Site icon Her Stories

நேசமணி பாட்டியும் சிறு வியாபாரிகளும்

இது எங்கள் பகுதியில் சிறு வணிகம் செய்த பெண்களைக் குறித்தப் பதிவு என்றாலும் அவர்களுள் எனக்கு நன்கு தெரிந்தவர்; எதிர்வீட்டு நேசமணி பாட்டி என்பதால் அவர்கள் பெயரைத் தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இவர் எங்கள் தெருவின் அடையாளங்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர். இளம் வயதில் நல்ல வசதியாக இருந்து இருக்க வேண்டும் என்பதை அவரது வீட்டின் அமைப்பு சொல்லும். 

மிகவும் வயதானபிறகு அவர்களது 40+ வயதில்தான் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. என்னைவிட மூன்று வயது பெரியவர். கொஞ்சம் குறைபாடு இருந்தது. அதனால் படிப்பு சரியாக வராமல், ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு ஆண்டுகள் என இருந்து என்னுடனும் படித்தார். ஆறு ஏழு படித்தபின் படிப்பை நிறுத்திவிட்டார். ஆனாலும் எழுதுவார்; வாசிப்பார். வானொலி நாடகங்கள் கேட்பதில் மிகவும் விருப்பம். நன்றாகச் சமைப்பார். வீட்டு வேலைகளைப் பொறுப்பாகச் செய்வார். அம்மாவிற்கு மீன்கடைக்குப் பொருட்கள் தூக்கிக் கொண்டு சென்று வைத்து வருவார். அப்பாவிற்குச் சரியாக உணவு கொண்டு கொடுப்பார்.

நேசமணி பாட்டியோ வயதில் முதிர்ந்தவர். மகளோ சிறுமி. அதனால் இந்த இரு தலைமுறைக்கும் இடையில் அவர்கள் பயணப்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கிறிஸ்மஸ்ஸுக்கு கும்மி அடிக்க முளை வைப்பதனால் அவர்கள் வீட்டில்தான் வைப்பார்கள். அதற்கான அலேசியார் கும்மியும் பாட்டிதான் நன்றாகக் பாடுவார்கள். அதற்குப் பின் எங்கள் தெருவில் அந்த வழக்கம் அடியோடு நின்றுபோய்விட்டது. எங்களுடன் இணைந்து வானொலி நாடகம் கேட்பார்கள்; எங்களுக்குக் கதை சொல்லுவார்கள்.

பாட்டி எனக்குத் தெரிய பெரிய வசதியாகவும் இல்லை, ஏழையாகவும் இல்லை. தாத்தா பேருந்து நிலையம் அருகில் வெற்றிலை பாக்கு கடை வைத்து இருந்தார். அவர் வீட்டிற்கு எந்தவிதத்திலும் பொருளாதாரப் பங்களிக்கவில்லை. அதற்காகத் தாத்தாவைக் குறை சொல்வதற்கில்லை. எனது இளம் வயதில் பாட்டிக்கு 50+ வயது இருக்கும் தாத்தாவிற்கு 60+ வயது இருக்கும். பேருந்து நிலையம் அருகில் என்னும்போது வாடகை கூடுதலாகவே இருந்து இருக்கும். அவர் சம்பாதிப்பது அதற்கே சரியாகப் போயிருக்க வேண்டும். எந்த தீய வழக்கங்களும் தாத்தாவிற்குக் கிடையாது.

பாட்டி, ‘தாத்தா பணம் எதுவும் தருவதில்லை’ என குறை எதுவும் சொன்னதே இல்லை. காலையும் மாலையும் வீட்டில் சரியாக தாத்தாவிற்குச் சாப்பாடு இருக்கும். நண்பகல் சாப்பாட்டை யார் மூலமாவது தாத்தாவிற்கு போகுமாறு பாட்டி ஏற்பாடு செய்து விடுவார்கள். பிற்காலத்தில் மகள் சமைத்துக் கொண்டு போய் கொடுப்பார். இந்த வயதில் தொந்தரவு செய்யாமல் இருப்பதே சிறப்புதான் என பாட்டி நினைத்தார் என எடுத்துக் கொள்ளலாம். 

சரி. பாட்டி வீட்டை எப்படி நிர்வகித்தார் எனக் கேட்கலாம். பாட்டி சிறு சிறு பொருள்கள் விற்பார். அவர் மட்டுமல்ல ஒரு பெண்கள் குழுவே அந்த வேலை செய்தது. வெள்ளிக்கிழமை வள்ளியூரில் சந்தை நடக்கும். அந்தப் பெண்கள் அனைவரும் வணிகம் செய்யப் போவார்கள். வியாழக்கிழமை தோட்டங்களுக்குச் சென்று விற்க வேண்டிய பொருள்களைச் சேகரிப்பார்கள். வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி பேருந்தைப் பிடித்துப் போவார்கள். எந்தப் பொருளும் இல்லை என்றால், அங்கு சென்று யாரிடமாவது பொருள்களை மொத்தமாக வாங்கி சில்லறை விலைக்கு விற்பார்கள். அங்கு ஏதாவது விலை குறைவாகக் கிடைத்தால், அதை வாங்கி வந்து மறுநாள் ஊரில் விற்பார்கள். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த வருமானத்தை வைத்துத்தான் வாழ்ந்தார்கள். சிலருக்கு, மகன்கள் பணம் கொடுத்தார்கள். ‘வேலை செய்யாதே; ஊர் எங்களை ஏளனம் செய்யும்’ எனச் சொன்ன மகன்களும் உண்டு. ஆனாலும், இளம் வயதில் பிள்ளைகளுக்காக எனத் தொடங்கிய தொழிலைத் தங்களால் இயன்றவரை இறுதிவரைப்  பலரும் செய்து கொண்டுதான் இருந்தார்கள். 

இவ்வாறாக சந்தைக்குப் போகும் அந்தக் குழு, சனிக்கிழமைகள்  காலை பெரும்பாலும் நேசமணி பாட்டி வீட்டில் கூடும். ஏனென்றால் இவர்கள் வீட்டின் வெளிப்புறம் மிக நீளமான இரண்டு திண்ணைகள் உண்டு. வீட்டிற்குள் என்றாலும் திண்ணைகள் சூழ்ந்த கூடம் கொண்ட வீடு. அனைவரும் அவரவருக்கு என்ன வருமானம் கிடைத்தது எனப் பேசிக்கொள்வார்கள்.

எங்கள் தெருவில் எல்லோர் வீடுகளிலும் திண்ணை உண்டு. எந்தத் திண்ணையில் வெய்யில் வராமல் இருக்கிறதோ, அதில் உட்கார்ந்து கொள்வதுதான் தெருவின் வழக்கம். யார் வாசல், திண்ணை என நாங்கள் சிந்தித்ததே இல்லை. அதனால் சில நாட்கள் எங்கள் திண்ணையிலும் கூடுவார்கள். மொத்தத்தில் எங்கள் தெருவில்தான் கூட்டம் நடக்கும். ஒருவருக்கொருவர் “ஆத்தா, போன வாரமாவது இவ்வளவு கிடைத்தது; நேற்று ஒன்றும் கிடைக்கவில்லை”, என்பார்கள். நாங்கள் “நேத்து என்ன கிடைத்தது என அடுத்தவாரம் சொல்லாமலா போவீர்கள்?” என்போம். வாங்கிக் கட்டிக் கொள்வோம். செல்லமான திட்டாகத்தான் இருக்கும். 

மற்ற நாள்களில் இவர்கள் மீன்கடையில் போய் வணிகம் செய்வார்கள். இந்தப் பொருள்தான் என கிடையாது. என்ன கிடைத்தாலும் சிறு லாபம் வைத்து விற்பார்கள். மாம்பழம் போன்ற பொருள்கள் என்றால் நானே அவர்கள் வீட்டிற்குள் போய் எனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, இத்தனை எடுத்தேன் என்பேன். “எல்லோருக்கும் பத்து ரூபாய் என்றால் உனக்கு பதினோரு ரூபாய். நீ இருப்பதிலேயே உருப்படியானதை எடுப்பாய்” என்பார்கள். விலையில் கறாராக இருந்தாலும் ,வீடு என்னவோ திறந்துதான் கிடைக்கும். அப்படி ஒன்றும் திருட்டு போனதாக நினைவில்லை. 

இந்தப் பெண்களின் பிரதான விற்பனைப் பொருளாக வாழைப்பழம் இருந்தது. எங்கள் அப்பம்மா கொஞ்ச நாள் வணிகம் செய்தார்கள். பிற்காலத்தில் உடல்வலு இல்லை. ஆனால் அவர்கள் வணிகம் செய்த காலத்தில் ஊத்தக்குழி வைத்து இருந்தார்கள். அது மட்டும் அவர்களின் இறுதிக்காலம் வரை இருந்தது. 

ஊத்தக்குழி என்றால் என்ன? வாழையைக் காயாகத்தான் குலை குலையாக வெட்டி வருவார்கள். ஒரு குலையின் பழங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் பழுக்கவைக்க செய்யும் செயல்தான் ஊத்தம் போடுதல். எங்கள் அப்பம்மா அதற்கென ஒரு அறை கட்டி வைத்து இருந்தார்கள். காற்றுப் புகாத அந்த அறைக்குள் ஆங்காங்கே வாழைக்குலையைச் சுற்றிப் பொதிந்து இருக்கும் காய்ந்த வாழை இலையின் கீழ்ப்பகுதியை (சருகு) வைப்பார்கள்; பின் குலைகளை அடுக்குவார்கள். பின் அதே மாதிரி காய்ந்த இலையின் கீழ்ப்பகுதியை ஒரு சட்டியில் வைத்து சில தீக்கங்குகளை வைப்பார்கள். பின் கதவை இறுக்கமாக மூடிவிடுவார்கள். சிறிது இடைவெளி இருந்தாலும் புகை உள்ளே இருந்து வெளியில் வரும். பழம் சீராகப் பழுக்காது. புகை கூடுதலாகி விட்டால் புகை வாடை அடிக்கிறது என சண்டை வேறு நடக்கும். பார்க்கும் நமக்கு சுவையாகத்தான் இருக்கும்.

அப்பம்மா சரியாகக் கண் தெரியாத காலத்தில் எங்களைக் கூப்பிட்டு, ‘புகை வருகிறதாளா’ எனக் கேட்பார்கள். தூக்கி வைக்க இயலாத காலகட்டத்தில், குலையைக் கொண்டு வருபவர்களே உள்ளே வைத்து விடுவார்கள். அதனால் இறுதி வரைகூட அப்பம்மா இதைச் செய்தார்கள். பணம் கிடைக்கிறது என்பதைவிட, நாலுபேர் நம்மைத் தேடி வருகிறார்கள் என அவர்கள் நினைத்தார்கள். பல நாள்கள் அங்கு அரசியல் மாநாடே நடக்கும்.

வணிகர்கள் எல்லோரும் அவரவருக்கென சில வாடிக்கையாளர்களை  வைத்து இருப்பார்கள். அவர்கள் மீன்கடைக்கு வரவில்லை என்றால் மீன்கடை முடிந்து, அந்த வாடிக்கையாளர்களைத் தேடி இவர்கள் போவார்கள். அவர்கள் வீடுகளில் இருந்து செய்தித்தாள் போன்றவை எடுத்து வருவார்கள். பலர் நன்றாக வாசிப்பார்கள் என்றாலும், எங்களைப் போல் யாரவது சிக்கினால், வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள். அனைவரும் இந்திராகாந்தியின் தொண்டர்கள். பின் ராஜீவ் காந்தி மேல் அது அன்பாகத் தொடர்ந்தது. காங்கிரஸ் என்றால் அவ்வளவு விருப்பம். நன்றாகவே அரசியல் பேசுவார்கள். அப்போது வாழப்பாடி ராமமூர்த்தி / மூப்பனார், ரமணி நல்லதம்பி என பலரின் பெயர் அடிபடும். 

‘என் வாடிக்கையாளர் வீட்டுக்கு அவள் போய்விட்டாள்; நான் வாங்க வேண்டும் என நினைத்த தோட்டத்தைக்கு அவள் போய் வாங்கிவிட்டாள்’ எனச் சண்டைகள் எல்லாம் வந்தாலும், ஒருவர் குடும்ப நலனில் அடுத்தவர் அவ்வளவு அக்கறையாக இருப்பார்கள். மாப்பிள்ளை/ பெண் பார்ப்பார்கள். இவர் பெண்ணின் சார்பாக அவர் போய், அந்தப்பெண்ணின் மாமியாரிடம் வழக்கு தீர்ப்பார்கள். சண்டை போடுவார்கள். அப்படி ஒரு நெருக்கம் ஒரே துறையில் இருப்பவர்களிடம் இருப்பது என்பது வியப்புதான்.

நேசமணி பாட்டி ஒருபடி மேலே, பலர் வீட்டுப் பஞ்சாயத்திற்கும்  நாட்டாமை போவார்கள். பலரின் எதிர்ப்பைச் சம்பாதிப்பார்கள் என்றாலும் அதற்கு இணையாக நல்ல பெயரும் கிடைக்கும். சரியோ தவறோ தன்னலம் கடந்து அவர்களின் நாட்டாமை இருக்கும். இப்போது moral support  என்கிறோமே, அந்த தார்மீக ஆதரவைப் பல இளம் தலைமுறை கணவன் மனைவிக்கும் வழங்கியவர்கள். அதனால் பல ஆண்கள் வெளிநாடு சென்று வந்தாலும், ‘அக்காவிற்கு ஒரு சேலை கொடு’ என்பார்கள். அவர்கள் இறக்கும்போது இரண்டு பெட்டி நிறைய நல்ல சேலைகள் இருந்தன.

அவர்கள் மகளுக்கு சிரமப்பட்டு மாப்பிள்ளை தேடி சிறந்த முறையில் திருமணம் செய்தார்கள். ஆனாலும் திருமணம் தோல்வியில்தான் முடிந்தது. மகளின் எதிர்காலம் குறித்த கவலை இருந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து வணிகம் செய்துப் பயணப்பட்ட அவர்களின் வாழ்வும் ஒரு நாள் நின்று போனது. அருகில் இருந்த அனைவரிடமும் ‘நான் போய்விட்டால் என் மகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்’ எனக்  கேட்பார்கள். ‘என்னுடன் என் மகளும் வந்துவிட வேண்டும்’ என்பார்கள். அதுபோலவே அவர் இறந்த மறுநாள் மகளும் (நன்றாகத்தான் இருந்தார். அம்மாவை நன்றாகவே அனுப்பி வைத்தார்) இறந்து விட்டார் என்பது தான் இதில் வியப்பு. 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.

Exit mobile version