Site icon Her Stories

உறவுகளுக்குள் எதிர்பாலீர்ப்பு- என்ன செய்யலாம்?

Photo by Charles Deluvio on Unsplash

பாசம் என்பதும், பந்தம் என்பதும் இரத்த உறவுகளுடன் இணைந்திருக்கும் ஒன்று என்று நமது இந்தியக் கலாச்சாரத்தில் உரத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்ற பழமொழியும் அவ்வாறே வழிமொழிகிறது. குடும்ப உறவுகள் என்பவை எப்போதும் ஒரு பிணைப்பிலேயே இருப்பதாக இலக்கியங்கள் செப்புகின்றன.               

உறவுகளுக்கு இடையே உள்ள இணக்கம் அறிவியல் ரீதியாக, ஆன்மீக ரீதியாக, உளவியல் ரீதியாக என்று பல்வேறு வழிகளிலும் ஆராய்ந்து பார்க்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தந்தை- மகள், தாய்- மகன் என்ற பாச உறவுகளைச் சற்று ஆராய்ந்தால் வரும் கருத்துருக்களும், உளவியல் ரீதியான முடிவுகளும் இந்தக் கலாச்சார காவலர்களுக்கு(?) அதிர்ச்சியையே  அளிக்கின்றன.                  

ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாகி, பிறக்கும் நாள்வரை அந்த உடலின் சத்துக்களையே உட்கொண்டு, அந்த மனதின் எண்ண ஓட்டங்களையே கிரகித்துக் கொண்டு இருக்கிறது. பிறந்த குழந்தை தாயின் மார்பில் பாலருந்தும் போது அதற்கு முதன்முதலில் தாயின் வாசனை அறிமுகமாகிறது. தாயின் அரவணைப்பு கதகதப்பாகிறது. தாயின் முகத்தையே முதலில் பார்க்கிறது. அவளின் தொடுதலையே உணர்ந்து கொள்கிறது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் அன்னையின் அருகாமையையே விரும்புகிறது. ஆனால் பெண் குழந்தைகள் வளர வளர அதன் கவனம் எப்படி தந்தையின் பக்கம் ஈர்க்கப்படுகிறது?

இதற்கான பதிலை உளவியல் ரீதியாக ஆராய்ந்த ‘உளவியலின் தந்தை’ சிக்மண்ட் ஃபிராய்ட் வெளிப்படுத்திய கருத்துக்கள் அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பையும், பலத்த ஆட்சேபத்தையும் ஏற்படுத்தின. ஒரு மனிதனுக்கு  பாலியல் உணர்வு தான் மிக முக்கியமான உந்து சக்தி என்கிறார் ஃபிராய்ட். சாவை எதிர் நோக்கியிருக்கும் மனிதர்கள் முதல் பிறந்த குழந்தைகள் வரை பாலுணர்வால் கட்டுப்பட்டவர்கள் தான் என்பது அவரது வாதம். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். பசி, தாகம், வலி மாதிரி இதுவும் ஒரு இயற்கையான உணர்ச்சிதான்.                  

ஒரு மனிதனின் எல்லாச் செயல்களிலும் ‘செக்ஸ்’ கலந்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக எல்லா நேரங்களிலும் அதே உணர்வுகளோடு அலைகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் எந்நேரமும் ‘பாலியல் தூண்டலுக்கு’ உள்ளாகும் சாத்தியக்கூறுகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைந்திருக்கிறது.                  

இந்த உலகில் இயற்கை படைத்த எல்லாமும் ஆண்- பெண் என்ற இரண்டு பிரிவுகளில் தான் அடங்கும். மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் ஆணாக இருந்தவர் திருநங்கையாகவும், பெண்ணாக இருந்தவர் திருநம்பியாகவும் தான் மாற்றம் அடைகிறார்கள். செடி கொடிகள் கூட இந்த இரண்டு பிரிவுகளில் தான் இருக்கிறது. தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசம் பிணைப்பு ஒருவிதமான எதிர்பால் ஈர்ப்பு என்கிறார் ஃபிராய்ட். அதாவது இயற்கையாகவே பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையே இருக்கும் பாலினக் கவர்ச்சி என்பது அவரது வாதம். அறிவியல் ரீதியாக இதை நாம் ஆராய்ந்தால் ஹார்மோன்களுக்கு ஆண், பெண் என்ற பேதம் மட்டும் தான் தெரியும். அவர்களுக்கிடையே இருக்கும் உறவுமுறைகள் தெரியாது. ஏற்றுக் கொள்ளச் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை.                  

புராண கிரேக்க இதிகாசத்தில் ஈடிபஸ் என்ற ஒரு கதாபாத்திரம் வரும். அரசர் லாயிஸ்க்கும், அரசி ஜொகாஸ்டாவுக்கும் பிறந்தவன் ஈடிபஸ். அவன் பிறந்தவுடனே அசரீரி வாக்கு ஒலிக்கிறது. “இவன் தனது தந்தையைக் கொன்று தாயை மணந்து கொள்வான்” என்று தேவவாக்கைக் கேட்டதும் லாயிஸ் தனது அடிமை ஒருவனை அழைத்து அந்தக் குழந்தையைக் கொன்றுவிடச் சொல்லி ஒப்படைக்கிறார். காட்டுக்குள் குழந்தையுடன் சென்ற அடிமை அதைக் கொல்ல வாளை உயர்த்துகிறான். குழந்தை கால்களை உதைத்துக் கொண்டு புன்னகைக்கிறது. அந்தக் கள்ளமில்லாத சிரிப்பில் அவன் மனதை மாற்றிக் கொண்டு அதைக் கொல்லாமல் எடுத்துச் சென்று ஒரு ஆட்டிடையனிடம் சேர்ப்பிக்கறான்.                 

ஆட்டிடையன் அந்தக் குழந்தையை பாலிபஸ் என்ற அரசரிடம் ஒப்படைக்கிறான். அங்கே ஈடிபஸ் என்ற பெயருடன் வளரும் குழந்தை வாலிபனானதும் தனது உண்மையான பெற்றோர் இவர்கள் இல்லை என்று தெரிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறான். வரும் போது ஒரு குறுகலான வழியை ரதத்தில் மறித்துக் கொண்டு வரும் ஒரு அரசனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் ஏற்படும் போரில் அந்த அரசனைக் கொல்ல நேரிடுகிறது. அவர்தான் அவனது தந்தை லாயிஸ் என்று அவனுக்குத் தெரியாது. 

தெபெஸ் நகரத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்பவன் அந்நகரின் நுழைவாயிலில் பெண் முகமும், சிங்க உடலும் கொண்ட ‘ஸ்பிங்ஸ்’ என்ற விநோதப் பிராணியிடம் சிக்கிக் கொள்கிறான். அது வழிப்போக்கர்களிடம் கேள்வி கேட்டுப் பதில் சொல்லாதவர்களைத் தின்று விடும். அது ஈடிபஸிடம், “காலையில் நான்கு கால்களோடும், மதியம் இரண்டு கால்களோடும், இரவில் மூன்று கால்களோடும் இருக்கும் உயிரினம் எது?..” என்று கேட்கிறது. அவன் மனிதன் என்று சரியான பதில் சொல்கிறான். விளக்கம் கேட்கிறது. மனிதன் குழந்தைப் பருவத்தில் இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உபயோகித்து தவழ்கிறான். நடக்கும் பருவத்தில் இரண்டு கால்களில் நடக்கிறான். முதுமைப் பருவத்தில் ஊன்றுகோலை மூன்றாவது காலாக உபயோகிக்கிறான் என்று சொன்னதும் ‘ஸ்பிங்ஸ்’ பெரும் கூச்சலோடு மடிகிறது.                   

தெபெஸ் நகர மக்கள் பெரும் ஆரவாரத்தோடு அவனை நகருக்குள் அழைத்துச் சென்று ராணி ஜொகாஸ்தாவை அவனுக்கு மணமுடித்து அவனை அரசனாக்குகிறார்கள். அவர்களுக்குப் பிள்ளைகளும் பிறக்கின்றன. பலகாலம் கழித்து தெபெஸில் ‘பிளேக் நோய்’ பரவுகிறது. ஈடிபஸ் குருட்டு தீர்க்கதரிசியான திரேஸியாஸை அழைத்துக் குறி கேட்கிறான்.

மனைவியுடன் ஈடிபஸ், historytoday.com

அப்போது ஒலிக்கும் அசரீரி மூலமாக அவனது  தந்தை லாயிஸைக் கொன்றதும், அவரது மனைவி ஜொகாஸ்தாவைத் தான் மணந்து கொண்டதையும், அவர்கள் தான் தனது உண்மையான பெற்றோர் என்பதையும், இவனது இச்செயலால் தான் ‘பிளேக் நோய்’ பரவியது என்பதையும் அறிந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதையறிந்த ஜொகாஸ்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளது ஆடையிலிருந்து எடுத்த அழகிய ‘ப்ரூச்’சால் ஈடிபஸ் தனது கண்களைக் குருடாக்கிக் கொண்டு ஊர் ஊராக அலைந்து மடிகிறான்.  

இந்தக் கதையின்படிதான் மகன் தாயின்மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பு மிகவும் ஆழமாகச் செல்லும் நிலைக்கு ஃபிராய்ட் ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ என்று பெயரிட்டார்.

தாயின் அருகாமையில் இருந்த மனதில் அவளது வாசனை, உடல்சூடு, பாதுகாப்பு உணர்வு, பரிவு என்று பலதும் பதிந்திருக்கும். அதனால்தான் ஆண்கள் தாயைப் போல பார்த்துக் கொள்ளும் பெண்ணைத் தேர்ந்தெடுக்க முனைகிறார்கள். ஆழ்மனதின் எதிர்பால் ஈர்ப்பும் இதில் அடங்கத்தான் செய்கிறது.                   

எலக்ட்ரா, விக்கிபீடியா

அதேபோல் அகமெம்னோன் என்ற அரசருக்கும், அவரது மனைவி கிளைடெம்நெஸ்ட்ராவுக்கும்  பிறந்தவர்கள் எலக்ட்ராவும், அவளது தம்பி ஓரெஸ்டெஸும். எலக்ட்ரா தனது தந்தையின் ஆண்மையையும், வீரத்தையும் கண்டு பெருமிதம் கொள்கிறாள். கிளைடெம்நெஸ்ட்ரா தனது காதலன் ஏகிஸ்தஸுடன் இணைந்து அகமெம்னோனைக் கொன்று விடுகிறாள்.  அதற்குப் பதிலுக்குத் தன் மகன் பழிதீர்க்க வந்து விடக்கூடாது என்பதற்காக ஓரெஸ்டெஸைக் கொல்ல முயற்சிக்கிறாள். அவனைக் காப்பாற்றி தனது மாமாவிடம் வளர்க்க ஒப்படைக்கிறாள் எலக்ட்ரா. பல ஆண்டுகளாக மனதில் வன்மம் வளர்க்கிறாள். வாலிபப் பருவம் வந்ததும் ஓரெஸ்டெஸ் மீண்டும் நாடு திரும்புகிறான். தந்தையின் மரணத்திற்குப் பழி தீர்க்க நினைத்த எலக்ட்ரா ஓரெஸ்டெஸையும் துணைக்கழைக்கிறாள். முதலில் தயங்கினாலும் ஓரெஸ்டெஸ் தனது தாயையும் அவளது காதலனையும் கொன்று விடுகிறான்.               

தந்தையை அதீதமாக நேசிக்கும் மகளின் இந்த மனநிலையை ‘கார்ல் ஜங்’ என்பவர்தான் ‘எலக்ட்ரா காம்ப்ளக்ஸ்’ என்ற வார்த்தையால் உளவியலில் அறிமுகப்படுத்தினார்.

இதையொட்டி சிக்மண்ட் ஃபிராய்ட் வெளிப்படுத்திய கருத்துக்கள் தான் பரபரப்பாயின. மகள்களின் மனதில் தந்தையின் கம்பீரம், பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், அவர்கள் அரவணைப்பு தரும் பாதுகாப்பு உணர்வு, அவர்களது தோற்றம் போன்றவைகளே பெரிதும் ஈர்க்கின்றன. தந்தைதான் அவளது ‘சூப்பர் ஹீரோ’. அதனால்தான் எப்போதும் ஒருபெண் வாழ்நாள் முழுக்க தனது தந்தையையும், கணவனையும் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். ஒரு விஷயத்தை கணவனை விட தனது தந்தை ‘ஹேண்டில்’ செய்வதை உயர்வாக எண்ணுகிறாள். மனதின் ஓரம்‌ எதிர்பாலினக் கவர்ச்சியும் இலேசாக மினுக்குகிறது.                          

எதிர்பால் கவர்ச்சி என்பதே பாசம் என்ற முலாம் பூசிக்கொண்டு கலாச்சார மாயையைக் கொடுக்கிறது. இது கட்டுக்குள் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. கட்டுடையும்போது நிகழ்பவை தான் கலாச்சார வரம்பு மீறல்கள்(?) ஆகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று கூவுபவர்கள் ஒன்று தங்களது சொந்த அனுபவத்தை மறைக்கிறார்கள். அல்லது அப்படிப்பட்ட நிகழ்வுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.                      

காமம் என்பது புனிதமானதும்  இல்லை. தீய செயலும் இல்லை. அது இயற்கையாக எழும் ஒரு உணர்வு. ஆனால் அது கரைமீறாது செல்லும் ஆறாக இருக்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. வரம்பு கடந்த காட்டாறாக மாறும் போது தான் குழப்பங்கள் நிகழ்கின்றன. இதில் இந்த உறவுகள்தான் புனிதம். மற்றவை ஆபாசம் என்று முடிவு கட்டி விடக் கூடாது. பாலியல் ரீதியாக மனப்பிறழ்வு கொண்டவர்களை வெறுக்காமல் இருக்கக் கற்றுக் கொள்வோம். இந்த உலகத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. அத்தனைக்கும் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது.                       

இந்திய அளவில் குடும்பப் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 2012-ல் 346 ஆக இருந்தது. 2013-ல் 489 ஆக அதாவது, 43 சதவிகிதம் அதிகரித்துஉள்ளது. பாலியல் வன்முறையில் தலைநகர் டெல்லிதான் முதல் இடம் வகிக்கிறது.            2007 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்ட கணக்கின்படி 78-ல் இருந்து 108 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள

இவையெல்லாம் நமது புண்ணிய பூமியில் எடுத்த கணக்கெடுப்புகள்தான். எங்கோ மேல்நாட்டில் தான் இத்தகைய சீர்கேடான நிகழ்வுகள் நடக்கின்றன என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. நமது நாட்டில், நமது ஊரில், நமக்கு அருகாமை வீடுகளில் ஏன் நமது வீடுகளில் கூட இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கலாம். 

உடல் தேவை என்று வரும்போது அங்கே இன்னொரு உடல்தான் துணையாகத் தேடப்படுகிறது. உறவுமுறை என்பதெல்லாம் பண்பாடு என்ற ஒரு மாயக் கயிற்றால் தான் பிணைக்கப்பட்டிருக்கிறது. மனித மனத்தின் வக்கிரங்களுக்கும், புதிர்களுக்கும் எல்லையே இல்லை. அவை எந்த நேரத்திலும் கட்டவிழ்த்துக்கொண்டு மேயவே விரும்புகின்றன. இவற்றை இந்திய புராண இதிகாசங்களில் நிறையவே காணலாம்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனையே ஒரு பெண் மணந்து கொள்வது எகிப்து அரச வம்சத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அரசுரிமை அயலாரிடம் சென்று விடக் கூடாதென்று இந்த ஏற்பாடு. பைபிளில் கூட சகோதரியைப் பலவந்தப் படுத்தும் சகோதரனைக் குறித்து குறிப்புகள் உள்ளன.

சிக்மண்ட் ஃபிராய்ட் என்னும் தீர்க்கதரிசி சொன்னது முற்றிலும் உண்மைதான். இந்த உலகத்தில் எத்தனையோ விதமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் நாம் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க இயலாது.

நாம் பயணிக்கும் பாதையில் குறுக்கிடும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தெளிவாக எடுக்கும் வண்ணம் நமது மனதை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒன்றையும் குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்காமல் அது குறித்த மேலதிகப் புரிதல்களுடன் அணுகுதலே சாலச் சிறந்தது.

இத்தகைய உறவு முறைகள் குறித்து அறியும் போதோ, காண நேரிடும் போதோ உடனே மனம் குறுகாமல் அவற்றை உளவியல் நோக்கில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இத்தகைய நிகழ்வுகளைப் பாலியல் மனப்பிறழ்வுகள் ‌என்று பாகுபடுத்தலாம். அத்தகைய உறவுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்களை நாம் கருணையோடு அணுக வேண்டும். உளவியல் ரீதியான அவர்களது பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தயங்காமல் ஆலோசனைகளை அளிக்கலாம். ஆனால் அதற்கு முன் நாம் அது குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் உத்தமம். 

 இவையெல்லாம் இந்தப் பூமி உருண்டையின் எத்தனையோ விசித்திரமான, வினோதமான முரண்கள்‌ என்பதைத் தெளிவாக்கிக் கொள்வோம். எவரொருவர் மீதும் காரணத்துடனோ அல்லது காரணமின்றியோ வன்மம் வளர்க்காது உளவியல் ரீதியாக அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிகள் செய்வோம். இயலாத பொழுது சிறு புன்னகையுடன் அங்கிருந்து விலகுவோம். அதுதான் நமது மனநிலையையும், உடல்நிலையையும் எப்போதும் அமைதியாக வைத்திருக்க ஒரே வழி.

***

கட்டுரையாளரின் மற்ற படைப்பை வாசிக்க:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

Exit mobile version