Site icon Her Stories

நிராகரித்தலின் கனவு

இலக்கிய வடிவங்களில் சிறுகதை வடிவம் தனித்துவமான ஒன்று. தமிழலக்கியப் பரப்பில் சிறுகதை வடிவத்தில் பல்வேறு பரிட்சார்த்த முயற்சிகள் எழுத்தாளர்கள் பலரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் 20 கதைகளைக் கொண்ட எழுத்தாளர், பத்திரிகையாளர் ஸ்ரீதேவி மோகனின் ‘நிராகரித்தலின் கனவு’ பெண்ணின் நுட்பமான மன உணர்வுகளைப் பேசும் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள், அவர்களுடனான உறவுச் சிக்கல்கள், அதனூடான மனப் போராட்டங்கள், சமூக மதிப்பீடுகள் என்று இயல்பு வாழ்க்கையைத் துல்லியமாக பதிவு செய்ய முயன்றுள்ளார். அம்முயற்சியில் இவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

‘பார்வை’ என்கிற முதல் சிறுகதையே சமூகக் கருத்தாக்கங்களின் பிடறியில் வைக்கும் அடியாக அமைந்துள்ளது. பெண், ஆண் உறவை இச்சமூகம் பார்க்கும் பார்வை எவ்வாறு இருக்கிறது, அதனூடான பெண்ணின் மனநிலை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இக்கதைத் தெளிவாக முன்வைக்கிறது.

அப்பா, கணவன், உடன்பிறந்த ஆடவர்களுடனோ ஒரு பெண் செல்லும் போது இச்சமூகம் பார்க்கும் பார்வை வேறாகவும், சொந்த உறவுகளற்று நட்புகளையும், வீட்டிற்கு அருகில் வசிக்கக்கூடிய உறவுகளாகப் பழகும் நபர்களையும் வேறு கோணத்தில் பார்க்கும் அவல நிலையைப் பொட்டில் அறையும் விதமாக இக்கதையில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார் ஸ்ரீதேவி மோகன்.

“ஆணும் பெண்ணுமாய் இருந்தால் அது உறவாகவோ, நட்பாகவோ மட்டும்தான் இருக்க வேண்டுமா? அதையும் தாண்டிய நல்லதொரு அன்பு, காமத்தைத் துறந்த அன்பு இருக்கவே இருக்காதா? அல்லது இருக்கவே கூடாதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

“தெருவில் பூ விற்கும் என்னைவிட குறைந்தபட்சம் பத்து வயது மூத்தவரான அந்த மனிதர் எனக்கு உறவும் இல்லை. நட்பும் இல்லை. பார்க்கும் போது அளிக்கும் அந்தக் களங்கமற்ற புன்னகை. தடுக்கி விழப் போன நேரத்தில் ‘பாத்தும்மா’ எனத் தவித்த தவிப்பு, இந்த அன்பிற்கு உறவுச் சுவர்க் கட்டியே ஆகவேண்டுமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்.

‘மரியாதை’ சிறுகதை, மரியாதை யாருக்குக் கொடுக்கப்படுகிறது? அம்மரியாதை பெறக்கூடிய இடத்தில் இருக்கக்கூடியவர்கள் யாராக இருக்கிறார்கள். இதனுள் செயல்படும் அரசியலைத் தன்னளவில் இக்கதை நேர்த்தியாக புலப்படுத்தியுள்ளது. மேனேஜரின் மச்சான் திருமணத்திற்குச் செல்லும் ஸ்டோர் கீப்பரின் நிலையை விளக்கிச் சொல்லும் இம்மரியாதை சிறுகதை ஏற்றத்தாழ்வுகள் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் நிறைந்திருப்பதைத் தனித்தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளது.

குடும்ப அமைப்புக்குள் நுழையும் பெண், ஆணின் மனநிலையைப் புலப்படுத்தும் சிறுகதை, ‘மழையில் நனையும் புறாக்கள்.’ ஆண் விரும்பித் திருமணம் செய்த பெண்ணாகவே இருந்தாலும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட என்னவெல்லாம் செய்வான் என்பதைச் சித்தரிக்கிறது. பெண்ணின் மனம் அதிகாரத்திற்கு எதிராகச் செயல்பட எடுக்கும் முயற்சிகளையும் அதனால் ஏற்படும் பாடுகளையும் விளக்குகிறது.

குழந்தைப் பேற்றினை மிக எளிதாகப் பார்க்கும் சமூக அமைப்பில், அக்குழந்தைப் பேறே ஆணின் அடையாளத்தினைச் சமூகத்தில் நிலைநாட்டும் செயல்பாடாகவும் இங்கு காலம் காலமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்றிருக்கும் பெண்ணின் வலியினை வேறு கோணத்தில் பதிவு செய்துள்ளார்.

கருவுற்ற பெண் ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்குச் செல்லும்போதும் அவள் படும் பாடுகளை விரிவாகக் கதைக்குள் கொண்டுவந்தமை இக்கதையின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

“இத பாருங்க உங்களுக்குச் சரியான ரிசல்ட் வரணும்னா ஒழுங்கா நிறைய தண்ணிய குடிச்சிட்டு உட்காருங்க. நிஜமாவே அடிவயிறு முட்டும் போது ரொம்ப ரொம்ப அர்ஜெண்டா வரும் போது சொல்லுங்க. அப்பதான் ஸ்கேன்ல கிளியரா தெரியும்” என்கிற இந்த உரையாடல் இச்சிறுகதையின் உயிர்ப்பான பகுதி. தாய்மையைப் போற்றும் இச்சமூகம் அதற்காக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் படும் பெண்ணின் வேதனைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அதேபோல் குழந்தைப் பேறு இல்லாத பெண்களை இச்சமூகம் பார்க்கும் பார்வை என்பது அநாகரிகமானது மட்டுமன்று மனிதநேயமற்றது.

பெண்கள் மீது ஆணாதிக்கச் சமூகம் தொடர்ந்து பச்ச குதிர ஏறுவதை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பு ‘பச்ச குதிர’ சிறுகதை. தந்தையும் கணவனும் ஆடும் அதிகார ஆட்டத்தை குடும்ப அமைப்பினூடாக மிக அழுத்தமாகச் சொல்லிச் சென்றுள்ளார் ஸ்ரீதேவி மோகன்.

“சட்டமெல்லாம் தெரியும், ஆனால் எத்தனை பெண்கள் இன்று தனக்கான சொத்தை முழுமையாக அடைகிறார்கள்? உறவுகளுக்காக உரிமைகளை இழந்து நிற்கும் பெண்கள் இங்கு ஏராளம்” என்கிற ஆசிரியரின் உரையாடல் பெண்களின் நிலையை ரத்தமும் சதையுமாக வெளிப்படுத்துகிறது.

‘பனித்துளி சுமக்கும் புற்கள்’ மரணத்தின் வலியினைப் பேசுகிறது. பெண்கள் தங்களின் உடல்சார்ந்த சிக்கல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கணவன், குழந்தைகள் என்று அவர்களைக் கவனிப்பதில் பெரும் அக்கறை காட்டுவதை மறுக்க முடியாது. சமூகக் கட்டுமானம் பெண்ணிற்குக் கற்பிக்கும் கருத்தாக்கங்கள் உளவியல் சார்ந்து பெண்ணைப் பெரும் சிக்கலுக்குள்ளாக்குகிறது என்பதை கதைப்போக்கில் வெளிப்படுத்திவிடுகிறது.

இச்சிறுகதைத் தொகுப்பில் கவிதை போன்று எழுதப்பட்டுள்ள சிறுகதை, ‘நிராகரித்தலின் கனவு.’ பெண், ஆண் உறவென்பது மிகச் சிக்கலானது, மிக நுட்பமானது, மிக சுவாரசியமானது. ஒரு பெண்ணின் பேருந்துப் பயணம் குறிப்பாக இரவு நேரப் பயணம் தரும் அச்சம், அதே நேரத்தில் மழை தரும் இதம் என்று ஒவ்வொன்றையும் மொழிவழி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். குழந்தையின்மை பெண்ணின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை உளவியல் சார்ந்து செறிவாகப் புலப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.

‘ஆட்டுமந்தை’ இளைய தலைமுறையின் பொறுப்பற்ற மனநிலையைப் பதிவு செய்வதாக அமைந்துள்ளது. அரசுக் கல்லூரியில் சேரும் எளிய பின்புலம் கொண்ட மாணவனின் மனநிலையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ‘அவரின் பென்சன் பணத்தில் கவர்மெண்ட் காலேஜில்தான் சேர்க்க முடிந்தது’ என்பதைத் தவிர்த்திருக்கலாம். மாணவர்கள் ஒன்றிணையும் போது ஏற்படும் வேகம், அதன் விளைவாக ஏற்படும் இழப்புகள் என்று ஒவ்வொன்றையும் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

எது நாகரிகம் என்பதை முன்வைக்கும் கதை ‘நாகரிகம்.’ ஏழ்மை அநாகரிகமானது இல்லை. ஏழ்மை அவமானத்திற்குரியதுமில்லை என்பதையும் நாகரிகமாக உடையணிந்து வருபவர்கள் எல்லாம் அநாகரிகமான செயலை செய்யத் தயங்குவதில்லை என்பதைபுலப்படுத்திவிடுகிறது.

‘உஷ்ணபூமி குவாரியில் பணியாற்றும் ராமுவின் வாழ்வியலை, அவனுடைய பண்பினை, அப்பணியின் கடுமையை வெளிப்படுத்துவதாக இச்சிறுகதை அமைந்துள்ளது. குவாரியில் நடைபெறும் பணிகள் பற்றிய பெரும் தெளிவோடும் தரவுகளோடும் இக்கதையை எழுதிய ஆசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

‘பெண் ஜென்மம்’ என்கிற சிறுகதை பெண் தொடர்ந்து ஆணோடு எல்லா நிலைகளிலும் போராட வேண்டியிருப்பதை, குடும்ப அமைப்பின் வழியும் எளிய பின்புலத்தினோடும் கூறிச்சென்றுள்ளார்.

‘பெண்தான் இந்தச் சமூகத்தின் அடிப்படை. இனப்பெருக்கத்தின் மூலாதாரம். ஆனால், பல நேரத்தில் அதுதான் அவளின் பெருஞ்சங்கிலியாக இருப்பது போல் தோன்றுகிறது’ என்கிற கருத்து பெண்ணின் உளவியலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

‘உண்மைக் கலைஞன்’ விவரனை மிக நுட்பமானது. ‘அது ஒரு மழை போல, திடீரென திரண்டு வரும் கார்மேகம் போல, மனதிற்குள் எழுதத் தோன்றும். சில நேரம் சாரல் போல… என எழுதும் ஸ்ரீதேவி, படைப்பு சில பொழுதோ திரளும் கரு மேகங்கள் காற்றடித்தால் கலைந்து போவது போல், சிறு சலனத்திற்கும் கரு கலைந்து போகும் என்று மழையோடு ஒப்பிட்டு அழகாகப் பதிவுசெய்துள்ளார். இக்கதையின் இறுதிப் பகுதியினை மேலும் சிறப்பாக அமைத்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஒவ்வொரு கதைக்களனும் வித்தியாசமானவை. பெரும்பாலான கதைகள் பெண்கள் குடும்பம், சமூகம் ஆகிய இருதளங்களிலும் நுட்பமான வலிகளை, சிக்கல்களைச் சிரத்தையாகப் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில் ஆண்களின் மன உணர்வுகளையும் பல்வேறு கோணங்களில் செறிவாக வெளிப்படுத்தியுள்ளார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல் என்றாலும் இக்கதைகள் அனைத்தும் பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை.

மொழிநடை, கதை கூறும் திறன் என்று ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பதைக் காணமுடிகிறது. எனினும் இச்சிறுகதைகளின் உரையாடல்களை இன்னும் கூடுதல் வலிமையுடன் அமைத்தால் இக்கதைகள் மேலும் சிறப்பாக இருக்கும். இத்தொகுப்பு தமிழ்ப் படைப்புலகிற்குச் சிறந்த வரவாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.

படைப்பாளர்:

பேராசிரியர் ஏ. இராஜலட்சுமி. கவிஞர், எழுத்தாளர். புனைவு அபுனைவு சார்ந்த படைப்புத் தளங்களில் வலிகள் மிகுந்த பெண்களின் குரல்களை எதிரொலிக்கும் கூர்மையான விமர்சனங்களை முன்வைப்பவர். சங்க காலம் முதல் இன்று வரை இலக்கியத் தடத்தில் பெண் மையக் கருத்தாக்கம் எவ்வாறாக உருப்பெற்று வந்திருக்கிறது என்பது பற்றித் தொடர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார். சங்க காலப் பெண்களின் ஆடைப் பண்பாடு எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பது குறித்த இவரது ஆய்வுத் தொகுப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. 22 ஆண்டுகளாக கல்லூரி மாணவிகளுக்குத் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கற்பித்து வருகிறார்.

Exit mobile version