவுக்கு வர முடியும்.
பொலிஸ் உட்பட்ட பிற சட்ட அமலாக்க பிரிவுகள் அனைத்தும் முதலாளித்துவ அரசின் ஆயுதப் பிரிவாகவும் முகவர்களாகவும் செயல்படுகின்றன, வர்க்க வேறுபாடு, சமூக சமத்துவமின்மையை பராமரிக்கும் சட்டங்களை அமல்படுத்துகின்றன.
1960 களின் பிற்பகுதியிலும் 1970 களிலும் பெண் விடுதலை இயக்கம் இந்த அனுமானங்களுக்கு சவால் விடுத்தது. ஆயினும் சட்டங்களும் சட்ட அமலாக்கக் கருத்துக்களும் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அதே கட்டுக்கதைகளைத் தழுவிக்கொண்டே இருக்கின்றன. “உண்மையான” பலாத்காரம் ஒரு அந்நியன் புதரிலிருந்து வெளியேறும்போது அன்றி தெரிந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடையே பெண்களின் பாலியல் வன்கொடுமை கூற்றுக்கள் அவநம்பிக்கையானவையாகவே கருதப்படுகின்றன.
ஏனென்றால் பெண்கள் பெரும்பாலும் சில வழிகளில் ஆடை அணிவதன் மூலமோ, ஊர்சுற்றுவதாலோ, சொற்களற்ற சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலமோ “இல்லை” என்று சொன்னாலும் “ஆம்” என்று அர்த்தம் கற்பிக்கப்பட்டோ பாலியல் வன்புணர்வு அல்லது துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பாளிகளாக்கப்படுகின்றனர். உடல் ரீதியாக “எதிர்த்தனர்” என்பதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்க முடியாவிட்டால் பெண்களைச் சமூகம் நம்புவதற்கில்லை, முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாக பாலியல் வரலாறுகள் காட்டினால் அவர்கள் நம்பத்தகாதவர்கள், ஒழுக்கமற்ற பெண்கள் போன்ற குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இந்த அணுகுமுறைகள், மேலே விவரிக்கப்பட்டதைப் போலவே, பாலியல் வன்கொடுமையில் நைந்துபோன சட்டரீதியானதும் சட்ட அமலாக்கக் கருத்துக்களினதும் கணிசமான ஒரு பகுதியைக் குறிக்கிறது. பாலியல் வன்கொடுமை குறித்த பெண்களின் கூற்றுக்களை கேலி செய்து அவமதிப்புடன் நிராகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளைப் பெரும்பான்மையான பாலியல் வன்புணர்வு வழக்குகள் கொண்டுள்ளன.
பாலியல் பலாத்காரம், வன்கொடுமை தொடர்பான பெண்களின் குற்றச்சாட்டுகளுக்கு மிகப் பொதுவான எதிர்வினைகள் என்ன என்பதை நாம் அறிவோம். பிற்போக்குத்தனமான சட்டக் குறியீடுகளும் நடைமுறைகளும் பிரபலமான கலாச்சாரத்தில் ஒரு பரந்த அடிப்படையிலான எதிர்ப்பு இல்லாத நிலையில், “வழக்கமான ஞானம்” என்று அழைக்கப்படுவது சட்ட மற்றும் பிற சமூக “வல்லுநர்களால் வெளிப்படுத்தப்பட்ட தப்பெண்ணங்களை பிரதிபலிக்கிறது” என்று வரலாறு காட்டுகிறது. உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும், பணியிடங்களிலும் இது நிச்சயமாகவே நிகழ்கிறது.
கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்புணர்வு குற்றச்சாட்டுகளை திறமையாக மூடிமறைக்கின்றன. அதே நேரத்தில் தைரியமாக எதிர்த்துச் செயற்படும் இளம் பெண்களை கொடூரமாகத் தவறாக நடத்துகின்றன. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர், இதே பெண்கள் தங்கள் சகாக்களால் வெட்கப்படச் செய்யப்படுகின்றனர். ஒழுக்கமற்றவள் என்று அழைக்கப்படும் அவமானத்தை அனுபவிக்கின்றனர்.
1980 களில், தாராளவாத பெண்ணியவாதிகள் “உண்மையான பாலியல் பலாத்காரம்” என்பது இரண்டு அந்நியர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்ற கட்டுக்கதையை சவால் செய்வதில் வெற்றிபெறத் தொடங்கினர். ஆனால் பாலியல் தாக்குதல் நிகழ்வு பற்றிய புரிதல் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து உருவாகி வருகிறது. முந்தைய ஆய்வுகள் முந்தைய புள்ளிவிவர பகுப்பாய்வுகள் ஏராளமான சிக்கல்களை வெளியிட்டுள்ளன. முன்னர் ஒப்புக்கொண்டதை விட பாலியல் வன்கொடுமை மிகவும் பரவலாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான முந்தைய ஆய்வுகள் நம்பமுடியாத தரவு அல்லது காலாவதியான அனுமானங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தன. மேலும், பாலியல் தொடர்பான முந்தைய ஆராய்ச்சிகள் திருநங்கைகளை உள்ளடக்கியிருக்கவில்லை. சமத்துவமான இணைவையும் குறுக்குவெட்டு அணுகுமுறைகளையும் வலியுறுத்தும் பெண்ணியக் கொள்கைகள், அதிகார உறவுகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும், பாலின அனுமானங்களையும் கேள்விக்குட்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்களின் பாலியல் வன்கொடுமை பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது உலகின் பல நிலைகளில் சகித்துக்கொள்ளப்பட்டிருந்தாலும், பெண்ணிய பகுப்பாய்வு பெண்களின் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த சிந்தனையை புரட்சிகரமாக்குவதற்கு நீண்ட தூரம் சென்றுள்ளது. பாலியல் வன்கொடுமை பாலின விதிமுறைகளில் வேரூன்றியுள்ளது என்பதையும் சமூக, சட்ட மற்றும் பொது சுகாதாரத்திற்கு தகுதியானது என்பதையும் நிரூபிக்கிறது.
கவனிக்கப்படாத ஒரு பகுதியாக இருக்கும் ஆண் பாலியல் வன்கொடுமை பற்றியும் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த முக்கியமான மரபுகளை உருவாக்க முடியும். ஆண் பாலியல் வன்கொடுமை தொடர்பான பல சமீபத்திய கண்டுபிடிப்புகளை நாம் புதிதாக எதிர்நோக்குகிறோம். அதைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான தவறான புரிதல்களுக்கான விளக்கங்களை ஆராய்கிறோம்.
முதலாளித்துவத்தால் திணிக்கப்பட்ட “ஆதிக்கம் செலுத்தும் ஆண்”, “அடிபணியும் பெண்” ஆகிய கடுமையான மோசமான பாலின இலட்சியமானது ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யவோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தவோ முடியாது என்ற பொதுவான அனுமானத்திற்கு வழிவகுத்தது. ஆண்கள் பெண்களை விட குறைவாக அதிர்ச்சிக்குள்ளாகின்றவர்கள் ஏனென்றால் அவர்கள் எளிதில் “உணர்ச்சிவசப்படாதவர்கள்” ஆகிய தவறான சித்திரங்கள் வலிமையான விம்பங்களால் ஆண்களை அலங்கரித்தன.
பாலினம், பாலியல் பற்றிய சமூக அணுகுமுறைகள் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக மாறத் தொடங்கியுள்ளன. இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தாலும், எல்ஜிபிடி (LGBT) உரிமைகளுக்கான போராட்டம் பாலின நிலைப்பாடுகளை உடைக்கத் தொடங்கியுள்ளது, குறிப்பாக இளைஞர்களிடையே.
அதிகாரக் கட்டமைப்புகளை தகர்த்துக் கொண்டு பீறிட்டு எழும் பெண்ணிய எழுத்துக்களும் இயக்கங்களும் பெண் உடல் மீதான அத்துமீறல்களைக் காலத்துக்குக் காலம் சவால் செய்து எதிர்ப்பு வடிவங்களை வலுப்படுத்தியிருக்கின்றன. பெண்ணுரிமைகளுக்கான போராட்டங்கள் நீண்ட வரலாறுகளைக் கொண்டவை. கண்டங்களுக்குக் கண்டம், தேசத்திற்குத் தேசம் இந்த வரலாற்று இயல்புத்தன்மைகளும் பண்புகளும் மாறி வந்திருக்கின்றன. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு வடிவம் பெண் உடலைக் கௌரப்படுத்தும் ஒரு நிலையை இன்னமும் எட்டவில்லை.
இந்த நாடுகளில் ”எங்கள் விருப்பத்திற்கு எதிராக” என்று பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தக்க பெண் அடக்குமுறைக்கு எதிரான போராட்ட வடிவங்கள் இல்லை. சாதி, வர்க்க, மத, ஆதிக்கங்கள், முதலாளித்துவ அதிகார அடக்குமுறைக்கு எதிரான போராட்ட அல்லது எதிர்ப்பு வடிவங்களைத் தீர்மானிக்கும் இடத்தைப் பெறுகின்ற பெண்ணின் உடலே அத்துமீறலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அல்லது நானும் பாதிக்கப்பட்டேன் (மீ டூ) என்று உரத்துச் சொல்லும்.
கட்டுரையின் முந்தைய பகுதிகள்:
கட்டுரையாளர்:
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.