Site icon Her Stories

என் மகனுக்கு என்ன ஆச்சு?

“ஏம்மா நீ தண்ணியடிப்பியா?” என்று மருத்துவர் அவளை அதட்டிக் கேட்ட போது உமா மகேஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை . பிறந்தது முதல் ஒருவித அமைதியற்று காணப்படும் , சத்தமிட்டு அழும் மகனுக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அவள்  உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

ஏதோ வலியில் துடிப்பது போல் இடைவிடாது ‘வீல்’ என்று அடிக்கடி அழுபவனைப் பார்த்துப் பார்த்து பெத்த மனம் துடிதுடித்துப் போனது. 

காத்து கருப்பு எதுவும் அண்டியிருக்குமோ என்று அவள் அம்மா சொன்னது போல் கோயில் கோயிலாக அழைத்துச் சென்று மந்திரித்தாள், திருநீறு பூசினாள், வேதக் கோவிலுக்கு வேண்டிக் கொண்டு மெழுகுவத்தி ஏற்றி மனதாரப் பிரார்த்தனை செய்தாள், வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் போய் லெப்பையிடம் சென்று தாயத்துகூடக் கட்டிவிட்டாள். ஆனால் எதற்கும் மசிந்ததாகத் தெரியவில்லை.

“யாருடி இவ கோயில் கொளம்னு சுத்திக்கிட்டு கிடக்குறவ? புள்ளய  ‌ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் ஒரு எட்டுக் காட்டிட்டு வந்துருவோம்?” என்று அவளைத் திட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றது அவள் தோழி செந்திதான்.‌ பிரசவம் பார்த்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பரிந்துரைத்ததன் பேரில் திருநெல்வேலி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு ஆறுமாத கைக் குழந்தையாக மெலிந்து , அடிக்கடி வெட்டு வந்து, உடம்பு தேராதவனை  அள்ளி எடுத்துக் கொண்டு சென்று காட்டியவளுக்கு டாக்டர் கேட்ட கேள்வி புரியவில்லை.

“தண்ணியா? என்ன கேக்குறீங்கன்னு புரியலையேம்மா? வாரத்துல நாலு நாள் கஞ்சித்தண்ணி குடிப்பேன். உடம்பு சூட்டுக்கு நல்லதுன்னு எங்க அம்மா சொல்லும். அதனால எதுவும் பிரச்சனையா டாக்டரம்மா? குளிச்சையாலதான் புள்ளைக்கு வலிப்பு வந்துருச்சோ?” என்று  மிரட்சியுடன் விழித்த அந்த இளம் தாயின் பதற்றத்தை உணர்ந்து , புரியும் விதத்தில் அந்தக் குழந்தைநல டாக்டர் ராஜேஸ்வரி மீண்டும் விளக்கிக் கேட்டார்.

“அதான், இந்தப் பட்ட சாராயம்? கள்ளு கிள்ளுண்ணு?”

“எங்க குலசாமி மாரியம்மா சத்தியமா அப்படில்லாம் எதுவுமில்லம்மா. வெயிலுக்கு  வெறும் பைனிதான் டாக்டரம்மா குடிச்சேன், கள்ளுன்னுலாம் சொல்லி என்ன அசிங்கப்படுத்தாததீங்க” என்று அவரிடமே பலர் சண்டைக்கு வந்திருக்கிறார்கள் .

அதனால் அவர்கள் குழந்தைப்பேற்றுக் காலத்தில் பல இன்னல்களுக்கு ஆளாவதோடு பிறந்த குழந்தைக்கும் பல உடல் உபாதைகள் வரும் , குறைபாடுகளுடன் பிறக்கும் வாய்ப்புகளும் அதிகம். அப்படிப் பலரைக் கண்டிருப்பதால் பொதுப்படையாக அப்படி கேட்டுவிட்ட அவருக்கு அந்த அப்பாவியான இளம்பெண்ணிடம் இத்தனை கடுமையாக கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. பின் சற்று தணிந்த குரலில், “உன் புருஷனுக்கு?” என்று கேட்டதும் அவள் முகம் சற்று சுருங்கியதிலிருந்து அவர் கேள்விக்கான விடை கிடைத்தது. உண்மையில் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் தாக்கம் தெரிந்தால் எந்தப் பெண்ணும் கண்டிப்பாக மதுவின்  திசையில் கூட தலைவைத்துப் படுக்க மாட்டாள். ஆனால், ஏனோ இந்த ஆண் ஜென்மங்கள் எல்லாம் தெரிந்தும் குடித்து தன் உடல் நலத்தையும் கெடுத்துவிட்டு, தன்னைச் சார்ந்தவர்கள் வாழ்க்கையையும் சேர்த்து அழிக்கிறார்கள் என்று பலமுறை அவர் தனக்குத் தானே புலம்பிக் கொள்வதுண்டு.

“லாரில கிளினரா இருக்காரும்மா. லோடு கீடு ஏத்தப் போறப்ப சகவாசம் கெட்டுப் போச்சு. எம்மேல சத்தியம் பண்ணியும் அந்தக் கருமத்த வுட்ட பாடில்ல. இந்தப் புள்ள வயித்துல இருக்கப்ப அதுமேல  சத்தியம் பண்ணிட்டுப் போய் குடிச்சிட்டு வந்த அன்னிக்குதான் ஆங்காரியாயிட்டேன்.‌ அதுனாலதான் இப்படிப் புள்ளைக்கு ஆயிப்போச்சோன்னு வேண்டாத தெய்வமில்ல. அதெல்லாம் எம்புள்ளய கைவிட்டிடுச்சு, இப்ப உங்களதான் மல போல நம்பி ஓடியாந்திருக்கேன். எம்புள்ளய காப்பாத்திக் குடுத்துருங்கம்மா” என்று கண்ணீர் வழிய  கையெடுத்துக் கும்பிட்ட அந்தப் பெண்ணின் வேதனையைப் பார்த்து அவர் மனம் கசிந்தது. பல மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் கருவுண்டான போது அதிகமான மதுவின் தாக்கத்தால் ஏற்படும் கரு ஆல்கஹால நோய்க்குறி (Fetal alcohol syndrome) என்கிற பாதிப்பால் கல்லீரல் பாதிப்பு உண்டாகி இருப்பது தெரிந்தது. எத்தனை விரைவில் அறுவைசிகிச்சை செய்கிறோமோ அத்தனை நல்லது என்ற போது அவள் மயக்கமடித்து விழுந்துவிட்டாள், இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான அவருக்கு அந்தத் தாய்மனம் படும் வேதனையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

மயக்கம் தெளிந்த பின், ”ஐயோ என் தங்கத்துக்கா இந்த நில வரணும்? என் உடம்புல எத்தனை கீரல் வேணா போட்டுக்கோங்க. பச்ச பிள்ள எப்புடித் தாங்கும் ‌டாக்டரம்மா? மருந்துல சரி பண்ண முடியாதா?” என்று கேட்டு அழுது புலம்பி, எப்படியோ தன்னைத்தானே தேற்றிக் கொண்டு அறுவை சிகிச்சைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்தாள்.

ஆனால் அந்தப் பச்சைமண்ணுக்கு இந்த நிலை வரக் காரணமாக இருந்தவனிடம் தன் முழுக்கோபத்தையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் காட்டினாள்.

தன் குடிபோதை மனைவியையும் பிள்ளையையும் பாதிப்பதை உணர்ந்து திருந்த முயற்சி செய்வான். ஆனால் இரண்டாம் நாளே வழக்கமாகச் சரக்கடிக்கும் நேரத்தில் கைகால்கள் உதறல் எடுக்கத் தொடங்கிவிடும் , பின் ஏதோ சாக்கு போக்குச் சொல்லி குடித்துவிட்டு வந்து குடிபோதையில் அவளிடம் மன்னிப்பு கேட்டு கதறுவான். ஒருவழியாகச் சிகிச்சை முடிந்து தேறி வந்த குழந்தையின் பிஞ்சுக் கைகளை எடுத்துத் தன் கன்னத்தில் அறைந்து  கொள்வான்.

பின் அவள் சொல்வதைக் கேட்டு ஒருவழியாக மறுவாழ்வு மையத்தின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தி வந்தான். தான் வைத்திருந்த சொச்சம் நகையை ஈடு வைத்த பணத்தில் அவனுக்குச் சொந்தமாக ஓர் ஆட்டோ வாங்கிக் கொடுத்தாள்.‌ அவர்கள் வாழ்க்கை ஒரு வழியாகச் சில வருடங்கள் பிரச்சினையின்றி போய்க் கொண்டிருந்தது.

ஆனால் யார் கண்பட்டதோ, அவர்கள் சந்தோசத்தில் மண் வாரிப் போடவென்றே அவன் ஆத்தாக்காரி வந்து சேர்ந்தாள். ஒரு வீட்டை ரெண்டாக்கும் கோணல் புத்தி கொண்டவளைப் புரிந்து திரேஸ்புரத்திலிருந்த பெரிய மகன் விரட்டியடிக்க சின்ன மகனிடம் வந்து தஞ்சம் புகுந்தாள். வீட்டில் மருமகள் கை ஓங்கியிருப்பதைக் கண்டவளுக்கு ஈரக்கொலை வெந்தது.

“ஒண்ணுமில்லாத வீட்டு நாய்க்கு வந்த பவுசப் பாத்தியா? எம்புள்ளய மயக்கி கைக்குள்ள போட்டு வச்சிருக்கா. மதிமயங்கி போய்  எம்புள்ளய தள்ளிட்டேன். ஒரு தீபாவளி பொங்கல் உண்டா . ஒரு நல்ல நாள் உண்டா?” என்று இழுத்து நீட்டினாள். வேண்டுமென்றே வம்பிழுத்து அவள் வாயைக் கிண்டி கோபத்தில் அவள் பேசுவதை ஒன்றுக்கு ரெண்டாக எடுத்துக் கட்டிச் சொல்லி இருவருக்குள்ளும் சண்டை மூட்டினாள். முதலில் அதிகம் கண்டுகொள்ளாதவனை ,”ஆத்தாக்காரி கண்ணீருக்குக்கூட இறங்காத மாதிரி என்ன மாய்மாலம் பண்ணி வச்சிருக்காளோ தெரியல இந்த மூதேவி . அவதான் முந்தானைல முடிஞ்சி வச்சிருக்கான்னா நம்ம பெத்ததுக்கு எங்க போச்சோ புத்தி!” என்று நீலிக்கண்ணீர் வடித்து மகனைத் தூண்டிவிட்டாள்.

தாயின் புத்தியறிந்த அவளை அடக்க முடியும் ஒரே ஆளான அவன் தமக்கை விஷயமறிந்து வந்து அவளை மிரட்டி அழைத்துச் சென்றபோது காலம் மிகவும் கடந்துவிட்டிருந்தது. மீண்டும் போதைக்குள் மீள முடியாத தூரத்தில் மூழ்கியிருந்தான். குடித்துவிட்டு கண்ணு மண்ணு தெரியாமல் அவளை அடித்தான். அவள் மீண்டும் சண்டையிட்டாள்.

குடித்தற்காகச் சண்டையிட்ட காலம் போய், சண்டையிடுவதற்காகவே குடித்தான். ஒருநாள் அவளை அடிக்கக் கை ஓங்கியவனைத் தடுத்து நடுவில் வந்து நின்ற மகனைத் தள்ளிவிட கை ஓங்கியபோது தன் குட்டியைப் பாதுகாக்கும் தாய்ப்புலியின் கர்ஜனை அவளிடம்.

அவன் குழந்தை பருவத்தை அவளுக்காக இழந்து பாதுகாப்பு அரணாக அவன் மாறுவதை விரும்பாதவள், மகனின் எந்த மறுப்புகளுக்கும் செவி சாய்க்காமல் கொண்டு போய் மர்காஷிஸ் பள்ளி விடுதியில் சேர்த்து விட்டாள்.

அவர்களுக்கான நல்ல எதிர்காலம் சென்னையில்தான் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அந்த நம்பிக்கையிலும் மண் விழும் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை அவனைக் கொண்டு தனியாக விடுதியில் விட்டிருக்க மாட்டாள் அல்லவா?

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.

Exit mobile version