ஒரு கதை சொல்லட்டுமா – 4
வரலாறாக பெண்களின் வாழ்க்கையை மீட்டு எடுத்து வெளியே சொல்வதே மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. ” பெண்களின் வாழ்க்கையை வௌவால்கள் அல்லது ஆந்தைகள் போல் தான் வாழ சமூகம் சொல்லித்தருகிறது. விலங்குகளைப் போல் உழைக்கச் சொல்கின்றனர். புழுக்களைப் போல் இறக்கச் சொல்கின்றனர்”, என்று நியூகேசிலைச் சேர்ந்த மார்கரெட் என்ற ஆங்கிலேயப் பெண்மணி 17ம் நூற்றாண்டிலேயே சொல்லி விட்டார். ஆனால் அந்த கருத்து இன்னும் மாறாமல் உள்ளது.
‘ஆள் கடத்தல்’ என்பது நாட்டுக்கே அவமானம் தரும் செயல். ஆனால் அதிகமாக பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படுவது தான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த ஆள்கடத்தல், பெண்களின் உடலை அனுபவிப்பதற்காகவும், உழைப்பை சுரண்டுவதற்காகவுமே நடக்கிறது. பெண்ணை வெறும் தொட்டிலாட்டும் கையாகத்தான் இந்த சமூகம் பார்க்கிறது.
10-13 வயதுப் பெண் குழந்தை ஒன்று ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இந்தியாவில் காணாமல் போகிறது. 18 மில்லியன் பெண்கள் திருமணம் என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள். 59% இளம் பருவத்தினருக்கு தங்களை இந்த சுரண்டலில் இருந்து எப்படி வெளிக்கொண்டு வருவது என தெரியவில்லை. 72% உள்ள பெண்களுக்கு எந்த அமைப்பு மூலம் வெளிவர முடியும் என்பது தெரியவில்லை.
பெண்களின் உழைப்பை எதை வைத்து, எப்படி எல்லாம் சுரண்ட முடியும் என்பதற்கு அடிப்படையான நான்கு காரணங்களை ஹியூமன் டிராபிக் கமிஷன் அமைப்புகள் சொல்கிறார்கள்.
- கட்டாயப்படுத்துதல் (Force) :
இன்றைய தேதியில் பெண்கள்தான் அதிகமாக வேலைக்குப் போகிறார்கள். இதைப்பயன்படுத்தி, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களை வைத்து பிச்சை எடுப்பது, வீட்டு வேலைக்கு அனுப்புவது, குறைந்த சம்பளத்தில் தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு, செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு என ஒரு குழுவாக சேர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.
குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றி விடுகிறார்கள். வயதுக்கு வந்த பெண்களிடம் திருமண ஆசை காண்பித்து, முறைப்படி திருமணம் செய்து அதன் பின் விற்று விடுகிறார்கள். பெண்களைப் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாற்றி விடுகிறார்கள். அதற்கு, பெண்களின் உடலை மிக முக்கியமான காட்சிப் பொருளாக வைத்து சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் நீட்சியாக பெண்களை வாடகைத் தாயாக மாற்றுவது, உருப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடலின் பாகங்களை விற்று விடுவது என ஒரு பொருளாகத் தான் இந்த சமூகம் பெண்களை, குழந்தைகளை பார்த்து கொண்டு இருக்கிறது.
- ஏமாற்றுதல் (Fraud) :
ஒருவனை ஏமாற்ற அவனின் ஆசையை தூண்டி விடுவது தான் மிகத்தந்திரமான செயலாகும். அதைத் தான் இங்கு சமூகம் செய்து கொண்டு இருக்கிறது. முழுக்க முழுக்க மீடியாவின் பாதிப்பு தான் இந்த இடத்தில் அதிகமாக இருக்கும். வறுமையில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை வைத்து தான் காய் நகர்த்துவார்கள். அந்த மாணவிகளின் வறுமை மற்றும் ஆசையைக் கொண்டு அவர்களை பயன்படுத்தி விடுகிறார்கள். டிவியில், போனில் காண்பிக்கப்படும் ட்ரெஸ், அஸெஸரீஸ், பைக் ரைடு, ஊர் சுற்றுவது, ஹோட்டலில் வித விதமாக சாப்பிடுவது என்று ஆசைகாட்டி மாணவிகளை வீழ்த்தி விடுகிறார்கள். 71% மாணவிகள் அவர்கள் இருக்கும் பகுதிகள், சில கல்வி நிறுவனங்கள், செக்ஸ் தொழிலில் இருக்கும் ஏஜெண்டுகள் மூலம் பயன்படுத்தப்படுகிறார்கள் என என்.ஜி.ஓ.நிறுவனங்கள் சொல்கின்றன.
- அழுத்தம் (Coercion) :
குடும்பம் சார்ந்து உணர்வு ரீதியாக வற்புறுத்தியும் பெண்களை அடிபணிய வைக்கிறார்கள். வயது முதிர்ந்த ஆணுக்கு பணத்துக்காக பெண்ணை கல்யாணம் செய்து வைப்பது, சொத்து வேறு யாருக்கும் போய் விடக் கூடாது என்று சொந்தத்தில் கட்டி வைப்பது, பாலியல் தொழிலில் வீட்டிலுள்ள ஆண்களே பெண்களை, குழந்தைகளை விற்று விடுவது என உணர்வு ரீதியான காரணங்களை முன்வைத்து பெண்களை பலி கொடுத்து விடுகிறார்கள்.
குடும்பத்துக்கு பாரம், பூமிக்கு பாரம் என்று சொல்லியே, பெண்ணை தரித்திரம் என்ற சொல்லுடன் ஆழமாக முடிச்சுப் போட்டு மூடப்பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகளை காரணமாகக் காட்டி, அனைவரது ஒத்துழைப்புடன் விற்று விடுகிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பலரை அந்த இடத்துக்குக் கொண்டு வந்து விட்டவர்கள், அவர்களது குடும்ப நபர்கள் தான். அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அடிப்பது, ஊர் முன்னிலையில் அசிங்கப்படுத்துவது, வீட்டில் உள்ளவர்களே பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என அந்த பெண்களை மனதளவில், உடலளவில் நிலைகுலைய வைத்து விடுவார்கள். அதன பின் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்லும் இடத்தில் வேலைக்குச் செல்வார்கள்.
- மூன்றாம் நபரின் வேலை (Facilitated by a Third Person) :
அடுத்த மனிதருக்காக செய்யும் ஒரு செயல்கள் இவை. வாக்குத் தவறாமை என்று ஒரு வார்த்தையை கண்டுபிடித்து அடுத்த மனிதர்களை திருப்திப் படுத்துவதற்காக தங்கள் வீட்டுப் பெண்களை, குழந்தைகளை தியாகம் செய்யச் சொல்வார்கள். இது ஒரு வகையான கொடூர மனநிலையில் செய்வதாகும். குடும்பத்தில் உள்ள ஆண் சந்தோசமாக, ஆடம்பரமாக வாழ அவர்களை நம்பி இருக்கும் பெண்களை, குழந்தைகளை வைத்து சமூகத்தில் அந்தஸ்த்துடன் வாழ்கிறேன் பேர்வழி என்று வாழ்வது…
ஆனால் இந்த கோவிட் நாள்களில், வீட்டு ஆண்கள் மூலம் பெண்கள் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களது உழைப்பையும் சுரண்டி, பணத்தையும் காலி செய்துவிட்டு பெண்களையும், குழந்தைகளையும் ஆண்கள் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டனர். வெறும் தொட்டிலாட்டும் கையாகவே பெண்களை இந்த சமூகம் இந்த நொடி வரை பார்த்து கொண்டு தான் இருக்கிறது.
தொடரும்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
காயத்ரி மஹதி
காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.