Site icon Her Stories

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்- 8

Forbes

சீரியல் கில்லர்கள்

சினிமாவில் பெண்களை போகப்பொருளாக காண்பிப்பது போல் சீரியலில் பெண்களுக்குள் எப்படி அடித்துக் கொள்வது என காண்பிக்கிறார்கள். பெண்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி கூட்டம் ஒன்று பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாமா? லாமா… என்ன சொல்லத்தான் வேண்டும்!

வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அவர்களின் குறிக்கோளே. சீரியல் பார்க்கும் எல்லா குடும்பங்களிலும் சலசலப்பு உண்டாகி இருப்பது மறுக்க முடியாது உண்மை. ” இது ஒண்ணுதான் நான் நிம்மதியா உக்காந்து பாக்குறேன் அது பொறுக்காதா”, என சொல்லிச் சொல்லியே வீட்டுக்கு வீடு பெண்கள் சீரியல்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த சீரியல்கள் இந்த அளவுக்கு வீட்டின் நிம்மதியை குறைக்கவில்லை. அதைப் பார்க்கும் போது அடுத்த வாரம் என்ன நடக்கும் என்ற ஆர்வம் இருந்தது. திகில், கலகலப்பு, சிரிப்பு, என பலவித பரிணாமங்களில் சீரியல்கள் வந்தன. வீட்டின் பிரச்சனைகளை காண்பித்தார்களே தவிர வீட்டினுள் எப்படி வன்மங்களை வளர்க்கலாம் எனக் காண்பிக்கவில்லை.

இப்போது வரும் சீரியல்களில் ஒரு அடிப்படை லாஜிக் கூட இல்லாமல் எடுக்கிறார்கள். பெண்ணுக்கு நடக்கும் அநீதிகளைக் காண்பிப்பதாகச் சொல்லி அபத்தங்களைக் காண்பிக்கிறார்கள்.

ஒரு பெண், அவளுக்கு உண்டாகும் துரோகங்கள், போராட்டங்கள் இவ்வளவுதான் எல்லா சீரியல்களின் அடிநாதமும். அதை வைத்து ஸ்ருதி மாற்றி, ராகம் மாற்றி, பாடிக் கொண்டிருகிறார்கள். உலகத்தின் ஒட்டுமொத்த பரிதாபங்களையும் அந்த நாயகி தலைமேல் சுமத்தி, ” கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா?”, என வீட்டிலிருக்கும் பெண்களின் கண்களையும் கலங்க வைப்பார்கள். ஏறக்குறைய எல்லா மருமகளோ, மாமியாரோ சர்வசாதாரணமாக ஜெயிலுக்கு போய் சபதம் எடுத்துக் கொண்டிருப்பார்கள். அதென்ன டூரிஸ்ட் ஸ்பாட்டா அடிக்கடி அதுவும் நடுத்தர குடும்பங்கள் வந்து போய்கொண்டிருக்க?

இப்படியான சீரியல்கள் வெறும் டைம் பாஸ் என்றா நினைக்கத் தோன்றும்? பெண்களை பலவீனப்படுத்தும் அத்தனை அம்சங்களும் சீரியல்களில் காண்பிக்கப்படுகிறது. ஒரு சீரியல் என்றால் அதன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஏறக்குறைய எல்லா சீரியல்களும் அப்படித்தானே?

நன்கு படித்த பெண்மணி ஒருவர். உயர் அதிகாரியாக மத்திய அரசு வேலையில் இருந்தவர். ரிட்டயர்மென்ட்டிற்கு பிறகு அத்தனை சீரியல்களையும் பார்த்துவிட்டுதான் தூங்கச் செல்வார். ஆரம்பத்தில் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவர், பின் அதற்கு அடிமையாகிவிட்டிருந்தார். ஒருமுறை அவருடைய மருமகள் ஒரு தேர்வுக்குச் செல்வதற்குமுன் தனது மாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது “நீ நாச்சியார் மாதிரி இருக்கணும்கிறதுதான் என் ஆசையே. நீ என்னடான்னா உன் இஷ்டபடி இருக்க. ஏன் இந்த எக்சாமுக்கு முன்னமே எங்கிட்ட அனுமதி வாங்கலை? அந்த சீரியல்ல வர்ற மருமக வெளில அதிகாரத்தோடு இருந்தாலும், வீட்ல அவங்க மாமியாரைத் தாண்டி ஒரு வார்த்தை பேச மாட்டா. அவ மாமியாரை கேட்காம செய்ததில்லை, நீ ஏன் என்னைக் கேக்காம லொகேஷன் உன் அம்மா ஊர்ல செல்கட் செஞ்ச? வேறு இடத்துல செய்ய வேண்டியதுதான?”, என அரைமணி நேரம் அந்த சீரியலில் வரும் நாயகி பற்றி பெருமையாய் சிலாகித்துச் சொல்லி, அவளை கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தார்.

ஆசிர்வாதம் வாங்கத்தானே போனார் அந்த மருமகள்? வாழ்த்து வாங்காமல் வசவுகளை வாங்கி வந்தார் பாவம். ” அவங்களை மாதிரி நான் ஏன் இருக்கணும்? அவங்களே நடிக்கத்தானே செய்றாங்க?”, என அந்த மருமகள் புலம்பிக் கொண்டிருந்தார். அந்த மாமியார் நன்கு படித்தவர்தான்; ஆனால் இயல்பாக அவருக்கு இருக்க வேண்டிய மனமுதிர்ச்சியைக்கூட இந்த சீரியல்கள் பறித்துவிட்டதோ எனத் தோன்றுகிறது.

சீரியல் ஒரு ஸ்லோ பாய்சன் என்றால் மிகையாகாது. மெல்ல மெல்ல வன்மத்தை பெண்களின் மனதில் ஏற்றுகிறது.

என்ன மாதிரியான சீரியல்கள் வருகிறது எனப் பார்த்தால் பொதுவாக ஒரு கூட்டுக் குடும்பம்; அதில் வரும் மாமியார் நல்லவராக இருந்தால், மருமகள் மோசமானவராக இருப்பார். மருமகள் நல்லவராக இருந்தால், மாமியார் மோசமானவராக இருப்பார். அல்லது இருவருமே நல்லவராக இருந்தால், அதில் வரும் ஒரு மருமகள்தான் எல்லா தியாகங்களையும் செய்து அன்பின் உருவமாய் குடும்பத்தையே கட்டிக் காப்பாற்றுவளாக இருப்பாள். மற்ற மருமகள்கள் எல்லாம் வன்மத்தையும், பொறாமையையும் மனதிற்குள் புதைத்து அவளை மறைமுகமாகப் பழிவாங்க நினைப்பார்கள். இப்படியா குடும்பங்கள் எல்லாமே இருக்கும்? கூட்டுக் குடும்பங்கள் என்றால் மனஸ்தாபங்கள், சச்சரவு இல்லாமல் இருக்குமா? ஆனால் குடும்ப உறுப்பினர்களின் மனதை மடைமாற்றி, எண்ணெய் ஊற்றி இன்னும் தீப்பற்றி எரியச் செய்கின்றன, இந்த மாதிரியான சீரியல்கள்.

என் தோழி இது மாதிரியான சீரியலைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள். ஒரு கூட்டுக்குடும்ப சீரியல் வரும்போதெல்லாம் அதில் வரும் பெண் கதாப்பாத்திரங்களுக்கு மறைமுகமாக வீட்டு மருமகள்கள் பெயரிட்டுச் சொல்வது இவரது மாமியாரின் வழக்கமாம். அதிலும் இவளை வெறுப்பேற்றவே, மோசமாக சித்தரிக்கப்படும் கதாப்பாத்திரத்திற்கு இவள் பெயரைச் சொல்வாராம். அவள் சில சமயம் மன விரக்தியில் அம்மா வீட்டிற்கே செல்லலாம் என நினைப்பதாகவும் சொல்வாள். எந்த ஒரு மனித உயிரினமும் மகாத்மாவாக இருக்க வாய்ப்பேயில்லை. எல்லா குணங்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால் சீரியல்களில் வரும் குடும்பங்களில் வஞ்சகம், பொறாமை என எல்லாவற்றையும் வடிக்கட்டி சுத்தமான ஒரு அக்மார்க் நல்ல பெண்ணாக ஒருத்தி இருப்பாள். மீதிப் பெண்கள் வன்மத்தை கங்கணம் கட்டி அலைவதாகக் காண்பிக்கிறார்கள்.

ஏதேச்சையாய் ஒரு சீரியலின் ப்ரொமோ வீடியோ ஒன்றைப் பார்த்தேன்.. ” மூத்த மாமியாரான ஒரு பாட்டி, அவருக்கு ஒரு மருமகள் , அந்த மருமகளுக்கும் ஒரு மருமகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் ‘வாழும்’ சீரியல். மூத்த மாமியார் என்றால் அவரின் மருமகளுக்கு சிம்ம சொப்பனம் . அவர் எப்போதும் அந்த மருமகளை கரித்து, திட்டிக் கொண்டே இருப்பார். அந்த மருமகள் எதிர்வினையாற்றாமல் அன்பாய் குடும்பத்தை கட்டிக் காப்பாள். ஒருமுறை அந்த மூன்றாவது தலைமுறை மருமகள் தனது மாமியாரை ஏதோ ஒரு காரணத்திற்காகத் திட்டுகிறாள். உடனே அந்தப் பாட்டி, ” என்ன நினைச்சுட்டு இருக்க. அவளை நான் என்ன வேண்டுமானாலும் திட்டுவேன். எனக்கு அந்த அதிகாரம் இருக்கு. ஆனால் நீ திட்டக் கூடாது. மன்னிப்புக் கேள்”, எனச் சொல்வார். அவர் மட்டும் திட்டுவதற்கு லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கிறாரோ என்னமோ? இதெல்லாம் பாவமில்லையா இயக்குனர்களே?

உண்மையில் பெரியவர்களைப் பார்த்துதானே சிறியவர்கள் நடந்து கொள்வார்கள்?மாமியார் என்றால் காரணமின்றி திட்டலாம், கரித்துக் கொட்டலாம் என எவ்வளவு அழகாய் சொல்லித் தருகின்றன இம்மாதிரியான சீரியல்கள் . இதில் இந்தியா முழுக்க எதைப் பரிமாறிக் கொள்கிறார்களோ, இல்லையோ சீரியல்களின் ரீமேக்கிங், டப்பிங் வியாபாரம் கனஜோராய் நடக்கிறது.

எனக்கும் சீரியல்களுக்கு எழுதும் வாய்ப்பு வந்தது. ஒரு முண்ணனி தொலைக்காட்சியில் ஒரு சீரியலுக்கு வசனம் எழுதித்தரக் கேட்டார்கள். ” எனக்கு விருப்பமில்லை. சீரியல்கள் எல்லாமே ஒரே மாதிரியான பழிவாங்கும் கதைகள்”, என்றதும், ” இல்லை முதலில் கதை கேளுங்க, பிடித்தால் செய்யுங்கள்”, என்றார்கள். சரி என அந்த கதையைக் கேட்டேன். தைரியமான நாயகி, அவள் தொடங்கும் தொழில், அவள் காதலித்தவனால் உண்டாகும் சூழ்ச்சி, அவள் எப்படி மீண்டு வெற்றி பெறுகிறாள் என அதே பழம் தின்று கொட்டைப் போட்ட கதைக்களம். ” எப்படியும் அங்கு இங்கு சுற்றி இறுதியில் போராட்டம், சூழ்ச்சின்னே வர்றீங்களே…. எப்படியெல்லாம் பிரச்சனைகளை உண்டாக்கலாம் என எப்போதும் நினைத்து, இறுதியில் அதற்கான தீர்வு தருவது பற்றி யோசிக்கும் மனம் எனக்கு வாய்க்கவில்லை. தவறாக நினைக்க வேண்டாம், எனக்கு சீரியல்கள் சரிப்பட்டு வராது”, எனச் சொன்னேன்.

ஒருமுறை என் அம்மா சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் வந்த காட்சி ஒன்று இப்படி இருந்தது- ஒரு பெண் காய் வெட்டும் பொழுது விரலில் லேசாக வெட்டி விடுகிறது. அவள் உடனே வீடே கேட்கும்படி அலறுகிறாள். எல்லோரும் ஓடிவருகின்றனர். ஆளாளுக்கு பதறுகிறார்கள். ஒரு பெண் மஞ்சள் நீரில் கையை விடச் சொல்கிறாள். அவள் உள்ளே கையைவிட்டு பிரசவ வலியில் துடிப்பது போல் துடிக்கிறாள். அப்போது பின்னணியில் “தோம் தனன” என தாளத்துடன் பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருவன் பதட்டமாய் ரத்த வங்கியை அழைக்கிறான். ரத்த வங்கியிலும் ஒரு நர்ஸ் என்ன க்ரூப் என கேட்டு ரத்தத்தை அனுப்புவதாகச் சொல்கிறார்… (அதென்ன மளிகைக் கடை பொருளா?)

எனக்கோ அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சி. வெறும் ஒரு நிமிடம் கூட அந்த காட்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை. ” என்னம்மா இது?”, என என் அம்மாவிடம் கேட்டால், சிரித்துக்கொண்டே மீண்டும் அந்த சீரியலில் மூழ்கிவிட்டார். உண்மையில் மூளையை கழற்றிவிட்டுத்தான் கதை எழுதச் செல்வார்களா? அதில் நடிக்கும் நடிகர்களுக்குக் கூடவா இது தெரியவில்லை? அபத்தத்தின் உச்சமான இதைப் போன்ற காட்சிகளையும் மூளையை கழற்றிவிட்டுத்தான் பெண்கள் பார்க்கிறார்களா?

இந்த பெண்கள் ஏன் இப்படிப்பட்ட சீரியல்களின் முன் மயங்கிக் கிடக்கிறார்கள் எனப் புரியவில்லை. படித்த பெண்கள், படிக்காத பெண்கள் வித்தியாசமில்லை. சின்னப்பிள்ளை என்ற சாதனையாளரை அறிவீர்கள் என நினைகிறேன். இந்தியாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக வித்திட்டவர். உயரிய விருதான ஸ்த்ரீ விருதைப் பெற்றவர், ஏழைக் குடும்பங்களில் மதுவுக்கு அடிமையாகும் கணவர்களால் பெண்கள் எவ்வகையில் பாதிக்கப்படுகின்றனர் எனவும், பூரண மதுவிலக்கை ஆதரித்தும் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அவருடைய இயக்கம் 250 கோடி வருவாயைச் சேமித்திருக்கிறது. 750 கோடி வரை சுய உதவிக் குழுவிற்கு கடன் அளித்துள்ளது. மகத்தான சாதனை இது.

சின்னப் பிள்ளை, படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

அவர் சொன்ன விஷயத்தைப் பகிர்கிறேன். “இன்றைய பெண்கள் பெரும்பாலும் டிவி சீரியல்கள் பார்த்து நேரத்தை வீணடிக்கிறார்கள். சீரியல்களால் உங்கள் குடும்பத்தில் ஒரு மாற்றமும் வந்துவிடப் போவதில்லை, உங்கள் நேரம் வீணாகிறது என்பதைத் தவிர. பெண்கள் திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்”, என்று அழுத்தமாய்ச் சொல்கிறார். படித்தால்தான் பண்பு வரும் என யார் சொன்னது? வாழ்க்கை தரும் படிப்பினைகளில் நாம் கற்றுக் கொள்வதை விட சிறந்து பண்பு வேறெதுவுமில்லை. லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கிய சின்னப்பிள்ளை போன்றோர்தான் நமக்கு வழிக்காட்டி. அவர் சொல்வதில் இருக்கும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொழுதைப் போக்கத்தான் நாம் தொலைக்காட்சி பார்க்கிறோம் என்று சொல்லியே எத்தனை வேண்டாத எதிர்மறைகளை வீட்டிற்குள் கொண்டு வருகிறோம்? வீட்டின் நிம்மதியைக் கெடுக்கும் ஒரு விஷயம் எப்படி பொழுதுபோக்காய், மகிழ்ச்சி தரக் கூடியதாய் இருக்கும்? சீரியல்கள் பார்ப்பதை நான் தவறு எனச் சொல்லவில்லை; செயற்கைத்தனங்கள் நிறைந்த சீரியல்களின் அபத்தங்களைக்கூடப் புரிந்து கொள்ள இயலாமல் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.

நாள் தவறாமல் வருடக்கணக்கில் அழுகை, ஒப்பாரி, சாபங்கள், என வசனங்களைத் தொடர்ந்து கேட்கும் பொழுது, அவை நம்மையறியாமல் நம் மனதில் ஊடுருவி விடாதா? உளவியல் ரீதியாகத் தொடர்ந்து ஒரே விஷயத்தை போதித்தால், நல்ல நேர்மறை எண்ணத்துடன் இருப்பவர்களையும் மாற்றிவிடுமே?

இப்பொழுதெல்லாம் இரவு ஆனதும் யார் வீட்டிற்காவது போகவேண்டுமென்றால் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது . போனால் நமக்கு தெரிந்தவர் தவிர மற்றவர்கள் எல்லாம் சீரியல்களில் மூழ்கியிருப்பார்கள். முகம் திருப்பி யாரெனக்கூட பார்க்க மாட்டார்கள். நம்புங்கள் ஒருமுறை தெரிந்தவர் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்கச் சென்றேன். வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, ” நீ நாசமாப் போக. உன் வீட்ல இழவு விழ”, என்ற வார்த்தைகள் சத்தமாய் ஒலித்தது . பகீரென்றது. எல்லாம் டிவி சீரியல் வசனம்தான். அப்படியே வீட்டுக்குத் திரும்பிவிடலாமா எனக் கூட யோசித்தேன். தொடர்ந்து அழுகையும், வசவுமாய்க் கேட்க நாராசமாய் இருந்தது. சரி நாம் வந்த உடனாவது டிவியை அணைப்பார்களா? மாட்டார்கள். நாம் வந்தால் என்ன வராட்டால் என்ன? ஒரு நிமிடம் கூட சீரியல் காட்சிகளை இழக்க மாட்டார்கள். இதுதானே அதை எடுப்பவர்களுக்கு வேண்டும்? உறவின் புனிதத்தைச் சொல்லிக் கொண்டே உறவை அறுப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் சீரியல்களிலிருந்து எப்போது விடிவு காலம் பிறக்கும் எனத் தெரியவில்லை.


தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ஹேமி கிருஷ்

பெருந்துறையைச் சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய  'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில், இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.
Exit mobile version