Site icon Her Stories

பார்ப்பன ஆண்கள் ஏன் சமைக்கிறார்கள்?

https://www.facebook.com/brahminnKitchen/photos/a.101812668018443/101876618012048/?type=3

எப்படி கடிகாரம் முன்னோக்கி மட்டுமே ஓடுகிறதோ அதுபோல கால மாற்றங்களைப் பழகிக்கொண்டு நாமும் நம் வாழ்க்கையில் முன்னேறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். டைம் மெஷினில் பயணம் செய்து நாம் கடந்த காலத்திற்குப் போய் வாழ்ந்து பார்ப்பதெல்லாம் கற்பனைக் கதைகளில் மட்டுமே சாத்தியம்.

இவ்வளவு தூரத்திற்கு நவீன தொழிற்நுட்பம் வளர்ந்த பின்னும்கூட ஒரு பெருங்கூட்டம், அதே தொழிற்நுட்பத்தின் உதவியுடன், ஒருதலைப்பட்சமான தங்கள் பத்தாம்பசலித்தனக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்து, காலத்தைப் பின்னோக்கி இழுக்க முற்படுவதைப் பார்க்கும்போது சட்டென சிரிப்பு வந்தாலும், கூடவே கொஞ்சம் எரிச்சலும் பற்றிக்கொள்கிறது.

உதாரணத்திற்குச் சமீபமாக ஒருவருடைய முகநூல் பதிவு ஒன்றைப் பகிர்கிறேன்.

//கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!

தினமும் வீட்ட கூட்டு!!

பாத்திரத்த சுத்தமா கழுவி பழகு!

உன் துணிய நீயே துவைச்சுக்கோ!!

வாரம் ஒரு தடவை பாத்ரூம் கழுவு!!

சமையல் கத்துக்கோ!!

வயசானவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காராத!!

வீட்டுல ஆண்கள் யார் இருந்தாலும் துப்பட்டா போடு!! (அப்பா, அண்ணனா இருந்தாலும்)!!

இந்தமாதிரி வேலைகளை செய்யும்போது அவங்கள பாராட்டுரது ரொம்ப முக்கியம்..

குறிப்பா “அம்மா சமையலவிட உன் சமையல் சூப்பர்டா” ன்னு சொல்ற அப்பாவின் பாராட்டுதான் பொண்ணுங்களுக்கு கோல்டு மெடல்!!!

இப்படி கசப்பு மருந்து குடுத்து வளர்க்கப்படுற பொண்ணுங்க போற இடத்துல அழகா சமாளிச்சு வேரூன்ற ஆரம்பிச்சுரும்!!!

ஆஅனா இது எதையும் கத்துக் குடுக்காம வ:ஆர்த்தற பொண்ணுங்களுக்கு போற இடத்துல சமையல் செய்யச் சொன்னாகூட கோவம்தான் வரும்!!

அதும் மாமியார் மாமனாருக்கு செய்ய சொன்னா கேக்கவே வேண்டாம்…

அப்புறம் கண்ண கசக்கிட்டு வந்து அம்மா வீட்ல நிக்கும்!!

நம்மாளுகளும் கொஞ்சம் ஏத்திவிடுவாங்க!! கடைசியில அது டைவர்ஸ்ல போய் நிக்கும்!!

பெண் என்பவள் பிரபஞ்ச சக்தி!!

அத ஆக்கசக்தியா ஆக்கறதும், அழிவுசக்தியா மாத்தறதும் பெத்தவங்கிட்டதான் இருக்கு!!//

பெண்கள் என்றால் இப்படித்தான் எல்லா வேலைகளையும் பொறுப்புடன் செய்ய வேண்டும், இப்படித்தான் உடை அணிய வேண்டும், இப்படித்தான் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் அப்படி என்ன குற்றம் குறை இருக்கிறது. இது உலக வழக்கம்தானே என்று நியாயவாதிகள் கேள்வி கேட்கலாம்.

அட, குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த இந்த ஆண்களால் செய்ய முடிந்த எதைத்தான் இன்றைய பெண்கள் செய்யவில்லை? விவசாயியாக, ஆட்டோ ஓட்டுநராக, உணவு டெலிவரி செய்பவராக, சிறுதொழில் முனைவோராக, எதைத்தான் செய்யவில்லை?

பிணம் எரிக்கும் தொழில் செய்யும் பார்ப்பனப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காணொளி காட்சியைப் பாருங்கள்…

இதற்குப் பிறகும் கூட ஏன் ஒரு பெண் பிறந்த வீட்டில் வந்து ‘கண்ண கசக்கிட்டு’ நிற்கணும்?

இவற்றையெல்லாம் விட வீட்டுவேலைகளைச் செய்வது அவ்வளவு கடினமா என்ன? ஆனாலும் ஏன் ஆண்கள் இதில் முழு அளவில் பங்குகொள்வதில்லை? இதையெல்லாம் செய்வது இழிவு என்றெண்ணும் ஆண் அகங்காரம்தானே?

இருவரும் இணைத்து குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட எல்லாப் பொறுப்புகளையும் சமமாகப் பகிர்ந்துகொண்டால், ஏன் விவாகரத்து வரை போகப்போகிறது?

இங்கே குடும்ப அமைப்பு சிதைய முழுக் காரணம் ஆணாதிக்கம் மட்டுமே. ஆனால் பழியை மொத்தமாகத் தூக்கிப் பெண்கள் மீது எறிகிறார்கள்.

இந்த உண்மை புரிவதால், இதை படித்தபோது, ‘என்னடா இது, இந்த காலத்தில் கூட ஒருவர் இப்படிப் பட்ட அறிவுரைகளைப் பெண்களுக்காக வள்ளல் போல வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறாரே!’ என எனக்குக் கொஞ்சம்கூட வியப்பாக இல்லை.

ஏனென்றால், என்றோ எப்பொழுதோ மநு சொல்லிவிட்டுப் போனதைத்தான் இன்றுவரை இந்தச் சமூகம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது. எனவே இதில் உணர்ச்சிவசப்பட எதுவும் இல்லை.

அதற்காக இவர்களைப் போன்றோர் எல்லோருமே மநு தர்மசாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. இதெல்லாம் வழி வழியாக வாழ்வியலோடு இரண்டறக் கலந்துபோய், நம் ஒவ்வொருவரது ஜீனிலும் ஆழப் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

நாம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்துதான் இன்றைய நவீன மனிதனாக இருக்கிறோம் என்பதற்குச் சான்றாக வாலெலும்பு எனப்படும் Tail bone எப்படி நமது உடலில் இன்னும் கூட ஒட்டிக்கொண்டு, குறிப்பாகப் பெண்களுக்குத் தொந்தரவு (வால் எலும்பு வலி – coccydinia) கொடுத்துக் கொண்டிருக்கிறதோ அதுபோலத்தான் இந்த மநு போதனைகளும் நம் புத்தியில் உட்கார்ந்துகொண்டு நம்மை ஆக்க வழியில் செல்ல விடாமல் பின்னால் இழுக்கிறது.

இதற்குப் பின்னால் மநு தர்மம் என்ன மாதிரியான அழுகிப்போன காரணங்களைச் சொல்கிறது என்பதைச் சொல்கிறேன்.

//ஜாதகர்மா முதலான மந்திரபூர்வமான கிரியைகள் பெண்களுக்கு தர்மசாஸ்திரத்தில் விதிக்கப்படவில்லை. மந்திரங்களால் ஆண்கள் பாவத்தைத் தொலைத்துக் கொள்வது போன்று பெண்கள் தொலைத்துக்கொள்ள முடியாது பெண்கள் சுதந்திரமற்றவர்களாக இருப்பதால், தண்டனைக்குப் பயந்தோ, (தூற்றுதல்) வசவுக்குப் பயந்தோ பொய் பேசுபவர்களாக இருப்பார்கள். எனவே பல பெண்கள் தீயொழுக்கத்தோடுதான் இருப்பார்கள்.

பெண்கள் படுக்கை, ஆசனம், (சோம்பேறியாக உறங்கிக்கொண்டும் உட்கார்ந்துகொண்டும் இருப்பார்கள் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் இந்த வார்த்தைகளுக்கு ஆபாசமான வேறு அர்த்தங்களும் இருக்கின்றன) அலங்காரங்களுக்கு ஆசைப்படுவார்கள், காமக் குரோதங்களுக்கு வசப்பட்டிருப்பார்கள். செய்யத்தகாததைச் செய்பவர்களாகவும் துரோக பாவத்தோடும் இருப்பார்கள்.

பெண்கள் ஆணின் அழகையோ, வயதையோ பார்க்க மாட்டார்கள். அழகனாக இருந்தாலும் குரூபியாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் ஆண் மகனாக இருந்தால் போதும் என்று அனுபவிப்பார்கள்.

பெண்கள் ஆசைப்படுபவர்களாக, சலனச் சித்தம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆத்மார்த்தமான நட்பை எவரிடமும் வைக்க மாட்டார்கள். இந்த காரணங்களால், எளிதில் மனம் மாறக் கூடியவர்களாக இருப்பார்கள். மனம் மாறி கணவனிடம் பற்றுதல் நீங்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

பிரம்ம சிருஷ்டியில் பெண்களின் இயல்பு இவ்வாறாக இருப்பதால் ஆண்மகன் மேலான முயற்சிகளால் அவர்களை தன்வசப் படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

புருஷர்கள் இரவும் பகலும் ஸ்திரீகளை பாதுகாக்க வேண்டும், ஏனெனில் பெண்கள் கண்ணுக்கு ரம்மியமானவற்றைக் காண்பதிலும் காதுக்கு ரம்மியமானவற்றைக் கேட்பதிலும் ரம்மியமான வாசனைகளை முகர்தலையும் மனதுக்கு ரம்மியமானவற்றைச் செய்வதிலும் எப்போதும் ஈடுபடுவார்கள். இவ்வாறான விஷயச் சுகங்களை அனுபவிக்கும் போது சில தவறுகள் நேரிட வாய்ப்பு ஏற்படலாம். எனவே அத்தகைய வாய்ப்புகள் ஏற்படாமல் இருக்கப் பெண்கள் சுதந்திரமாகத் திரியாமல் ஆண்கள் தங்கள் வசத்தில் அவர்களை வைத்துக்கொண்டு பாதுகாக்க வேண்டும்.

சிறு வயது பெண்ணை தந்தை பாதுகாப்பான், யௌவனப் பருவத்தில் கணவன் பாதுகாப்பான். வயோதிகத்தில் புத்திரர்கள் பாதுகாப்பார்கள். எனவே பெண் என்பவள் எப்போதும் பிறரால் பாதுகாக்கப் படுபவளேயன்றி சுதந்திரமாக இருக்கத் தக்கவளல்ல.

சூட்சுமமான காதல் சேர்க்கை ஏற்பட்டு விடாதபடி பெண்ணை விசேஷமாகக் காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் அப்பெண்ணால் பிறந்த குலத்துக்கும் புகுந்த குலத்துக்கும் துக்கம் ஏற்படும்.

மனைவியால் புத்திரர்கள் பிறப்பார்கள், ஆதலால் அவளால்தான் வம்சம் விருத்தி அடைகிறது. மனைவியின் நற்குணங்களால்தான் வம்சத்தின் நற்பெயர் நிலைநாட்டப்படுகிறது. மனைவி உடனிருந்து தர்மத்தை நடத்துவதால்தான் ஒருவன் மேன்மை அடைகிறான் ஆகவே தன்னையும் தன் தர்மத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மனைவியை மிகுந்த முயற்சியுடன் இரட்சிக்க வேண்டும்.

கணவன் தன் ரேதஸ் ரூபத்தில் மனைவியுள் பிரவேசித்து புத்திரனைப் பெறுகிறான். தன் மகனாகப் பெறுவதால் மனைவிக்கு ஜாயா என்று பெயர் உண்டு. பெண்ணானவள் எந்த ஆடவனைச் சேர்கிறாளோ அவருடைய தன்மையைக் கொண்ட புத்திரனைப் பெறுவாள். எனவே மற்றவரால் அவள் பலாத்கரிக்கப்படாமல் கணவன் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றினால் தான் அவளிடமிருந்து தன்னைப் போன்ற நன்மக்களைப் பெற முடியும்.//

மேலே குறிப்பிட்ட அனைத்துமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மநுதர்ம சாஸ்திரத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.

இதைவிட பெண்ணினத்தை கேவலப்படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை! மனம் முழுவதும் எந்த அளவிற்கான வக்கிரம் நிரம்பியிருந்தால் பெண்களைப் பற்றி இப்படி எல்லாம் நம்ப வைத்திருப்பார்கள் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த கேடுகெட்ட கற்பிதங்களையெல்லாம் ஒப்புக்கொண்டுதான் இன்று வரையிலும் கூட, ஜாதிய அடிப்படையிலான நம் குடும்ப கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. எந்த கால மாற்றத்திலும் விட்டுப் போகாமல், நாம் தொன்று தொட்டுச் செய்து வரும் சடங்கு சம்பிரதாயங்களே அதற்குச் சாட்சி.

சரி இவ்வளவு கேவலமாகச் சொல்லி வைத்திருக்கிறார்களே, இப்படி யாரோடு வேண்டுமானாலும் ஓடிப்போய் பாலுறவு வைத்துக் கொள்வதாகச் சித்தரிக்கும் பெண்களை எப்படி எப்படி எல்லாம் காப்பாற்ற வேண்டுமென்று மநுதர்மம் சொல்கிறது என்று பகிர்கிறேன், படித்துவிட்டு மேலும் எரிச்சல் அடையாதீர்கள்.

//பெண்களைக் காப்பாற்றுதல் என்பது அவர்களைப் பலவந்தமாகப் பூட்டி வைப்பது போன்ற செயல்கள் அல்ல, சில உபாயங்களால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

வீட்டிற்குத் தேவையான பண்ட பாத்திரம் முதலியவற்றைத் தேடிப் பெறுவதற்காகப் பொருளை அவள் பால் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து, வேண்டியபோது அதனைச் செலவிடும்படி செய்தும் ( அதாவது வீட்டுப் பொருள் மேலாண்மை) தட்டு முட்டு சாமான்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளச் செய்தும், தன்னையும் வீட்டையும் அலங்காரமாக லட்சுமி கடாக்ஷமாக வைத்திருக்க வேண்டியது மனைவியின் கடமை. ( இதில் மேற்படி நபர் சொன்ன வாரம் ஒரு முறை கழிவறையைக் கழுவுவதையும் சேர்த்துக் கொள்ளலாம்)

களைத்து வரும் கணவனுக்கு உணவளித்து பணிவிடை புரிவதும் மனைவியின் கடமை, சமையலும் சமையல் சாதனங்களும் நல்லபடி இருக்கச் செய்வதும் மனைவியின் கடமையே. தேவ பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களை பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றை சரியாகக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து, அவற்றையெல்லாம் அவளைக் கொண்டு செய்யவைத்தல் போன்றவற்றாலும் அவளது மனம் பிறரிடம் செல்லாமல் காக்க!

அதாவது மிகச் சிறிய வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து அனுப்பி விடுவதால், இது போன்ற பொறுப்புகள் பிறந்த வீட்டினரைச் சார்வதில்லை. நான் சென்ற அத்தியாயத்தில் சொன்னது போலக் கணவனுக்குத் தேவையான வீட்டு வேலைகளைச் செய்வதே குருகுல வாசம் என்பதால் இதற்கான ட்ரெய்னிங்கையும் கணவனே கொடுக்க வேண்டியதாகிறது. அதாவது புகுந்த வீட்டிலேயே கொடுக்க வேண்டியதாக மநுதர்மம் சொல்கிறது.

தமது நிறை தாமே காத்தல் மாதர்தம் கடன் அதுவே அவர்களுக்கு நல்ல காப்பாகும். அஃதின்றி வலிய, காவலரை வைத்து வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைத்தல் பயன் தராது.

வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்களின் கடமையே என்பது நம் குடும்ப அமைப்பில் எவ்வாறு வேரூன்றிப்போய் இருக்கிறது என்பது இவற்றிலிருந்து தெரிகிறதல்லவா?

இந்த மனுதர்ம சாஸ்திரங்களைப் பார்ப்பனர்கள் 100% கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ, மற்ற மூன்று பிரிவினரும் நன்றாகவே கடைப்பிடிக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை.

https://lifestyle.livemint.com/food/discover/opinion-warning-indian-men-entering-the-kitchen-111634480249901.html

பார்ப்பனரல்லாத பல ஜாதியினரிடம், ஆண்கள் அடுக்களையில் நுழைந்து சமையல் செய்வது கேவலம், அது கௌரவக் குறைச்சல் என்னும் மனநிலை இன்று வரை நம் சமூகத்தில் வேரூன்றிப் போய் கிடக்கிறது. பெரும்பான்மையான ஆண்களுக்கு, ஓர் ஆத்திர அவசரத்துக்குக் கூட சமையலறைக்குள் போய் ஒரு வெந்நீர் வைக்கக் கூடத் தெரியாது.

பார்ப்பன ஆண்கள் அப்படி இல்லையா என்கிற கேள்வி வரலாம்… ஆம், பரப்பான ஆண்களில் பெரும்பாலானோர் அடிப்படை சமையல் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்! குறைந்த பட்சம் காஃபி, தேநீர் தயாரிப்பது. சாதம் வடித்து, குழம்பு, ரசம் ஒரு பொரியலாவது செய்ய கற்றிருப்பார்கள்.

பார்ப்பனர்கள், மாதவிடாய்க் காலங்களில் பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் விலக்கிவைப்பதே இதற்குக் காரணமாக அமைகிறது. இதற்கான காரணங்களை அடுத்த கட்டுரையில் விரிவாகவே பார்க்கலாம். ‘மடியாய்’ சமைத்ததைச் சாப்பிடுவது என்ற அவர்களின் கட்டுப்பெட்டி ‘ஆச்சாரமான பார்வையும்’ இதற்குக் காரணமாக அமைகிறது.

குறைந்தது மாதத்தில் மூன்று நாட்கள் அவர்கள் அடுக்களைக்குள் நுழைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காகவேனும் சமையலைப் பழகிக்கொண்டே ஆகவேண்டும். பல ஆண்கள் பொறுப்புடன், கடமையாக இதைச் செய்தாலும், வேண்டாத வெறுப்புடன் தலையெழுத்தே என்று செய்கிற சில ஆண்களும் உண்டு. செய்ய விருப்பம் இல்லாமல், இதுபோன்ற நாட்களில் மனைவியை விலகியிருக்க விடாமல் வழக்கம் போல வீட்டு வேலைகளைச் செய்யும்படி விட்டுவிடுபவர்களும் உண்டு.

இதில் விரும்பி செய்பவர்களும், மொத்தமாக ஒதுங்கிக் கொள்கிறவர்களும் பிரச்சனைக்குரியவர்கள் இல்லை. இந்த இரண்டுங்கெட்டான் நிலையில் இருப்பவர்கள்தான், பெண்களை மாதவிடாய் நாட்களில் பாடாய்ப் படுத்திவிடுவார்கள்.

பார்ப்பனர் அல்லாதவர்களில்கூட மாதவிடாய் நாள்களில் பெண்களை ஒதுக்கி வைப்பதுண்டு, ஆனால் திருமணம் ஆகாத பெண்களை மட்டுமே… எனவே ஆண்களுக்கு சமையல் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. ஆக, குடும்பத் தலைவிகளுக்கு சமையல் கட்டிலிருந்து ஓய்வே கிட்டாது.

பொதுவாக, மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஒதுங்கி இருப்பது நல்ல விஷயம்தானே? அவர்களுக்குப் போதுமான ஓய்வு கிடைக்கிறதே? என இதைப் பெருமையாகப் பேசுபவர்கள் இங்கே அதிகம். ஆனால் இப்படி ஒதுங்கி இருக்கும் நாள்களில் பெண்கள் அடையும் மன உளைச்சல்களை வெளிப்படையாக இங்கே பகிர இருக்கிறேன்.

அடுத்த பதிவில் சொல்கிறேன்…

Exit mobile version