Site icon Her Stories

வாழ்க்கையில் வீசிய புயல்…

ஒரு வேலை விஷயமாக  பஜார் வரை சென்றுவிட்டு வந்தவன், ஆறுமுகநேரி ஸ்டேஷன் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பொன்இசக்கியம்மன் கோயிலுக்கு வந்தான்.

காலையிலிருந்து காரணமின்றி கலங்கிய மனதைச் சமாதானப்படுத்த எண்ணி வேண்டிக் கொண்டு கண்ணைத் திறந்து பார்த்த போது, அவன் ஏற்றிய கற்பூரம் வேகமாக அடித்த காற்றில் அணைந்தது.

சிறிது நேரம் குடைபிடித்தவாறு அரசமரத்து அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவன் வருகிற, போகிற வண்டிகள் எல்லாம் கோயில் முன் இருந்த வேகத்தடையில் நிதானித்துச் செல்வதும், கோயிலைப் பார்த்துக் கும்பிட்டுச் செல்வதையும் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டுக்குச் சென்றவன் மனம் மேலும் சலனமுற்றது . அவர்கள் கிளம்புவதைத் தடை சொல்ல அவனுக்கு மனமில்லை இந்தப் பயணத்துக்காக அவர்கள் பல நாட்களாகத் தயாராகியிருந்தார்கள்.

“காத்தடிச்சா அணையாதா? இதல்லாம் ஒரு விஷயமா?” என்று இசக்கியிடம் இது குறித்துச் சொல்வாள்.  இத்தனை அடைமழையில் பிள்ளைத்தாச்சியையும்,  அபியையும் தனியாக அனுப்ப அவனுக்கு விருப்பமில்லை.

“ஏதோ இதுதான் முத தடவையா நாங்க ரெண்டு பேரும் தனியா போற மாதிரில்ல பேசுற? இதுக்கு முன்னாடி நாங்கள் போனதே இல்லாயக்கும்? மழையே ஏதோ அதிசயமாத்தான் பெய்யுது. அத ரசிச்சிக்கிட்டே டிரெயின்ல போகப் போறாம். நாங்க மட்டுமா போகப் போறோம்? ஊரு உலகமேதான் போகப் போவுது” என்றாள். அது உண்மைதான். ஆனால், ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வொன்று அவன் தொண்டைக் குழிக்குள் இருந்து அழுத்தியது.  ஊர் உலகம் கிடக்கிறது. அவனுக்கு அவர்கள் இருவரும்தான் உலகம். அவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால், அதற்கு மேல் அவனால் யோசிக்கக்கூட முடியவில்லை.

“மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. பேசாம ஞாயித்துக் கிழம கிளம்பாம ரெண்டு பேரும் திங்கக் கிழம எங்கூடவே கிளம்புங்களேன்” என்றான் பொன்துரை. வழக்கமாக இப்படி எல்லாம் சொல்பவனில்லை. ஏன் இப்படிச் சொல்கிறான் என்று யோசித்தவளுக்கு, “ஓ, இப்ப புரியுது. வழக்கம் போல மங்களத்தை நாங்க கிளம்புற அன்னைக்கு வராம அடுத்த நாள் வராங்களே. அதனால இவ வேற அவ அப்பாவுக்கு சேவகம் செய்யச் சொல்றாளேன்னு தானே  எங்கள அடுத்த நாள் போகச் சொல்றே?”

நான்கு மாதமாகி விட்டதால் ரயிலில் பயணிப்பதுக்கும் டாக்டர் எந்தவிதத் தடையும் சொல்லவில்லை. இங்கே ஏறுகிறதுதான், சென்னையில் அவர்களை அழைத்துச் செல்ல அவள் அண்ணனும் வந்துவிடுவார். பின் எதற்காக அவன் மனம் இப்படி உழம்புகிறது என்று அவனுக்கே புரியவில்லை.

“ப்ளீஸ்ப்பா, திங்க கிழம சாய்ங்காலம் மாமா பீச்சுக்குல்லாம் கூட்டீட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க. நான் சஞ்சய், சுஜய்ல்லாம் பீச்சுல நிறைய ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு கேம்ஸ்லாம் விளையாடுவோம். ஜாலியா இருக்கும்ப்பா” என்று அவள் உதட்டைப் பிதுக்கிக் கெஞ்சும் பாவனையில் கேட்டதை எப்படி அவனால் மறுக்க முடியும்?

“சரி, பாத்துப் பத்திரமா போய்ட்டு வாங்க” என்றதும்

“ஹே ஜாலி ஜாலி” என்று உள்ளே ஓடிச் சென்று தன் டோரா புஜ்ஜி பைக்குள் எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த மகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

“ஏ முத்தழகி, கொஞ்ச நேரம் இங்க உக்காந்துட்டு போயேன்” என்றதும் திரும்பி ஒரு குறும்பு புன்னகையுடன், “என்ன மாப்ளைக்குத் திடீர்னு பாசம் பொங்குது?” என்றவாறே மேடிட்ட தன் வயிற்றைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவன் படுத்திருந்த கட்டிலின் சட்டத்தைப் பிடித்தவாறு அமரப் போனவளை வேகமாக எழுந்து கைத்தாங்கலாக அருகில் அமர வைத்தான். பின் குழந்தை போல் அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

அவன் அம்மாவைச் சிறுவயதிலே இழந்து விட்டவனாதலால், தாய் மடியின் சுகம் அவன் அறிந்ததில்லை. ஆனால் அவன் தொலைத்த அனைத்தையும் அவனுக்குப் பல மடங்காகத் திருப்பித் தந்தவள் இவள். தாய்மையின் முழு சொரூபத்தையும் அவளிடம் கண்டான்.

அந்த அழகான தென்றல் காற்றுப் புயலாக என்றேனும் மாறிவிடுமோ என்கிற பயம் எப்போதும் அவனுக்கு உண்டு. அதிக வலிகளைச் சந்தித்தவனாதலால் அதிக சந்தோஷம் அவனுக்குச் சற்றுப் பயத்தைக் கொடுக்கிறது என்பது உண்மைதான்!

“அந்த ரெண்டு கிழவியளும் சேந்து தான் எம்பிள்ள மனச கலச்சுபுட்டாளுவ. இல்லன்ன இந்நேரம் எம்மவ  பட்டனத்துல ராணி கணக்கா வாழ வேண்டியவ” eன்று இப்போதும்கூட யாரும் அருகில் இல்லை என்று நினைத்துக் கொண்டு அப்பா தானாகp பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்டிருக்கிறாள்.

அதுவும் ஒருவிதத்தில் உண்மை தான். அவர்கள் பிறந்த போதே அவர்கள் குலதெய்வம் பொன்இசக்கியின் பெயரையே இருவருக்கும் பாதியாகp பிரித்து பொன்துரை, இசக்கிமுத்து என்று வைத்ததோடு, சிறுவயது முதலே அவனைப் பற்றி நல்லவிதமாகவே ஆச்சி எப்போதும் பேசிக் கொண்டிருந்தாள்.

பின் அவள் திருச்செந்தூரில் ஆசிரியர் பயிற்சி படிக்கச் சென்ற போது , அவன் அங்கு தொழிற்பயிற்சிக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் படித்துக் கொண்டிருந்தான். இருவரும் ஒரே பேருந்தில்தான் பயணிப்பார்கள். அவர்கள் இருவரும் பேசிப் பழக வேண்டும் என்று வேண்டுமென்றே இருவரில் ஒருவர்,

“இன்னிக்கு எனக்கு மேலுக்கு முடியல, அதான் செல்லக்கிளி கிட்ட உனக்கும் சேத்து சோறு கட்ட சொல்லிட்டேன், பொன்துர கிட்ட வாங்கிக்க”

என்று அவள் ஆச்சி செய்வதைப் போல், சில நாட்களில் அவன் ஆச்சியும் செய்துவிட இவள் அவனுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவாள்.

சிறு வயது முதலே பரிட்சயமானவன். அவன் பெற்றோர் காலமானபோது அவனுக்குச் சேர வேண்டிய சொத்துகளை அவன் உறவினர்களே ஏமாற்றி வாங்கிக் கொண்டு அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அவனின் பூர்வீக வீட்டைத் தவிர நிலம் புலம் நஞ்சை புஞ்சை எல்லாம் அவர்கள் வாயில் போட்டுக் கொண்டார்கள்.

இருந்தாலும் யாரையும் குறை சொல்லாமல், யார் கையையும் எதிர்பார்க்காமல் சிறு வயது முதலே எல்லா வேலைகளையும் ஓடி ஓடிக் கற்றுக் கொண்டான் , முடிந்த வரை பிறருக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தான். டிப்ளமோ சிவில் இஞ்சினியரிங் முடித்து, சொந்தமாகக் கட்டிட வேலைகளைச் செய்து வந்தான். தன் சொந்த உழைப்பிலே முன்னுக்கும் வந்தான்.

நாட்கள் செல்லச் செல்ல அவளுக்கு அவன் குணம், நடவடிக்கை என்று எல்லா விதத்திலும் பிடித்தவனாக மாறிவிட்டான். யாருமறியாமல் அவனை அவ்வப்போது பார்த்து ரசித்தாள். கனவுகளில் அவனுடன் வாழ்க்கை நடத்தினாள்.

உள்ளூரிலிருந்த பள்ளியிலே அவளுக்கு வேலையும் கிடைத்தது. அவனைக் கடந்து செல்லும் போதெல்லாம் குற்றாலச் சாரல் மொத்தமாக அவள்மீது கொட்டுவதாக அகம் மகிழ்ந்து போவாள். பிறைச் சிந்திரனாக எப்போதாவது எட்டிப் பார்க்கும் அவன் புன்னகையைக் கண்டுவிட்டால் அவ்வளவுதான்! அவனிடம் போய் பேசும் தைரியம் மட்டும் அவளுக்கு இல்லை, அதற்கு முக்கியக் காரணம் அவன் மரியாதை நிமித்தமாகவே பழகியதாக அவளுக்குத் தோன்றியதுதான்.

அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்க்கும் முன்னரே,  சென்னையிலிருந்த அவன் அண்ணன் மனைவிக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா மகனுக்கு அவளைப் பெண் கேட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி அவளுக்கு எட்டியது.

அவளிடம் அவள் அப்பா பேசும் முன்னரே அவன் முந்திக் கொண்டான். அவள் சற்றும் எதிர்பாராத விதமாக அவன் ஆச்சி மற்றும் ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு பெண் கேட்க வந்தான். அவன் மனம் முழுவதும் அவள்தான் இருக்கிறாள் என்று அறிந்த போது அவள் வாழ்வில் இழந்த அனைத்தையும் பெற்று விட்டதாக ஒரு போதை தலைக்கேறியது.

காதல் போதை! ஆனால் அவளைச் சென்னையில் கொடுத்தால் தன் காலத்துக்குப் பின் ஓர் அவசரம் என்றால் தன் மகன் அவளைக் கவனித்துக் கொள்வான் என்று அவள் அப்பா நினைத்தார். இந்தச் சின்ன கிராமத்தில் தன் மகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காத அவர், அவனை மறுத்துவிட நினைத்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாரத விதமாகக் கட்டினால் அவனைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் மகளை என்ன சொல்லி மாற்றுவது என்று புரியாமல் விழித்தார். கெஞ்சிப் பார்த்தார் மிரட்டிப் பார்த்தார் ஒன்றும் பலிக்கவில்லை. நாட்கள் வாரங்களானது, பார்க்க வந்த சென்னை மாப்பிள்ளை முன்  வரக்கூட மறுத்துவிட்டாள். இருவரும் தாங்கள் பிடித்த பிடியிலே நின்றார்கள். மாதங்கள் உருண்டோடின .

“இதுவே உங்க அம்மா இருந்திருந்தா இந்நேரம் உன்ன சம்மதிக்க வச்சிருப்பா!” என்று தன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தவருக்கு அது தன்னையே திரும்பி வந்து தாக்கும் என்று தெரியாது,

“அதான் அம்மா இல்லையேப்பா… இருந்திருந்தா என் மனசு அவங்களுக்குப் புரிஞ்சிருக்கும். இப்படி என்னை அழ வச்சிப் பாத்திருக்க மாட்டாங்க.”

இனியும்  அவளைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் அவள் இஷ்டப்படியே  திருமணத்துக்குச் சம்மதித்தார்.

இது நடந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை மருமகனிடம் பேச்சு வார்த்தை கிடையாது. அவனும் அவர் சொன்னபடி அவர் வீட்டு வாசலைக் கடந்து  உள்ளே செல்லவில்லை. அவரும் அவனை வா என்று அழைக்கவில்லை.

ஆனால் அவர்கள் இருவருக்கும் இருந்த ஒரே ஒரு பொதுவான விஷயம் அவள் மீதும் குழந்தை மீதும் உள்ள அளவுக்கதிகமான அன்பு மட்டுமே. அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்று பார்த்தாள். அது பலிக்கவில்லை.

ஏன் ஐந்து வருடங்களுக்கு முன் அவள் ஆச்சி இறந்த போதுகூட வெளியே இருந்தே தான் செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டு உள் வீட்டுக்குள் வர மறுத்துவிட்ட கணவன் மீது கோபமாக ஒரு வாரம் பேசாமல் இருந்தாள் .

ஆனால் அவள் அப்பாவோ அதற்கும் ஒரு படி மேல் போய், அவர்கள் திருமணத்துக்குக் காரணமாக இருந்தார் என்று அவன் ஆச்சியுடனும் சேர்த்து பேச்சு வார்த்தை இல்லாமல் போனதோடு, அவள் ஆச்சி இறந்த நேர் ஒரு வாரத்தில் இறந்த அவன் ஆச்சியின் இறப்புக்கு ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட அவனிடம் துக்கம் விசாரிக்காமல் ஏதோ மூன்றாவது மனிதன் போல் வெளியே சற்று நேரம் அமர்ந்துவிட்டு கிளம்பிவிட்டார்.

தன் அம்மாவையும் மகளையும் மன்னித்துவிட்ட மனிதரால் மருமகனையும் அவன் ஆச்சியையும் மன்னிக்க முடியவில்லை. அது குறித்து அவள் பேசிய எதையும் அவர் காதிலும் வாங்கிக் கொள்ளவில்லை.

ஆனால் அவள் எதிர்பாராத நேரத்தில் இவை அனைத்தும் மாறின.

அதைக் காண அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.

Exit mobile version